“இல்லை அத்தான். இது என்ர குடும்பமும்தானே. அம்மாக்கு நானும்தான் மகள். நான் செய்தா என்ன? இதை ஏன் நீங்க அப்பிடிப் பாக்கிறீங்க இல்ல?” என்றாள் அவள் கண்ணீருடன்.
“அப்ப என்னத்துக்கு எனக்கு மறைச்சு இதையெல்லாம் செய்தனீங்க? நான் இந்தக் குடும்பம் இல்லையா? வெளில போயிடவா?” என்றதும் ஐயோ என்று வாயில் கையை வைத்துக் கணவனைப் பார்த்தாள் மாதங்கி.
அதன் பிறகும் கூட மூவரையும் அவன் விட்டு வைக்கவில்லை. நார் நாராகக் கிழித்துத் தொங்கவிட்டிருந்தான். கோபம் என்பதை விடவும் அந்தளவில் காயப்பட்டிருந்தான் ஆதவன்.
இதுவரையில் நடந்ததை விடவும் இனி இது நடக்கவே கூடாது என்பதுதான் முக்கியமாய் இருந்தது. அதுதான் இரக்கமே காட்டவில்லை.
“இதுதான் கடைசி. இனிமேல் எனக்குத் தெரியாம இந்த வீட்டில ஒண்டு நடக்கக் கூடாது. அப்பிடி நடந்தது எது நடக்கக் கூடாது எண்டு ஆளாளுக்கு அமுக்கினி மாதிரி வேலை பாத்தீங்களோ அது நடக்கும்.” என்று மிரட்டிவிட்டுப் போய்விட்டான்.
அடுத்த இரண்டு நாள்களும் அந்த வீடு பெரும் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. சின்னவர்களின் தேவைகள் தவிர்த்து யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. மூன்றாம் நாள் ஆதவன் வேலைக்குப் போனதும், “இப்ப உனக்குச் சந்தோசமா இருக்குமே!” என்றாள் மாதங்கி.
யாமினி திகைத்துப்போனாள். “அத்தானிட்ட நான் சொல்லேல்ல.” என்றாள் வேகமாக.
“நடிக்காத நீ. சொல்லுவன் எண்டு சொல்லி என்னையே வெருட்டினவள்தானே நீ? இப்ப சொல்லேல்லையோ?” அழுகை அதிர்ச்சி எல்லாம் அடங்கியிருக்க ஆத்திரம் அவளிடம் மீண்டிருந்தது.
யாமினிக்கும் கோபம் வந்தது. இத்தனை நாள்களும் அவளுக்கும் சேர்த்து இவள் அழுதிருக்க, இப்போது பழியைத் தூக்கிப் போடுகிறாள் என்கிற ஆதங்கத்தில், “சரி, நான் சொன்னதாவே இருக்கட்டும். உன்ர பக்கம் நியாயம் இருந்திருந்தா அத நீ அத்தானிட்டத் தைரியமா சொல்லியிருக்க வேண்டியதுதானே? அவருக்கு முன்னால பாவப்பட்டவள் மாதிரி அழுதுபோட்டு, இப்ப திரும்ப உன்ர குணத்தைக் காட்டுறியா?” என்று கேட்டாள்.
“பாத்தீங்களா அம்மா, எப்பிடிக் கதைக்கிறாள் எண்டு. இவளுக்கு நான் நல்லா இருக்கிறதப் பாத்துப் பொறாமை. அதான் அள்ளி வச்சிட்டாள்.” என்று அன்னையிடம் முறையிட்டாள்.
யாமினிக்கு மனம் விட்டுப்போயிற்று. இது எதுவும் வேண்டாம் என்றுதானே நாட்டை விட்டே போக நினைத்தாள்.
“நீ எல்லாம் திருந்தவே மாட்டாய் அக்கா. உன்னோட கதைக்கிறதே வேஸ்ட். ஆனா இனி என்ன தாறதா இருந்தாலும் அத்தானிட்டத்தான் குடுப்பன். இவ்வளவு நாளும் அவருக்குத் தெரிஞ்சிடக் கூடாது, அதால பிரச்சினை வந்திடக் கூடாது எண்டுதான் எல்லாத்தையும் பொறுத்துப் போனனான். இனி எனக்கு அந்தப் பயம் இல்லை.” என்றவள் அன்னையை தனியாகப் பிடித்து விசாரித்தாள்.
“எப்பிடி அவருக்குத் தெரியும் எண்டு எனக்குத் தெரியாதம்மா. ஒரு நாள் இரவு கூப்பிட்டுக் கேட்டவர். அண்டைக்கும் இப்பிடித்தான் கோவப்பட்டவர்.” என்று கலங்கினார் நாகேஸ்வரி.
