நீ வந்து தங்கிய நெஞ்சில் 42.2

மகேஷ் அவன் மனைவி, திலினி அவள் கணவன் என்று எல்லோருமே வந்திருந்தனர். நிரோஜன் யாரிடமும் எந்தக் கோபதாபங்களையும் குறை நிறையையும் காட்டவில்லை. பாரபட்சமில்லாமல் அழைத்திருந்தான். ஒவ்வொரு குடும்பமாக மேடைக்கு வந்து, மணமக்களை வாழ்த்தி, பரிசு கொடுத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

யாமினியும் இன்முகமாகவே எல்லோரோடும் இரண்டு வார்த்தைகள் பேசி, மாலையில் நடக்கப்போகும் ரிஷப்ஷன் வரை இருக்கச் சொல்லிச் சொன்னாள்.

அசோகன் தன் மனைவி பிள்ளைகளோடு மேடையேறவும் கண்ணில் குறும்பு மின்ன, “இவர் ஆர் எண்டு தெரியுதா யமி? ரெண்டு பிள்ளைக்கு அப்பா” என்றான் நிரோஜன்.

“அடங்கவே மாட்டியாடா?” என்று கேட்டுவிட்டு, “இவனைச் கொஞ்சம் அடக்கி வைங்கம்மா. ஆக மோசம். என்னை இருக்க நிக்க விடாம அரியண்டம் தந்து ஜெர்மனுக்கு வந்தவன்.” என்று சொல்லிக்கொண்டே அவனைச் சுற்றிக் கையைப் போட்டு, சந்தோசமாகப் புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்தான் அசோகன்.

அதற்கிடையில் அந்த மேடையிலேயே ஓடிப்போய் ஒரு மூளையாக வாந்தி எடுத்தான் நவீன். “என்னடா?” என்று அசோகன் பதட்டமானான். திருமண வீட்டுச் சாப்பாடு ஏதும் ஒத்துக் கொள்ளவில்லையோ என்று அவன் யோசிக்க, “நிரோ ரெண்டாவது பிள்ளைக்கு அப்பா ஆயிட்டான்.” என்றான் அவன் மேடையில் கால் பெரு விரலால் கிணறு கிண்டியபடி.

மொத்தக் கும்பலும் சிரிக்க, கொலைவெறியாகிப்போனான் அசோகன். “கத்தி இருந்தா தாங்கடா. இவனை குத்திப்போட்டு நானே போய் ஜெயில்ல குந்துறன்!” என்று பொங்கிவிட்டான்.

கடைசியில் இவர்களின் கூத்துகளை எல்லாம் அறிந்திருந்த அவன் மனைவிதான் அவனைச் சமாதானம் செய்து அழைத்துச் சென்றாள்.

மாலையானது. அழகான சிவப்பு நிற சோலியில் அவளுக்கு எப்போதுமே பிடித்த சோக்கர் வகை நெக்லஸ், அதற்குப் பொருத்தமான ஜும்கா, தலையலங்காரம் என்று மிக மிக அழகாய் யாமினி நிற்க, அவளுக்குப் பொருத்தமாய் சிவப்பு நிற ஷேர்ட்க்கு கோர்ட் ஷூட்டில் கம்பீரமாக நின்றிருந்தான் நிரோஜன்.

கேக் வெட்டி, மோதிரம் மாற்றி, எல்லோருக்கும் கொடுத்து, மாலை நேரத்து ரிசப்ஷன் முடிந்ததும் டிஜெ தன் கச்சேரியை ஆரம்பித்திருந்தார்.

அணிந்திருந்த கோர்ட்டை கழற்றி யாமினியிடம் கொடுத்துவிட்டு, நண்பர்களோடு சேர்ந்து நிரோஜனும் ஆட ஆரம்பித்துவிட, மொத்த மண்டபமும் களைகட்ட ஆரம்பித்திருந்தது.

அதுவும் அவளைத் தாண்டிய ஒரு உலகம் தனக்கு இல்லவே இல்லை என்பதுபோல், அவன் அவளையே சுற்றி சுற்றி வந்து ஆடினான்.

இடையில் கட்டியிருந்த பெல்ட்டின் நடுப்பகுதியில் ஒரு கை இருக்க, மற்றக் கையை அசைத்து அசைத்து ஆடியவனைக் காண, யாமினிக்குக் கண்கள் இரண்டு போதவில்லை.

அவனுக்கு வியர்த்து ஊத்துவத்தைக் கண்டு, “போதும் நிரோ!” என்று அவள் துடைத்துவிட்டாலும் அவன் கேட்பதாயில்லை. அவளையும் இழுத்துக்கொண்டு ஆடினான்.

