அத்தியாயம் 41
குளித்து, வீட்டுடைக்கு மாறிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவளின் முகம் புன்னகையால் மலர்ந்திருந்தது. கதவருகில் ஒரு பக்கமாக இருந்த கால்மிதியில் கழற்றிவிடப்பட்டிருந்த அவன் ஷூக்கள், உணவு மேசையில் இருந்த பர்ஸ், கைப்பேசி, நாற்காலி ஒன்றின் முதுகில் அவன் கழற்றி போட்டிருந்த டி ஷர்ட் என்று அனைத்தையும் கண்டவள் உள்ளம், என்னவோ வீடு முழுக்க ஆட்கள் இருக்கையில் எப்படி நிறைந்திருக்குமோ அப்படி நிறைந்துபோயிற்று.
இத்தனை நாள்களும் வெறும் சுவர்களால் அடைக்கப்பட்டிருந்த அந்த வீட்டுக்கு அப்போதுதான் உயிர் வந்திருந்தது. உற்சாகமாய்ச் சமையலறைக்கு நடந்தாள்.
ஜீன்ஸ் மட்டும் உடம்பில் இருக்க, உள் பேணியனோடு நின்று, முட்டை பொரிக்கிறான் என்று வாசமே சொல்லிற்று. பின்னால் சென்று அவன் இடையோடு கட்டிக்கொண்டு முதுகில் முகம் புதைத்தாள்.
“ஒய் என்ன!” என்ற நிரோஜன் அவளை இழுத்து முன்னால் கொண்டுவந்தான். அப்போதும் தன் அணைப்பை விலக்காது அவன் மார்பில் முகம் புரட்டினாள் அவள்.
“யமி!” நொடியில் கூசிச் சிலிர்த்துத் சிரித்து அவளை விலக்க முயன்றான் அவன். அவள் விடவில்லை. இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு, “இன்னுமே நம்பேலாம இருக்கு நிரோ!” என்று அவன் மார்புக்குள் இருந்தபடியே முணுமுணுத்தாள்.
அவனுக்கும் அப்படித்தானே. அடுப்பை அணைத்துவிட்டு, அவளைத் தூக்கிச் சமையல் மேடையில் அமர்த்தினான். அப்போதுதான் அவளை முழுமையாகப் பார்த்தவனது உதடுகளில் விசில் பறந்தது.
யாமினியின் முகம் நாணத்தால் சூடேறியது. அதை ஒரு மெலிதான சிரிப்புக்குள் மறைக்க முயன்றபடி, “என்ன?” என்றாள் ஒன்றுமே தெரியாதவள் போன்று.
“ஒண்டும் இல்லையே. ஒ…ண்டுமே இல்லையே!” கண்கள் பெரும் விஷமத்துடன் அவளில் பயணிக்கச் சொன்னான்.
மிகவும் தளர்வான, நீல நிறத்திலான வீட்டிற்கு அணியும் ஷோர்ட்ஸும் ஷேர்ட்டும் அணிந்திருந்தாள். அவன் தூக்கி மேடையில் அமர்த்தியதில் முழங்கால் வரை நிற்கும் ஷோர்ட்ஸ் இன்னும் மேலேறி, அவள் தந்தக் கால்களை அவனுக்கு விருந்தாக்கின.
அப்படித் தூக்கி அமர்த்துவான் என்று எதிர்பாராத யாமினிக்கு அவன் பார்வையில் கால்கள் கூசின. அதை உடனடியாக மறைக்க வேண்டும் போல் கைகள் துடித்தன.
ஆனாலும், தன் படபடப்பை அவனுக்குக் காட்டிவிடக் கூடாது என்று எண்ணி, அவனது பார்வையைத் தைரியமாகச் சந்திக்க முயன்றாள். முடியவில்லை.
அந்தளவில் உதட்டை மடித்துக் கடித்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டு, கண்களில் சிரிப்பையும் குறும்பையும் தேக்கி வைத்துக்கொண்டு, “என்ன இது?” என்றான் கண்களால் அவள் அணிந்திருப்பதைக் காட்டி.
“என்ன என்ன?” என்றாள் அவளும் புரியாதவள் போல்.
“என்ன கேக்கிறன் எண்டு உனக்குத் தெரியேல்ல.”
“இல்லையே!”
