கொழும்பு விமான நிலையத்தின் நெரிசலில் இருந்து விடுபட்டு, வவுனியா நோக்கி அவர்களின் பயணம் குதூகலமாக ஆரம்பித்தது. இதற்குள் இருதரப்பு வீடுகளில் இருந்து வந்த அழைப்புகளை ஏற்றுக் பேசி, அவன் நல்லபடியாக வந்துவிட்டதையும், கொழும்பிலிருந்து வவுனியாவுக்குப் புறப்பட்டுவிட்டதையும் சொல்லிவிட்டு வைத்தார்கள்.
பள்ளிக்கூடத்தில் நடந்தவை, சண்டைகள், அம்மா தங்களைக் கோபித்துக்கொண்ட தருணங்கள், தாங்கள் செய்த குறும்புகள் என்று மாற்றி மாற்றிப் பேசிக் கொண்டே வந்தார்கள்.
அவர்களின் அந்த மழலை மாறாத கொஞ்சல் மொழியைக் கேட்டு ரசித்தபடியே, நிரோஜன் இருவரையும் தன் மடியில் வைத்திருந்தான்.
அந்த நீண்ட பயணத்தின் நடுவே, மாலை நேரம் நெருங்கும் வேளையில், வழியிலுள்ள உணவகத்தில் வாகனத்தை நிறுத்தி இறங்கினார்கள்.
அங்கே இருந்த சிறிய குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதியைப்(Play Area) பார்த்ததும் சின்னவர்கள் குதித்து ஓடினார்கள்.
யாமினியும் நிரோஜனும் அந்த உணவகத்தின் திறந்தவெளி இருக்கையில் பிள்ளைகளையும் பார்ப்பதுபோல் இருந்த இடத்தில் அமர்ந்தனர்.
அவ்வளவு நேரமாய் பிள்ளைகளோடு இருந்தவர்களுக்கு அப்போதுதான் முதல் முதல் அவர்கள் இருவருக்குமான நேரம் கிடைத்தது. அவன் பார்வை சிறு புன்னகையோடும் ரசனையோடும் அவளிலேயே படிந்திருக்க, அவளின் முகம் மெல்ல மெல்லச் சூடாக ஆரம்பித்தது.
ஆறு வருட மணவாழ்க்கை எதையும் பழையதாக்கவில்லை. ஒரு வருடப் பிரிவு அத்தனையையும் புதிதாக்கி, அவன் பார்வையைச் சந்திக்க விடாமல் செய்து, அவளுக்குள் குறுகுறுப்பு ஊட்டிற்று. ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் நிமிர்ந்து, “நிரோ!” என்று சிரிப்பும் வெட்கமுமாய் அதட்டினாள்.
நிரோஜன் வாய்விட்டுச் சிரித்தான். யாமினியால் அவனிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. ஒரு வருட வெளிநாட்டு வாழ்க்கை அவனுக்குத் தனிப் பொலிவைக் கொடுத்திருக்க, நெற்றியில் எப்போதும்போலப் புரண்டு விழும் சுருள் முடிகள், கண்களில் மின்னும் அதே குறும்பு, கூடவே ஒரு நிறைவான இல்லறம் தந்த முதிர்ச்சியும் அழகும் சேர்ந்து அவனைத் தாறுமாறான பேரழகனாக மாற்றியிருந்தது.
நெஞ்சில் நேசம் மிதக்க கணவனையே பார்த்திருந்தாள். அவன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டவும் அவள் முகம் சூடாகிப் போயிற்று. ஆனாலும் பார்வையை அகற்றவில்லை.
“என்னம்மா?” என்றான் கனிந்த குரலில்.
விழிகளில் லேசாக ஈரம் மின்ன, ஒன்றுமில்லை என்பது போல் தலையைக் குறுக்காக அசைத்தாள். ஆனாலும் இத்தனை நாள் பிரிவின் வலியில் உள்ளூரத் துடிக்கிறாள் என்று புரிய, மேசையிலிருந்த அவளின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்து, “அதான் நான் வந்துட்டன்தானே.” என்றான் நிரோஜன். சட்டென்று வழிந்துவிட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிறைவாகப் புன்னகைத்தாள் யாமினி.
