அத்தியாயம் 37
துக்கமா, துயரமா என்று பெயரிட முடியாத கனத்த மனநிலையில் தன் அறையின் கட்டிலில் அமர்ந்திருந்தாள் யாமினி. அவளுக்கு எதிரே தயாராக இருந்த சின்னதும் பெரியதுமான இரண்டு லக்கேஜுகள், இன்னும் சில மணி நேரங்களில் அவள் மொத்தமாகப் புறப்படப்போகிறாள் என்று சொல்லிக்கொண்டிருந்தன.
எல்லோரிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் விலகி நிற்க எண்ணித்தான் இந்த முடிவை எடுத்தாள். அப்படி விலகிவிட்டால் மனம் அமைதியாகிவிடும் என்று நம்பினாள்.
ஆனால் இப்போது, கிளம்பும் நேரம் நெருங்க நெருங்க அந்தத் தைரியம் மெதுவாக உருக ஆரம்பித்தது. அவள் கட்டிக் காத்திருந்த மன உறுதி ஒவ்வொரு செங்கற்களாகச் சிதறத் தொடங்கிற்று.
பார்க்கவே வேண்டாம் என்று நினைத்த முகம், நினைக்கவே வேண்டாம் என்று ஒதுக்க முயன்ற இறந்தகாலம், மறைத்து வைத்த வலிகள் அனைத்தும் நினைவின் கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்து, அவள் நெஞ்சை இறுகப் பற்றிக்கொண்டன.
அவற்றை நிறுத்தவும் முடியவில்லை. அவற்றிலிருந்து தப்பிக்கவும் தெரியவில்லை. விழிகளை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் என்ன, நினைவுகளுக்குக் கண்கள் தேவையில்லை. அவை மனம் பலவீனப்படும் தருணத்திற்காகக் காத்திருப்பவை. அந்தத் தருணம் வந்ததும் வெள்ளம்போல் வந்து அனைத்தையும் மூழ்கடித்துவிடும்.
அப்படித்தான் இப்போதும் நடந்துகொண்டிருந்தது.
இனி அவனை எப்போதாவது, எங்கேயாவது தற்செயலாகக் கூடப் பார்க்க முடியாது. இத்தனை நாள்களும் அவனைப் பிரிந்துதான் வாழ்ந்தாள். ஆனாலும் கூட கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்பதுபோல், சொல்லப்படாத ஆறுதல் ஒன்று அவளுக்குள் இருந்தது. இனி அதற்கும் வழி இல்லை.
இது அவள் எடுத்த முடிவுதான். என்ன, அந்த முடிவின் விலையைச் செலுத்தத் தொடங்கியபோதுதான் அதன் வலியை முழுவதுமாக உணர ஆரபித்தாள். இந்த வலி பிரிவின் வலி மட்டுமல்ல. தான் எடுத்த முடிவைத் தானே சுமக்கும் வலியும் கூட.
இத்தனை மனப்போராட்டத்துக்கும் மத்தியில்தான் தன் பயணத்தைக் தொடங்கினாள் யாமினி.
கொழும்பு செல்ல மாதங்கிக்கு விருப்பமே இல்லை. குழந்தையைக் காரணம் காட்டி வீட்டிலேயே நின்றுவிட முயன்றாள். அவள் செய்வது வெறும் வீம்பு என்பதை ஆனந்தன் புரிந்துகொள்ளாமல் இல்லை. இருந்தாலும், பச்சிளம் குழந்தையை நினைத்து அவனும் ஒரு கணம் யோசித்தான்.
ஆனால், மாதங்கி குழந்தைகளோடு வீட்டில் நிற்பதாயின் நாகேஸ்வரி அம்மாவும் அவளுடன் நிற்க வேண்டியிருக்கும். குறைந்தபட்சம் கொழும்புக்குச் சென்று திரும்ப இரண்டு நாட்களாவது ஆகும். அதுவரை தனியாக இரண்டு குழந்தைகளையும் சமாளிக்க அவளால் முடியாது.
