அவன் மறுப்பதற்கிடையில் அவன் மனைவி, “போய்விட்டு வரட்டுமே.” என்றுவிட்டாள். கூடவே, திருமணம் என்கிற ஒன்று நடந்துவிட்டால் கணவன், குழந்தை, குடும்பம் என்று அவள் உலகம் சுருங்கிப்போய்விடும், அதற்கு முதல் வெளிநாட்டு வாழ்க்கையையும் அனுபவிக்கட்டும் என்று சொன்னாள் அவள்.
நாகேஸ்வரியும் அதற்கு உடன்பட்டுவிட அவனால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று.
ஆனால், இவள் கவனமெடுத்தே திருமணத்தைத் தவிர்க்கிறாளோ என்கிற சந்தேகம் மட்டும் வலுத்துப்போயிற்று.
இப்படி இருக்கையில்தான் நிரோஜனிடமிருந்து அழைப்பு. அவன் புருவங்கள் சுருங்கின. நான்கு நாள்களுக்கு முதல்தான் யாமினி அவர்கள் வீட்டுத் திருமணத்திற்குப் போய்விட்டு வந்திருக்கிறாள். இப்போது இவன் அழைக்கிறான். உள்ளே யோசனை ஓடினாலும் அழைப்பை ஏற்று, “சொல்லுங்க நிரோஜன். எப்பிடி இருக்கிறீங்க? தங்கச்சின்ர கலியாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சதா?” என்று இயல்பாகவே விசாரித்தான்.
தக்க பதில்களைச் சொல்லி, தானும் சம்பிரதாயத்திற்கு அவன் வீட்டு நலனை விசாரித்துவிட்டு, “உங்களோட கொஞ்சம் கதைக்கோணும் அண்ணா.” என்றான் தயங்கி.
“சொல்லுங்க.”
“அது கொஞ்சம் உங்கட பெர்சனல்.”
அவனைப் பற்றியது என்று சொல்லியிருந்தால் கூட வேறு. தன்னுடைய தனிப்பட்ட விடயம் என்றால் என்ன பொருள்? “விளங்கேல்லையே.” என்றான் ஆதவன்.
“உங்கட வீட்டு விசயம். சரியா சொல்லப்போனா இதை நான் கதைக்கக் கூடாது. எனக்கு அந்த உரிமை இல்ல. ஆனா… கதைக்காம இருக்கிறது யமி… அது யாமினிக்குச் செய்ற பிழை மாதிரி இருக்கு. அதான்.”
“அத யாமினி என்னோட கதைக்கலாமே. நீங்க ஏன் கதைக்கிறீங்க? கதைக்கச் சொல்லி யாமினி சொன்னவாவா?” என்றவனின் குரலில் அவனை மீறியே மெல்லிய கோபம் தெறித்தது.
என்ன இருந்தாலும் அவன் வீட்டு விடயத்தில் இன்னொருவன் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை.
“இல்லையில்ல. நான் உங்களுக்கு எடுத்தது அவாக்குத் தெரியாது. ஏன், இதெல்லாம் எனக்குத் தெரியும் எண்டே அவாக்குத் தெரியாது.” என்று அவசரமாகச் சொன்னான் நிரோஜன்.
“சரி, அதை ஏன் அவா என்னட்டச் சொல்லேல்ல?”
கொஞ்சம் தயங்கிவிட்டு, “பிறகு தனக்கு எண்டு இருக்கிற குடும்பம் இல்லாம போயிடுமோ எண்டுற பயம்.” என்று சொன்னான்.
“என்ன கதைக்கிறீங்க நிரோஜன்? என்னவோ நாங்க அவாக்குக் கொடுமை செய்த மாதிரியே சொல்லுறீங்க. முதல் அப்பிடி என்ன விஷயம், அதச் சொல்லுங்க.”
“அண்ணா ப்ளீஸ்! திரும்பவும் சொல்லுறன், கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ.” என்றுவிட்டு, யாமினியின் தந்தை இறந்த பிறகான மாதங்கியின் மாற்றம், அவரின் இறப்புக்கு அவள் செய்த செலவு, அந்தியேட்டிச் செலவுக்கான பணத்தைத் தனியாக வாங்கியது, நாகேஸ்வரி விழுந்து கால் முறிந்தபோது உண்டான தனியார் வைத்தியசாலைச் செலவு, வைத்தியசாலையில் வைத்து நடந்தவை, பிறகும் வீட்டுச் செலவுக்கு, நாகேஸ்வரியின் செலவுக்கு, வைத்தியச் செலவுக்கு என்று வாங்கியதை எல்லாம் சொல்லிவிட்டு, “இப்ப பிறந்த உங்கட மக்களுக்குக் கூட அவள் சின்னதாத்தான் செய்ய நினைச்சிருக்கிறாள். உங்கட வைஃப்தான் அன்ட்ரிய கொண்டு கேட்டு, அவள் செய்யாட்டி உங்கட வீட்டு ஆக்கள் மதிக்காயினமாம் எண்டு கட்டாயப்படுத்தி செய்ய வச்சிருக்கிறா. அவள் பாவிக்காம வச்சிருந்த பழைய நகைகளைக் குடுத்துச் செய்துபோட்டிருக்கிறாள்.” என்று சொன்னான்.
