நீ வந்து தங்கிய நெஞ்சில் 39.1

அத்தியாயம் 39

காவ்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை பிறந்து அவள் வைத்தியசாலையில் இருக்கையிலேயே யாமினி அழைத்துப் பேசினாள். ஏகாம்பரம் ஐயா, மல்லிகா அம்மா, காவ்யா, ஏன் ரகு கூட அவளோடு கதைத்தான்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அவனும் அவளுக்கு ஒரு சகோதரனாகியிருந்தான். கூடவே ஏகாம்பரம் ஐயா முதற்கொண்டு அத்தனை பேருக்கும் அந்த வீட்டின் மருமகள் அவள்தான் என்று தெரிந்து, ஏற்றுக்கொண்டுமிருந்தனர்.

அது அவளுக்கும் தெரியும். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் பேசுவாள். தன்னலமில்லாத அந்த அன்பை உதறிவிட்டுப் போகிற அளவுக்கு அவளுக்குத் தெம்பில்லை. அவர்களும் இவர்கள் உறவைப் பற்றி இதுவரையில் ஒரு வார்த்தை கேட்டதில்லை. அதற்குக் காரணம் நிரோஜன்தான் என்றும் தெரியும். இல்லையானால் மல்லிகா அம்மா சும்மா இருக்கிறவர் இல்லையே.

அவள் எல்லோரோடும் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நிரோஜனும் அங்கேதான் நின்றிருந்தான். மற்றவர்களின் பார்வை பேசப்போகிறானா என்பதுபோல் அவன் மீது படிவது தெரிந்தும் அவன் அசையவில்லை.

அவளும் அவனிடம் பேசக் கேட்கவில்லை. காணொளி அழைப்பில் என்றாலும் மொட்டுப் பிரியாத ரோஜாவைப் போன்று, வெள்ளை விரிப்பினுள் கிடந்து மெலிதாய் அசைந்த குழந்தையை அள்ளி அணைக்கவேண்டும் போல் எழுந்த உந்துதலில் தடுமாறிப்போனாள்.

அஜந்தாவும் தாய்மை உற்றிருந்தாள். இப்போது அவளுக்கு ஆறு மாதம். எல்லோரும் வாழ்க்கையில் அடுத்தடுத்த படிகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கையில் தான் மட்டும் குட்டையாக ஒரு இடத்திலேயே தேங்கிவிட்ட உணர்வு யாமினிக்குள்.

ஆதவனிடம் சொல்லிவிட்டு வந்ததுபோல் நல்ல தொகை ஒன்றை மாதம் மாதம் அவன் பெயருக்கு அனுப்பிவைப்பாள். ஆனால், அன்னை தமக்கையோடு அளவான பேச்சு மட்டுமே. மனத்தளவில் விலகிவிட்டதாலோ என்னவோ உள்ளார்ந்த பேச்சு வரவில்லை.

கூடவே, பணம் கையில் இருந்தால் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்று நம்பினாள். இன்று அவளிடம் நல்ல சேமிப்பு இருந்தது. இனியும் சேமிக்கத்தான் போகிறாள். ஆனால், அந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப்போகிறேன் என்கிற விரக்திதான் நாளுக்கு நாள் அதிகமாயிற்று.

அந்த நாள்களில்தான் பணம் முக்கியம்தான், ஆனால் உயிராக நேசிக்கும் உறவுகளின் முன்னே பணம் ஒன்றுமேயில்லை என்று புத்திக்கு உறைத்தது.

ஆதவனும் இங்கே தன் நிலையிலிருந்து மாறவில்லை. மாதங்கியை உயிராக நேசித்து, ஆசையாக மணந்து வாழ்ந்தவன். அப்படியான அவனுக்கு அவள் செய்ததை இலகுவாய் மன்னிக்கவோ மறக்கவோ முடியவில்லை.

வெளிப்படையாகவோ, கத்தியோ கோபத்தைக் காட்டும் ரகம் அவன் இல்லை. அன்று நடந்தது, தன் சரிபாதியாக நம்பியிருந்தவளின் துரோகத்தில் உண்டான அதிர்ச்சியின் வெடிப்பு.

