நீ வந்து தங்கிய நெஞ்சில் 5.1

அத்தியாயம் 5

நிரோஜனுக்குச் சினம் அடங்குவதாக இல்லை. ஒரு புகைப்படம். அதை வைத்து அவனை எடை போடுவாளா? அப்படி என்றால் இத்தனை வருடங்களாக அவர்கள் காதலித்ததற்கு என்ன அர்த்தம்? முதல்தான் தவறாக நினைத்துக் கோபப்பட்டாள். அவன் விளக்கம் சொன்ன பிறகும் விடாமல் குற்றம் சாட்டினால் எப்படி?

மனம் கொதித்துக்கொண்டேயிருந்தது. தண்ணீரை எடுத்து மடக் மடக் என்று அருந்தினான். அதன் பிறகே கொஞ்சம் நிதானம் வரத் தொடங்கியது.

அன்று எதேற்சையாகத்தான் என்னைக் கொண்டுபோய் விடுகிறாயா என்று திலினி கேட்டாள். அவனும் மறுக்கவில்லை. யாமினியிடம் சொன்னதுபோல், இவன் பின்னால் அமர்ந்திருந்து, “ஹுர்ரே” என்று கத்தியபடி, செல்ஃபி ஸ்ட்டிக் மூலம் வீடியோ எடுத்தவளைக் கண்டு, அவனையும் உற்சாகம் தொற்றிக்கொண்டிருந்தது.

பைக்கை முறுக்கி வேகம் கூட்டியிருந்தான். அப்போதுதான் அவள் அவன் தோளைப் பற்றி எம்பி நின்று புகைப்படம் எடுத்திருந்தாள். அது ஒரு உற்சாகத்தில் நடந்தது. அதை அவன் அப்போதே மறந்துமிருந்தான்.

மேசையில் இருந்த கைப்பேசியை எடுத்துத் திரும்பவும் பார்த்தான். இடைவெளியே இல்லாமல் அவனோடு ஒட்டிக்கொன்று அவள் நிற்பதைக் கண்டு, இப்போது அவனுக்கே ஒரு மாதிரியாகிற்று. அப்படியிருக்க அவளுக்கு?

அவளைக் கேட்க விடாமல் வாயை அடைத்தவன் இதே போன்று அவள் இன்னொருவனோடு நின்றிருந்தால் சாதாரணமாக எடுத்திருப்பானா என்று யோசித்தான்.

நிச்சயமாக அவனால் முடியவே முடியாது. வெறியாகியிருப்பான்.

“ஹேய் நிரு! என்னை ஃபாலோ பண்ணுறீங்களா? ஃபோட்டோ சூப்பரா இருக்கெல்லா?” மேசையின் விளிம்பில் இரண்டு கைகளையும் ஊன்றி நின்று, புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவனின் தோளில், வெகு இயல்பாகக் கையை வைத்தபடி உற்சாகமாய்க் கேட்ட திலினியின் குரலில் திடுக்கிட்டுத் திரும்பினான் நிரோஜன்.

திரும்பிய வேகத்திலேயே அவள் கையைத் தட்டிவிட்டு, “சும்மா சும்மா தொட்டுக் கதைக்காத திலினி!” என்றான் முகத்திற்கு நேராகவே.

திலினி இதை எதிர்பார்க்கவில்லை. முகம் கன்றிப்போயிற்று. எதையும் இலகுவாக எடுக்கும் நிரோஜனின் இன்றைய கோபத்திற்கான காரணம் புரியவும் இல்லை. குழப்பத்துடன் பார்த்தாள்.

“உனக்கு அறிவு கொஞ்சமும் இல்லையா? இப்பிடித்தான் ஃபோட்டோ எடுத்துப் போடுவியா?”

“ஏன், அந்த ஃபோட்டோல என்ன இருக்கு?” மெய்யாகவே அவளுக்குப் புரியவில்லை. அவன் அப்படி வேகமாகப் பயணிக்கையில் அவள் சும்மாதான் எடுத்திருந்தாள். ஆனால், கலங்கல் எதுவும் இல்லாது, பின்னணி வெகு அழகாய் இருக்க, அருமையான ஒரு கிளிக்காக அது இருக்கவும்தான், “Probably the best click I’ve ever captured.” என்று தலைப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவேற்றியிருந்தாள்.

“என்ன இருக்கா? இந்த ஃபோட்டோவ பாக்கிறவே என்னையும் உன்னையும் பிழையா நினைக்க மாட்டினமா?”

அவள் அதிர்ந்தாள். “நான் அப்பிடி எல்லாம் யோசிக்கேல்ல நிரு. அந்த எண்ணத்தில போடவும் இல்ல.” வேகமாகத் தலையையும் ஆட்டி மறுத்துரைத்தாள்.

