நீ வந்து தங்கிய நெஞ்சில் 8.1

அத்தியாயம் 8

தன் அலுவலக மேசையில் அமர்ந்திருந்து மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தான் நிரோஜன். அவன் முன்னே நவீன். அவர்கள் செய்துகொண்டிருந்த ப்ராஜெக்ட்டின் கடைசி நாள் இன்று. ஓய்வெடுக்காமல் வேலையைப் பார்த்தால்தான் இரவுக்குள் முடிக்கலாம்.

அப்படி விடுவேனா என்பதுபோல் நிரோஜனின் கைப்பேசி க்ர்ர்… க்ர்ர்… என்று மெல்லிய சத்தத்துடன் அதிர்ந்துகொண்டிருந்தது. ஆனாலும் ஒருவிதப் பிடிவாதம் முகத்தில் துலங்க, வேலையில் கவனம் செலுத்தினான். அதற்கு விடுவேனா என்றபடி அவன் கைப்பேசி விடாமல் அதிர்ந்துகொண்டிருந்தது.

அன்று சேமிப்புக் கணக்குத் தொடங்கி, அதில் பணம் போடுவோம் என்று சொன்னதிலிருந்து யாமினி இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறாள். அன்று சம்மதித்துவிட்டாலும்
பிறகு இருந்து யோசிக்கையில் அதைச் செய்ய அவனுக்குப் பிடிக்கவில்லை.

அதை ஆரம்பித்துவிட்டால் பிறகு யாமினி விடமாட்டாள். மாதா மாதம் இப்போது போலவே அவனை ஒருவழியாக்கிப் பணத்தைப் போட வைப்பாள்.

கையில் பணம் வைத்திருந்து செலவழித்தே பழகியவன். திடீரென்று கணக்குப் பார்த்துச் செலவு செய் என்றால் மனம் முரண்டியது. அப்படி என்ன நெருக்கடி வந்துவிட்டது என்று இப்போதிருந்தே அவன் அப்படியிருக்க வேண்டும்? தேவை என்று வருகையில் செய்வது வேறு.

அதைச் சொல்லி, கொஞ்ச நாள் போகட்டும் என்று எத்தனையோ முறை சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. அன்று சம்மதித்துவிட்டு மாற்றிப் பேசாதே என்று நின்றாள். அது அவனை மிகவும் சினமூட்டியது.

அவனின் இந்தச் செய்கை யாமினிக்கு மிகுந்த மனத்தாங்கலையும் கோபத்தையும் உண்டாக்கிற்று. அவள் ஏதும் அவனைத் தவறான வழியில் நடத்த முயல்கிறாளா என்ன? அவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும், தங்களுடைய எதிர்காலத்திற்காகவும்தானே இதையெல்லாம் கூறுகிறாள்.

அதைப் புரிந்துகொள்ளாமல், தான் அவனை ஏதோ கெட்ட வழியில் செலுத்த முயற்சிப்பது போலவும், அவன் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்வது போலவும் இருந்த அவன் செயலில் வாட்ஸ்அப்பைத் திறந்து, “ஏன் நிரோ இப்பிடி ஓடி ஒளியிறீங்க? ரெண்டு பேரும் கதைச்சுப் பேசி எடுத்த முடிவுதானே இது. பிறகும் ஏன் இப்பிடி நடக்கிறீங்க?” என்று கேட்டு அனுப்பிவிட்டாள்.

‘ஏன் இப்படி ஓடி ஒளிகிறாய்’ என்கிற கேள்வியில் அவனுக்கு சுர்ர் என்று ஏறிற்று. வெளியே வந்து அவளுக்கு அழைத்தான்.

“ஒளிச்சு ஓட நான் ஏதும் களவு செய்தேனா, இல்ல பொய் சொன்னேனா? வேலை பிஸில எடுக்காம இருந்தா கண்டதையும் கதைப்பியா நீ? ரெண்டு பேரும் கதச்சுப் பேசி எடுத்த முடிவு இல்ல அது. உன்ர முடிவு மட்டும்தான்.” என்று சீறினான்.

உண்மையில் யாமினி அதன் பொருள் உணர்ந்து பேசவில்லை. அழைப்பை ஏற்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறானே என்கிற ஆதங்கத்தில் சொன்னது. ஆனாலும் தன் தவறு புரிய, “அந்த வார்த்தை பிழைதான். அதுக்கு சொறி. ஆனா, நீங்க ஏன் ஓம் எண்டு சொல்லிப்போட்டு வராம இருக்கிறீங்க? எங்கட நல்லதுக்குத்தான சொல்லுறன்.” என்றாள் பொறுமையாகவே.

“இப்ப என்ன கெட்டது நடந்துபோச்சு எண்டு நல்லது செய்ய நிக்கிறாய் நீ?”

“என்ன கதைக்கிறீங்க? ஒண்டு நடந்த பிறகுதான் எதையும் செய்வீங்களா? என்னைப் பாருங்க, அப்பா இருக்கிற வரைக்கும் எதைப் பற்றியும் யோசிக்காம இருந்தன். இப்ப, அதுக்கும் சேத்து யோசிக்கிறன். ஆனா, காலம் கடந்து போச்சு. என்ன செய்றது, ஏது செய்றது எண்டு ஒண்டுமே விளங்குது இல்ல. எனக்கு மாதிரி உங்களுக்கும் ஒரு நிலை வரவேண்டாம் எண்டு நினைக்கிறது பிழையா?” பெரும் ஆதங்கத்துடன் வினவினாள் அவள்.

“இப்ப என்ன சொல்ல வாறாய்? உன்ர அப்பாக்கு மாதிரி என்ர அப்பாக்கும் ஏதாவது…” எரிச்சலோடு அவன் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்த, “லூசா நீங்க?” என்றாள் பதறிப்போய்.

“பக்கத்தில நிண்டிருந்தா உங்கட வாயிலயே ஒண்டு போட்டிருப்பன். அப்பா இல்லாம போனா எப்பிடி இருக்கும் எண்டு எனக்குத்தான் தெரியும். எந்தக் காலமும் அப்பிடி ஒரு நிலை உங்களுக்கு வரவே வேணாம். அதுக்காக இப்பிடியே இருக்காதீங்க எண்டு சொல்லுறது விளங்குதா இல்லையா?”

“நான் என்ன செய்யோணும் எண்டு எனக்கு தெரியும்!” பட்டென்று சொன்னான் அவன்.

“என்ன தெரியும் உங்களுக்கு? ஊர் சுத்தவும், பார்ட்டி கொண்டாடவும், பாத்துப் பாராம செலவழிக்கவும் மட்டும்தானே தெரியும்?” அவளும் விடாமல் பதில் கொடுத்தாள்.

“நீ மட்டும் என்னவோ பெருசா சேத்துக் குவிச்ச மாதிரிக் கதைக்காத யமி.”

“அதாலதானே உங்களோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறன். அது ஏன் விளங்குது இல்ல உங்களுக்கு?”
“அந்தளவுக்கு என்ர குடும்பம் காசுக்காக என்னைப் பிச்சுத் தின்னாது!”

error: Alert: Content selection is disabled!!