நீ வந்து தங்கிய நெஞ்சில் 36.1

அத்தியாயம் 36

வயதான பெண்மணி. கணவரை இழந்து மனத்தளவில் மிகவுமே தளர்ந்துபோயிருப்பவர். இந்த நேரத்தில் யாராவது ஒருவரைச் சார்ந்து வாழவும், தனக்குப் பழக்கப்பட்ட இடத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளவும், அங்கே தன் இருப்புக்குப் பங்கம் வராத வகையில் நடக்கவுமே தன்னையும் அறியாது விரும்புவார்.

அப்படித்தான் அவர் மூத்த மகளோடு ஒட்டிக்கொண்டதும், அவள் சொல் பேச்சுக் கேட்டு நடப்பதும். மாதவனுக்கு இது விளங்காமல் இல்லை.

அதே நேரத்தில் நாகேஸ்வரியைப் பேச வைத்தால் மட்டுமே அவனால் உண்மையை அறிந்துகொள்ள முடியும். அதனால்தான் கிட்டத்தட்ட அவரை மிரட்டி, அவர் சமநிலையைக் குலைத்து, சிந்திக்க முடியாத இடத்தில் நிறுத்தி, வாயைத் திறக்க வைத்தான்.

கூடவே, இனிக் காலத்துக்கும் அவர் மாதங்கியின் பேச்சுக்கு எடுபடக்கூடாது என்றும் நினைத்தான்.

ஆனாலும் கூட, தன்னை அன்னையாகக் கவனித்துக்கொள்ளும் பெண்மணியை அழ வைத்திருக்கிறோம் என்பது அவனை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கிற்று.

இரண்டு நாள்களில் யாமினி கிளிநொச்சி வந்து சேர்ந்தாள். இன்னும் ஒரு வாரத்தில் ஜெர்மன் புறப்படுவதில் அந்த ஒரு வாரத்தை வீட்டினரோடு கழிக்க எண்ணி வந்தவள், ஆதவனின் சிரிப்பற்ற முகத்தைக் கண்டு தாய் சகோதரியைக் கேள்வியாக ஏறிட்டாள்.

கடந்த சில நாள்களாகக் கணவனின் புதிரான நடவடிக்கைக்குக் காரணம் விளங்காமல்தானே மாதங்கியும் நடமாடிக்கொண்டிருக்கிறாள். நாகேஸ்வரி அம்மா மட்டும் எந்த நேரத்தில் என்ன குண்டு வெடிக்குமோ என்கிற நடுக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தார்.

யாமினிக்கு யாரிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. பயணித்து வந்த களைக்குக் குளித்துவிட்டு வந்து, அன்னை தந்த உணவையும் முடித்துக்கொண்டு, விறாந்தையில் கிடத்தியிருந்த சின்னவளை அள்ளிக்கொண்டாள்.

“எங்கட ஆதிம்மா கொஞ்சம் வளந்திட்டா மாதிரி இருக்கே. ஆர் வந்திருக்குப் பாருங்கோ. பிள்ளையின்ர சித்தி வந்திருக்கிறனே…” என்று அவள் வயிற்றில் முகம் புதைத்து விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தாள்.

அவளையே சில கணங்கள் பார்த்துவிட்டு, “அது ஏன் யாமினி குட்டிக்கு அவ்வளவு நகை செய்து போட்டனீங்க?” என்றான் ஆதவன்

திடீரென்று வந்த கேள்வியில் திகைத்து நிமிர்ந்த யாமினியின் பார்வை, வேகமாகத் தாய் தமக்கையைத் தொட்டு வந்தது. மாதங்கிக்கும் பகீர் என்றிருக்க, பயத்துடன் கணவனைப் பார்த்தாள்.

இதற்குள் ஓரளவுக்குச் சமாளித்துக்கொண்ட யாமினி, “போட்டா என்னத்தான்? எங்கட வீட்டுக் குட்டிக்குப் போடாம வேற ஆருக்குப் போடுறதாம்?” என்று சின்னவள் மூக்கோடு மூக்குரசியபடி கேட்டு, கெட்டித்தனமாகத் தன் பதற்றத்தை மறைத்தாள்.