“ஆனாலும் அநியாயத்துக்கு அழகனாக்கிக்கொண்டு போறீங்க நிரோ. நான்தான் ஆண்டுக்கு ரெண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு எல்லா பக்கத்தாலயும் ஊதிக்கொண்டு போறன்.” என்று முகத்தைச் சுருக்கிக் குறை படித்தாள் அவள்.
அதைக் கேட்டுச் சட்டென்று சிரித்துவிட்டு நிரோஜன், குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்று திரும்பிப் பார்த்தான். அவர்கள் இருவரும் சறுக்கு மரம்(Slide) விளையாடுவதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவள் புறம் சரிந்து, “உனக்கு எப்பவோ சொன்னனான். நீ எப்பிடி இருக்கிறாய் எண்டு நான்தான் சொல்லோணும் எண்டு.” என்றுவிட்டு அவன் கண்ணால் சிரிக்க, அவளால் அவன் முகம் பார்க்கவே முடியாமல் போயிற்று.
அவன் சொன்னதுதான் உண்மை. திருமணத்திற்கு முதல் அர்த்தமற்ற கவலைகளால் தன்னை உருக்கி உருக்குலைந்துபோயிருந்தவளைத் திருமணத்திற்குப் பிறகு கிடைத்த நிரோஜனின் அன்பும், அவன் தரும் அண்மையும் அவளை மெல்ல மெல்ல மலரச் செய்து, பேரழகியாய் மாற்றி இருந்தன.
அது போதாது என்று அடுத்தடுத்து வந்த இரண்டு குழந்தைச் செல்வங்களும், அவளைக் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் கணவனின் காதலும் சேர்ந்து, அவளுக்கு ஒரு நிறைவான அழகைத் தந்திருந்தன.
அதை உணராமல் அவனிடம் சிணுங்குகிறவளைப் பார்த்துக் கண்ணால் சிரித்தான் அவன்.
தன் அழகை அளவுகோல் வைத்துத் தேடியவளுக்கு, அவன் பார்வையில் தான் ஒரு பேரழகியாய் மிளிர்கிறோம் என்கிற பெருமிதம் அவளைப் பேரழகியாய்க் காட்டிற்று.
வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது இரவாகியிருந்தது. யாமினியின் சீதனக் காணியை விற்று வவுனியாவிலேயே ஒரு காணியை வாங்கி வீடு கட்டியிருந்தான் நிரோஜன். இந்த வெளிநாட்டுப் பயணம் வீட்டுக்காக அவன் எடுத்திருந்த லோனை அடைத்திருந்தது. அந்த நிறைவும் சேர திருப்தியாக இரண்டு மாடியில் அடக்கமாக இருந்த தன் வீட்டை ஒருமுறை கண்களில் நிறைத்துக்கொண்டு வாகனத்திலிருந்து இறங்கினான்.
ஓடி வந்து கதவைத் திறந்த நாகேஸ்வரி அம்மாவிடமும் நன்றாகப் பேசி நலன் விசாரித்துக்கொண்டான்.
அவன் போயிருந்த ஒரு வருடமும் யாமினிக்குத் துணையாக இருந்தது அவர்தான். அவரால் கொழும்பு போய் வரும் வரைக்கும் வாகனத்தில் இருந்து வர முடியாது என்று வரவில்லை.
அவரை உறங்க அனுப்பிவிட்டு, வாகனத்திலேயே உறங்கிவிட்ட சின்னவர்களின் ஆடைகளைக் களைந்து, வசதியாக உறங்க வைத்தான் நிரோஜன்.
