அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவன் பக்கமும் தவறில்லை என்று புரிந்தது. ஆனாலும் அவளால் சமாதானமாகமுடியவில்லை.
“யமி!”
“…”
“யம்மு!” என்று அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னிடம் இழுத்து, “நான்தான் அவசரப்பட்டுக் கோவப்பட்டுட்டன் எண்டு சொல்லுறனே. அதான் வேலை முடிஞ்சதும் தேடி ஓடி வந்தனான்.” என்று சொன்னான் அவன்.
“அப்ப உங்களில பிழை இல்லாட்டித் தேடி வரமாட்டீங்களோ?” இமைகள் இரண்டும் விசிறியாக மேலே எழுந்து நிற்க, அவனைப் பார்த்துக் கோபமாக வினவியவளைச் சிறு சிரிப்புடன் பார்த்துவிட்டு, “நீ எப்பயாவது என்னைத் தேடி வந்து சமாதானம் செய்திருக்கிறியா?” என்று அவள் விழிகள் மீதே முத்தமிட்டான் அவன்.
“நான் ஒருக்காலும் பிழை செய்யேல்ல.”
“அதான் இண்டைக்கு விடிய என்னைச் சுத்தல்ல விட்டியோ?” என்றதும் அவளுக்குச் சிரிப்பு வரப்பார்த்தது. அவனைப் பார்க்காமல் இருக்க முடியாமல் தேடி வந்து, திலினியைப் பார்த்ததை அவள் சொல்ல, அணைப்பு இறுக அவள் கன்னக்கதுப்பில் தன் உதடுகளை ஆழமாகப் பதித்தான் அவன்.
ஒரு கணம் இமைகளை மூடி அவனுடைய முத்தம் தரும் அந்தக் கதகதப்பை அனுபவித்தவள் மெல்ல விலக, கண்களில் சிரிப்புடன் அவளையே பார்த்தான் அவன்.
“வெளில போவமா?” அவன் பார்வையைச் சந்திக்காமல் வினவினாள். “போ…கலா…மே!” என்று ராகம் பாடினான் அவன்.
“நிரோ!” என்று அதட்ட முயன்று முடியாமல் எழுந்து உள்ளே ஓடியிருந்தாள் அவள்.
கடற்கரைக்கு எதிரில் அமைந்திருந்த உணவகத்திற்கு அவளை அழைத்து வந்திருந்தான் அவன். அதன் மொட்டை மாடியில் தடுப்புச் சுவரோரமாக இருந்த மேசை ஒன்றில் எதிரெதிரே அமர்ந்துகொண்டார்கள்.
எங்கிருந்தோ மெல்லிசை ஒன்று இனிமையாய்க் கசிந்துவர, நேரெதிரில் தெரிந்த கடற்கரையும், தேகம் தழுவிப்போன கடற்காற்றும் மனத்தை மயக்கின.
ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த குழல் விளக்குகள் மெல்லிய வெளிச்சத்தைக் கக்கிக்கொண்டிருந்தாலும் இளம் சிவப்பில் மின்னிக்கொண்டிருந்த வானம் தந்த அழகும் வெளிச்சமும் ஒருவகை மோனத்தில் ஆழ்த்தின.
அவளும் இதே கொழும்பில்தான் இருக்கிறாள். ஆனால், அவன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணவகத்திற்கு அழைத்துவருகையில் அவளால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை.
அவளுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியுமாதலால் அவளுக்கும் சேர்த்து அவனே ஆர்டர் கொடுத்தான். உணவும் வந்தது. “சாப்பிடு!” என்று அவளுடையதை அவள் புறம் நகர்த்தி வைத்தான்.
“விடியக் கேட்டியே, இதே மாதிரி நீ இன்னொருத்தனோட திரிஞ்சா எனக்கு எப்பிடி இருக்கும் எண்டு. சத்தியமா என்னால அதை ஜீரணிக்கேலாதுதான். எரிச்சலா இருக்கும்தான். ஆனாலும் என்ன நடந்தது எண்டு கேட்டிருப்பன். உன்னை மாதிரிக் கோவப்பட்டிருக்க மாட்டன்.” என்றான் அவன்.
அவள் நம்பாமல் பார்த்தாள்.
“உண்மையாத்தான் சொல்லுறன். நீ கோவப்படுறாய் எண்டா என்ன அர்த்தம்? உன்ர நிரோ இப்பிடி இன்னொரு பெட்டையோட திரிவான் எண்டு நினைக்கிறாய் எண்டுறதுதானே? அதுதான் சந்தேகப்படுறியா எண்டு கேக்க வச்சது. விடிய விளக்கம் சொல்லியாச்சு, நானும் அவசரப்பட்டுக் கோவப்பட்டுட்டனே எண்டு கவலைப்பட்டுக்கொண்டிருக்க, திலினிட்ட நான்தான் சொல்லியிருக்கிறன் எண்டு திரும்பவும் நீயே முடிவு செய்து கோபப்படுறாய். அது காணாது எண்டு நானும் அவளும் ஒட்டிக்கொண்டு திரிஞ்சதுக்கு உனக்குக் கெட்ட பெயர் எண்டு திரும்பவும் சொல்லுறாய். அப்ப எனக்கு எப்பிடி இருக்கும்?”