ஆதவனுக்கு அதிர்ச்சி ஒரு பக்கம் ஆத்திரம் ஒரு பக்கம் என்று சுழற்றியடித்தது.
அதே நேரத்தில் அவன் மூளை, அந்தியேட்டியின்போது பணம் தந்தே தீருவதுபோல் நின்ற யாமினி, நாகேஸ்வரிக்கு வைத்தியசாலையில் பணம் கட்டப்போன அவனை மறித்துத் தானே காட்டுகிறேன் என்று பணத்தை வாங்கிக்கொண்ட மாதங்கி, இப்போது அவள் ஜெர்மன் போகட்டும் என்று அம்மாவும் மகளும் சொன்னதை எல்லாம் கணக்குப் போட்டு, அவன் சொல்வது உண்மைதான் என்று கண்டுகொண்டது.
“அண்ணா!”
“இதெல்லாம் உங்களுக்கு எப்பிடித் தெரியும் நிரோஜன்?”
அவன் குரலில் அடக்கப்பட்ட சினமும் சீற்றமும் நிறைந்திருப்பதைக் கண்டு கொஞ்சம் தயங்கினான் நிரோஜன்.
“நீங்க சொல்லியிருக்கிறது என்ர குடும்ப விசயம். அது எப்பிடி உங்களுக்குத் தெரிய வந்தது? அது எனக்குத் தெரிஞ்சே ஆகோணும்.” என்றான் அவன் பிடிவாதக் குரலில்.
“அது அந்த நேரம் அந்தியேட்டிச் செலவுக்குக் காசு தாறதுக்கு அஜந்தாட்ட மாறியிருக்கிறாள். அப்ப தெரியும்.”
“அது எப்பிடி உங்களுக்குத் தெரியும்?”
அஜந்தா சொன்னாள் என்று சமாளிக்க முடியாது. அது அவளுக்குப் பிரச்சனையாகப் போய் முடியும்.
“அண்ணா, இனி இப்பிடி ஒண்டு அவளுக்கு நடக்கக்கூடாது. அதுக்கு என்ன செய்யலாம் எண்டு பாருங்க.” என்றான் நிரோஜன்.
“நான் என்ன செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும் நிரோஜன். உங்களுக்கு எப்பிடித் தெரிய வந்தது? அதைச் சொல்லுங்க.”
“அண்ணா ப்ளீஸ்!”
“எனக்குப் பதில் வேணும் நிரோஜன்.”
ஒவ்வொரு வார்த்தையாக அவன் அழுத்திச் சொன்ன விதத்திலேயே விடமாட்டான் என்று புரிந்துவிட, “இதுபற்றி யாமினிட்ட நீங்க ஒண்டும் கேக்கக் கூடாது. இப்ப நாங்க பிரேக்அப் ஆயிற்றம். ஆனா அப்ப நானும் அவளும் விரும்பினனாங்க. அதால தெரியும்.” என்று அவன் சொன்னபோது, கொதித்துப்போனான் ஆதவன்.
“என்னைப் பாக்க உங்க ரெண்டு பேருக்கும் எப்பிடித் தெரியுது? கேனப்பயல் மாதிரியா? நான் இஞ்ச உயிரைக் குடுத்துத் தேடி, மாப்பிள்ளை பாத்து அங்க அனுப்புவனாம், நீங்க ரெண்டு பேரும் இந்தக் கலியாணம் நடக்காது எண்டு சொல்லி அனுப்புவீங்களாம், அவனும் வந்து ஒழுங்கான காரணம் சொல்லாம விலகிப் போவானாம், நான் இஞ்ச இண்டு வரைக்கும் மண்டையப் பிச்சுக்கொண்டு திரிவனாம். அந்தளவுக்கு நான் என்ன…” என்றுவிட்டு அவன் வார்த்தையை அடக்கினான்.
“சொறி அண்ணா. ஆனா அவளிட்ட இதைப் பற்றிக் கேக்காதீங்க ப்ளீஸ். ஏற்கனவே நிறையக் காயப்பட்டிருக்கிறாள்.” என்று பொறுமையாகவே எடுத்துச் சொன்னான் நிரோஜன்.
“அவா எண்டைக்கும் என்ர வீட்டுப் பிள்ளைதான். அவாவோட என்ன கதைக்கோணும், எப்பிடிக் கதைக்கோணும் எண்டு நீங்க எனக்குச் சொல்லாதீங்க நிரோஜன்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

