நீ வந்து தங்கிய நெஞ்சில் 37.2

முற்றிலுமாக உடைந்துபோயிருந்த அந்த மனநிலையில், அந்தப் பெயரே அவள் கண்ணீர்ச் சுரப்பிகளைத் திறந்துவிடப் போதுமாய் இருக்க, ஒன்றும் சொல்லாமல் பார்வையை அவனிடமிருந்து அகற்றியவள், அங்கே நின்றிருந்தவனைக் கண்டு அதிர்ந்துபோனாள்.

அவளது இதயம் தன் துடிப்பைத் தவறவிட்டது. கையில் இருந்த போர்டிங் பாஸ் நடுங்கியது. மூச்சு நெஞ்சுக்குள் சிக்கிக்கொண்டது. இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த நினைவுகள், ஒரே நொடியில் கதவை உடைத்துக்கொண்டு உள்ளத்தை நிரப்பின. இமைக்கவும் மறந்து பார்த்தாள். உண்மையில் அவன்தானா? இல்லை, துடித்துத் தவிக்கும் அவள் உள்ளம் உருவாக்கிய மாயையா?

இல்லை, அவன் மறையவில்லை. அதைவிட அந்தக் கண்கள் அவளிடம் என்ன யாசித்தன?

போகாதே என்று இறைஞ்சினானா, இல்லை, என்னை விட்டு உன்னால் எப்படிப் போக முடிந்தது என்று கேட்டானா தெரியவில்லை. அவளால் அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை.

ஆனந்தனும் அவனைப் பார்த்திருந்தான். “மாது சின்னவாவ கவனிக்கோணும் எண்டு சொன்னவா யாமினி. வேனுக்குக் கூட்டிக்கொண்டு போயிற்று ஒரு அரை மணி நேரம் கழிச்சு கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு விலகி நடந்தான்.

அதையெல்லாம் உணரும் நிலையில் அவள் இல்லை. நிரோஜனிடம் கட்டுண்டு நின்றாள். நெஞ்சுக்குள் புதைத்து வைத்திருந்த காதல், வலி, கோபம், ஏக்கம், ஏமாற்றம், வருத்தம் எல்லாமே ஒரே நேரத்தில் உயிர் பெற்று எழுந்தன.

அதே நேரத்தில் ஒரு கோபமும். அவளை இந்த நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியவன் அவன்தானே. அதுதானே மொத்தமாகப் புறப்படுகிறாள். இப்போது எதற்கு வந்து நிற்கிறானாம்? இல்லை, இந்த வருகை எதை மாற்றிவிடும் என்று நினைக்கிறானாம்?

உள்ளம் கொந்தளிக்க ஆரம்பிக்கவும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இந்தப் பயணத்தைக் தடுக்கும் எண்ணம் நிரோஜனுக்கு இருக்கவில்லை. தடுக்கவும் முடியாது என்றும் தெரியும். ஆனாலும் கூட இந்த இடைப்பட்ட நாள்களில் தனக்கு அழைப்பாள், நீ யார் என் வீட்டு விசயத்தில் தலையிட என்று கேட்டுச் சண்டை பிடிப்பாள், அதை வைத்துச் சமாதானமாகிவிடலாம் என்று பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தான்.

அவளோ அவன் நம்பிக்கையைத் தரைமட்டமாக அடித்து நொறுக்கிவிட்டு, விமான நிலையத்தில் வந்து நிற்கிறாள்.

அவள் முன்னே வந்து நின்றான்.

அவர்களைச் சுற்றி விமான நிலையத்தின் அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒலித்துக்கொண்டிருந்தன. சுற்றிலும் மக்கள். சிலர் சிரித்தபடி விடைபெற்றுக்கொண்டிருந்தார்கள். சிலர் கண்ணீரோடு கட்டியணைத்துக்கொண்டிருந்தார்கள். அவனுக்கு மட்டும் அந்த உலகமே ஒலியில்லாமல் போயிருந்தது. அவனது கண்கள் அவளிலேயே நிலைகொண்டிருந்த.

ஜீன்ஸ், முழுக்கை டொப் அணிந்து, கையில் பாஸ்போர்ட், தோளில் சிறிய பை சகிதம் நின்றிருந்தாள். அவள் கையில் இருப்பது வெறும் விமானச் சீட்டு அல்ல. அவனை விட்டு முழுமையாக வெளியேறுவதற்கான முடிவு. அவளைத் தேடித் திடீரென்று ஓடிப் போக முடியாத அளவிலான ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம். இது அவளால் முடிந்திருக்கிறதே.

