“சும்மா நீயே உன்னை பற்றி அப்பிடி எல்லாம் நினைக்காத யமி. அத விட்டுப்போட்டு ஏதோ அசைமென்ட் இருக்கு எண்டு சொன்னனீ எல்லா. அத முடி. ட்ரெயின்ல சும்மாதானே இருக்கப்போறாய்.” என்று அவள் சிந்தனையைத் திருப்பிவிட்டான்.
“அதான் செய்யப்போறன். உங்களுக்கு மகேஷ் அண்ணாவா காசத் திருப்பித் தந்தவர்?” சமீப நாள்களில் பணம் என்கிற ஒன்று அவள் வாழ்க்கையில் நிறைய விளையாடிவிட்டதில் அவள் கவனம் அதிலேயே இருந்தது.
ஒரு கணம் அமைதி காத்தாலும், “அவன்தான் தந்தவன். நீ இஞ்ச கிட்ட வந்ததும் மெசேஜ் பண்ண மறக்காத. நான் பிறகு எடுக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
நாள்கள் நகர ஆரம்பித்தன. யாமினியும் தன்னை வேலையில் புகுத்திக்கொண்டாள். ஆனால் ஒரு பாதுகாப்பற்ற தன்மையும் பயமும் அவளிடம் நிரந்தரமாகத் தங்கிப் போயிற்று.
தந்தை இருக்கும் வரை தெரியவில்லை. இப்போது கையிலும் காசில்லை என்கையில் ஒரு பாதுகாப்பற்ற தன்மை அவளை அலைக்கழித்தது.
கற்கண்டு ஐயா அவர் காலத்தில் காணி வாங்கி வீடு கட்டி வாழ்ந்த வீட்டினைத்தான் மாதங்கிக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தார். நாகேஸ்வரிக்கு அவர் வீட்டினர் சீதனமாகக் கொடுத்த வீடு இவளுக்கு என்று வைத்திருக்கிறார்கள். மாதங்கிக்குப் போலவே இவளுக்கும் நகைகள் கற்கண்டு ஐயா செய்து வைத்திருந்தார். திருமணச் செலவுக்கு என்று ஒரு தொகை கூட உண்டுதான்.
என்றாலும் அவளுக்கு அது எதையும் எதற்காகவும் தொடுவதில் உடன்பாடில்லை. அவை அவளின் தந்தை அவளுக்ககச் சேர்த்து வைத்தவை. அதில் கை வைக்கும் நிலை வந்தால் அவர் நம்பிக்கையை அவள் தகர்த்தவளாகி விடுவாள் என்று எண்ணினாள்.
இனி அவள் பணத்தில் முடிந்தவரையில் சேமித்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதல் நிரோஜனின் பணத்தைக் கொடுக்க வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, கிணற்றடியில் வழுக்கி விழுந்து, நாகேஸ்வரிக்கு நடக்க முடியாமல் போய், வைத்தியசாலையில் சேர்த்திருப்பாதாக அழைத்துச் சொன்னாள் மாதங்கி.
ஆடிப்போனாள் யாமினி. அலுவலகத்தில் விடுமுறை கேட்க முடியாது. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ வேலையைக் கேட்டு வாங்கிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். அங்கே அதற்கும் செலவு. தனியார் வைத்தியசாலையில்தான் சேர்த்திருந்தார். பணத்தைக் கட்டச் சொல்லி அவர்கள் சொன்னபோது, கெட்டித்தனமாக ஆதவனை எதற்கோ அனுப்பிவிட்டு, இவளை அழைத்துப் பணத்தைக் கட்டச் சொன்னாள் மாதங்கி.
யாமினிக்கு அன்றொருநாள் அஜந்தா சொன்னதுதான் நினைவில் வந்து நின்றது. பணத்தைக் கட்டிவிட்டு வந்து, “நீயும் அம்மாக்கு மகள்தான் அக்கா. அந்தியேட்டிச் செலவுக் காசை நான் தந்தத வச்சு, எல்லா செலவையும் என்னை வச்சே பாக்கலாம் எண்டு நினைக்காத. இதுதான் கடைசித்தரம். இனியும் இப்பிடியே நடந்தாய் எண்டு வை, அத்தான் உன்னைப் பற்றி என்ன நினைப்பார், எங்கட குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பார் எண்டெல்லாம் யோசிக்க மாட்டன். நேரா அவரிட்ட எல்லாத்தையும் சொல்லுவன்.” என்று சொல்லிவிட்டாள்.
அவளுக்கு அப்படிச் சொல்லும் எண்ணமெல்லாம் இல்லை. என்ன இருந்தாலும் கூடப் பிறந்தவள் வாழ்க்கையில் பிரச்னையை உண்டாக்கிவிட்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியுமா என்ன? இப்படி மிரட்டினாலாவது அவள் கொஞ்சம் அடங்குவாள் என்று எண்ணித்தான் சொன்னாள்.
