“நிரோ ப்ளீஸ். எனக்கு என்னிலதான் நம்பிக்கை இல்லை.” என்றவளை நம்பாமல் பார்த்தான் அவன்.
“அது… ஒரு காலம் எதிர்காலத்தப் பற்றி யோசிச்சாலே சந்தோசமான கற்பனைகள்தான் வரும். அப்ப எல்லாம் நான் இந்தளவுக்கு மனதளவில பலவீனமா இருந்ததே இல்ல. அப்பிடி இருந்தும் அப்பா போனதும் என்னென்னவோ எல்லாம் நினைச்சு, பயந்து, அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு எண்டு நான் உங்களுக்குச் செய்ததும் நிறைய. அப்பிடி இருக்க இப்ப எல்லாம் எதைப் பற்றி யோசிச்சாலும் அப்பிடி நடந்திடுமோ, இப்பிடி நடந்திடுமோ எண்டு எல்லாமே எதிர்மறையாத்தான் வருது. பயமா இருக்கு. நித்திரையே வராது. எதையும் யோசிக்கக் கூடாது எண்டு நினைச்சாலும் என்னை மீறி நிறைய யோசிக்கிறன். இப்பிடி இருக்கிற நான் திரும்பவும் அதே பிழைய செய்திடுவனோ எண்டு பயமா இருக்கு நிரோ. அதுக்குப் பிரிஞ்சது பிரிஞ்சதாவே…” என்றவளை மேலே பேச விடாமல், “லூசாடி நீ?” என்று சீறியிருந்தான் அவன்.
அவள் அதிர்ந்து பார்க்க, “அறிவு கெட்டவளே! உனக்குத் தேவை காசோ, சொத்தோ, வெளிநாடோ இல்ல. நான்! என்னை உனக்குப் பக்கத்தில விடு. தைரியம் உனக்குத் தானா வந்திடும்! இல்லையோ கடைசிவரைக்கும் இப்பிடியேதான் இருப்பாய்.” என்றான் ஆத்திரமாக.
அவன் எதையெதையோ நினைத்து வருந்திக்கொண்டிருக்க என்ன பேசுகிறாள் என்கிற கோபம் அவனுக்கு. ஆனால், அறை வாங்கிய குழந்தையாக நின்றவளிடம் ஒரு அளவுக்கு மேல் கோபப்படவும் முடியவில்லை.
ஒரு வேகத்துடன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். அவனுக்கு அது போதவேயில்லை. அவள் முகம் நிமிர்த்தி, முத்து முத்தாக முத்தமிட்டான்.
“நிரோ!” என்று அவள் நிலைகுலைந்து தடுமாற, அவன் உதட்டில் மெல்லிய முறுவல். இந்த முகத்தைக் காண, இந்த அழைப்பைக் காண, அவன் காத்திருந்த காலம் பெரியதாயிற்றே.
ஆசை தீர அவள் முகத்தைப் பார்த்தவன் ஆதூரமாக அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இந்தளவு பயம் வேண்டாம் யமி. நாங்க ரெண்டு பேரும் செய்த பிழைகளுக்குப் பட்ட துன்பம் எல்லாம் போதும். எதிர்காலம் என்ன வச்சிருக்கு எண்டு எங்களுக்குத் தெரியாது. அதுக்காக ஏதேதோ நடந்திடும் எண்டு நினைச்சு இருக்கிற வாழ்க்கையை அழிச்சிடாத. விளங்குதா?” என்று அவன் கேட்டபோது, கண்ணீருடன் ஆம் என்று தலையசைத்தாலும்,
“திரும்பவும் என்னை விட்டுட மாட்டீங்கதானே நிரோ. இன்னொருக்கா உங்களைப் பிரியிற தைரியம் எனக்கு இல்லை. அப்படி ஒன்று நடந்தா சத்தியமா நான் உயிரோ…” என்றவளை இந்த முறை தன் உதடுகள் கொண்டு பேசவிடாமல் செய்தான் அவன்.
