நீ வந்து தங்கிய நெஞ்சில் 35.2

“சும்மாதான் சொல்லு.”

“இல்லையே.”

“உண்மையாவோ? ஏதும் ஆசை, இல்லை குறை இருந்தா மறைக்காம சொல்லு.” என்றான் மீண்டும்.

“என்ன கதைக்கிறீங்க? அப்பிடி என்ன குறை வச்சிருக்கிறீங்க எனக்கு? நானும் என்ர பிள்ளைகளும் ஒரு குறை இல்லாம வாழுறோம்.” மனத்திலிருந்தே சொன்னாள் அவள்.

பிறகு எதற்கடி உனக்கு இந்தப் பேராசை என்று கத்தவேண்டும் போலிருந்தது அவனுக்கு. வார்த்தைகளை விட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் திரும்பவும் கண்களை மூடிக்கொண்டான்.

மாதங்கிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கணவனின் புதிரான நடத்தை ஒருவித கலக்கத்தை உண்டாக்கீற்று. அவனாகவே சொல்லட்டும் என்று அமைதியாகிப்போனாள்.

இரவுணவு முடிந்து, சின்னவளைக் கவனித்து உறங்க வைத்தவள் அப்படியே தானும் உறங்கியிருந்தாள்.

அப்பாவும் மகனும் ஒன்றாக உறங்க, அம்மா, மகள், பேத்தி மூவரும் ஒன்றாகப் படுப்பார்கள்.

அன்று இரவு மகனைத் தட்டிக்கொடுத்து அவன் நன்றாக உறங்கியதும் எழுந்து வந்து விறாந்தையில் தொலைக்காட்சியைச் சத்தமில்லாமல் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

இரவு பதினொன்று பன்னிரண்டு போல் சின்னவளைக் கவனித்துவிட்டு பின்னால் செல்வதற்கு எழுந்து வந்த நாகேஸ்வரி அம்மா மருமகனைக் கண்டுவிட்டுப் புருவங்களை சுருக்கினார்.

“தம்பி, படுக்கேல்லையா? ஏதும் வேணுமா?” என்று வந்து கெட்டவரிடம், “எனக்குத் தெரியாம இந்த வீட்டில ஏதாவது நடக்குதா மாமி?” என்று நேராகக் கேட்டான் அவன்.

அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “அப்பிடி இல்லையே தம்பி.” ஏன் இப்படிக்கு கேட்கிறான் என்கிற குழப்பத்துடன் சொன்னார்.

“வந்து இருங்க மாமி. எனக்கு உங்களோட கொஞ்சம் கதைக்கோணும்.” என்று எதிரில் இருந்த சோபாவைக் காட்டினான்.

அவர் வந்து அமர்ந்ததும், “உங்களுக்கு ஏதாவது என்னில நம்பிக்கை இல்லாம போச்சா?” என்று விசாரித்தான்.

என்னவோ ஏதோ என்று கலங்கிப்போயிருந்தவர் அதற்கே கண் முகமெல்லாம் கலங்கிப்போய் அவனைப் பார்த்தார்.

அவனுக்கும் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனாலும் பதில் வேண்டுமாக இருந்ததில் விடாமல் அவரையே பார்த்தன்.

“ஏனப்பு இப்பிடி எல்லாம் கேக்கிறீங்க? இவர் போன பிறகும் நாங்க மூண்டு பேரும் தைரியமா இருக்கிறம் எண்டா அதுக்குக் காரணமே நீங்கதான். உங்களை நம்பாம இருப்பமா? எங்களுக்கு ஆம்பிளைப் பிள்ளை இல்லை எண்டுற குறைய நீக்க வந்தவர் நீங்க எண்டு இவரே என்னட்ட பலமுறை சொல்லியிருக்கிறார்.” என்றார் தழுதழுத்த குரலில்.

“பிறகும் ஏன் மாமி எனக்குப் பின்னால என்னைக் கேவலப்படுத்திற மாதிரி நடக்கிறீங்க?”

“தம்பி?”

“நானும் இத என்ர வீடு, இது என்ர குடும்பம், நீங்க எல்லாம் என்ர பொறுப்பு எண்டுதான் இவ்வளவு காலமும் நினைச்சிருந்தனான். அப்பிடி இல்லை எண்டு காட்டிட்டீங்க என்ன?” என்றதும் பொலபொலவென்று கண்ணீர் கொட்ட ஆரம்பித்திருந்தது நாகேஸ்வரிக்கு

“அப்படி என்ன செய்தனாங்க எண்டு தெரியேல்ல தம்பி. ஆனா சத்தியமா தெரிஞ்சு எதுவும் செய்யேல்ல.” என்றான் உடனேயே.

“தெரியாமத்தான் யாமினிட்ட இருந்து ஒவ்வொண்டுக்கும் நீங்களும் மாதுவும் சேந்து காசு வாங்கிறீங்களா?”

“ஐயோ இல்ல. அது மாதுதான்…” பதறிப்போய்த் தான் அப்படி எதுவும் செய்யவில்லை என்று சொல்ல வந்தவர், அதற்குப் பதிலாக மகளை மாட்டிவிடுகிறோம் என்று புரிபட்டதும் அப்படியே நிறுத்திவிட்டார்.

“சொல்லுங்க மாமி. மாதுதான்…” என்றான் அவன் பார்வையில் கூர்மையுடன்.

