நீ வந்து தங்கிய நெஞ்சில் 7.2

அப்படி என்ன வர இருக்கிறது என்று அலட்சியமாக எண்ணினான் அவன்.

“ஒரு வருசம் எண்டுறது கனகாலம் இல்ல. பாத்திருக்க போயிடும். அப்ப கவின்ர கலியாணச் செலவு வரும். அவளுக்கு அண்ணாவா, ரகு அண்ணாக்கு மச்சானா நீங்க ஏதாவது செய்யோணும். அதுக்கு என்ன பிளான் பண்ணி வச்சிருக்கிறீங்க?”

இதை அவன் யோசிக்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும் சமாளிக்கலாம் என்றே நினைத்தான்.

“கலியாணத்த என்னதான் பிளான் பண்ணிச் செய்தாலும் அதுக்கு மேலதான் சிலவாகும். அப்பிடியிருக்க கவின்ர கலியாணத்திலயே இறுகி நிப்பம். அடுத்ததா எங்கட கலியாணம் வந்து நிக்கும். இனி அதத் தள்ளிப் போடவும் ஏலாது. பிறகு கொழும்பிலதான் தொடந்து இருக்கப்போறம். அதுக்கு இஞ்ச வீடு, வாடகை, தளபாடம் எண்டு ஓராயிரம் செலவு அடுத்தடுத்து வரும்.” என்று அவள் அடுக்கிக்கொண்டு போக அவனுக்குத் தலை வலிக்கும் போலாயிற்று.

வாழ்க்கையை மிக மிக இலகுவாகப் பார்க்கிறவன் அவன். வருவதை வருகிறபோது எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவன். அவனிடம் போய் இப்படி அடுக்கினால்?

“என்னவோ நீயும் நானும் வேலை வெட்டி இல்லாம இருக்கிற மாதிரியே அடுக்கிக்கொண்டு போகாத யமி. கை நிறையச் சம்பளம் வாங்கிறம். எல்லாத்தையும் சமாளிக்கலாம்.” என்று சொன்னான்.

“முன் கூட்டியே ஏதாவது பிளான் பண்ணிச் செய்தாத்தான் சமாளிக்கக் கூடிய மாதிரி இருக்கும் நிரோ. இல்லாட்டி கடன் படோணும். எனக்கு அப்பிடி எங்கட வாழ்க்கை கடன்ல ஆரம்பிக்க வேண்டாம்.” என்றதும் அவனுக்குச் சுள்ளென்று ஏறியது.

“இப்பிடி மட்டும்தான் நடக்கும் எண்டு நீயா ஒண்ட நினச்சுக்கொண்டு கதைக்காத யமி. அதையெல்லாம் அந்த நேரம் பாக்கலாம். இப்ப இந்தக் கதையை விடு.” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு.

“இனியும் அப்பிடி எல்லாம் விடேலாது. இந்த மாதத்தில இருந்து சேவிங்ஸ் ஒண்டு உங்களுக்குப் போடுறம்.” என்றாள் முடிவாக.

“பிறகு என்ர சிலவுக்கு என்ன செய்யச் சொல்லுறாய்?”

“இந்த பார்ட்டி, டூர் போறதைக் கொஞ்சம் குறைங்க. உங்கட ஃபிரெண்ட்ஸ்க்கு கண்ணை மூடிக்கொண்டு குடுக்கிறத நிப்பாட்டுங்க. குடுத்ததுகளக் கேட்டு வாங்குங்க. எல்லாம் தாராளமா காண வரும்.”

எரிச்சல்தான் வந்தது அவனுக்கு. இனி அவன் மறுத்து என்ன சொன்னாலும் அவள் கேட்கப்போவதும் இல்லை. “அதான் நீயே முடிவு செய்திட்டியே. இன்னும் என்ன?” என்று எழுந்துகொண்டான்.

“நானும் ஏதாவது ஓன்சைட் ஜொப் (Onsite Job) கிடைக்குமா எண்டு கேட்டுப் பாக்கப்போறன்.” என்றவள் பேச்சில் திகைத்துப்போனான் அவன்.

“ஒரு ஆறு மாதம் போய் வந்தா கூடக் காணும். சமாளிச்சிடுவன். எப்பிடியும் எங்கட கலியாணம் இப்ப நடக்கப் போறேல்ல. கலியாணத்துக்குப் பிறகு எங்கயும் போக எனக்கு விருப்பம் இல்ல. அப்ப இப்ப ஓகேதானே?”

ஓகேயா? அவள் இல்லாமல் அவன் எப்படி?

“அந்தளவுக்கு இப்ப என்ன காசுப் பிரச்சினை உனக்கு?” மெல்லிய சினம் தெறிக்க வினவினான்.

கொஞ்சம் தயங்கினாலும் வீட்டில் நடந்தவற்றைச் சொன்னாள். அவளுக்கும் அவனை விட்டால் ஆறுதலுக்கு வேறு யார் உண்டு?