அதன் பிறகான நாள்களில் அவளோடு பேசினான். குழந்தைகளைக் கவனித்துக்கொண்டான். வீட்டின் பொறுப்பில் எந்தக் குறையும் இல்லை. நால்வரினதும் நலத்திலும் மிகுந்த அக்கறை செலுத்தினான். ஆனால், மனைவியை நெருங்கவும் இல்லை, அவளை நெருங்க விடவும் இல்லை.

முதலில் இதை மாதங்கி உணரவில்லை. பிறந்த குழந்தையும் அவள் உடல் நலமும் காரணம் என்று எண்ணியிருந்தாள். ஆனால், ஒரு வருடமாகியும் அவள் படுக்கை அன்னையோடுதான் என்றபோதுதான் யோசிக்க ஆரம்பித்தாள்.

நாகேஸ்வரி கூட, “சின்னவா வளந்திட்டா பிள்ளை. இனி கவிக்குட்டி என்னோட படுக்கட்டும்.” என்று மறைமுகமாகக் சொல்லியிருந்தார்.

அவளால் அன்னையின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் போயிற்று. அவளாகவே அவர்களின் அறைக்கு மாறிக்கொண்டாள். அதன் பிறகும் அந்த இடைவெளியை அவன் குறைக்கவேயில்லை.

அப்போதுதான் கணவனின் உறுதியான உள்ளத்தையும், தன் செயல் அவனுள் உண்டாக்கிய பாதிப்பின் ஆழத்தையும் உணர ஆரம்பித்தாள் மாதங்கி.

அவனிடம் எத்தனையோ முறை மன்னிப்புக் கேட்டு, அழுது, யாமினியிடம் வாங்கிய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லியும் அவன் தன் மௌனம் விட்டு வெளிவருவதாக இல்லை.

கடைசியில் அவனாக இறங்கி வரும் வரையில் காத்திருக்க முடிவுசெய்தாள் மாதங்கி. அது மட்டும்தான் அவளால் முடிந்தது. அப்போதுதான் வாழ்க்கைக்கு என்ன முக்கியம் என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தாள்.

இப்போதோ அவளுக்கு எப்போது யாமினி திரும்பி வருவாள், அவள் பணத்தை திருப்பிக் கொடுப்போம் என்கிற நிலைக்கு வந்திருந்தாள்.

நாகேஸ்வரி அம்மாவுக்கு இங்கே நடப்பதும் புரிந்தது. அங்கே சின்ன மகளின் விலகளும் புரிந்தது. தினமும் அழைப்பாள். அவர் உடல் நலம் விசாரிப்பாள். சின்னவர்களோடு சிறிது நேரம் பேசுவாள். வைத்துவிடுவாள்.

தான் அப்போதே மூத்த மகளின் பேச்சுக்கு இசைந்து கொடுக்காமல் இருந்திருக்க இதெல்லாம் நடந்திராதே என்று எண்ணியெண்ணி நோவதைத் தவிர்த்து அவருக்கும் வேறு வழியில்லாது போயிற்று.

இந்த இடைப்பட்ட நாள்களில் திலினிக்குத் திருமணமாகியிருந்தது. மகேஷ் இவன் கடனைக் கேட்ட கோபத்தில் அதை திருப்பிக் கொடுத்ததோடு விலகுவதே தெரியாமல் மெல்ல மெல்ல விலகியிருந்தான். அவனுக்குத் திருமணமானதே அது முடிந்த பிறகுதான் இவர்களுக்குத் தெரிய வந்திருந்தது.

மித்ரனுக்கு அடுத்த மாதம். நவீனுக்குப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். நிரோஜன் மட்டும் அப்படியே.

அஜந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. விடயமறிந்து வாழ்த்துச் சொல்ல அழைத்தபோது, அடுத்த ப்ராஜெக்ட்டை அங்கேயே யாமினி தேட ஆரம்பித்திருக்கிறாளாம் என்று சொல்லியிருந்தாள் அஜந்தா.

அவளுக்குத் திரும்பி வருகிற எண்ணம் இல்லை என்று அவள் புறப்பட்ட நேரமே சொல்லியிருந்தாள்தான். என்றாலும் அன்று விமானநிலையத்தில் வைத்துத் தன் மனத்தைச் சொன்னதும், இந்த ஒன்றரை வருடங்களாக அவன் காத்திருந்தும் சேர்ந்து, அவளுக்குத் தன்னை உணர்த்தியிருக்கும் என்று பெருமளவில் நம்பியிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!