நீ வந்து தங்கிய நெஞ்சில் 35.1

அத்தியாயம் 35

தேவை இல்லாத வேலை பார்த்து, யாமினியின் நிலையை இன்னும் மோசமாக்கிவிட்டோமோ என்றுதான் நிரோஜனுக்கு முதலில் தோன்றிற்று. ஆனால், இதைவிட இதற்கு வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை.

யோசித்துவிட்டு அஜந்தாவுக்கு அழைத்து நடந்ததைச் சொன்னான்.

“என்ன நிரோ நீங்க. இருக்கிற பிரச்சினை போதாது எண்டு புதுசாவும் இழுத்துவிட்டிருக்கிறீங்க.” என்றுதான் அவளும் சொன்னாள்.

“இதுக்கு இதத் தவிர வேற வழி இல்லை அஜந்தா. தன்னால அக்கா குடும்பத்தில எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது எண்டு நினைச்சே காலத்துக்கும் அவள் அடங்கித்தான் போவாள். அதையே தனக்குச் சாதகமா பயன்படுத்தி அவளின்ர அக்கா இன்னுமின்னும் அவளிட்ட பறிக்கத்தான் நிப்பா. நாளைக்கு எங்களுக்குக் கலியாணம் நடந்த பிறகும் இது தொடரும். அது எங்களுக்க இன்னொரு பிரச்சினையா வந்து நிக்கும். அதுக்கு இப்பவே அவரிட்டச் சொன்னதுதான் சரி.”

அவன் சொல்வது சரிதான். ஆதவனுக்கு இப்படி ஏதோ ஒரு வழியில் தெரிய வந்தாலேயொழிய அவளாக என்றுமே சொல்லப்போவதில்லை என்பதும் உறுதிதான்.

“இது அவளுக்குப் பிரச்சினையா வராதா?”

“ஆதவன் அண்ணாவப் பற்றி யமி சொன்னத வச்சு யோசிக்கேக்க, காசு விசயத்தில அவரே அவளுக்குப் பிரச்சினை வராத மாதிரித்தான் ஏதாவது செய்வார் எண்டு நினைக்கிறன். ஆனா, எங்கட விசயம், நரேன் கலியாணம் வேண்டாம் எண்டு சொன்ன கோபம் இருக்கும். அதையும் மோசமா காட்ட மாட்டார் எண்டுதான் நினைக்கிறன். என்ன, விசயம் தெரிஞ்சதும் யமி கட்டாயம் என்னோட சண்டைக்கு வருவாள். வரட்டும்.” என்று சிறு சிரிப்புடன் சொல்லிவிட்டு வைத்தான் அவன்.

அவன் சொன்னது போன்று அடக்க முடியாத ஆத்திரத்தில் ஆதவனின் மனம் கனன்றுகொண்டிருந்தாலும் அவன் அவசரப்படவில்லை. தனியாக இருந்து நிதானமாக யோசிக்கவே முயன்றான்.

நிரோஜன், யாமினி மீது அவனுக்கு மிகுந்த கோபம்தான். அதுவும் யாமினி மீது சினமே பொங்கிற்று. தகப்பன் இல்லாத பெண், அப்பா இருந்திருக்க இப்படி ஒரு நிலை எனக்கு வந்திருக்காதே என்று நினைத்துவிடக் கூடாது என்று, பார்த்து பார்த்து அவன் வரன் தேடி அனுப்ப, அவள் அவனை மடையனாக்கியிருக்கிறாள். இதில் இப்போது பிரேக் அப்பாம்.

அதே நேரத்தில் மனைவியை யோசிக்க யோசிக்கத் தான் எதிலோ முற்றுமுழுதாகத் தோற்றுவிட்ட உணர்வு அவனுக்கு.

ஆசையாசையாகக் காதலித்து மணந்த பெண். இன்று அவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால், அவளிடம் இப்படி ஒரு முகம் இருப்பதை அறியாமலேயே இத்தனை காலமும் வாழ்ந்திருக்கிறான்.

வேலைக்கு வரும் பெண்ணிற்கு, நாகேஸ்வரியின் செலவுகளுக்கு என்று மாதம் மாதம் அவனும் பணம் கொடுப்பான். என்ன, அதை அவர்களிடம் நேரே கொடுப்பதில்லை. மனைவி வீட்டில் இருக்கையில் ஏன் அப்படிக் கொடுக்க? அதைவிட அவன் கொடுக்கையில் அவர்கள் சங்கடப்படலாம்.

இப்படி அவன் பலவற்றை யோசித்து நடக்க, அதுவே அவன் மனைவிக்கு வாசியாகிப்போயிருக்கிறது. ஆனால், அவளின் வங்கிக் கணக்கின் வரவு செலவு அவனுக்குத் தெரியும். லொக்கரில் நகைகளை வைப்பதாக இருந்தாலும் எடுப்பதாக இருந்தாலும் அவன்தான் அழைத்துச் செல்வான்.

அப்படியிருக்க அவன் மனைவி இந்தப் பணத்தை எங்கே, எப்படி, என்ன செய்து வைத்திருக்கிறாள்? நிரோஜன் சொன்னதை வைத்துப் பார்க்கையில் சில பல லட்சங்கள் அவளிடம் இருக்கும் போலிருந்தது.

இதை எப்படி அறிவது? என்னதான் ஆத்திரம் கண்ணை மறைத்தாலும் அவசரப்பட்டு நடக்க அவன் விரும்பவில்லை. கோபதாபங்களைத் தாண்டி அவர்கள் மூவரும் அவன் பொறுப்பு. எதிர்காலத்தில் பெரிய பிணக்குகள் இல்லாமல், ஒருவர் மற்றவர் முகம் பார்த்து வாழவும் வேண்டும்.

மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்தவனுக்குக்
கிடைத்த ஒரே பதில் நாகேஸ்வரி. அவர் பெயரில் என்ன இருக்கிறது, ஏன் அவன் மாமனார் அவருக்கென்று என்ன வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றெல்லாம் அவன் கேட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை.

நிச்சயம் அவரிடம்தான் இருக்கும் என்று மனம் அடித்துச் சொல்லவும் எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டான்.

அங்கே அறையில் சின்னவளோடு அமர்ந்திருந்த மனைவி முகம் பார்க்கவே பிடிக்கவில்லை. அந்தளவில் வெறுப்பும் கசப்பும் மனத்தில் மண்டிப்போயிருந்தன.

அவளுக்கு என்ன குறை வைத்தோம் என்று இப்படியெல்லாம் நடந்திருக்கிறாள் என்கிற கேள்வி அவனைப் பிய்த்துத் தின்றது.

அணிந்திருந்த ஷேர்ட்டைக் கழற்றி எறிந்துவிட்டுக் கட்டிலில் முதுகுக்குத் தலையணையைக் கொடுத்து, தலைக்கு மேலே கையைப் போட்டுக்கொண்டு, கண்களை மூடி அமர்ந்துகொண்டான். மனம் மட்டும் முன்னால் அமர்ந்திருக்கும் மனைவி மீதான சினத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தது.

error: Alert: Content selection is disabled!!