“உனக்கு அப்பிடியான எண்ணம் இல்லாட்டியும் இதைப் பாக்கிற ஆக்கள் பிழையா நினைக்க சான்ஸ் இருக்கு திலினி. இதில நானும் இருக்கிறன். இதால எனக்கு ஏதாவது பிரச்சினை வருமா இல்லையா எண்டு யோசிக்கேல்லையா நீ?”

அவன் கேள்விகளில் அவள் கலங்கிப்போனாள். “சொறி நிரு. இப்பவே டிலீட் பண்ணுறன். ஆனா வேணுமெண்டு செய்யேல்ல. அந்த போஸ், பேக்ரவுண்ட் எல்லாம் நல்லாருந்தது. அதான்…” குரல் அடைக்கச் சொன்னவள், தன் ஜீன்ஸின் பின் பொக்கெட்டில் இருந்த கைப்பேசியை எடுத்து, அவன் முன்னாலேயே அந்தப் புகைப்படத்தை அழித்தாள்.

“என்ர கேலரில கூட இல்ல நிரு. எல்லாத்தையும் டிலீட் பண்ணிட்டன்.” தன் கைப்பேசியைக் காட்டிச் சொல்லிவிட்டு,

“அசைமென்ட் முடிச்சு மெயில் அனுப்பி இருக்கிறன். அதை ஒருக்கா செக் பண்ணிப்போட்டுச் சொல்லுங்க.” என்று அவன் கீழ் பணிபுரியும் ஒருத்தியாக வேலையைப் பற்றிப் பேசிவிட்டு அங்கிருந்து ஓடினாள் அவள்.

“ப்ச்!” கோபத்துடன் காற்றில் கையை விசுக்கியவனுக்கு நடந்துக்குக் காரணமானவளைத் தண்டித்துவிட்டோம் என்கிற ஆசுவாசத்திற்குப் பதிலாக அவளிடம் கோபப்பட்டதும் சேர்ந்து சுட்டது.

அந்தப் புகைப்படத்தின் பின்னே எந்தத் தவறான எண்ணமும் இல்லை என்று அவனுக்கே தெரியுமே. அப்படியிருக்க அவளிடம் கோபப்பட்டிருக்க வேண்டாமோ, பொறுமையாக சொல்லியிருக்கலாமோ என்று அதுவேறு மூளைக்குள் நின்று குடைந்தது.

ஒரு பிடிவாதத்துடன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான். முடியவில்லை. யாமினியின் மனத்தாங்கலும் உடைந்த குரலும் வெகுவாகத் தொந்தரவு செய்தன. ஒரு கணம் கண்களை மூடித் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவளுக்கு அழைத்தான்.

அங்கே யாமினியும் அலுவலகத்தில்தான் இருந்தாள். அவன் அழைக்கிறான் என்றதும் சிறு பிள்ளையாக ஒரு கோபம். ஏறிப் பாய்ந்துவிட்டு இப்போது எதற்கு அழைக்கிறானாம்? கைப்பேசியை எடுத்து அவளின் இழுப்பறைக்குள் போட்டுவிட்டு, வேலையில் கவனத்தை வைத்தாள்.

சில நிமிடங்கள் கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். இரண்டு முறை அழைத்துப் பார்த்துவிட்டு, “ஒய் ஜும்க்கா, என்னவோ என்னை நீ நம்பாமச் சந்தேகப்படுற மாதிரி மனதில பட்டுட்டுது. அதான் கோவப்பட்டுட்டன். சொறியடி!” என்று அனுப்பியிருந்தான்.

அந்த மன்னிப்பில் அவ்வளவு நேரமாக அவள் இதயத்தைப் போட்டு ஆட்டிக்கொண்டிருந்த அத்தனை வேதனைகளும் காணாமல் போயின. அவனின் ஜூம்காவில் அவள் உதட்டில் அழகான முறுவல் வேறு. கள்ளன்! சொல்வதை எல்லாம் சொல்லிவிட்டு இப்போது சமாதானத்திற்கு வருகிறான்.

வேண்டுமென்றே அவள் பதிலிடாமல் இருக்க, “யமி, யாமி, அடியேய் யம்மு, பேபிம்மா” என்று ஓராயிரம் முத்தமிடும் ஸ்மைலிகளோடு அவள் பெயரை ஏலம் விட்டுக்கொண்டிருந்தான் அவன்.

பார்த்திருந்தவளின் இதழ்களில் புன்னகை பெரிதாகிப்போயிற்று.

error: Alert: Content selection is disabled!!