இதையெல்லாம் அன்று போலவே இன்றும் தூரத்தே நின்று பார்த்து ரசித்தாள் திலினி. இன்றைய ரசிப்பில் எந்தப் பொறாமையும் ஏக்கமும் இல்லை. அழகான காதல் ஒன்றைக் கண்முன்னே காண்கையில் நம்மை மறந்து பார்த்து ரசிப்போமே அந்த மனநிலையில் இருந்தாள்.

அவள் வாழும் அந்த நிறைவான வாழ்க்கையும் அதற்கு ஒரு காரணமாயிற்று.

அவர்களின் பார்ட்டி முடிய நடுச் சாமமாயிற்று. வீடு வந்தவர்களுக்கு அப்பாடா என்று விழுந்து படுக்கத்தான் முடிந்தது.

முதலிரவுக்கு எந்த ஏற்பாடும் செய்ய வேண்டாம் என்று முதலே சொல்லியிருந்தான் நிரோஜன்.

வீடு முழுக்க ஆட்களை வைத்துக்கொண்டு அவனுக்கே அது ஒரு மாதிரியாக இருக்க யாமினியின் நிலை?

அடுத்த நாள் மாலை, மூன்று நாள்களுக்குத் தங்குவதற்கு ஏற்ப தயாராகி, திருகோணமலை கடற்கரையோரமாக இருக்கும் ரிசோர்ட் ஒன்றுக்கு யாமினியை அழைத்து வந்தான்.

இருள் கவிந்தும் கவியாத பொழுது அது. கடற்கரையோரமாக இருவரும் கரம் கோர்த்து மெல்ல நடந்தார்கள். இருவரிடத்திலும் பெரிய பேச்சுகள் எதுவும் இல்லை.

அன்று இரவு தங்கள் தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிக்கப்போகிறோம் என்கிற எண்ணமே அவர்கள் வாயைக் கட்டிப்போட்டிருந்தது. அதே நேரத்தில், அது குறித்த சின்ன வெட்கமும் கூச்சமும் இருவரிடத்திலும் மாறி மாறி அலைமோதியது.

நடந்துவிட்டு வந்து, ரிசோர்ட்டின் உணவகத்திலேயே இரவுணவையும் முடித்துக்கொண்டு தம் அறைக்குத் திரும்பினார்கள்.

யாமினிக்குள் பெரும் பதற்றமும் படபடப்பும். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றவளை பின்னிருந்து அணைத்தான் நிரோஜன்.

“நிரோ!” அவள் இதழ்கள் தடுமாறி முணுமுணுத்தன.

“பயமா இருக்கா?” அவள் தாடையோரத்தில் தன் உதடுகளை உரச விட்டபடி வினவினான்.

“இல்ல ஆனா…” அவள் பேசும் நிலையிலேயே இல்லை. அவளைத் தன் புறம் திருப்பி, “இவ்வளவு காலமும் நாங்க வெய்ட் பண்ணினது போதும்தானே?” என்றான் அவள் நெற்றி முட்டி. பார்வையைத் தழைத்தாலும் ஆம் என்று தலையை அசைத்தாள் யாமினி.

அவளை இலகுவாக்க எண்ணி, “இதான் முதல் அனுபவம். சொதப்பிடுவனோ எண்டு பயமா இருக்கடி யமி!” என்றவனின் பேச்சில் யாமினிக்கு முகம் செவ்வானமாகச் சிவந்து போயிற்று. “இதையெல்லாம் உங்களிட்டா ஆறாவது கெட்டவையா?” என்று கேட்டுக் கோபப்பட முயன்றவளைக் கண்டு சிரித்தவன், மகிழ்ச்சியாய் அவளைக் கட்டிலில் சேர்த்து, ஆராதிக்க ஆரம்பித்தான்.

அவனது ஆழ்ந்த ஆசையும், கட்டுக்கடங்காத ஆவலும் அவளது மேனி எங்கும் பரவ, யாமினி தடுமாறிப்போனாள். அவள் காட்டும் வெட்கத்தைக் கலைப்பதிலும், அவளை இன்னுமின்னும் தனதாக்கிக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினான்.

அவனது ஒவ்வொரு தொடுகையும் யாமினியை மெய்சிலிர்க்க வைக்க, அவன் அவளில் உருவாக்கிய உணர்வுகளின் பெருவெள்ளத்தில் கரைந்து, அவன் கைகளில் மொத்தமாய் கரைந்துபோனாள் அவனின் யமி.

error: Alert: Content selection is disabled!!