இப்படிக் கேட்பார் என்று எதிர்பாராத யாமினி உடனே நிரோஜனைத்தான் பார்த்தாள். அவனும் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. ஆனந்தமாக அதிர்ந்து, கண்ணில் சிரிப்புடன் அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று பார்த்தான். யாமினியின் முகம் செக்கப் சிவந்துபோயிற்று. அவனைப் பாராமல், “அப்பிடியெல்லாம் இல்லை மாமி.” என்று பதில் சொன்னாள். நல்ல காலம் அவர் காணொளி அழைப்பில் இல்லை. இருந்திருக்க அவளின் முகச் சிவப்பைக் கண்டு சிரித்திருப்பார்.
அன்றிரவு யாமினியைத் தன் மார்போடு சேர்த்து அணைத்தபடியே, அவளது மணிவயிற்றை மென்மையாகத் தடவிக் கொடுத்த நிரோஜன், “நாங்க யோசிக்கவே இல்லை பாத்தியா?” என்றான் சின்ன சிரிப்புடன்.
இன்னுமே ஒருவர் மற்றவர் மீதான மயக்கத்திலேயே சுற்றிக்கொண்டிருக்க, அதையெல்லாம் யோசிக்க அவர்களுக்கு எங்கே நேரம்? அவள் அவன் மார்பில் ஒன்ற, “உன்னை மாதிரியே ஒரு குட்டி பேபி ஆசையா இருக்கு யம்மு.” என்றான் அவள் மீதான அணைப்பை இறுக்கியபடி.
அவளுக்கு அந்தப் பேச்சே பூரிப்பையும் வெட்கத்தையும் சேர்த்துத் தந்தன. இன்னுமின்னும் கணவனோடு ஒன்றினாள்.
அவளது அந்த வெட்கமே அவனுக்கான அழைப்பாக மாறியது.
பேச்சுகள் அங்கே மௌனமாகின. இருவரும் ஒருவருக்கொருவர் முழுமையாகச் சொந்தமாகினர்.
அவன் தொடுகையில் அவள் உருகினாள். அவள் சுவாசத்தில் அவன் கிறங்கினான்.
உடல்கள் இரண்டும் ஒற்றை உயிராய் உருமாறி, வார்த்தைகளைக் கடந்த அந்தத் தித்திப்பான கூடலில், தங்களின் எதிர்காலக் கனவுக்கும் சேர்த்து அடித்தளமிட்டுக்கொண்டனர்.
திருமணமாகி மூன்று மாதங்கள் கடந்திருந்தபோதிலும் இதுவரை இருவரும் ஒரு நாள் கூடப் பிரிந்திருந்தது கிடையாது. அப்படி இருக்கையில், ஒரு நாள் கைவிரலை வீதியால் போன யாரோ இடித்துவிட்டுப் போய்விட்டார்கள் என்று அறிந்து பதறியடித்துக்கொண்டு ஓடினாள் யாமினி.
சின்னவனுக்கு காலில் பெரிய காயம். அதைவிடவும் மோசமாகப் பயந்திருந்தான். காய்ச்சல், ஆழ்ந்து உறங்க முடியாமல் அலறிக்கொண்டு எழுவது என்று எல்லோரையும் ஒருவழியாக்கினான்.
மாதங்கி அழுதுகொண்டிருக்க, நாகேஸ்வரி அம்மா கோயில் விரதம் என்றிருக்க, ஆதவன் வீடும் வைத்தியசாலையும் என்று அலைந்துகொண்டிருக்க, தன் உதவி அவர்களுக்குத் தேவை என்று புரிந்த யாமினி, நிரோஜனைப் பார்த்தாள்.
“ரெண்டு நாள் நீண்டுபோட்டு வா!” என்று சொல்லிவிட்டு அவன் தனியாக வவுனியா திரும்பியிருந்தான்.
ஆனால், அவன் சொன்னது போன்று அவளால் இரண்டு நாள்களில் திரும்ப முடியவில்லை. கோயில்களுக்கு விரதமிருக்கிறேன் என்று நாகேஸ்வரி அம்மாவும் முடியாமல் படுத்திருந்தார். அதில் பத்து நாள்களுக்கு மேல் அவள் அங்கேயே நின்றுவிட்டதில், “இதில என்ன இருக்கு அண்ணா. யமி நிண்டுட்டே வரட்டும்.” என்று ஆதவனிடம் நல்லவனாகச் சொன்னவன், அவளிடம் மட்டும் அவன் முகத்தைச் சுருக்கியிருந்தான்.
அன்று வேலை முடிந்து மிகுந்த சோர்வுடன் வீடு திரும்பிய நிரோஜன், அவன் திறக்க முதலே விரியத் திறந்துகொண்டு வீட்டுக் கதவினைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து, கண்களில் ஈரம் மின்ன அவனைப் பார்த்து மலர்ந்து சிரித்தவளைக் கண்டு விழிகளை விரித்தான்.
உள்ளம் உள்ளே குத்தாட்டம் போடா, ‘யம்மு!’ என்று கூவினான். அது ஒரு நொடிதான். பத்து நாள்களாகத் தன்னைத் தனியாக விட்டுவிட்டு இருந்தாளே என்கிற கோபத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவன் வீட்டினுள் நுழைய, அவள் முகத்தில் அவனை ரசிக்கும் சிரிப்பு.
