நீ வந்து தங்கிய நெஞ்சில் 4.1

அத்தியாயம் 4

கற்கண்டருக்குத் திடீர் நெஞ்சுவலி வந்துதான் வைத்தியசாலைக்குக் கொண்டுபோனார்கள். இதயத்துக்கான இரத்த நாளத்தில் அடைப்பு என்று கண்டுபிடித்து, பைபாஸ் அறுவைச் சிகிச்சையைத் தனியார் வைத்தியசாலையில் செய்தார்கள்.

இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் இரத்தப்போக்கு அதிகரித்து, ஹார்ட் அட்டாக் வந்து இறந்திருந்தார் மனிதர்.

அனைத்துமே கொஞ்சமும் எதிர்பாராமல் நிகழ்ந்துபோனதில் அவரவரிடம் இருந்த பணத்தை எடுத்துப் போட்டு அனைத்தையும் செய்து முடித்திருந்தனர்.

அந்தியேட்டிக்கு அந்த வீட்டின் ஒற்றை மருமகனாக அனைத்தையும் செய்ய ஆதவன் தயாராக இருந்தான்.

அடுத்த நாள் காலையிலேயே எவ்வளவு செலவாகும் என்று கணித்த தொகையை வங்கியிலிருந்து எடுத்து, மாதவனிடம் கொடுத்தாள் யாமினி.

ஆதவன் அதை வாங்கச் சம்மதிக்கவில்லை. “ஆஸ்பத்திரிச் செலவு, செத்த வீட்டுச் செலவு எண்டு எல்லாத்துக்கும் பிடிவாதமா நிண்டு நீங்க தந்ததே போதும் யாமினி. இந்தச் செலவு என்ர பொறுப்பு.” என்று அவன் சொன்னபோது, யாமினி நெகிழ்ந்துபோனாள்.

ஆனால், அதிர்ந்து நின்ற தமக்கையைக் கவனித்துவிட்டு, “இப்பிடி நீங்க சொல்லுறதே போதும் அத்தான். இத வாங்குங்கோ ப்ளீஸ்!” என்று நீட்டினாள்.

அவன் கடைசிவரையிலும் வாங்கவே இல்லை.

அதிலிருந்து மாதங்கி இவளுக்கும் அன்னைக்கும் முகம் கொடுக்க மறுத்தாள்.

கோபம் என்பதையும் தாண்டி மிகவுமே வேதனையுற்றாள் யாமினி. இது தன் தமக்கைதானா என்று நம்ப முடியவில்லை.

சின்ன வயதிலிருந்தே அவள் சைக்கிளைக் கூட இவளைத் தொட விடமாட்டாள். அவளின் உடைகளைப் போட்டால் பிடிக்காது. அதெல்லாம் சின்ன சின்ன விசயங்களாக இருந்ததில் பெரிதாகப் பட்டதில்லை.

கற்கண்டு ஐயா இருந்தவரை என்ன நல்லது கெட்டது நடந்தாலும் அவரே அனைத்தையும் முன்னின்று பொறுப்பெடுத்துப் பார்த்துக்கொண்டதில் இப்படி ஒரு பிரச்சனை இவர்களுக்குள் வந்ததில்லை. அதனாலேயே மாதங்கியின் இந்தக் குணம் பெரிதாகத் தெரியாமலேயே இருந்துவிட்டது.

கற்கண்டரின் அந்தியேட்டி நிறைவாகவே நடந்து முடிந்தது. வந்தவர்கள் எல்லோரும் அவரைப் பற்றியும் அவரின் நல்ல குணங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனது மிகுந்த ஆறுதல்.

அடுத்த நாள் அவள் புறப்பட வேண்டும். அதற்கு முதல் ஆதவனிடம் திரும்பவும் பணத்தைக் கொண்டுபோய் நீட்டினாள். அப்போதும் அவன் வாங்க மறுத்தான்.

“அவர் எனக்கு மாமா யாமினி. அப்பாக்குச் சமன். அவருக்கு நான் செய்யக் கூடாதா? ஏன் இந்தக் காசைத் தந்தே ஆகோணும் எண்டு நிக்கிறீங்க? நீயாவது சொல்லு மாது.” என்று கொஞ்சம் கோபமாகவே சொல்லிவிட்டுப் போனான் அவன்.

இதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாது அவள் நிற்க, “அம்மாச்சி, அக்கா அந்தக் காச தன்னட்ட தரட்டுமாம் எண்டு சொல்லுறா. குடுத்துவிடுங்கோ பிள்ளை.” என்று, அவள் காதில் வந்து இரகசியமாகச் சொன்னார் நாகேஸ்வரி.

