நீ வந்து தங்கிய நெஞ்சில் 38.1

அத்தியாயம் 38

யாமினி ஜெர்மன் சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. மொத்தமாக இறுகிப்போயிருந்தான் நிரோஜன். குறைந்த பட்சமாக விமானம் ஏறிய பிறகாவது தனக்கு அழைத்து, அல்லது குறுந்தகவல் அனுப்பியாவது விடைபெறுவாள் என்று பெரிதும் எதிர்பார்த்தான்.

ஆனால் அவள், இந்த மூன்று மாதங்களில் சிறு சத்தம் கூடப் போடவில்லை. இத்தனை காலமும் அவன் வீட்டினரோடாவது தொடர்பில் இருந்தவள் இப்போது அதுவும் இல்லை.

அஜந்தாவுக்கு அழைத்தால் எப்படி இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்று அறிந்துகொள்ள முடியும். அவளின் கைப்பேசி இலக்கத்தைக் கூட வாங்கிவிடுவான். ஆனால் அது எதையும் அவன் செய்யவில்லை.

இந்தளவு தூரத்திற்கு அவனை விட்டு அவளால் தள்ளியிருக்க முடிகிறதே என்கிற வேதனை ஒரு பக்கம் என்றால், அவனின் தவிப்பும் துடிப்பும் அவளுக்கு இல்லையே என்கிற ஆற்றாமை இன்னொரு பக்கம்.

அதே நேரத்தில் இரண்டு வருடங்கள் இருந்துவிட்டு வா என்று சொன்னதுபோல், அந்த இரண்டு வருடங்களும் அவளைத் தொந்தரவு செய்வதாக இல்லை.

அது இலகுவாய் இல்லை. ஒவ்வொரு சிறு பொழுதும் பெரும் நரகமாகத்தான் கழிந்தது. ஆனால் வேறு வழியில்லை. அவளின் அந்தப் பாதுகாப்பற்ற நிலை நீங்குகையில் உள்ளத்தால் திடம் பெறுவாள். அது புது நம்பிக்கையைக் கொடுக்கும். அந்த நம்பிக்கை தெளிவைக் கொடுக்கும். அந்தத் தெளிவு நல்ல முடிவை எடுக்க வைக்கும் என்று நம்பினான்.

ஆதவனும் அதன் பிறகு நிரோஜனோடு எதுவும் பேசவில்லை. அன்று விமானநிலையத்தில் சின்னவளைக் கவனித்துவிட்டு அவர்கள் எல்லோரும் திரும்பி வருகையில் கண்ணீரும் ஒருவிதத் திகைத்த நிலையுமாக யாமினி மட்டுமே நின்றிருந்தாள். நிரோஜனைக் காணவில்லை. அவனிடமிருந்து. ‘நன்றி அண்ணா!’ என்கிற குறுந்தகவல் மட்டும் வந்திருந்தது.

கேள்வியாக ஏறிட்ட அவனிடம் யாமினி எதையும் சொன்னாள் இல்லை. மற்ற இரு பெண்களுக்கும் குழப்பமும் கேள்வியும் இருந்தாலும் இன்றைய புது ஆதவனிடம் கேட்கப் பயந்தனர்.

நிரோஜனைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் ஆதவன் விசாரித்து அறிந்துகொண்டிருந்தான். நல்ல குடும்பம்தான். தாராளமாகக் கட்டிக்கொடுக்கலாம். ஆனால், யாமினி ஒரு முடிவைச் சொல்லாமல் அடுத்த அடியை எடுத்து வைக்க அவன் தயாராயில்லை. வேறு வரன் பார்க்கவும் இல்லை.

அவள் திருமணம் குறித்துக் கேட்ட நாகேஸ்வரியிடமும் கொஞ்ச நாள்கள் போகட்டும் என்றுவிட்டான்.

இங்கே மல்லிகா அம்மாவுக்கு மிகுந்த மனவருத்தம். நிரோஜன் சொன்னதுபோல் கொஞ்ச நாள் சென்ற பிறகு, திருமணம் குறித்து யாமினியிடம் பேசவா என்று அவர் கேட்டபோதுதான், அவள் ஜெர்மன் சென்றுவிட்ட செய்தியைச் சொல்லியிருந்தான்.

இதைக் குறித்து அவள் அவரிடம் சொல்லவே இல்லையே. அங்குப் போன பிறகாவது பேசியிருக்க வேண்டுமா இல்லையா?