அவன்தான் பிரிவைச் சொன்னான். ஆனால், பிரிவை மட்டும்தான் சொன்னான். அவளோ ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அடியாக அவனை விட்டுப் போய்க்கொண்டே இருக்கிறாள்.

என்ன பேச, என்ன கேட்க? இதயம் படுகிற பாட்டை இந்த உலகத்தின் மொத்த வார்த்தைகளையும் சேர்த்தால் கூட பகிர்ந்துவிட முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கில்லை.

அவள் விரல்களை எட்டிப் பற்றினான். உடலுக்குள் மின்னல் ஓடியதுபோல் அவளுக்குள் பெரும் அதிர்வு. திடுக்கிட்டு அவன் முகத்தை ஏறிட்டாள்.

அவன் அவளைப் பார்க்கவில்லை. எங்கோ பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். விழிகளில் கண்ணீர். தொண்டை ஏறி இறங்கியது. தன் கண்ணீரை அவளுக்குக் காட்டப் பிடிக்காதவன் போன்று, மறு கையின் விரல்களினால் விழிகளின் ஓரத்தைத் துடைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தன. போகாதே என்கிற கெஞ்சல், என்னை விட்டுவிடாதே என்கிற வேண்டல், நான் தவறு செய்துவிட்டேன் என்கிற ஒப்புதல், ஒரு வாய்ப்புக் கொடு என்கிற மன்றாடல், உன்னை இழக்க முடியவில்லை என்கிற உயிரின் கதறல் எல்லாம் நிறைந்திருந்தன. உதடுகள் மட்டும் திறக்கவே இல்லை. திறக்க முடியவில்லை.

இறுதியில் அவனால் முடிந்ததெல்லாம், அவள் விரல்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொள்வது மட்டும்தான்.
அந்த இறுக்கத்தின் பின்னால் அவனால் சொல்ல முடியாத காதலும், இழந்துகொண்டிருக்கும் வாழ்க்கையின் பயமும் இருந்தன.

அவள் தேகம் அந்த இறுக்கத்தில் கிடுகிடு என்று நடுங்க ஆரம்பிக்க, உடைந்துவிடுவோமோ என்கிற பயத்தில் அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்க முயன்றாள்.

அது அவனுக்குக் கோபத்தை உண்டாக்கிற்று.

“நான் பிரிவைக் கேட்டா நீ தந்திடுவியா? உன்ர நிரோ எதையும் அதின்ர ஆழம் வரை போய் யோசிக்கிறவன் இல்லை எண்டு உனக்குத் தெரியாதா? இல்ல, கொஞ்ச நாள் விட்டா திரும்ப உன்னட்டயேதான் வந்து நிப்பான் எண்டுதான் தெரியாதா? நான் டைம்தானே கேட்டனான். நீதானே தரேல்ல. அப்ப உன்னிலதானே பிழை.” என்றவனின் புதுவிதமான நியாயத்தில் அதிர்ந்து நின்றாள் யாமினி.

“முதல், நீ போன பிறகு உன்ர அத்தானிட்டச் சொல்லுவம் எண்டுதான் நினைச்சனான். போக முதல் சொன்னாத்தான் கோவப்பட்டு, என்னோட சண்டைக்கு வருவாய் எண்டு நினைச்சுச் செய்தா, நீ சத்தமே போடாம வெளிக்கிட்டு இஞ்ச வந்து நிக்கிறாய்.” என்றான் குரலடைக்க.

“ஆனா பரவாயில்ல. நீ போயிற்று வா. உனக்கு கைல காசு இல்லையே எண்டுற பயம் எப்பவும் இருக்கிறது எல்லா. அது போற வரைக்கும் அங்க போய் உழைச்சுச் சேர். எனக்கு இப்ப நான் தாறன் எண்டு சொல்ல விருப்பம் இல்ல. நீயே சேர். அதுதான் இஞ்ச உனக்கு இருந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டினனான். ஆனா ரெண்டு வருஷம் கழிச்சு வந்திடோணும். அப்ப இந்தக் கோபதாபம் எல்லாத்தையும் விட்டுப்போட்டு என்ர யமியா வரோணும்.” என்றான் கட்டளையிடுகிறானா கனிந்த குரலில் சொல்கிறானா என்று பிரித்தறிய முடியாமல்.

