சட்டென்று அமைதியாகிப்போனாள் யாமினி. அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சைச் சுருக்கென்று தைத்தன. “இப்ப என்ன சொல்லுறீங்க நிரோ?” என்றாள் அடைத்த குரலில்.
“என்ன சொல்லுறன்? உன்ர குடும்பத்தக் குத்திக் காட்ட நினைக்கேல்ல. பிறகு அதுக்கும் ஒரு சண்டை பிடிச்சுக்கொண்டு வராத. ஆனாலும் உண்மை அதுதான். உன்ர அக்காவ மாதிரியோ, உன்ர அம்மாவ மாதிரியோ என்ர குடும்பம் என்னட்டப் பிடுங்க நினைக்காது. அதால உனக்கு மாதிரி ஒரு நிலை எனக்கு வராது. இப்ப வை ஃபோனை!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.
அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. உள்ளத்தின் அடியாழம் வரை வலித்தது. என்ன இருந்தாலும் அது அவள் குடும்பம். அவர்களைப் பற்றி அவன் இப்படிச் சொல்லியிருக்க வேண்டாம்.
அதன் பிறகு அதைப் பற்றி யோசிக்க நிரோஜனுக்கு நேரம் இருக்கவில்லை. வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்படுவதற்கே இரவு பன்னிரண்டு தாண்டியிருந்தது. அப்போதுதான் அவள் நினைவு வந்தது. கூடவே தான் பேசியதும். ஒருமுறை கண்களை மூடித் திறந்து, தலையையும் குறுக்காக அசைத்துத் தன்னைத் தானே நிந்தித்துக்கொண்டான்.
கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அவர்கள் பேசிக்கொண்டதற்குப் பிறகு அவளிடமிருந்து அழைப்போ, குறுந்தகவலோ எதுவும் வரவில்லை. வழமையான குட்நைட் கூட இல்லை.
நிச்சயம் மனவருத்தத்தில் இருப்பாள் என்று புரிய, “குட் நைட் யமி!” என்று அனுப்பிவிட்டு அறைக்குப் புறப்பட்டான்.
அடுத்த நாள் அலுவலகத்திற்குச் சோர்வாக வந்தவளிடம் விடயத்தைப் பிடுங்கிய அஜந்தா, “லூசா நீ? பெரும்பாலும் பொம்பிளைகள் கட்டின மனுசனிட்டயே தங்கட வீட்டாக்களைப் பற்றிச் சொல்ல யோசிப்பினம். நீ போய் அவரிட்ட எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்கிறாய்.” என்று கடிந்துகொண்டாள்.
“அப்பிடி எப்பிடியடி மறச்சுப் பழகிறது?”
“இது மறச்சுப் பழகிறது இல்ல. கவனமா இருக்கிறது. நீ ஆறுதலுக்குத்தான் சொல்லியிருப்பாய். ஆனாலும், ஒரு பிரச்சினை எண்டு வந்ததும் நீ சொன்னதை வச்சே உன்ர வாய எப்பிடி அடைச்சார் பாத்தியா? இதுக்குத்தான் கட்டின மனுசனா இருந்தாலும் கவனமா இருக்கோணும் எண்டு சொல்லுறது.”
என்னவோ யாமினியால் அதில் உடன்பட முடியவில்லை. உயிராக நேசிக்கிறார்கள். எதிர்காலம் முழுவதையும் அவனோடுதான் பகிரப்போகிறாள் என்கையில் அப்படி எப்படி மறைப்பது?
அடுத்து வந்த நாள்களில் அவனோடு பெரிதாகப் பேசப் போகவில்லை. அவன் கேட்கிறவற்றுக்கு மட்டும் பதில் என்று இருந்தாள். அவனுக்கும் சேர்த்து அவள் யோசிப்பது புரியவில்லையா என்கிற கவலை ஒரு புறமும், என் குடும்பத்தை என்னிடமே சொல்லிக்காட்டுவாயா என்கிற கோபம் மறுபுறமும் அவளை வாட்டின.
அன்று கேண்டீனுக்கு வந்து தேநீர் பருகிக்கொண்டிருந்த யாமினியின் முன்னே திடீரென்று வந்து நின்றான் நிரோஜன்.
“எழும்பி வா!” என்றான் முகத்தில் இறுக்கத்தோடு.
எங்கே என்பதுபோல் புருவங்களைச் சுருக்கினாள் அவள்.
பதில் சொல்லாமல் அவள் கரம் பற்றி இழுத்துக்கொண்டு போனான் அவன்.
“எங்க?”
நின்று திரும்பி, “சொன்னாத்தான் வருவியோ?” என்று கேட்டான்.
“எனக்கு வேலை இருக்கு.” பார்வை எங்கோ இருக்கச் சொன்னாள் அவள்.
“எனக்கும்தான் இருக்கு. அதுக்கிடைல வந்திடலாம்.” என்று அவளையும் அழைத்துக்கொண்டு சென்று நிறுத்திய இடம் அவன் கணக்கு வைத்திருக்கும் வங்கி.
அவளால் மகிழ முடியவில்லை. ஒரு இறுக்கம்தான் படர்ந்தது. பைக்கில் இருந்து இறங்கி அப்படியே நின்றாள்.
“என்ன?” என்றான் அவன்.
“இஞ்ச என்னத்துக்கு வந்திருக்கிறீங்க?”
“ஏன் எண்டு தெரியாதா உனக்கு? இதைச் செய்ய வைக்கத்தானே இந்த ஒரு கிழமையா முகத்தைத் திருப்பிக்கொண்டு இருந்தனி.” என்றவனை முறைத்தாள் அவள்.
“எப்பவும் இத நீங்கதான் சொல்லுவீங்க. இந்த முறை நான் சொல்லுறன். எந்தச் சண்டையும் வேண்டாம். நீங்க என்ன செய்யோணும், செய்யக் கூடாது எண்டு உங்களுக்கு நல்லா தெரியும். வாங்க போவம்.” என்று அவள் திரும்பி நடக்க முயல, கரம் பற்றி அவளை நிறுத்தினான் அவன்.
“பொது இடத்தில நிண்டு சீன் கிரியேட் பண்ணாம வா யமி. அதவிட எனக்கு நேரமில்லை. அடுத்த அசைமென்ட் வந்திட்டுது. அதப் பாக்கோணும் நான்.”
வேதனையுடன் அவனை நோக்கினாள் யாமினி. அவள் சீன் கிரியேட் பண்ணுகிறாளா? அதைக் கேட்டுக்கொண்டு போனால் அதற்கும் ஏதாவது சொல்வான். அதைவிட, அவனை இதைச் செய்ய வைக்கத்தான் அவ்வளவு போராடினாள். இப்போது அவனாகவே வருகையில் விட மனமில்லை.
உள்ளே சென்று, சேமிப்புக் கணக்கு ஒன்றினைத் திறந்து, மாதம் மாதம் ஒரு தொகை போடுவதுபோல செய்துவிட்டு வந்தார்கள்.
“இப்ப சந்தோசமா உனக்கு?” வெளியே வந்ததும் கேட்டான் அவன்.
அவனுக்கு அவர்கள் செய்துவிட்டு வந்திருக்கும் காரியத்தின் பலன் புரியவில்லை. பிடிவாதமாக நின்று தான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாளே என்கிற கோபம்தான் முன்னுக்கு நின்றது.
அதில், “இதுக்காக எண்டைக்காவது ஒரு நாள் நீங்கதான் நிரோ சந்தோசப்படுவீங்க. அண்டைக்கு உங்களுக்கு விளங்கும்.” என்று சொல்லிவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொண்டாள் அவள்.