அவனுக்கும் அது மிகுந்த வருத்தம்தான். அவனை ஒதுக்குவது வேறு. பெற்ற பெண்ணைப்போல் பார்த்த அன்னையை ஒதுக்குவது எந்த விதத்தில் நியாயம்?

காவ்யா வேறு தாய்மை உற்றிருந்தாள். “அண்ணா, யமி அக்காக்குச் சொல்லோணும். நம்பர் தாங்க!” என்று கேட்டபோது என்ன சொல்வான்?

“உன் தொல்லையே வேண்டாம் எண்டுதான் அவள் ஜெர்மனுக்கு ஓடினதே. அங்கேயும் அவளை நிம்மதியா இருக்க விடமாட்டியா?” என்று அவள் தலையில் வலிக்காமல் கொட்டிவிட்டுப் போனான் அவன்.

“அம்மா!” என்று சிணுங்கி, “அண்ணாவப் பாருங்க அம்மா!” என்று அன்னையிடம் முறையிட்ட மனைவியைக் கொடுப்புக்குள் சிரித்தபடி பார்த்திருந்தான் ரகு. அதைக் கண்டு காவியாவுக்கு முகம் சிவந்துபோயிற்று.

அந்த நேரத்திற்கு அந்த விடயம் அதோடு முடிந்திருந்தாலும் தன் வாழ்வில் மிக மிக நல்ல விடயம் நடந்திருக்கையில், அவள்தான் தன் தமையனின் இதயம் கவர்ந்த ராணி என்கிற நினைப்பு வேறு மனத்தில் பட்டுவிட்டதில், அவளிடம் சொல்லியே ஆகவேண்டும் என்று ஆவல் கொண்டவள், அஜந்தாவுக்கு அழைத்து அவளின் கைப்பேசி இலக்கத்தை வாங்கினாள்.

அடுத்த நொடியே அவளுக்கு அழைத்து, “ஹாய் அண்ணி!” என்றாள் உற்சாகமாக.

‘அண்ணியா’ யாமினி ஒரு நொடி ஸ்தம்பித்துப்போனாள். அந்த வார்த்தையே அவள் இதயத்தினுள் புகுந்து என்னென்னவோ செய்ய முயன்றன. பதிலுக்கு ஒரு ஹாய் கூட சொல்ல முடியாமல் நின்றாள்.

“எப்பிடி இருக்கிறீங்க அண்ணி?”

அவள் திரும்ப திரும்ப அண்ணி என்றபோது அவளுக்குக் கண்ணீர்தான் பெருகிற்று. ஒன்றும் சொல்லாமல் நன்றாக இருக்கிறேன் என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “நீ?” என்றாள் எழும்பவே எழும்பாத குரலில்.

“நான் உங்களோட கோவம் தெரியுமா?” சிறு குழந்தையாய் முகம் வைத்துச் சொன்னவளைக் கண்டு, கண்ணீருடன் புன்னகைத்தாள்.

“ஏன் எண்டு கேக்கேல்லை நீங்க:”

அவளுக்குதான் தெரியுமே. ஆனாலும், “ஏன்?” என்றாள் சிறு சிரிப்புடன்.

“நீங்க ஜெர்மன் போனதச் சொல்லவே இல்ல. போன பிறகும் கதைக்கேல்ல.”

“சொறிம்மா. அது…”

“பரவாயில்ல பரவாயில்ல. நான் உங்கள மன்னிக்கிறன்!” அவள் இருந்த மனநிலைக்கு இதெல்லாம் பெரிதாகப் படவில்லை.

தன் தமையனின் சாயலில் இருப்பது மாத்திரமல்லாமல், அவனைப் போலவே விளையாட்டுத்தனமாகப் பேசுகிறவளைக் கண்டு, அவளுக்குள் என்னென்னவோ உடைந்து தளும்பின. ‘உன்ர நிரோ எதையும் ஆழமா யோசிக்கிறவன் இல்லை எண்டு உனக்குத் தெரியாதா?’ என்று அவன் கேட்ட கேள்வி வேறு நினைவில் வந்துவிட, அடக்கிய அழுகையில் அவள் இதழ்கள் நடுங்கின.

“அண்ணி, இனி நீங்க அண்ணி மட்டுமில்ல. மாமியும். எப்பிடி எண்டு சொல்லுங்கோ பாப்பம்?”