பாவமாக இருந்தாலும் அவன் காட்டிய கோபத்தில் கூட அவனின் நல்ல மனதுதான் அவளுக்குத் தெரிந்தது. ஒரு நேர்மையான ஆண் இப்படித்தானே உடைந்துபோவான். அதனால்தானே இந்தக் கோபம்.
அன்று இரவு வேலை முடிந்து வந்தவனிடம் பேசினாள் யாமினி.
“உங்களுக்கு மறைக்கோணும் எண்டு நினைக்கேல்ல அத்தான். சண்டை சச்சரவுகள் வேண்டாம் எண்டு நினைச்சன். அதவிட அம்மாவப் பாக்கிற பொறுப்பு எனக்கும் இருக்குத்தானே.” என்றாள் நயமாகவே.
கோபம் முழுவதையும் மொத்தமாகக் கொட்டிவிட்டதால் இடைப்பட்ட நாள்களில் அவனும் ஒரு நிலைக்கு வந்திருந்தான். அதைவிட அவன் வீட்டுப் பெண்கள் மூவரும் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதை அவனால் பார்க்கவும் முடியவில்லை.
அதில் ஒன்றும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துப் புரிகிறது என்றான்.
“அதே மாதிரி அம்மாக்குத் தொடந்து நானும் செய்வன் அத்தான்.” மெல்லிய தயக்கம் இருந்தாலும் சொன்னாள்.
“இப்ப வரைக்கும் நீங்க உங்கட அக்காக்குக் குடுத்ததே போதும். அத வச்சு அவளே செய்வாள்.” என்று சொன்னான் அவன்.
“அத்தான் ப்ளீஸ்! சரியோ பிழையோ அதெல்லாம் முடிஞ்சுது. இல்லாட்டியும் நான் ஆருக்கோ தூக்கிக் குடுக்கேல்ல. என்ர அக்காக்குத்தான் குடுத்திருக்கிறன். அதால அதைப் பற்றி இனிக் கதைக்க வேண்டாமே. கடமை, பொறுப்பு எல்லாருக்கும் பொதுவானது. என்ர பங்குக் கடமையை எப்பவும் போல நான் செய்வன். ஆனா இனி அம்மாக்கோ அக்காக்கோ குடுக்க மாட்டன். என்ன எண்டாலும் உங்களிட்டச் சொல்லிப்போட்டு உங்களிட்டயே தாறன்.” என்று கெஞ்சலாகச் சொன்னாள் அவள்.
இப்படியான பெண்ணிடம்தான் நீ இப்படி எல்லாம் நடந்திருக்கிறாய் என்பதுபோல் மனைவியை ஒரு பார்வை பார்த்தான் அவன்.
மாதங்கிக்கு மனம் புகையாமல் இல்லை. ஆனால், இனியும் எதையாவது செய்து, தன் வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவள் முட்டாள் இல்லை. அதில் பேசாமலேயே நின்றுகொண்டாள்.
அடுத்த நாள் யாமினி பயணத்திற்கான பொருள்களை வாங்க என்று புறப்பட்டாள்.
“எனக்கும் டவுன்ல அலுவல் இருக்கு யாமினி. வாங்க!” என்று அவன் அவன் பைக்கிலும், அவள் அவள் ஸ்கூட்டியிலும் புறப்பட்டார்கள்.
அங்கே அவளுக்குத் தேவையானவை எல்லாம் வாங்கி, அவர்களுக்குத் தெரிந்த ஆட்டோவில் போட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டு, கூல்பார் ஒன்றுக்கு அவளை ஆதவன் அழைத்துப்போனான்.
அவர்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டு, “பிறகு?” என்றான்.
என்ன பிறகு என்று பார்த்தாள் யாமினி. அவன் இப்படி அழைத்து வந்தபோதே அம்மா, அக்காவுக்குத் தெரியாமல் என்னவோ பேசப்போகிறான் என்று அவளுக்குப் புரிந்துதான் இருந்தது.
“கலியாணம் என்ன மாதிரி யாமினி?”
உள்ளே இலேசாகத் திடுக்கிட்டாலும், “அது இனி ரெண்டு வருசம் கழிச்சுத்தானே அத்தான்.” என்றாள்.
“அப்ப ரெண்டு வருசம் கழிச்சுக் கலியாணத்த வைப்பம். ஆனா நான் இப்பவே மாப்பிள்ளை பாத்து முற்றாக்கிறன். நீங்களும் இந்த இடைப்பட்ட காலத்தில கதைச்சுப் பேசி, ஒருத்தரப் பற்றி ஒருத்தர் தெரிஞ்சுகொள்ள ஈஸியா இருக்கும்.”
“அத்தான் அது…”
“ஒவ்வொரு முறையும் நான் லூசு மாதிரி ஒருத்தனைப் பாக்க, நீங்க நரேனுக்குச் செய்த மாதிரி அவனிட்ட எதையோ சொல்லித் துரத்திவிடக் கூடாதுதானே. அதுதான் கேக்கிறேன்.”
