நீ வந்து தங்கிய நெஞ்சில் 43.1

அத்தியாயம் 43

நீலக்கடல் அலையடிக்கும் கடற்கரையோரத்து அந்த ரிசோர்ட்டின் பால்கனியில் நின்றிருந்தான் நிரோஜன்.
நேற்றைய இரவின் நிறைவும், உடலெங்கும் பரவியிருந்த சொர்க்க சுகத்தின் அலுப்பும், உள்ளத்திற்குள் இதுவரை உணராத பூரணமான அமைதியும் அவனை ஆட்கொண்டிருந்தன.

சிந்தை முற்றிலுமாக நேற்றைய இரவிலேயே சிக்குப்பட்டு நின்றது. அவளை அவன் வெட்கப்பட வைத்த தருணங்களும், அவள் தடுமாறித் தவித்து அவனிடம் குழைந்த நொடிகளும் அவன் முகத்தில் இப்போது சிவப்பை பூசிச் சென்றன.

உதட்டை மடித்துக் கடித்துத் தன் உணர்வுகளை அடக்க முயன்ற நேரத்தில், பின்னிருந்து அவனது இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, அவன் முதுகில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் யாமினி.

காலை நேரத்துப் பனித்துளிகள் தேகம் நனைத்துப்போனது போன்று, நிரோஜனின் தேகம் மொத்தமும் சில்லிட்டுப் போயிற்று. சந்தோசமான புன்னகையோடு அவளைத் தன் முன்னே கொண்டுவந்து, அவளது இதழ்களில் மெதுவான முத்தத்தைப் பதித்தான்.

அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவன் தந்த முத்தத்தோடு சேர்த்து, நேற்று இரவு நடந்த அத்தனை நிகழ்வுகளும் கண் முன்னே வந்து நிற்க, அவன் நெஞ்சிலேயே மீண்டும் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

நிரோஜனுக்குள்ளிருந்து மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. குதூகலமும் பேரன்பும் ததும்பச் சத்தமாகச் சிரித்தவன் அவளைத் தானும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

இவ்வளவு காலம் அவர்கள் கடந்து வந்த கடினமான பாதையும், அந்தப் பயணத்தில் அனுபவித்த அத்தனை துன்பங்களும், துயரங்களும் இப்போது காற்றில் பறந்துவிட்டன. முதல் நாள் இரவின் நினைவுகளும், அதன் தகிப்பும் மட்டுமே நெஞ்சம் முழுக்க நிறைந்து கிடக்க, அந்த ஆத்மார்த்தமான நிறைவு இருவரின் உடலிலும் உள்ளத்திலும் பரவி வழிந்தது.

யாமினியின் முகத்தை இரு கரங்களாலும் ஏந்தி மெல்ல நிமிர்த்தினான் நிரோஜன். வெட்கத்தில் தவித்த அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்து, இதழ்களில் ஒட்டிக்கிடந்த குறும்புச் சிரிப்புடன், நேற்றைய இரவு எப்படி இருந்தது என்பதைப் போல, தன் புருவங்களை மட்டும் ஏற்றி இறக்கி வினவியவனின் கேள்வியில் யாமினியின் முகம் குங்குமமாய்ச் சிவந்துபோயிற்று. அவனது மார்பில் ‘நச்’சென்று செல்லமாக ஒரு அடியைப் போட்டுவிட்டு, அறைக்குள் ஓடினாள்.

சிரித்துக்கொண்டே துரத்தி வந்தவன், அவளை வளைத்துப் பிடித்துக் கட்டிலில் சாய்த்தான். அந்த விடியலின் பொன்னொளியில், நேற்றைய இரவின் மிச்சங்களையும், தீராத காதலின் தவிப்புகளையும் அவளில் மீண்டும் ஒருமுறை தேடத் தொடங்கினான்.

அந்த மூன்று நாள்களும் மின்னலாக ஓடி மறைந்தன. மூன்றாம் நாள் நிரோஜனின் வீட்டுக்கும் சென்றுவிட்டு, கணவன் மனைவி இருவரும் வவுனியா வந்து சேர்ந்தனர்.

புது வீடு, புது வாழ்க்கை, நிரோஜனுக்குப் புது இடத்தில் வேலை என்று நாள்கள் மிக மிக அழகாக நகர ஆரம்பித்திருந்தன. ஐடி பணியின் பரபரப்புக்கு நடுவே, வார இறுதிகளை இருவரும் திட்டமிட்டு ரசித்து வாழ்ந்தனர்.

அன்று நிரோஜன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது யாமினி சமையற்கட்டில் நின்றிருந்தாள். லேப்டாப் பையை அங்கிருந்த மேசையில் கழற்றி வைத்துவிட்டு வந்து, அவளது இடுப்பைச் சுற்றி வளைத்துத் தன் முகத்தை அவளது தோளில் சோம்பலுடன் புதைத்தான்.

“களைச்சுப்போனீங்களா?” கைகள் அவனுக்கான தேநீரை ஆற்ற வினவினாள்.

“இந்து முழுக்க மீட்டிங் மீட்டிங் எண்டு மூளை வெடிச்சுடும் போல இருந்தது.” குழந்தையாய் அவளைக் கட்டிக்கொண்டு முணுமுணுத்தான்.