அவள் இருந்த மனநிலைக்கு முதலில் அவளுக்குப் புரியவில்லை. ஆனால், காவ்யாவின் கண்களின் மின்னலும், முகத்தின் பூரிப்பும் பல கதைகள் சொல்ல, சட்டென்று பிடித்தாள். “கவி உண்மையாவா?” கண்கள் இரண்டும் ஆச்சரியத்திலும் ஆர்வத்திலும் விரிய வினவினாள்.

மனதார வாழ்த்தித் தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து, எத்தனை மாதம், வைத்தியர் என்ன சொன்னார் என்று அக்கறையாகக் கேட்டுது தெரிந்துகொண்டாள்.

அவ்வளவு நேரமாகியும் மல்லிகா அம்மாவைக் காணவில்லை என்பதே அவர் தன் மீது கோபமாக இருக்கிறாரோ என்று யோசிக்க வைக்க, “அன்ட்ரி, அங்கிள் எங்க? எல்லாரும் சுகமா இருக்கிறீங்களா?” என்று குரலடைக்க வினவினாள்.

“அம்மா அங்க கிச்சன்ல நிக்கிறா. அண்ணா இஞ்ச நிக்கிறார்.” என்றபடி அவள் திரும்ப, அவ்வளவு நேரமாக அங்கே அமர்ந்திருந்த நிரோஜன், வேகமாக எழுந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அவள் குரலை, அதிலிருந்து தழுதழுப்பை, அழுகையின் மறைப்பை எல்லாம் அவன் கேட்டுக்கொண்டுதான் இருந்தான். இத்தனை தவிப்பையும் துடிப்பையும் தனக்குள் வைத்துக்கொண்டுதானே இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாள்.

அவனால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. அவளுக்கு அவனைப் பார்க்க வேண்டாம் என்றால், அவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டாம்.

இந்தக் கோபம் எவ்வளவு நேரத்துக்கு என்று தெரியாது. ஒரேயொரு முறையாவது அவளைப் பார்க்க கிடைக்காதா என்று அன்றைய இரவும் தவிக்கத்தான் போகிறான். அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் நெஞ்சடைக்க இரவிரவாகப் பார்க்கத்தான் போகிறான். ஆனாலும் பரவாயில்லை.

அவன் எழுந்து போனதைப் புதிராகப் பார்த்துவிட்டு அன்னையிடம் கொண்டுவந்து கைப்பேசியைக் கொடுத்தாள் காவ்யா.

அவ்வளவு நேரமாக மல்லிகா அம்மா காதை இங்கே கொடுத்துக்கொண்டுதான் இருந்தார். இருந்தாலும் அவராகப் பேச வரவில்லை.

அவளாகத் தன்னைக் கேட்கிறாளா, தன்னோடு பேச முயல்கிறாளா என்று பார்க்க நினைத்தார். இப்போதும் அவருக்கு மனத்தாங்கல் இல்லாமல் இல்லை. ஆனால், மகனுக்கும் அவளுக்கும் என்னவோ சரியில்லை என்பது தெரிந்திருந்ததால், “எப்பிடியம்மா இருக்கிறீங்க? ஏன் இப்பிடி மெலிஞ்சுபோய் இருக்கிறீங்க.” என்றார் கவலையோடு.

“அது இஞ்ச ட்ரெயினிங்க்கு போறனான் அன்ட்ரி. நிறைய நேரம் இருந்தே வேலை பாக்கிறதால உடற்பயிற்சி நலம்தானே. அதுதான் போல.” அவளுக்கு அவள் மனத்தின் அழுத்தங்களை வெளியேற்ற வேண்டும். ஒரு தெளிவு கிடைக்க வேண்டும். அதனால்தான் போக ஆரம்பித்தாள். அது அவள் மன, உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த உதவியாக இருக்கவும் விடாமல் தொடர்கிறாள்.

“சொறி அன்ட்ரி. சொல்லாம வந்திருக்கக் கூடாது. ஆனா வேணுமெண்டு செய்யேல்ல.” என்றாள் சங்கடமும் கண்ணீருமாக.

ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தவர் சிறு புன்னகையை மட்டுமே சிந்த, அதுவே அவளுக்குப் பெரும் தண்டனையாகிப் போயிற்று. கண்ணீர் தளும்பி வழிய, “உண்மையாவே சொறி அன்ட்ரி.” என்றாள் மறுபடியும்.

error: Alert: Content selection is disabled!!