அவளானால், “என்னவோ உங்கட சின்ன மகள் இருக்கிறாள், அவள் பாப்பாள் எண்டு சொன்னீங்க அம்மா. இப்பிடி உங்கட சிலவை எல்லாம் அவள் பாக்க மாட்டாளாம். என்னையும் தரட்டுமாம். இல்லாட்டி என்ர குடும்பத்துக்கு சண்டையைப் போட்டுப் பிரிச்சு விட்டுடுவாளாம்.” என்று நாகேஸ்வரியிடம் வந்து புகைந்திருந்தாள்.
யாமினியைக் கண்டதும் அவர் அழ ஆரம்பித்தார். “பேசாம என்னைக் கொண்டுபோய் அரசாங்க ஆஸ்பத்திரில போடுங்கோ பிள்ளை. உங்களுகளுக்குப் பாரமா இருக்க எனக்கு விருப்பம் இல்லை.” என்றதும் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் யாமினி.
மாதங்கியும் இருக்கையில் அவளால் எதையும் எடுத்துச் சொல்லவும் முடியவில்லை. கடைசியில் அப்படிப் பேசியதற்காக மன்னிப்பைக் கேட்டு அவரைக் கொஞ்சம் அமைதிப்படுத்தி முடிப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாயிற்று.
ஆனாலும் கூட, “உங்களுக்குச் செலவு வைக்கக் கூடாது எண்டு எல்லாத்துலயும் கவனமாத்தான் பிள்ளை இருக்கிறனான். சின்னவன் ஓடவும் அவனைப் பிடிக்கிறன் எண்டு ஓடினத்தில பாசி இருந்ததைக் கவனிக்கேல்லம்மா.” என்று வீட்டுக்கு வந்த பிறகும் அரற்றியவரைக் கண்டு வேதனையாயிற்று அவளுக்கு.
இளம் பிள்ளை. கை நிறையச் சம்பாதிக்கிறாள். அப்படி இருந்தும் தந்தையின் இறப்பு அவளுள் மிகப்பெரிய பாதிப்பையும் பாதுகாப்பற்ற மனநிலையையும் கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க வயதான காலத்தில் கணவரையும் இழந்து, பெண் பிள்ளைகளை அண்டி வாழும் நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கும் அன்னையின் அநாதரவான நிலையையும் பயத்தையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அதில் பெரும் தொகை ஒன்றை அவர் கையில் பொத்தி, “அக்கா என்னை மாடாக்க நினைக்கக் கூடாது எண்டுதானம்மா அப்பிடிச் சொன்னனான். அதுக்காக அப்பிடி நடப்பனாம்மா? என்னை உங்களுக்குத் தெரியாதாம்மா? இனி மாதா மாதம் உங்கட கைச் செலவுக்கு எண்டும் காசு போடுறன். நிம்மதியா இருங்க சரியா?” என்று மேலும் இரண்டு நாள்கள் அவரோடு இருந்துவிட்டது திரும்பவும் கொழும்புக்குப் புறப்பட்டு வந்தாள்.
அப்படி அவருக்கான வைத்தியச் செலவு, அவருக்கு கொடுத்த பணம், இனியும் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மருந்து கட்டவேண்டியிருந்த நிலை என்று அந்த மாதம் அவள் நினைத்தது போன்று நிரோஜனிடம் வாங்கிய பணத்தைத் திருப்ப முடியாமல் போயிற்று.
இப்படி இருக்கையில்தான் ஒரு புகைப்படத்தை இவளுக்கு அனுப்பிவைத்தாள் அஜந்தா. பைக்கில் நிரோஜனின் பின்னால் அமர்ந்திருந்த திலினி, அவன் தோளை ஒரு கரத்தினால் இறுக்கிப் பற்றிக்கொண்டு, முழங்கால்களை ஊன்றி எழுந்து நின்றிருந்தாளா, இல்லை எம்பி நின்றபடி செல்ஃபி ஸ்டிக்கை நீட்டிப் பிடித்து அந்தப் படத்தை எடுத்தாளா தெரியவில்லை. அவனோடு ஒட்டிக்கொண்டிருந்தாள். அதுவும் ஹெல்மெட் அணிந்திருந்த அவன் தலை அவள் மார்பில் முட்டி நிற்பதுபோல் இருப்பதைப் பார்க்க பார்க்க அவளுக்குக் கொதித்துக்கொண்டு வந்தது.
உடனேயே அவனுக்கு அழைத்தாள்.
“என்னைச் சந்தேகப்படுறியா யமி?” அவனது முதல் கேள்வியே அதுவாகத்தான் இருந்தது.
“சந்தேகப்படுறன் எண்டு உங்களிட்டச் சொன்னனானா?” என்று சீறினாள் அவள். “உங்களில சந்தேகம் இல்லை எண்டுறதுக்காக இப்பிடி நீங்க கண்டவளோடயும் ஒட்டிக்கொண்டு திரியிறதை எல்லாம் பாத்துக்கொண்டு இருக்கேலாது நிரோ.”