அன்னையைக் கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தாள் யாமினி. அவளுக்கு அதைக் கொடுப்பதில் ஒன்றுமில்லை. ஆனால், பணத்திற்காகத் தமக்கை சொந்த வீட்டினுள் செய்யும் இந்த அரசியல் அதிர்ச்சியளித்தது. கூடவே, அவளுக்கு இசைந்து முழுத் தொகையையும் கொடுத்துவிடு என்று சொல்லும் அன்னையும் அவளுக்குப் புதிதாய்த் தெரிந்தார். அவர் மாதங்கியிடம் ஒன்றுமே சொல்லவில்லையா?

“அக்காவா கேட்டவாவாம்மா?”

“ஓம் பிள்ளை.”

“நீங்க என்ன சொன்னனீங்க?”

“நான் என்ன சொல்ல இருக்கு? ஏதாவது சொன்னா நான் சரி. உன்ர அத்தான் இல்லாத நேரத்தில என்னை ஒரு வழியாக்கிப்போடுவா. சின்னவனைப் போட்டு அடிச்சு, பண்ட பாத்திரத்த டொம் டொம் எண்டு போட்டு, என்ன கேட்டாலும் பதில் சொல்லாம முகத்தை நீட்டிக்கொண்டு திரிஞ்சு எண்டு பயமா இருக்கும் பிள்ளை.”

அப்பாவும் இல்லை என்கிற தைரியத்தில் மாதங்கி அன்னையைத் தன் முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வது நன்றாகவே புரிந்தது.

பேசாமல் அந்தப் பணத்தை எடுத்து அன்னையின் கையில் பொத்திவிட்டு, அடுத்த நாளே கொழும்புக்குப் புறப்பட்டுவிட்டாள்.

புறப்பட முதல், “கொஞ்ச நாளைக்கு என்னோட வந்து இருக்கப்போறீங்களாம்மா?” என்று கேட்டுப்பார்த்தாள்.

“அப்பிடி எப்பிடிப் பிள்ளை வாறது? என்னால அந்த ஒற்றை அறைக்க அடஞ்சு கிடக்கவும் ஏலாது. இஞ்ச சின்னவர் நான் இல்லாம இருக்க மாட்டார். அக்காவும் சமாளிக்க மாட்டா.”

அவளோடு வந்து இருந்தால் அவருக்கு ஆறுதலாக இருக்குமோ என்றெண்ணித்தான் கேட்டாள். அவருக்கு விருப்பமில்லை என்றதும் விட்டுவிட்டாள்.

புகையிரதம் ஏறியதும் நிரோஜன் அழைத்தான்.

“வெளிக்கிட்டியா?”

“ஓம்.”

“பிக்கப் பண்ண வருவன். ஒரு இருவது நிமிசத்துக்கு முதல் மெசேஜ் பண்ணு!”

“ம்!”

“என்ன யமி? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” அவளின் ஒற்றைச் சொல் பதிகளைக் கவனித்துவிட்டு விசாரித்தான்.

“இல்ல. அது… அப்பா இனி இல்லவே இல்லை என்ன? அதான்…” தாயும் தமக்கையும் ஆறுதலாக இருந்திருந்தால் கூடப் பரவாயில்லாமல் இருந்திருக்கும் போலும். இது என்னவோ தந்தையும் இல்லாமல் போய், தாய் சகோதரியும் தள்ளிப்போனது போலாகிவிட, தான் தனியாகிப்போனதுபோல் உணர்ந்தாள்.

“யம்மும்மா என்னடா?” என்றான் அவன் தவித்துப்போய்.

“யாருமே இல்லாத மாதிரி இருக்கு நிரோ.”

அவள் குரல் உடைந்து வரவும் உடனேயே காணொளி அழைப்பில் சென்று அவளைப் பார்த்தான். அவன் முகம் பார்த்ததும் கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு.

“என்னடா?” என்றான் கனிந்து

வாயைத் திறந்தால் உடைந்துவிடுவோம் என்று தெரிந்து, பார்வையைத் தழைத்துக்கொண்டு ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள்.

“யமி!”

கண்ணீரை அடக்கியபடி நிமிர்ந்து பார்த்தாள்.

“நான் இல்லையா உனக்கு?”

அந்த ஒற்றைக் கேள்வியில் சட்டென்று கன்னத்தில் வழிந்துவிட்ட கண்ணீரை துடைத்தாள் அவள்.