“ஓ! ஆனா கவிரனுக்கு அப்பிடி ஒண்டும் போடேல்லையே நீங்க.”

“அது… அப்பா போட்டவரே.”

“ஆக, மாமான்ர இடத்தில இருந்து நீங்க செய்திருக்கிறீங்க?”

“அத்தான்.” என்று அதிர்ந்து நிமிர்ந்தாள் அவள்.

அவன் அவளையே அழுத்தமாகப் பார்த்திருக்க, “ஏன் அத்தான், எங்கட குட்டிக்கு நான் போடக் கூடாதா?” என்று குரல் அடைக்க வினவினாள்.

“தாராளமா போடலாம். ஆனா, என்னவோ முறை செய்ற மாதிரி செயின், காப்பு எண்டு ஏன் அவ்வளவு?”

“ஒரு ஆசைல…” என்று அவள் இழுக்க, “அப்பிடியா மாமி?” என்று நாகேஸ்வரியைப் பார்த்து வினவினான் ஆதவன்.

நடந்ததை எல்லாம் அவனிடம் சொல்லிவிட்ட நிலையில் நாகேஸ்வரி என்ன சொல்வார்?

அவர் கண்ணீருடன் நிற்க, “சொல்லுங்க மாமி.” என்றான் அவன் மீண்டும்.

யாமினிக்கு ஏதோ புரிவது போலிருக்க, நெஞ்சம் பதறிப்போயிற்று. தமக்கையைப் பரிதவிப்புடன் பார்த்தாள். அவள் இவளை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. பெரும் கலக்கமும் நடுக்கமுமாகக் கணவனையே பார்த்து நின்றிருந்தாள்.

“அத்தான் ப்ளீஸ். ஏன் இப்ப இந்தக் கேள்வி எல்லாம்?” என்று சமாளிக்க முயன்றாள் யாமினி.

அவளுக்குப் பதிலளிக்காமல், “சொல்லுங்க மாமி!” என்றான் அவன் திரும்பவும் இறுக்கமான குரலில்.

மூத்த மகளிடம் பார்வை கண்ணீருடன் சென்று வர, அனைத்தையும் இன்னொரு முறை ஒப்பித்தார் அவர்.

யாருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதுவும் மாதங்கிக்குப் பேச்சு மூச்சற்றுப்போனது. இதயம் பயத்தில் எம்பித் துடித்தது.

“மாமி சொன்னது எல்லாம் உண்மையா மாதங்கி?” எழுந்து வந்து அவள் முன்னே நின்று, நிறுத்தி நிதானமாய் வினவினான் அவன்.

மிடறு விழுங்கினாள் அவள்.

“சொல்லு! உண்மையா?”

“ஆதவ்.”

“அப்பிடிக் கூப்பிடாத என்னை. மனுசி பிள்ளைகள் எண்டு உன்னையே சுத்தி சுத்தி வந்தவன்ர தலைல நல்லா மிளகாய் அரைச்சிருக்கிறாய் என்ன?”

“…”

இப்படி ஒன்று நடந்துவிடக் கூடாது என்றுதானே அத்தனையையும் பொறுத்துப்போனாள். குழந்தையைத் தரை விரிப்பில் கிடத்திவிட்டு ஓடி வந்து, “அத்தான் ப்ளீஸ். சின்னவா எனக்கும் மகள்தான். அவாக்குச் செய்…” என்றவளை வாயில் விரல் வைத்து, “மூச்!” என்றான் அவன்.

அவள் அதிர்ந்து நிற்க, ஒற்றை விரலால் தள்ளி நில் என்று காட்டினான். இத்தனை வருடங்களில் இப்படி ஒரு அத்தானைப் பார்த்து அறியாதவள் தன்னாலேயே பின்னால் நகர்ந்து நின்றாள்.

“இது மட்டும்தான் நடந்ததா?” பார்வையில் கூர்மையுடன் வினவினான்.

“அத்தான்?”

“அதைத் தவிர வேற எந்தக் காசும் இவள் உங்களிட்ட வாங்கேல்லையா?”

