நீ வந்து தங்கிய நெஞ்சில் 9.1

அத்தியாயம் 9

அடுத்து வந்த நாள்களிலும் கொஞ்சம் முறுக்கிக்கொண்டுதான் திரிந்தான் நிரோஜன். அவள் வீட்டுக்கும் வரவில்லை. நாளாக நாளாக அவன் மீதான குறைகள் காணாமல் போய் இப்படிக்கு கண்ணில் படாமல் இருக்கிறானே என்று அவனும் அவன் நண்பர்களும் வழமையாக வரும் காண்டீனுக்கு வந்தாள் யாமினி.

அங்கேயானால் அவர்கள் கேண்டீனுக்கு வந்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். சில நிமிடங்கள் முன்னதாக வந்திருக்கலாம். வந்திருக்க அவனோடு கொஞ்ச நேரத்தைச் செலவிட்டிருப்பாள். ஒரு குறுந்தகவல் தட்டிவிட்டாள் போதும். திரும்பி வருவான். ஏனோ அதற்குக் கை வரமாட்டேன் என்றது.

முன்னரெல்லாம் கேண்டீன் வரப்போகிறார்கள் என்றால் ‘ஃபிரீயா?’ என்று ஒரு மெசேஜ் அவளுக்கு வரும். அதன் பொருள் அவன் இங்கே வரப்போகிறான் என்பது. அவளுக்கு முடிந்தால் அவளும் வருவாள்.

இந்தக் கொஞ்ச நாள்களாக அப்படி அவன் அழைப்பதில்லை. அப்படியிருக்க அவளாக எப்படி அழைப்பாள்? உள்ளூர ஊமையாக ஒரு மெல்லிய வலி பரவ, ஷோர்ட்டீஸும் டீயும் வாங்கிக்கொண்டு வந்து, போகிறவர்கள் தெரிவதுபோல் ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

அங்கே முன் வரிசையில் நிரோஜன், மித்ரன், மகேஷ் மூவரும் போய்க்கொண்டிருந்தனர். அவர்கள் பின்னால் நவீன், திலினி இன்னும் இருவர்.

திடீரென்று கையில் சுருட்டி வைத்திருந்த பேப்பர் சுருளினால் நவீனின் தலையில் எட்டி அடித்துவிட்டு ஓடிப்போன திலினி, அப்படியே முன்னால் சென்றுகொண்டிருந்த நிரோஜனின் தலையில் எம்பித் தட்டிவிட்டு ஓட முயன்றாள்.

“அடியேய் தில்லானா!” என்ற நவீனின் குரலிலேயே என்னவென்று பார்க்கத் திரும்பிய நிரோஜன், திலினியைக் கவனித்துவிட்டான். அதைவிட இப்படியான குரங்குச் சேட்டைகளை அவள் அடிக்கடி செய்வதில் வேகமாக அவளை எட்டிப் பிடித்து, அவள் வைத்திருந்த பேப்பர் சுருளைப் பறித்து, அவளுக்கு விளையாட்டாக அடி போட்டான்.

அவள் தலைக்கு ஏற்றிவிட்டிருந்த கூலரை எடுத்துத் தான் மாட்டிக்கொண்டு திரும்பி, “எப்பிடி இருக்கு…” என்றவனின் பார்வையில் அங்கே கேண்டீனில் அமர்ந்திருக்கும் யாமினி பட்டாள்.

அவன் பார்வையைத் தொடர்ந்த திலினியை மெல்லிய பயம் பற்றிக்கொண்டது. “எனக்கு யாமினி இருந்தது தெரியாது நிரு.” என்றாள் மன்னிப்புக் கோரும் குரலில்.

விளையாட்டுக்கு விளையாட்டு, வேலைக்கு வேலை என்றிருக்கும் நிரோஜனையும் நவீனையும் அவளுக்கு மிகவுமே பிடிக்கும். தன் சேட்டைகளைத் தங்குதடையில்லாமல் அவள் செய்வதும் அவர்களிடம்தான். அப்படியிருக்க நிரோஜன் யாமினிக்குள் இன்னொரு பிரச்சனை வருவதற்குக் காரணமாகிவிட்டோமோ என்று பயந்தாள்.

நிரோஜனுக்கும் அது புரிந்ததில் ஒரு மாதிரி ஆகிற்று.

தம் செயலிலோ நடத்தையிலோ தவறிருந்தால் வேறு. சும்மா ஒரு விளையாட்டுக்குச் செய்வதற்கு எல்லாம் பயப்பட முடியுமா என்ன? “உனக்கு என்ன விசரா? எப்பவும் போல இயல்பா இரு!” என்றான் அதட்டலாக.