“எனக்கு என்னவோ இதை நீ உன்ர அத்தானையும் வச்சுக்கொண்டு உடச்சுக் கதைக்கிறதுதான் சரியோ எண்டு இருக்கு.” என்றான் அவன்.

“என்ன இருந்தாலும் அவா என்ர அக்கா நிரோ. அடுத்த பிள்ளையும் வரப்போகுது. அவான்ர குடும்பத்துக்க ஒரு பிரச்சினை வாற மாதிரி எப்பிடிக் கதைக்கிறது?”

“அத அவா யோசிக்கோணும். என்ன செய்தாலும் நீயும் உன்ர அம்மாவும் வாயை மூடிக்கொண்டு சமாளிச்சுப் போவீங்க எண்டுற தைரியம்தான் அவாவை இப்பிடி நடக்க வைக்கிறதே. அது நடக்காது எண்டு காட்டினா காணும். அடங்கி இருப்பா.”

இதைத்தானே அஜந்தாவும் சொன்னாள். அதைக் கருத்திற்கொண்டு அன்று வைத்தியசாலையில் வைத்து அவள் பேசியதற்கு இவளையும் அன்னையையும் என்ன பாடுபடுத்தினாள்?

“இப்ப என்ன, உனக்குக் காசுதானே வேணும். நான் அரேஞ்ச் பண்ணுறன்.”

“எப்பிடி?”

“அது என்னத்துக்கு உனக்கு?”

“இது என்ன கேள்வி நிரோ?”

“என்ர சம்பளத்தில இருந்து எடுத்துத் தாறன்.” என்றவனிடம் கோபப்பட அவளால் முடியவில்லை.

சற்றுமுன் சேமிப்புப் பற்றிப் பேசியபோது தன் செலவுக்கு என்ன செய்ய என்று கேட்டவன் இப்போது அதைப் பற்றி யோசிக்காமல் அவளுக்குத் தருகிறேன் என்கிறான். அவளுக்கு மட்டும் அவனைப் பிரிந்து போக ஆசையா என்ன? அவனை அருகே வரச்சொல்லித் தலையசைப்பால் அழைத்தாள்.

அவனை விட்டுவிட்டுப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் வரட்டுமாம். முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றான் அவன். சிறு சிரிப்புடன் எழுந்துபோய் அவன் கழுத்தைச் சுற்றிக் கைகளைக் கோத்தாள் அவள்.

வியப்புடன் பார்த்தான் அவன். இப்படி அவளாக அவனை நெருங்கும் தருணங்கள் மிக மிகக் குறைவு. இயல்பாக அவன் அருகில் இருப்பது, தோள் சாய்வது, கரம் கோர்ப்பது இருக்குமே தவிர இப்படி வரமாட்டாள்.

அதுவே அவன் மனநிலையை மாற்றிவிடப் போதுமாக இருக்க, “இப்ப என்ன கோவமாம் என்ர நிரோக்கு?” என்று அவன் முகத்தைத் தன்னிடம் இழுத்து, அவன் மூக்கோடு மூக்கை அவள் உரசியபோது மொத்தமாகத் தடுமாறிப்போனான் அவன். “யமி!” என்று அவள் இடையை வளைத்து, “நீ இல்லாம எப்பிடி இருப்பன் சொல்லு?” என்றான் ஏக்கமாய்.

அவள் மட்டும் எப்படி இருப்பாளாம்? என்னவோ அந்த இதமான மனநிலையைக் கெடுக்க விருப்பமற்று, ஒன்றுமே சொல்லாமல் அவன் அணைப்புக்குள் அடங்கி நின்றாள் அவள்.

அவனுக்கும் இதமாக இருந்தது போலும். அவள் தலையை வருடிவிட்டு, “நிறைய யோசிக்காத யமி. எல்லாம் நல்லதாவே நடக்கும்.” என்று தைரியம் கொடுத்தான்.

அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான். நடக்காவிட்டால்?

அதை பற்றி பேச மனம் வராமல், “நாளைக்கே போய் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணுறம். நானும் ஒன்சைட் ஜொப் கேட்டுப் பாக்கிறன். இல்லை, வேண்டாம் எண்டு சொல்லாதீங்க ப்ளீஸ். நான் கேட்டதும் சரி போயிற்று வா எண்டு அனுப்பியா வைக்கப்போயினம்? கிடைக்குமோ கிடைக்காதா எண்டே தெரியாம இப்ப அதைப் பற்றிக் கதைக்க வேண்டாமே.” என்றாள் கெஞ்சலாக.

“நீ நினைச்சது நடந்தே ஆகோணும் என்ன உனக்கு!” என்று கோபப்பட்டாலும் மறுக்கவில்லை அவன்.

error: Alert: Content selection is disabled!!