அதே நேரத்தில், தன் மகள் நாட்டையே விட்டுப் புறப்படுகிறாள். விமான நிலையம் வரை சென்று அவளை வழியனுப்ப வேண்டும் என்கிற ஆசை நாகேஸ்வரி அம்மாவின் மனம் முழுவதும் நிரம்பியிருந்தது. அதை அவர் வாய்விட்டுச் சொல்லவில்லை. ஆனால், அமைதியாக அமர்ந்திருந்த அவரது தோற்றமே அந்த ஏக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஆனந்தனுக்கு மனம் கனத்தது. அதில், “எல்லாரும்தான் போறம்!” என்று மறுப்புக்கு இடமில்லாத உறுதியான குரலில் சொல்லிவிட்டு, வாகனத்திற்கு ஏற்பாடு செய்தான்.
ஆதிரைக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் ஒன்றுவிடாமல் எடுத்துவைத்தான். பயணத்தின் போது மாதங்கிக்கு எந்தச் சிரமமும் ஏற்படாதபடி அனைத்தையும் கவனமாக ஒழுங்குபடுத்தினான்.
கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட அவர்கள், முதலில் அஜந்தாவின் வீட்டிற்குத்தான் சென்றார்கள். உயிர்த்தோழி நாட்டைவிட்டு புறப்படுகிறாள் என்கிற நிஜத்தை ஏற்றுக்கொள்வது அஜந்தாவுக்கும் இலகுவாகவே இல்லை. ஆனாலும் கூட யாமினியைப் பார்த்ததும் அவளது உதடுகளில் தன்னையும் மீறி ஒரு சிரிப்பு மலர்ந்தது.
அந்தளவில் சில நாட்களுக்கு முன் ஆனந்தனிடம் பேசிவிட்டு வந்தவள், அஜந்தாவைப் பிடித்துவைத்து ஒரு பெரிய சண்டையே போட்டிருந்தாள். அவளால்தான் அவர்கள் வீட்டில் பெரும் பிரளயமாம்.
நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்துகொண்டவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. மாதங்கிக்கு இது தேவை என்று நினைத்தாள். அதில், “என்னோட என்னத்துக்கடி கத்துறாய்? உன்ர அத்தானிட்டச் சொன்னது உன்ர நிரோ. இந்தச் சண்டையைப் போய் அவரோட பிடி.” என்று இவளும் தன் பங்குக்கு ஏவிவிட்டாள்.
“அவர் ஒண்டும் என்ர நிரோ இல்ல அஜூ.” என்றிருந்தாள் அவள் குரலடைக்க.
“ஓ! அப்ப அவர் இன்னொருத்திக்கு நிரோவா நிருவா மாறினாலும் உனக்கு ஓகே?”
ஒரு கணம் நெஞ்சடைக்க அமைதியாக இருந்துவிட்டு, “இதில ஓகே சொல்லவோ, ஓகே இல்லை எண்டு சொல்லவோ நான் ஆரடி அஜூ? அதுக்கு ரெடியானதாலதான் அவர் பிரேக் அப் பண்ணினவர். அதால இந்தக் கேள்வியை நீ அவரிட்டத்தான் கேக்கோணும்.” என்றுவிட்டு வைத்தவள் அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்ததுபோல் நிரோஜனுக்கு அழைக்கவே இல்லை.
பேசுவதற்குத் தனிமை கிடைத்ததும், “நிரோவோட கதைக்கவே இல்லையா இன்னும்?” என்று மெதுவாகக் கேட்டாள் அஜந்தா.
யாமினி பதில் சொல்லவில்லை. அமைதியாகத் தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவளைச் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்த அஜந்தா, “யமி, நடந்த எல்லாத்துக்கும் நீயும்தான் சரிபாதிக் காரணம். அத மறந்திடாத. அதே நேரம் நீ பட்ட காயமும் பெருசுதான். அதுக்காக அதையே பிடிச்சுத் தொங்காத. அவரோட கதை, உன்ர கோவம் என்ன, ஆதங்கம் என்ன, வலி என்ன எண்டு சொல்லு. அவரும் பாவம். என்ன சொல்லுறார் எண்டு கேள். இன்னும் ரெண்டு வருசம் பிரிஞ்சுதான் இருக்கப்போறீங்க. அதை ஏன் இவ்வளவு வலியோட கடக்கோணும்?” என்று இதமாகவே எடுத்துச் சொன்னாள்.