“நீங்க சொல்லாட்டி இந்த நிமிசமே இஞ்ச இருந்து நான் போயிடுவன் மாமி.”

அவன் அப்படிச் சொன்ன பிறகும் அவன் பேசாமல் இருப்பாரா?
அதற்குமேல் அவன் கேட்கும் அவசியமே இல்லாமல் அத்தனையையும் ஒப்பித்திருந்தார்.

“ஏன் இப்பிடி?”

“அது… அது யாமினிக்கு நல்ல சம்பளம். அதுக்கேற்ற மாப்பிள்ளை வருவார். அவா காலத்துக்கும் நல்லாத்தான் இருப்பா. மாதுக்கு அப்பிடி இல்ல. பிள்ளைகள் கொஞ்சம் பெரியாக்கள் ஆகிற வரைக்கும் வேலைக்குப் போக வேண்டாம் எண்டு வேற நீங்க சொல்லிப்போட்டீங்க. அதுதான்…”

“அதுக்கு? மாமாதானே இல்லாமப் போயிட்டார். நான் இன்னும் உயிரோடதானே இருக்கிறன்.” அவர் சொன்ன அர்த்தமற்ற காரணங்களைக் கேட்டுச் சகிக்க முடியாமல் அவன் சீறிவிட, “ஐயோ தம்பி!” என்று வாயில் கையை வைத்துவிட்டார் அவர்

“மலை மாதிரி இருந்த மனுஷனை இழந்ததே போதுமப்பு. இப்பிடி எல்லாம் கதைக்காதீங்கோ.” என்றார் கண்ணீருடன்.

“வேற எப்பிடி கதைக்கச் சொல்லுறீங்க? அவளுக்குத்தான் அறிவில்லை எண்டா நீங்க எப்பிடி ஒரு மகளிட்டப் பறிச்சு இன்னொரு மகளுக்கு குடுப்பீங்க? கட்டின புருஷன் நான் மலை மாதிரி இருந்து, உழைச்சுக்கொண்டு வந்து போட்டுமே உங்கட மூத்த மகளுக்கு காணாதாம். அப்ப அந்தப் பிள்ளை? அவாக்கு ஆர் இருக்கினம்? இதுல அம்மாவும் அக்காவும் உழைக்கிற காசில் பாதிய பறிக்கினம், எனக்கென்று துணைக்கு ஒருத்தர் இல்லையே எண்டு நினைக்க மாட்டாவா?”

“ஐயோ தம்பி, அப்பிடி எல்லாம் இல்லை. ஒரு அளவுக்கு மீறி உங்கட தலைல தூக்கி எல்லாப் பாரத்தையும் போட, நீங்க வெறுத்து எங்க எல்லாரையும் விட்டுப்போட்டுப் போயிடுவீங்களோ எண்டு பயமா இருந்தது. மாதுவும் பெரிய தொகையா சேத்துப்போட்டு சொன்னா சந்தோஷப்படுவீங்க எண்டு சொன்னவா. நாளைக்கு சின்னவளுக்கே ஒரு தேவை எண்டு வந்தா உதவும் எல்லாப்பு.” என்றவரை உண்மையாகவே அயர்ந்துபோய்ப் பார்த்தான் ஆனந்தன்.

தன் மனைவி அவரை நன்றாகவே மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறாள் என்று மட்டும் தெளிவாயிற்று.

“அந்தக் காசு எல்லாம் எங்க இப்ப?”

“அது என்ர பெயர்ல டிப்போசிட் பண்ணியிருக்கு.”

“யாமினிக்குத் தெரியுமா?”

தயக்கத்துடன் இல்லை என்று தலையசைத்தார் அவர்.

ஆத்திரம்தான் வந்தது அவனுக்கு. படக்கென்று எழுந்துகொண்டவன், “போய் படுங்க மாமி!” என்றான் கோபமாக.

“தம்பி!”

“போங்க மாமி. உங்களோட தனியா கதைக்கிறதுக்குத்தான் இவ்வளவு நேரமும் முழிச்சிருந்து கதைச்சனான். இதைப் போய் மாதங்கிட்ட சொல்லுறேல்ல.” என்றான் மிக இறுக்கமான குரலில்.

இதுவரை அவர் மருமகன் இப்படி ஒரு குரலை அவரிடம் பயன்படுத்தியதேயில்லை. கண்ணில் நீர் தானாக அரும்ப சரி என்று தலையை அசைத்தார்.

அவன் அவன் அறைக்கு நடக்க, “தம்பி!” என்று அழைத்தார் நடுங்கும் குரலில்.

“இதால உங்களுக்க எந்தச் சண்டையும்…” என்றவரைப் பேச விடாமல், “அதுக்குப் பயந்துதானே அம்மாவும் மகளும் கேட்டதை எல்லாம் யாமினி தந்திருக்கிறா. பயப்பிடாதீங்க. உங்கட மகளை விட்டிற மாட்டன். அதுக்காக இனியும் எனக்குத் தெரியாம ஏதாவது அவளோட சேந்து செய்ய நினைச்சீங்க எண்டு வைங்க…” என்றவன் முடிக்கும் முன்னேயே மாட்டேன் என்பதுபோல் அவர் தலை வேக வேகமாக ஆடிற்று.

error: Alert: Content selection is disabled!!