கதவைச் சாற்றிய கணத்திலேயே அவனைப் பின்னிருந்து அணைத்துக்கொண்டாள். சில்லென்றிருந்தது அவனுக்கு. ஆனாலும் கோபத்தை விடுத்தான் இல்லை.
அவளுக்கு அது தேவையே இல்லை போலும். முன்னால் வந்து அவன் கேசத்தினுள் விரல்களை நுழைத்துக் கோதிவிட்டாள். அவள் விழிகள் அமைக்கவே பிரியமில்லாதவை போன்று அவன் முகத்தையே மொய்த்தன. அவன் கழுத்துக்குத் தன் கைகளை மாலையாக்கி, அவனைத் தன்னிடம் இழுத்து, முகம் முழுக்க முத்தமிட்டாள். கடைசியாக அவன் இதழ்களிலும் ஆழ்ந்து முத்தமிடவும் மொத்தமாகச் சிதறிப்போனான் நிரோஜன். அவன் கைகள் தானாய் அவளைத் தன்னிடம் இழுத்து, இதழ்களைப் பிரியவிடாமல் செய்தன.
கசிந்த விழிகளோடும் கனிந்த முகத்தோடும் அவனையே பார்த்தவள் விழிகளில் என்ன இருந்தது என்று அவனால் படிக்க முடியவில்லை. ஆனால், அவன் உயிரே உருகிற்று. ‘யம்மு என்னடி?’ என்று உள்ளம் உருக அவள் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தவன், “நான் கோவமா இருக்கிறன்!” என்றான் அறிவிப்பாக.
“ஓமோம்! இண்டைக்கு சட்டசபைல இதைப்பற்றித்தான் கதைச்சவே.” கிண்டலாகச் சொல்லிவிட்டு, “போங்க! போய்க் குளிச்சிட்டு வாங்க சாப்பிட!” என்று அவனை அனுப்பிவைத்தாள்.
அவன் வந்ததும் இருவருமாக உண்டனர். அவளின் கைமணத்தில் அன்றுதான் வயிறு நிறையச் சாப்பிட்டான் நிரோஜன்.
மேசையை ஒதுக்கி, பாவித்த பத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தவளின் இடுப்பைச் சுற்றி வளைத்து, தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் நிரோஜன்.
இதுதான் நடக்கும் என்று அவளுக்குத் தெரியுமே. கைகளைக் கழுவிக்கொண்டு அவளும் அவனோடு ஒன்றினாள்.
பத்து நாள்கள் பிரிவு தந்த தவிப்பெல்லாம் அந்தத் தழுவலில் கரைந்துபோக, கட்டிலில் சேர்ந்த அவர்களின் செல்ல ஊடல் அளவற்ற காதலோடும் ஆரவாரமான கூடலோடும் அழகாக நிறைவுபெற்றது.
களைத்துப்போய் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் உச்சியில் நிறைவாய் உதடுகளைப் பதித்து எடுத்தவன் அவள் தலையை வருடிவிட்டுக்கொண்டிருக்க, அவ்வளவு நேரமாகத் தலையணைக்குக் கீழே பத்திரமாய் வைத்திருந்த மருத்துவப் பரிசோதனைக் கருவியை(Pregnancy Test Kit) எடுத்து அவன் கையில் வைத்தாள்.
அதில் தெரிந்த இரண்டு சிவப்புக் கோடுகளைக் கண்ட நிரோஜனின் கண்கள் ஆச்சரியத்திலும் பெருமகிழ்ச்சியிலும் விரிந்தன. படக்கென்று அவளோடு எழுந்து அமர்ந்தவனுக்கு மூச்சே நின்றது போல் இருந்தது.
நடுங்கும் கரங்களால் அதைப் பற்றிக்கொண்டவன், நம்ப முடியாத் தவிப்புடன், “யமி, இது… இது உண்மைதானே?” என்றான் கண்ணில் நீருடன்.
அப்போதுதான் அவனைக் கண்டபோது அவள் விழிகளில் மின்னிய ஈரமும், இன்றைய அவளின் நெகிழ்ச்சிக்குமான காரணம் புரிய, “இதுதான் மூச்சுக்கு முன்னூறு தரம் மெல்ல மெல்ல எண்டு சொன்னியா?” என்றான் அவன்.
“உங்கள!” அவன் தொடையில் ஒன்று போட்டவளுக்கு இதையெல்லாம் பேசுவானா என்று வெட்கமாயிற்று.
“முதலே சொல்லியிருக்கலாமே.” என்று கேட்கும்போதே அவள் தனக்காகத்தான் சொல்லாமல் விட்டிருக்கிறாள் என்று புரிய, அவளை வாரி அணைத்துக்கொண்டு, தன் வாழ்நாளின் உச்சக்கட்ட மகிழ்ச்சியைக் காட்டுகிறவனாக அவளின் உச்சி முகர்ந்து, கண்ணீரோடு முகம் முழுக்க முத்தமிட்டான்.