கையில் இருந்த காபி தேநீரைச் சமையல் மேடையில் வைத்துவிட்டுத் திரும்பி, அவன் கேசம் கோதிக் கன்னத்தை வருடிவிட்டாள். இது வீட்டுக்கு வந்ததும் தினமும் அவனுக்கு வேண்டும். அவள் அவன் முகத்தை இழுத்துவைத்துக் கொஞ்சிக் குவிக்கிற முத்தங்களைப் பெற்று, அவளோடு இழைந்து, அவளை வெறுப்பேற்றி, அவளிடம் சிலபல அடிகளை வாங்கிய பிறகே அடுத்த வேலை பார்க்கப் போவான்.

இன்றைக்கும் அதேதான் நடந்தது. அவள் தந்த முத்தங்களில் பித்தாகி, அவளில் கரையப்போனவனைச் சமாளிப்பதற்குள் யாமினிக்குப் போதும் போதுமென்றாயிற்று.

ஒவ்வொரு வார இறுதிகளிலும் அவளை எங்காவது அழைத்துப்போய்விடுவான் நிரோஜன். வீட்டிலும் அவர்களைத் தொந்தரவு செய்ய யாருமில்லைதான். என்றாலும் இப்படி எங்காவது போய், அவர்களுக்கே அவர்களுக்கென்று அந்த இரண்டு நாள்களையும் கழித்துவிட்டு வருகையில், அவர்களுக்கிடையிலான நேசமும் நெருக்கமும் இன்னொரு மடங்கு பெருகிப்போயிருக்கும்.

இப்போது இரு பக்க வீடுகளும் பெரிய தூரமில்லை என்பதால் நேரம் கிடைக்கிற பொழுதுகளில் அங்கும் மாறிமாறிப் போய் வந்தார்கள். முடிந்தபோது அவர்களும் வந்துபோனார்கள்.

அவள் சொன்னது போலவே நாகேஸ்வரி அம்மாவைத் தன்னுடன் வந்து இருக்கச் சொன்னாள் யாமினி. அவள் தன் காதலில் அனுபவித்த மன வலிகளை அஜந்தா மூலம் அறிந்துகொண்ட அவருக்கு அந்த நேரங்களில் அவளைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டுவிட்டோமே என்று மிகுந்த வேதனை.

அதனாலேயே அவர்களுக்கு நடுவில் நந்தியாக நிற்க விருப்பமில்லை. இனியாவது அவர்கள் அவர்கள் வாழ்க்கையை நிறைவாக வாழட்டும் என்று எண்ணினார்.

ஆனால், கணவன் மனைவி இருவரும் விடவில்லை. அவர்கள் அங்குப் போகிறபோதெல்லாம் அவரைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். ஒன்றிரண்டு நாள்கள் இங்கே இருந்துவிட்டு அங்கே போய்விடுவார் அவர்.

நிரோஜன் கார் வாங்கியிருந்தான். அதற்கு ஒரு சண்டை இருவருக்கும் வந்து போயிருந்தது. ஆனாலும் அவளைச் சமாளித்துத் தான் நினைத்ததைச் செய்திருந்தான் அவன்.

யாமினி ஒரு காலத்தில் நினைத்து அஞ்சியதற்கு மாறாக, அவர்களின் திருமண வாழ்க்கை எந்தவிதக் குறையும் இல்லாமல், தித்திப்பாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தது. இத்தனை வருடங்கள் கடந்தும், அவர்களின் இயல்பான சுபாவங்களில் துளியளவுகூட மாற்றம் வரவில்லை.

அவள் சேமிப்பில் வலு கவனமாக இருந்தால், அவன் செலவழிப்பதில் வலு கவனமாக இருந்தான்.

நண்பர்கள் என்று வந்துவிட்டால், கொடுத்துவிட்டு நிற்கும் அதே பழைய நிரோஜன்தான் இன்றும். ஆனால், காலமும் வாழ்க்கையும் அவனுக்கு ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருந்தது.

கொடுப்பது என்பது வேறு, கொடுத்ததைத் திருப்பி வாங்கிக்கொள்ளப் பழகுவது என்பது வேறு என்பதை உணர்ந்துகொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் அது அவனுக்குச் சிரமமாகத்தான் இருந்தது. என்றாலும் தன் மனைவி தன்னை இயல்பு கெடாமல் வைத்திருக்கையில், அவள் மனம் கோணாமல் நடக்கவேண்டியது தன் பொறுப்பு என்று எண்ணியவன் அதற்குப் பழகியிருந்தான்.

யாமினியும் ஆதவனிடம் சொன்னதை மெய்ப்பிக்கிறவளாக, ஒரு காலம் அவள் தந்தை அவளுக்குச் செய்தது போன்று, அவர்களின் பதினெட்டு வயதில் எடுப்பது போன்று கவிரனுக்கும் ஆதிரைக்கும் மாதம் மாதம் ஒரு தொகை சேமிப்பில் போட்டுவிடுவாள்.

நாகேஸ்வரி அம்மா, தன் மகள்களின் வீடுகளில் மாறி மாறித் தங்குவதற்குப் பழகிக்கொண்டார். கொஞ்சக் காலம் யாமினியின் வீட்டிலும், கொஞ்சக் காலம் மாதங்கியின் வீட்டிலும் என்று தன் நாள்களை நிம்மதியாகக் கழித்தார்.

காவ்யா திரும்பவும் தாய்மை உற்றிருந்தாள். அதை மகிழ்ச்சியோடு பகிர்ந்த மல்லிகா அம்மா, “ஏதும் பிளான் பண்ணி இருக்கிறீங்களாம்மா?” என்று மேலோட்டமாக விசாரித்தார்.

error: Alert: Content selection is disabled!!