“நான் செய்த பிழைக்கும், உன்னை நோகடிச்ச பாவத்துக்கும் நீ திரும்பி வாற அந்த நாளுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டே இருப்பன் யமி. அது எத்தினை வருசமானாலும் சரி.” என்றான் அவள் கண்களோடு தன் பார்வையைக் கலந்து உறுதியான குரலில்.

இனித் திரும்பியே வருவதில்லை என்று எண்ணியிருந்தவளின் உள்ளம் ஒருமுறை தூக்கிப் போட்டது.

“கவனமா போ. உன்னை பாத்துக்கொள். வேற என்ன…” என்று சொல்லிவிட்டு, அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் நின்றான்.
சில நொடிகள் அவளையே பார்த்தவன், திடீரென்று அவளைத் தன்னருகே இழுத்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

அவள் பதறிப்போனாள். “என்ன செய்றீங்க?” என்று அவனிடமிருந்து விடுபட முயல, “உன்னைத் திரும்பப் பாக்கிற வரைக்கும் நான் உயிரோட இருக்க எனக்கு இது வேணும்.” என்றான், அவள் தோளில் முகம் புதைத்தபடி.

அப்படியே நின்றுவிட்டாள் யாமினி.

அவனது கரங்கள் நடுங்கின. நெஞ்சோ வேகமாகத் துடித்தது. அவன் எவ்வளவு உடைந்துபோயிருக்கிறான் என்பதற்கு அந்த நடுங்கும் அணைப்பே சாட்சியாக இருந்தது.

அவன் அணைப்பு இறுக இறுக அவள் உடைய ஆரம்பித்தாள். “நிரோ ப்ளீஸ்!” தன்னை மீறிச் சொல்லியபடி அவனிடமிருந்து விடுபட முயன்றாள்.

ஆனால் அவனுக்கு அதுவே போதுமாயிற்று. “நான் உன்ர நிரோதான் யமி. உன்ர நிரோ மட்டும்தான். என்னை விட்டுட்டு மொத்தமா போயிடுவியாடி நீ?” என்றான் ஆத்திரமும் அடக்கிவிட முடியா அலைப்புறுதலோடும்.

அவள் பார்வையை அகற்றிக்கொண்டு கண்ணீர் வடிக்க, அவள் முகம் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “என்னை பாரு. உன்ர நிரோவை பாத்து சொல்லு. என்னை மறந்திடுவியா?” என்று துடித்தான்.

அந்தக் கலங்கிய விழிகளையும் கண்ணீரில் நனைந்திருந்த நீண்ட இமைகளை பார்த்து எப்படிச் சொல்லுவாள்? அவள் மௌனமாய்க் கண்ணீர் வகுக்க, “ஏலாதுதானே? என்னாலயும் ஏலாது. எனக்கு நீ வேணும்.”

என்று சொல்லி சொல்லி அவள் முகம் முழுக்க முத்தங்கள் பதித்தான். யாமினியின் விழிகள் மூடிக்கொள்ள, அந்தக் கண்களின் ஓரத்தில், அவள் தாங்கி நின்ற கண்ணீரைத் தொட்டபடியும் சில முத்தங்கள். “நீ என்னை எவ்வளவு சீப்பா நினைச்சாலும் பரவாயில்ல.” என்றபடி அவள் கன்னங்களிலும் துடித்து துடித்து விழுந்தன பல முத்தங்கள்.

அவள் மொத்தமாய் உடைந்துபோனாள். அன்றைய தன் வார்த்தைகள் அவனை எந்தளவில் பாதித்திருக்கின்றன என்று மிக்கது தெளிவாக உணர்ந்தவள் பெரும் அதிர்வுடன் அவனைப் பார்த்து நின்றாள்.

அவளை உணரும் நிலையில் அவன் இல்லை. இறுதியாக அவள் நெற்றியில் நீண்ட நேரம் இதழ்களைப் பதித்தவனின் மூடிய விழிகளில் இருந்து கொட்டிய கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்துப்போயின.

மெல்ல விலகினான். தன் உயிருக்குள் நிரப்புகிறவன் போல் அவள் முகத்தையே பார்த்தான். பின் அவள் கன்னம் தட்டி, “கவனமா போயிற்று வா. ஹாப்பி ஜேர்னி!” என்றுவிட்டு அவளைத் திரும்பியும் பாராமல் ஒரு வேகத்துடன் அங்கிருந்து அகன்றுபோனான்.

அசையக்கூடத் தெம்பற்றவளாக போகிறவனையே பார்த்து நின்றிருந்தாள் யாமினி.

error: Alert: Content selection is disabled!!