யாமினிக்குப் பேச்சே வரவில்லை.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மனைவியின் புறம் திரும்பினான். “சொல்லு. உனக்கு நான் உழைச்சுத் தாற காசு காணாதா? நீ வாழுற இந்த வாழ்க்கைல உனக்குத் திருப்தி இல்லையா?”

எப்படி அப்படிச் சொல்லுவாள்? மாதங்கிக்குப் பொலபொலவென்று கண்ணீர் கொட்டிற்று.

“இப்பிடித்தான் ஆரிட்ட இல்ல எவனிட்ட காசு பறிக்கச் சான்ஸ் கிடைச்சாலும் பறிப்பியா?”

“ஆதவ்!” என்று அவள் கூவ, “இப்பிடி எல்லாம் கதைக்காதீங்கோப்பு!” என்றார் நாகேஸ்வரி, அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாமல். இங்கே சந்தி சிரிப்பது அவரின் வளர்ப்பும் சேர்ந்தல்லவா.

“சொல்லு! கூடப்பிறந்தவள் எண்டுற ஈவிரக்கம் இல்லாம இவ்வளவு செய்றவள் நாளைக்கு எவன் என்ன எண்டில்லாம எந்தளவு தூரத்துக்கும் இறங்குவாய்தானே? நான் ஒண்டும் பிழையா கேக்கேல்லையே.”

“ஆதவ் ப்ளீஸ். நான் செய்தது பிழைதான். அதுக்கு இப்பிடி எல்லாம் கதைக்காதீங்க!” என்றவள் அப்படியே தரையில் சரிந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

“வலிக்குதா? இதெல்லாம் தெரிய வந்தா எனக்கு எப்பிடி இருக்கும் எண்டு யோசிக்கேல்லையா நீ? நீ கேவலப்பட்டு நிக்கேல்ல. என்னைக் கேவலப்படுத்தியிருக்கிறாய். என்னை அசிங்கப்படுத்தியிருக்கிறாய். என்னால உன்னையும் பிள்ளைகளையும் பாக்கேலாது எண்டு சொல்லாமச் சொல்லியிருக்கிறாய். அப்ப நான் ஆரு?”

சொல்லக் கூடாத எதையும் சொல்லிவிடுவானோ என்கிற பயத்தில், “ஐயோ ஆதவ். நான் செய்தது பிழைதான். இதுக்கு மேல ஒண்டும் சொல்லிப்போடாதீங்கோ!” என்று கதறினாள் அவள்.

அந்தச் சத்தத்தில் சின்னவள் வீறிட்டு அழுதாள். அவ்வளவு நேரமாக அதிர்ந்துபோய் நின்ற யாமினி, ஓடிப்போய்க் குழந்தையை அள்ளிக்கொண்டாள்.

நல்ல காலத்திற்கு கவிரன் நண்பனின் பிறந்தநாள் என்று போயிருந்தான்.

“சொல்லு. வேற என்ன எல்லாம் செய்தனி?”

அவளுக்கு வாய் திறக்கவே பயமாயிருந்தது. ஆனால் ஆதவன் விடவில்லை. அவள் வாயிலிருந்தே அத்தனையையும் வரவழைத்தான்.

அவளும் விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையில் தகப்பனின் இறப்பு வீட்டிலிருந்து, யாமினியிடம் வாங்கிய ஒவ்வொன்றையும் அவன் முகம் பார்க்க முடியாமல் கூனிக் குறுகியபடி சொன்னாள்.

அவள் படுகிற பாட்டைப் பார்க்க முடியாமல், “அத்தான் ப்ளீஸ்!” என்றவளிடம் வேகமாகத் திரும்பி, “கண்மண் தெரியாத கோபத்தில இருக்கிறன் யாமினி. நடுவில வந்து வாங்கிக் கட்டாதீங்க!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

“அவள் கேட்டதை எல்லாம் குடுத்து நீங்களும்தான் என்னைக் கேவலப்படுத்தி இருக்கிறீங்க.”

error: Alert: Content selection is disabled!!