இந்தமுறை அவளுக்கு அந்த அத்தான் கூட வரவில்லை. இவருக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என்கிற அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
ஆதவனுக்குக் கொஞ்சம் பாவமாகக் கூடப் போயிற்று. எத்தனை அதிர்ச்சியைத்தான் அவளும் தங்குவாள்? இதில் அவர்களுக்குள் பிரேக் அப் வேறாம். அன்று சுர்ர் என்று ஏற வைத்த ஒன்று இன்று பாவமாகப் பார்க்க வைத்தது.
“என்னம்மா, ஆரையாவது பிடிச்சிருக்கா?” தன்னை மீறிக் கனிந்த குரலில் வினவினான்.
அதற்கே ஒரு துளிக் கண்ணீர் மளுக்கென்று அவள் கன்னத்தில் உருண்டு ஓடியிருந்தது. “சொறி அத்தான்!” கன்னத்தை வேகமாகத் துடைத்தாள். ஆனாலும் கண்ணீர் பெருகி வழிந்தது.
“பாக்கிறவே பிழையா நினைக்கப்போயினம் யாமினி.” தம்மைச் சுற்றிப் பார்வையைச் சுழற்றியபடி சொன்னான்.
வேகவேகமாகக் கண் முகமெல்லாம் துடைத்துக்கொண்டு, தண்ணீரையும் பருகித் தொண்டையைச் செருமிச் சரி செய்துகொண்டு, “சொறி அத்தான்.” என்றாள் மீண்டும்.
“இன்னும் எத்தின தரம்தான் சொல்லுவீங்க?”
கண்ணீரோடு சேர்த்துப் புன்னகையும் அவள் முகத்தில் அரும்பிற்று.
“இப்ப சொல்லுங்க. நான் என்ன செய்யோணும்? நிரோஜனோட கதைக்கவா?”
“அத்தான்!” கண்கள் இரண்டும் விரிந்துவிடச் சத்தமில்லாமல் கூவியவளைக் கண்டு சட்டென்று சிரித்திருந்தான் ஆதவன்.
அன்றைய அவனின் கோபத்திற்குப் பிறகு பழைய அத்தானைப் பார்க்கிறாள். மனத்தில் ஒருவகையான இதம் படர, கண்ணில் நீரும் உதட்டில் முறுவலுமாக அவனையே பார்த்தாள்.
“அவர்தான் இதையெல்லாம் எனக்குச் சொன்னவர். தனக்குத் தெரியும் எண்டு உங்களுக்குத் தெரியாதாம். அதால உங்களோட நான் கோவப்படக் கூடாதாம். ஒரு நாள் விடாம எனக்கு எடுத்துக்கொண்டே இருக்கிறார். நீங்க ப்ளொக் பண்ணிட்டீங்களாம்.” என்று அவன் சொல்ல சொல்ல, அவள் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளத்தில் இதம் படர்ந்தது.
“உண்மையாவே எனக்குத் தெரியாது அத்தான். எவ்வளவோ நாளுக்குப் பிறகு அண்டைக்குக் கலியாண வீட்டில வச்சுத்தான் பாத்தனான்.” என்று சொன்னவளுக்கு யோசனை.
ஆதிரைக்கு நகை போட்ட விடயம் அவர்கள் பிரிந்த பிறகு நடந்தது. அதுவரை தெரிந்து வைத்திருக்கிறான் என்றால் அஜந்தா சொல்லியிருக்க வேண்டும். இவளை…
“இப்ப சொல்லுங்க. என்ன பிரச்சினை உங்களுக்க? பிரேக் அப் ஆயிற்றீங்க எண்டு சொன்னார். உண்மையாவே அது முடிஞ்சுது எண்டால் அடுத்ததை நோக்கி நகர்றது ஒண்டும் பிழையான விசயம் இல்லை யாமினி. ஆனா அவருக்குத் திரும்பச் சேருற விருப்பம் இருக்குப் போல.”
அவனில் இருந்து நகர்ந்து செல்வதா? அவளால் முடியுமா என்ன? கண்ணோரம் கரித்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
“என்னம்மா ஏதாவது சொல்லுங்க. அவரின்ர வீட்டில கதைக்கவா?”
அவனைப் பாராமல் வேண்டாம் என்று தலையை அசைத்தாள்.
“வேற பாக்கவா?”
அதற்கும் அதேதான்.
“இப்பிடிச் சொன்னா எப்பிடி யாமினி?”
“என்ன சொல்ல எண்டு தெரியேல்ல அத்தான். ப்ளீஸ் எனக்குக் கொஞ்ச நாள் தாங்க.”
கண்ணில் நீரைத் தேக்கிக் கேட்கும் பெண்ணிடம் என்ன சொல்வான்? சரி என்று தலையை அசைத்தான்.