அவள் முடிப்பதற்குள் அவன் விரல்கள் அவள் தொடையில் பதிந்து தாளமிட்டு ஆரம்பித்தன. பதறிப்போனாள் யாமினி. துள்ளி இறங்கப்போனவளை அவன் விடவில்லை. தடுத்துப் பிடித்து, “நான் இருக்கிறது தெரிஞ்சும் போட்டுக்கொண்டு வந்து நிக்கிறாய்!” என்றான் உதட்டுக்குள் சிரிப்பை மென்றபடி.
ஆம்தான். அதற்கென்று இப்படித்தான் கேட்பானா?
“வெளிநாடு வெள்ளைக்காரியா உன்னை மாத்தியிருக்கு!”
“அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல!” என்று முணுமுணுத்தாள்.
“அப்ப நானும் வெள்ளைக்காரனா மாறோணும்தானே?”
“ஏன், ஊர்லயும்தான் எல்லாரும் இப்பிடிப் போடுறவே.” என்று சமாளிக்க முயன்றாள் அவள்.
“மற்றவேயப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனா நீ போட்டதே இல்ல. அதுவும் எனக்கு முன்னால.”
“இப்ப என்ன அதுக்கு? நீங்கதானே?”
“அதைத்தான் நானும் சொல்லுறன். நான்தானே. என்னைப் பாக்க விடு. அனுபவிக்க விடு!” என்றதும் வெட்கமும் சிரிப்பும் சேர்ந்து வந்தன அவளுக்கு.
“கடவுளே விடுங்க என்னை! மாத்திக்கொண்டு வாறன்” என்று அவனைப் பிடித்துத் தள்ளி விட்டுவிட்டு இறங்க முயன்றாள். அவன் விடவில்லை. “என்னட்ட நீ தாராளமா ஃபிரீயா இருக்கலாம் யமி. நான் பாக்கத்தான் நீ!” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தபோது, அவளுக்கு முகம் மட்டுமல்லாமல் மொத்த உடலும் குங்குமமாகச் சிவந்துபோயிற்று.
“என்ன எல்லாம் கதைக்கிறீங்க நீங்க!” என்று அவன் மார்பிலேயே குத்தினாள்.
வாய் விட்டுச் சிரித்தவன், “முப்பது வயது எனக்கு. இப்ப வரை மொட்டைப் பயலாவே சுத்த விட்டுட்டுக் கதைக்கவும் கூடாதா உனக்கு?” என்றான் குறும்புடன்.
இந்தக் குறும்பனும் அவன் சேட்டைகளும் இல்லாமல் அவள் பட்ட பாடுகள் நினைவில் வர, அவள் கைகள் உயர்ந்து அவன் சுருள் கேசத்துக்குள் புகுந்து விளையாடின.
அவன் கரைந்துபோனான். “யமிம்மா!” என்று அவளை அணைத்துக்கொண்டான். “எத்தினையோ இரவு நீ தாற இந்தச் சுகம் இல்லாம தவிச்சிருக்கிறனடி.” அவ்வளவு நேரமாக இருந்த விளையாட்டுப்பிள்ளை அகன்றுவிட, அவள் காதலன் தவிப்புடன் அவளிடம் சொன்னான்.
யாமினிக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. தவிப்புடன் அவன் கன்னம் தடவிக்கொடுத்தாள். அவன் கழுத்தில் கைகளைக் கோத்து, அவனைத் தன்னிடம் இழுத்தாள்.
அவன் முகம் முழுக்கப் பட்டாம் பூச்சியாய்த் தன் இதழ்களை ஒற்றி எடுத்தவள் கடைசியாய்த் தயக்கமும் தடுமாற்றமுமாய் அவன் முகம் பார்த்தாள். அவனும் எதிர்பார்ப்புடன் அவளையேதான் பார்த்திருந்தான். முகம் சூடானாலும், சிறிதாய் எம்பி அவன் உதட்டில் தன் இதழ்களைப் பதித்தாள்.
அவன் அணைப்பு இறுகிற்று. அவளை உடனேயே விலக விடவில்லை. அவன் விட்டபோது அவள் விழிகள் இலேசாகப் பனித்திருந்தன. “சொறி! அண்டைக்கு அப்பிடிக் கதச்சதுக்கு.” என்றாள் கரகரத்த குரலில்.
சின்ன முறுவலுடன், “அதெல்லாம் ஒண்டும் இல்லையடா!” என்று அவளை அனைத்து விடுவித்துவிட்டுப் போய் முட்டைப் பொரியலையும் பானையும் கொண்டுவந்து அவளுக்குக் கொடுத்தான்.
“உங்களுக்கு?”