“இல்ல. அது யாமினி…”

“அவளுக்கு என்ன?”

என்ன சொல்வது என்று தெரியாது அவனையும் நண்பர்களையும் பார்த்தாள் அவள்.

“நீங்க போங்கடா வாறன்!” என்று அவர்களை அனுப்பிவிட்டு யாமினியிடம் வந்தான் நிரோஜன்.

“என்ன, இந்தப் பக்கம்?” திலினி சொன்னது போன்று விளையாட்டாக நடந்த ஒன்றைத் தவறாக எடுத்துக்கொண்டாளோ என்கிற எண்ணம் உள்ளே இருந்ததில் அவன் பேச்சில் ஒரு இறுக்கம் தானாக வந்திருந்தது.

ஆனால், அந்தக் கேள்வி அவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் வந்த யாமினியைக் காயப்படுத்திற்று. அவமானமாய் வேறு உணர்ந்தாள். வந்திருக்கக் கூடாது என்று உள்ளம் சொல்ல, “இல்ல சும்மா…” என்று அவனைப் பாராமல் தடுமாறினாள்.

அவனுக்குத் தன் கேள்வியில் இருந்த தவறு கேட்ட பிறகுதான் புரிந்தது. அவளுக்கு இந்தப் பக்கம் எந்த வேலையும் இல்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்றால் மட்டும்தான் வருவாள். இத்தனை நாள்களும் தான் பேச்சைக் குறைத்துக்கொண்டதும், காட்டிய விலகலும் அவளைத் தேடி வர வைத்திருக்கின்றன என்று தெரிய, அவன் பார்வை அவளில் படிந்தது.

கழுத்தில் பெயர்ப் பட்டி தொங்கிக்கொண்டிருக்க, அடர் சாம்பல் நிற பென்சில் ஸ்கர்ட்டுக்கு வெள்ளையில் சாம்பல் நிறக் கோடுகள் போடப்பட்ட முழுக்கை ஃபோர்மல் சட்டை (Formal Shirt) அணிந்து, முழுமையான கார்ப்பரேட் அலுவலகத் (Corporate Office) தோற்றத்தில் இருந்தாள்.

கையில் சில்வர் நிற மணிக்கூடு, கழுத்தில் இதய வடிவிலான பெண்டண்ட் கொண்ட மெலிதான செயின். எப்போதுமே அவளிடம் மிகுந்த நேர்த்தி இருக்கும். இன்றும் அப்படித்தான். என்ன, அவன் கேள்வி உண்டாக்கிய சிணுக்கத்தை முகத்தில் காட்டியபடி அமர்ந்திருந்தாள்.

அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு. அவள் சிணுக்கத்தை ரசித்துப் பார்த்தான். அவள் முன்னிருந்த இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து, அவள் பருகிக்கொண்டிருந்த தேநீரை எடுத்துப் பருகினான்.

இதை அவள் எதிர்பார்க்கவில்லை. பொது இடத்தில் வைத்து என்ன செய்கிறான் என்று விழிகளை விரித்தாலும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள். செய்வதை எல்லாம் செய்துவிட்டுச் சமாதானத்திற்கு வருகிறானா என்று உள்ளே புகைந்தாலும் அந்தக் கள்வனின் செய்கையில் அவள் உள்ளம் இனிக்காமலும் இல்லை.

“எங்க அஜந்தா?” அவளோடு சேர்த்துத் தேநீரையும் ரசித்து ருசித்தபடி பேச்சுக் கொடுத்தான்.

“அவள் லீவு இண்டைக்கு.”

“ஏன்?”

“திவாகர் அண்ணா குடும்பமா வந்திருக்கிறார்.”

திவாகர் அஜந்தாவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது.

“எப்ப கலியாணமாம்?”

“அடுத்த மாதம். உங்க எல்லாருக்கும் கார்ட் அனுப்பினதா சொன்னவளே. அனுப்பேல்லையா?” அவன் மீதிருந்த ஊடல் மறக்க, மறந்துவிட்டாளோ என்றெண்ணி வினவினாள்.

அவன் தேநீரைப் பருகியபடி கண்ணால் சிரித்தான். அப்போதுதான் அவளுக்கு அந்தக் கள்வனின் திருகுதாளம் பிடிபட்டது. முறைக்க முயன்றும் முடியாமல் போய்விட, சிரிப்பை உதட்டுக்குள் மறைத்துக்கொண்டு பார்வையை அகற்றிக்கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!