இதற்குள் ஓடிப்போய்க் குளியலைப் போட்டுவிட்டு வந்த யாமினி, அவனுக்கான உணவைக் கவனித்தாள். அவனுக்குத்தான் எங்கு எவ்வளவு சாப்பிட்டாலும் அவள் கைச் சோறு வேண்டுமே.
அவனும் குளித்து, மாற்று உடை அணிந்து, கீழிறங்கி வந்தபோது, ஒரு மெல்லிய புன்னகையோடு அவனுக்காகக் காத்திருந்தாள் யாழினி.
நிரோஜனின் முகத்திலும் கனிவான புன்னகை மலர்ந்தது. தன் இரண்டு கைகளையும் அவளை நோக்கி விரித்தான். அடுத்த விநாடி, ஓடிவந்து அவன் கைகளுக்குள் அடங்கினாள் யாமினி.
அவர்களுக்கிடையில் பெரியதாகப் பேச்சு வார்த்தைகள் எதுவும் இல்லை. ஒருவரின் முகத்தை மற்றவர் கண் கொட்டாமல் பார்த்தனர். அவர்களை அறியாமலேயே இதழ்களில் புன்னகை மலர்ந்தது. ஒரு வருடப் பிரிவு மற்றவரின் அணைப்பிலும் அண்மையிலும் கரைந்தோட, ஒருவர் மற்றவருக்கு முத்தங்களை அள்ளி வழங்கி, இறுகிய அணைப்பில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர்.
அவளுக்கும் கொடுத்துச் சாப்பிட்டு முடித்தான் நிரோஜன். “இப்பதான் வயிறு நிறைஞ்சிருக்கு யம்மு!” என்றவன் பேச்சில் அவள் முகத்தில் நிறைவான புன்னகை.
மேலே மாடியில் சின்னவர்கள் நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கவனித்துவிட்டுத் தம் பகுதிக்குத் திரும்பினர். பெரியதான ஒரே அறைதான். தமக்காக நடுவில் தடுப்புப் போன்ற ஒன்றை உருவாக்கி, இரண்டு அறைகள் போன்று செய்திருந்தான் நிரோஜன்.
அறையின் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில், அவனையே பார்த்துக்கொண்டிருந்தவளைத் தன் மார்போடு சேர்த்துக்கொண்டு, “உங்களை எல்லாம் விட்டுட்டு இவ்வளவு நாளும் எப்பிடி இருந்தனோ தெரியா யமி.” என்று முதன் முறையாக அவன் தன் பிரிவுத் துயரை வெளிப்படுத்தியபோது நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் யாமினி.
அவள் நெற்றி முட்டி விழிகளை மூடிக்கொண்டு, அவள் தன் கைக்குள் இருக்கும் அந்த நொடிகளை அவன் அனுபவிக்க, எம்பி அவன் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் அவள்.
சிறு புன்னகையுடன் நிமிர்ந்தவன், “இந்த ரோஜாக்கு களைப்பா இல்லையாமா?” என்றான் அவள் காதோரமாக.
“எனக்கில்லை. உங்களுக்கு?” தலையைச் சரித்துச் சிட்டுக்குருவியாக அவள் கேட்க, ஒன்றும் சொல்லாமல்
அவளது இதழ்களில் தன் இதழ் பதித்து, அவன் வழங்கிய ஆழ்ந்த முத்தம் அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லிற்று.
தனிமை நிறைந்த அந்த இரவின் மடியில், அவர்களின் காதல் வேகமெடுத்தது. நிறைவாக அவள் நெற்றியில் இதழ்கள் பதித்து விலகியவனுக்கு நிறைய நேரம் பிள்ளைகளை விட்டுவிட்டு இருக்க மனமில்லை.
மகளைத் தூக்கித் தன் மார்பில் போட்டுக்கொண்டு, மகன் ஒரு பக்கமும், மனைவி இன்னொரு பக்கமும் என்று தாங்கியபடி விழிகளை மூடியவனின் உள்ளம் நிறைந்து தளும்பிற்று.
முற்றும்.