யாமினி இதை எதிர்பார்க்கவில்லை. பொது இடத்தில் நின்று என்ன செய்கிறான் என்கிற இயல்பான பதற்றத்தோடு விலக முயன்றாள். அவன் விடவில்லை. மாறாக அவள் இதழ்களை விட்டுவிட்டு நிமிர்ந்து முறைத்தான்.
அவளுக்குக் கன்னங்கள் சூடேறின. “பப்லிக் ப்…” என்றவளைத் திரும்பவும் பேசமுடியாமல் செய்தான்.
அதன் பிறகு அவள் விலக முயவில்லை. அவனோடு ஒன்றி நின்றாள். அவள் நெற்றியிலும் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்துவிட்டு, “இனி உன்னை விட்டுப் போற ஐடியாவே எனக்கு இல்ல யமி. ரெண்டுபேரும் சேந்துதான் ஊருக்குப் போறம். போனதும் கலியாணம். சண்டை சச்சரவு போதுமான அளவு வரும்தான். அதையும் கடந்து சந்தோசமா வாழுவம் சரியா?” என்றவனின் குரலில் இருந்த கம்பீரமும் ஆழமும் அவள் இதயத்தில் இருந்த அத்தனை பாரங்களையும் ஒரு நொடியில் இறக்கிவைத்தன.
இப்போது அவளுக்கு அவனை விட்டு விலக மனமேயில்லை. எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் மார்பு கிடைத்திருக்கிறது. அவன் இதயம், அதன் துடிப்பு, அவன் அணைப்பு, அது தரும் பாதுகாப்பு, கதகதப்பு என்று அத்தனையும் வேண்டுமாய் இருக்க, இத்தனை வருடங்களும் தலையணைக்குக் காணிக்கையாக்கிய கண்ணீரை இப்போது அவன் மார்ப்புக்குப் பரிசளித்தாள்.
நிரோஜன் அவளைத் தடுக்கப் போகவில்லை. இப்படி அவள் தன் கை சேர்ந்துவிட்டதே போதும் என்பதுபோல், அவளை அணைத்துத் தலையை வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.
கடந்தவை நொடிகளா, நிமிடங்களா இருவருக்குமே தெரியாது. அவன் மார்பிலிருந்து முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
“என்ன?” என்றான் அவன் சின்ன புன்னகையுடன்.
“கிட்ட வாங்க!” என்றாள் தலையையும் அசைத்து. முறுவல் விரிய அவள் முகத்தருகே தன் முகத்தை அவன் கொண்டுபோக, இலேசாக எம்பி அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ்களைப் பதித்து, “தேங்க்ஸ்! இந்தளவு தூரம் என்னைத் தேடி வந்ததுக்கு.” என்று சொன்னாள்.
“தேடி வராம? இஞ்சயே இரு எண்டு உன்னை விட்டுட்டு இருப்பன் எண்டு நினைச்சியோ!” அவள் நெற்றி முட்டிக் கேட்டவன் குரலும் கரகரத்துப்போயிற்று.
“அசோகன் அண்ணாட்ட வேற நாலு பிள்ளை பெத்துக் காட்டுறன் எண்டு சவால் எல்லாம் விட்டிருக்கிறன்.” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.
அதைக் கண்டு சத்தமாகச் சிரித்தான் அவன். தன்னால் முறுவல் அரும்ப அவனையே பார்த்தவள், “நான் காஞ்சு கருவாடாகிப்போய் இருக்கிறன். ஆனா நீங்க இன்னும் அதே வடிவோட கண்ணைப் பறிக்கிறீங்க நிரோ!” என்று குறை படித்தாள்.
அவள் சொன்னது உண்மைதான். அந்தளவில் கோலம் கெட்டிருந்தாள் அவள். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “நீ காஞ்சு கருவாடா இருக்கிறியா, இல்ல, கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிறியா எண்டு நான் சொல்லோணும்!” என்றான் அவன் விஷமச் சிரிப்புடன்
அவளுக்குக் குப்பென்று முகம் சிவந்துபோயிற்று. அவனை விட்டு விலகப்போனவள் அவனிலேயே தன்னை மறைத்துக்கொண்டு, “நிரோ!” என்றாள் அதட்டலாக.
அவன் கண்ணைச் சிமிட்டிவிட்டுச் சிரித்தான்.