அவளுக்கு வாயடைத்த நிலை. அவன் பக்கமிருந்து இப்படி ஒரு நியாயம் இருக்கும் என்று யோசிக்கவில்லை. ஆனாலும், அவன் அவளைக் குற்றம் சாட்டுவதுபோலிருக்க, “இப்ப என்ன, நான் கேட்டது, கதைச்சதுதான் பிழை எண்டு சொல்லுறீங்களா?” என்று கேட்டாள்.
“இல்ல. அதை நீ கொஞ்சம் நிதானமா கேட்டிருக்கலாம். அப்பிடி நான் அவளோட போவனா, அவளிட்ட போய் இதையெல்லாம் சொல்லுவனா எண்டு யோசிச்சிருக்கலாம்.”
“இப்ப நீங்க சொல்லுறதைக் கேக்க எனக்கும் அப்பிடித்தான் இருக்கு. ஆனா…” என்றவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இப்போது அறிவால் யோசிக்கிறார்கள். அந்த நேரத்தில் கொந்தளித்தது அவள் உணர்வுகள். என்னுடையவன் இன்னொருத்தியோடு இந்தளவு நெருக்கமாக இருப்பானா என்கிற கோபம். இப்போது கூட அந்தப் புகைப்படத்தை அவளால் இன்னொரு முறை பார்க்க முடியாது.
“நீங்க சொன்னீங்களே, இதே மாதிரி நான் நடந்து, அதப் பாக்கிற நிலம வந்தா, நீங்க எப்பிடி நடப்பீங்க எண்டு. கடைசி வந்தாலும் அந்தளவு நிதானமா நடக்கேலாது. நீங்க சொன்ன அந்தப் பதில், அப்பிடி ஒண்டு நடந்தா எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்க எண்டு மூளையால யோசிச்சுச் சொன்னது. ஆனா எனக்கு, தலைல இடி விழுந்த மாதிரி அந்த ஃபோட்டோவ பாத்த நேரம் இருந்தது. என்னால யோசிக்கக் கூட ஏலாம இருந்தது. இதை எப்பிடி உங்களுக்கு விளங்கப்படுத்திறது எண்டு கூட எனக்குத் தெரியேல்ல.” எனும்போதே அவள் கரம் பற்றி அழுத்தி, “எனக்கு விளங்குது. இனி இப்பிடி ஒரு நிலை உனக்கு வரவே வராது யமி. என்னை நம்பு ப்ளீஸ்.” என்றான் இரைஞ்சலாக.
“உங்கள நம்பாம வேற ஆரை நான் நம்ப நிரோ?”
அவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் எழுந்து வந்து அவள் பக்கம் அமர்ந்தான்.
அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு, “ஸ்மைல் ப்ளீஸ்!” என்றான் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் தன் தாடையருகே விரித்துக் காட்டி.
“என்ர லிமிட்ஸ் எனக்குத் தெரியும் எண்டு சொன்னீங்க.”
“ஆரம்பிச்சிட்டாள்.”
“என்ன ஆரம்பிச்சிட்டாள்?”
“யம்மு!”
“லேசுப்பட்ட ஆள் இல்ல நிரோ நீங்க. கோபம் வந்தா தூக்கி எறிஞ்சு கதைப்பீங்க என்ன?”
“விடும்மா ப்ளீஸ்!” என்று தன் தட்டில் இருந்த உணவை கரண்டியால் அள்ளி, அவளுக்கு நீட்டினான்.
‘கள்ளன்! சமாளிக்கப் பாக்கிறான். ஏமாந்திடாத!’ என்று உள்ளே ஓடினாலும் உள்ளம் தடுமாறுவதை அவளால் தவிர்க்க முடியாமல் போயிற்று. உதடுகளைத் திறந்து அதை அவள் வாங்க முயல்கையில் தன் வாயில் போட்டுக்கொண்டு சிரித்தான் அவன்.
“உங்கள!” அவள் படு பயங்கரமாக முறைத்தாள். “ச்சும்மா!” தன் தலையால் அவள் தலையில் இலேசாக முட்டிவிட்டுச் சிரித்தான் அவன்.
அவள் உள்ளம் மயங்கிற்று. அவனையே பார்த்தாள். அந்தச் சுருண்ட குழல்களும் சிரிக்கும் கண்களும் அவளுள் மாயம் புரிந்தன. அவன் திரும்பவும் அவளுக்கு நீட்டினான். அவள் அவனை முறைத்தாள்.
“எங்கட செல்லம் ஆ காட்டுங்கடி!” என்றான் அவன் கொஞ்சலாக.
சிரித்துவிட்டாள் யாமினி. “நீங்க இருக்கிறீங்கதானே. ஆனா இந்த முறையும் ஏமாத்தினீங்களோ, கொள்ளுவன் உங்களை!” என்று அவள் வாயைத் திறந்து வாங்க வர, கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு சிரித்தான் அவன். அவள் விடவில்லை. அவன் கரம் பற்றி வாங்கிக்கொண்டு அவனை மிதப்பாகப் பார்த்தாள்.
“பார்ர்ரா!” என்று சிரித்தான் அவன்.
அதன் பிறகுதான் அவள் உள்ளத்தில் இருந்த பாரமும் நீங்கிற்று. உணவை முடித்தபிறகும் அங்கிருந்து அவர்கள் எழுந்துகொள்ளவில்லை. இலேசாய் அவனின் ஒரு பக்கத் தோளில் சாய்ந்தபடி, கவிந்துவரும் இருளையும் கடலின் அந்தப் பக்கமாக ஒளிந்துகொள்ளும் சூரியனையும், அலையடிக்கும் அழகையும் பார்த்து ரசித்தாள் யாமினி.