“நான் அவளோட ஒட்டிக்கொண்டு திரிஞ்சத பாத்தியாடி நீ?” அவள் கேட்டு முடிக்க முதலே அவனும் சீறினான். “அவள் ஒழுங்காத்தான் இருந்து வந்தவள். நானும் பைக் ஓடுறதில கவனமா இருந்தனான். திடீரெண்டு என்ர தோளைப் பிடிச்சுக்கொண்டு எழும்பி நிண்டு எடுத்த செல்பி அது. அப்பிடி அவள் எடுப்பாள் எண்டு எனக்குத் தெரியாது. அதே மாதிரி தள்ளி இரு எண்டு நான் சொல்ல முதலே அவளாவே தள்ளி இருந்திட்டாள். அதுக்குப்போய் என்ன எல்லாம் கதைக்கிறாய்.”
“அதுக்குப் பிறகாவது இன்னொருக்கா இப்பிடி நடக்காத எண்டு சொன்னீங்களா?”
“ஏய் லூசு. அது எதேற்சையா நடந்த ஒண்டு. அவளின்ர நோக்கம் பிழையா இருந்திருந்தா கட்டாயம் சொல்லியிருப்பன். அவளே அதை உணந்திருக்க மாட்டாள். அதைப் போய் ஒரு விசயமாக்கி, சும்மா இருக்கிறவளையும் எதையாவது நினைக்க வைக்கச் சொல்லுறியா?”
“அப்ப இதே மாதிரி நானும்…” என்றவளை முடிக்க விடாமல், “போதும் யமி! ஆ ஊ எண்டா இதே மாதிரி நானும் போகலாமா, வரலாமா, செய்யலாமா எண்டு ஆரம்பிக்காத. திரும்பவும் சொல்லுறன். எதேற்சையா நடந்த விசயம் அது. அதைவிட என்ர ஹெல்மெட்தான் அவளில் முட்டிக்கொண்டு நிக்குது நான் இல்ல. தோள்ல கை வச்சா எல்லாம் கற்புப் போகாது.”
“அப்ப இது பிழை இல்ல. இந்த ஃபோட்டோவப் பாத்து கோவப்படுற நான்தான் பிழை என்ன?” தன்னைக் கொஞ்சமும் புரிந்துகொள்ளாதவனின் கோபம் உண்டாக்கிய காயத்தில் அவள் குரல் அடைத்துப்போயிற்று.
“அப்பிடி இல்ல யமி. உன்னை எனக்கு விளங்குது. அவளோ நானோ பிழையான எண்ணத்தோட எதையும் செய்யேல்ல எண்டுறதைத்தான் நானும் உனக்கு விளங்கப்படுத்திறன். அதைவிட அவள் சிங்களப் பெட்டை. அவளுக்கு இதெல்லாம் ஒண்டுமே இல்ல.” அவனுமே சினம் தணிந்து தன்னை அவளுக்கு விளங்கவைக்க முயன்றான்.
“நீங்க தமிழன்தானே? அவள் எந்தச் சிங்களவனிட்ட எப்பிடி நடந்தாலும் எனக்கு ஒண்டும் இல்ல. தமிழனிட்ட இப்பிடி நடக்கக் கூடாது எண்டுறதையாவது நீங்க அவளுக்குச் சொல்லிக்குடுத்திருக்கோணுமா இல்லையா?”
“என்ன பழக்கம் யாமினி இது? இன்னொரு பொம்பிளைப் பிள்ளையைப் பற்றி இப்பிடித்தான் கதைப்பியா? அவளும் பிழையா நடக்கேல்ல எண்டு சொல்லுறது உனக்கு விலங்குதே இல்ல.”
“ஓ உங்களுக்கு அந்த ஃபோட்டோவை பாத்து நான் படுற வேதனை விளங்கேல்ல. ஆனா எவளோ ஒருத்திய ஒரு வார்த்த சொன்னதும் கோவம் வருது என்ன?”
அவளுக்கு விளக்கம் சொல்லி மாளாது என்று புரிந்துவிட, “இப்ப என்ன சந்தேகப்படுறியா?” என்றான் இறுக்கமான குரலில்.
“சந்தேகப்படுறதுக்கும் உங்கட பெயர் கெட்டுப்போயிடக் கூடாது எண்டு அக்கறைப்படுறதுக்கும் வித்தியாசம் இருக்கு நிரோ.”
“எனக்கு என்ர லிமிட்ஸ் தெரியும்!”
“இதா உங்கட லிமிட்? இல்ல இதுக்கும் மேலயா?”
ஏய் என்ன, என்னவோ நான் கேடுகெட்டவன் மாதிரியும், உனக்குத் தெரியாம அவளோட திரிஞ்சத நீ கண்டு பிடிச்சுக் கேக்கிற மாதிரியும் கேள்வியா கேப்பியா? அந்த போட்டோ பாக்க ஒரு மாதிரி இருக்குத்தான். ஆனா, நான் எந்தப் பிழையும் செய்யேல்ல. இதைத்தான் என்னால சொல்லேலும். இதுக்கு மேல நீ என்ன நினைச்சாலும் சரிதான்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