“எங்கட வாழ்க்கை எங்கட கட்டுப்பாட்டுல மட்டுமே இருக்காது யமி. சில நேரம் எந்த நியாயமும் இல்லாமலேயே காயப்பட்டு நிப்பம். அதுக்காக எனக்கு இப்பிடி நடந்திட்டுது, நான் காயப்பட்டிருக்கிறன், நான் அநியாயமா தண்டிக்கப்பட்டுட்டன் எண்டு அதையே பிடிச்சுத் தொங்கிக்கொண்டு இருந்தியோ, மிச்சமா இருக்கிற உன்ர வாழ்க்கையை நீயே நரகமாக்கிறாய் எண்டு அர்த்தம். யோசிச்சு நட. போக முதல் அவரோட ஒரு வார்த்தை கதைச்சுப்போட்டுப் போ. பிரேக் அப் பண்ணிப்போட்டு அவரும் சந்தோசமா இல்ல.” என்று அவள் கன்னம் தட்டிச் சொன்னவள் மேலே பேசப்போகவில்லை.
என்னதான் அவள் இப்படி அமைதியாகி, அத்தனையில் இருந்தும் விலகி நின்றாலும் உள்ளுக்குள் பெரும் வேதனையை அனுபவித்துக்கொண்டிருப்பாள் என்பது நிச்சயமே. அதில் மிகுதியை அவளே பார்க்கட்டும் என்று விட்டுவிட்டாள்.
ஒரு வழியாக விமான நிலையம் வந்து சேர்ந்தார்கள். யாமினியால் கரிக்கும் விழிகளை அடக்கவே முடியவில்லை. இந்த நகரத்தின் ஒவ்வொரு மூலையும் நினைவுக்கு வந்தது. அவனுடன் நடந்த சாலைகள், சிரித்துக் கடந்த மாலைகள், சண்டையிட்ட நாள்கள், சமாதானமான இரவுகள் எல்லாமே இந்த மண்ணோடு கலந்திருந்தன.
அவனை மறக்கவே கிளம்புகிறாள். அவனை மறக்க முடியாதென்பதை உணர்ந்தபடியே கிளம்புகிறாள்.
அங்கே வைத்தும் அன்னை, தமக்கை, சின்னவர்கள், ஆனந்தன் என்று எல்லோரிடமும் இன்னொரு முறை விடைபெற்றுக்கொண்டாள்.
நாகேஸ்வரிக்கு இத்தனை நாள்கள் கூடத் தான் என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது புரியவில்லை. ஆனால் இன்று, ஆனந்தன் சொன்னது போன்று, மூத்தவள் பேச்சுக்கு எடுபட்டுத் திருமணம் கூட ஆகாத சின்னவளுக்கு எதிராக நடந்துகொண்டுவிட்டோமோ என்றெண்ணித் தனக்குள் அழுதார்.
அவள் கன்னம் பற்றி, கண்ணீர் சொரிந்து, பல கவனங்கள் சொன்னார்.
ஆனந்தனும் அவளுமாகச் சென்று லக்கேஜ் போட்டுவிட்டு வருகையில், “ப்ளீஸ் அத்தான். அக்காவோட கதைக்காம இருக்காதீங்க. முதல் அவா இப்பிடி இல்லையே. அப்பா போனது அவாவையும் மனதளவில பாதிச்சு இருக்கலாம். என்ன நடந்தாலும் அவாக்கு எண்டு இருக்கிறது நீங்க மட்டும்தான். கதைங்க ப்ளீஸ்.” என்றாள் கண்ணீருடன்.
ஒன்றும் சொல்லாமல் சிறு புன்னகையுடன் அவளையே பார்த்துவிட்டு, “எனக்கும் அவள் மட்டும்தான் யாமினி. அப்பிடி எல்லாம் விட்டுட மாட்டன்.” என்று மட்டும் சொன்னான் அவன்.
இங்கே சமாதானமாவது விடயமில்லை. செய்த தவறின் ஆழத்தை மாதங்கி உணர வேண்டும். இன்னொரு முறை இப்படியான யோசனைகள் அவளுக்கு வரக்கூடாது. அதுவரை இறங்கி வருவதில்லை என்கிற முடிவில் இருந்தான் அவன்.
“இதே மாதிரி நீங்களும் நிரோஜனோட கதைக்கலாமே.” என்றான் சிறு புன்னகையுடன்.