அங்கே என்னவோ அவளைப் பாதிக்கும் விதமாக நடந்திருக்கிறது என்று புரிந்துவிட, “இந்த நிரோ இருக்கிற வரைக்கும் யமி தனி இல்ல. அங்கிளும் எங்கயும் போகேல்ல. உன்னோடதான் இருப்பார். அழக்கூடாது. பாக்கிறவே என்ன நினைப்பினம்?” என்று ஆறுதலாகப் பேசி, அவள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துவிட்டே வைத்தான் அவன்.

அவள் திருமணத்தையும் பார்த்துவிட ஆசைப்பட்ட மனிதர் அவள் தந்தை. நிரோஜனின் தங்கைக்கு திருமணம் முடியாததால் அவர்களின் காதலை அவரிடம் அவள் சொல்லவில்லை.

அதைச் சொன்னால், அவனும் அவளும் ஒரே நகரில், அதுவும் ஒரே வளாகத்தில் வேலை செய்வதை விரும்பாமல் வேறு எங்கும் மாற்றிக்கொள்ளச் சொல்லிவிடுவாரோ என்கிற பயம்.

அந்த நேரம் காதலும், காதலனோடு செலவழிக்கும் அந்த நேரங்களும் முக்கியமாகத் தெரிந்தன. ஆனால் இன்று, அதைச் சொல்லி, நிரோஜனை அவருக்கு அறிமுகப்படுத்தி, குறைந்தபட்சமாகச் சின்ன மகளுக்கும் ஒருவன் பொருத்தமாய் இருக்கிறான் என்கிற நிம்மதியையாவது கொடுத்திருக்கலாம் என்று நினைத்தாள்.

அவள் போய் இறங்கியபோது புகையிரத நிலையத்தில் வந்து காத்திருந்தான் நிரோஜன். இவள் முகத்தை ஒற்றைப் பார்வையால் ஆராய்ந்துவிட்டு, இலேசாய் அணைத்து, “நீ ஓகேயா?” என்றான் அவள் முகம் பார்த்து.

அவன் அக்கறை மனதிற்கு இதம் சேர்க்க, புன்னகையோடு ஆம் என்று தலையசைத்தாள். உணவகத்தில் உணவையும் முடித்துக்கொண்டு அவள் வீட்டுக்குச் சென்று சேர்ந்தார்கள்.

பயணக்களை போகக் குளித்து வந்தவள் கையில் பால் தேநீரைக் கோப்பையை நீட்டினான். அவள் அருந்தி முடிக்கிறவரை கற்கண்டாரின் முப்பத்தியொராம் நாள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டால்.

அருந்தி முடித்ததும் அவளைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, என்ர யமின்ர மண்டைக்க இருந்து என்ன குடையுது? என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு வினவினான் அவன்.

“இல்ல அது…” என்று ஆரம்பித்து, வீட்டில் நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்டாள்.

தமக்கையின் சுயநலம் அவளை மிகவும் பாதித்துவிட்டது புரிய, “நீ ஏன் அவாவைப் பற்றி யோசிக்கிறாய்? உன்னைப் பற்றி யோசி. ஒரு மகளா இருந்து அத்தனை செலவையும் அவருக்காகச் செய்திருக்கிறாய். அப்ப அவருக்கு நீ எவ்வளவு அருமையான மகள் எண்டு யோசி.” என்று அவன் சொன்னபோது, அவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தே போயிற்று.

“அவரும் அந்தளவுக்கு நல்ல அப்பா நிரோ. அப்பிடியானவருக்குச் செய்ய…” என்றவளால் மேலே பேச முடியாமல் போயிற்று.

தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “காசு விசயத்தில நீங்களும் கொஞ்சம் கவனமா இருங்க நிரோ. இவ்வளவு காலமும் வீணா சிலவழிச்ச காசைக் கணக்குப் பாத்தா எனக்கு நெஞ்சுவலி வந்திரும் போல இருக்கு. சிலவழிக்கேக்க தெரியேல்ல. இப்பிடி ஒரு அவசரத் தேவை எண்டு வந்து, காசில்லாம நிக்கேக்கதான் எல்லாம் விளங்குது. எப்பவும் உங்களச் சிலவாளி எண்டு சொல்லுவன். ஆனா நானும் அப்பிடித்தான் இருந்திருக்கிறன் எண்டு இப்பதான் தெரியுது.” என்று சொன்னாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!