தேநீர்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு அவளைப் பார்த்துச் சிரித்தான் அவன்.
“நிரோ!” என்று அதட்ட முயன்றாலும் முடியாமல் அவள் முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது. எத்தனை இலகுவாக அவளைப் பேச வைத்துவிட்டான். மட்டி மாதிரி அவளும் பிடி கொடுத்துவிட்டாளே.
விளையாட்டை விட்டுவிட்டு மேசையில் இருந்த அவள் கரம் பற்றி, “கோவமா?” என்றான் அவளையே பார்த்து.
கோபம் எங்கே? வருத்தம்தான். அதில் இல்லை என்று தலையை அசைத்தாள். “எனக்கும்… எங்கட நல்லதுக்குத்தான் சொல்லுறாய் எண்டு தெரிஞ்சாலும் என்னவோ நீ நினைச்ச மாதிரி என்னை ஆட்டிவைக்கிற மாதிரி ஒரு ஃபீல் வந்திட்டுது.” என்றான் அவன் சமாதானக் குரலில்.
அவன் கொஞ்சம் அப்படித்தான். அவன் விடயங்களில் இன்னொருவர் தலையிடுவதை விரும்ப மாட்டான். அதில் தான் அப்படி நினைத்துச் செய்யவில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு விட்டுவிட்டாள்.
அஜந்தா வவுனியாவைச் சேர்ந்தவள். அங்குதான் திருமணமும் நடக்கவிருந்தது. “அப்பிடியே ரெண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டுக்கும் போயிற்று வரோணும் யமி. கவிக்கும் டேட் பிக்ஸ் பண்ணியாச்சு.” என்று தங்கையின் திருமண நாள் குறித்தும் பகிர்ந்துகொண்டான்.
அவன் சொன்னது போன்று சரியாக ஒரு வருடம் கழித்துத்தான் குறித்திருந்தார்கள். அப்படியானால் அவள் நினைத்தது போன்று அவர்களின் திருமணம் நடக்கக் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.
“உன்ர வீட்டில கலியாணத்துக்கு நெறுக்கினா சொல்லு ரெண்டு பேருமே போய்க் கதைப்பம்.”
சரி என்று தலையாட்டினாள் அவள்.
“சாப்பாடு, மண்டபம், மேக்கப் எல்லாம் பாக்கச் சொல்லி அப்பா சொன்னவர் யமி. ரகு வீட்டில அவர் மட்டும்தானே. அவே எங்களையே பாக்கச் சொல்லிச் சொன்னவையாம். கவி பயந்துகொண்டிருக்கிறாள். தான் அரேஞ்ச் பண்ண, ஏதாவது பிழையா நடந்திடுமோ எண்டு. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறியா?”
“அதுக்கு என்ன? யாழ்ப்பாணத்திலயே நல்ல ஆக்கள் இருக்கினம். பட்ஜெட் என்ன எண்டு சொல்லுங்க. அதுக்கு ஏற்ற மாதிரிப் பாக்கலாம்.” உற்சாகமாக உதவ வந்தாள் அவள்.
“அப்பா காசு பாக்க வேணாம் எண்டு சொன்னவர்.”
ஒற்றை மகள் என்பதில் அனைத்தையும் சிறப்பாகவே செய்ய எண்ணினார் நிரோஜனின் தந்தை ஏகாம்பரம்.
“அதுக்காகக் கண்ணை மூடிக்கொண்டு குடுக்கேலுமா? தரமா இருக்கோணும். அதே நேரம் குடுக்கிற காசுக்கு ஏற்ற மாதிரியும் இருக்கோணும்தானே? கவியோட நான் கதைக்கிறன்.”
“யமி, காச மிச்சம் பிடிக்கிறன் எண்டு எதையாவது செய்து வைக்காத. பிறகு காலத்துக்கும் அது உன்னைச் சொல்லிக்காட்டுற ஒண்டா மாறிடும். காசு பாக்காம தரத்தை மட்டும் பார்.”
இதற்கு முதல் அப்படி எப்போது தரத்தைப் பார்க்காமல் பணத்தைப் பிடித்து வைத்தாளாம் என்கிற கேள்வி அவளுக்கு உண்டாயிற்று. ஆனாலும் அதைக் கேட்காமல் சரி என்று தலையை அசைத்தாள்.
அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, “யம்மு, சொல்லுற எல்லாத்தையும் பிழையா எடுக்கிறேல்ல. அப்பிடி ஒண்டு நடந்திட்டா நாளைக்கு எங்களுக்கு கலியாணம் நடந்த பிறகு, ரகு வீட்டு ஆக்கள் கூட உன்னை ஒரு சொல்லுச் சொல்ல சான்ஸ் இருக்கு. அது எனக்கு விருப்பம் இல்ல. அதுக்குத்தான் சொல்லுறன். விளங்குதா?” என்றான் அவன்.
அவளுக்கும் புரிந்ததில் தலையை ஆட்டினாள்.
பேச்சை நிறுத்திவிட்டு அவளையே பார்த்தான் அவன். கொஞ்ச நேரம் அந்தப் பார்வையைச் தாக்குப் பிடித்தவள், “இப்பிடிப் பாக்காதீங்க நிரோ. நீங்க சொல்லுறது விளங்குது.” என்றாள் தடுமாற்றத்துடன்.
“சரி விடு. அஜந்தான்ர கலியாணத்துக்கு சாறி எடுத்திட்டியா?” என்று பேச்சை மாற்றினான்.
இல்லை என்று மறுத்துத் தலையசைத்தாள்.
ஏன் என்கிற கேள்வியைத் தாங்கி அவளைப் பார்த்தான்.
இந்த மாதம் கவிரன் சைக்கிள் கேட்டிருந்தான். அன்னையின் வைத்தியத்துக்கு, வீட்டுச் செலவுக்கு என்று அனுப்பியதோடு சேர்த்து அதற்கும் அனுப்பியிருந்தாள்.
தமக்கை ஏவிவிட்டாளோ என்கிற கேள்வி எழுந்தாலும், ஆசையாகக் கேட்ட சின்னவனிடம் மறுக்க முடியவில்லை. இதுவரையில் அவன் ஒன்று கேட்டு அவள் மறுத்ததுமில்லை.
அவளின் அலுவலகத்தில் அஜந்தாவிற்குத் திருமணப் பரிசாக எல்லோருமாகச் சேர்ந்து வோஷிங் மெஷின் வாங்கிக் கொடுக்கத் திட்டம் போட்டிருந்தார்கள். அதற்கு ஒரு தொகை கொடுக்க வேண்டும். அதோடு மட்டும் இவள் நிறுத்த முடியாது. உயிர்த்தோழிக்கு இவள் தன் பங்கிற்குத் தனியாக எதையாவது செய்ய வேண்டும். அதற்கும் பணம் வேண்டும்.
இதில் இன்னும் நிரோஜனின் பணத்தைத் திருப்பவில்லை.
அவளிடம் பாதிப் பணம் உண்டுதான். அப்படிப் பாதி பாதியாகக் கொடுக்க ஒரு மாதிரியாக இருந்தது. அதில் இந்த மாதம் பாதி, அடுத்த மாதம் பாதி என்று சேர்த்துவிட்டு, அடுத்த மாதம் மொத்தமாகக் கொடுக்கலாம் என்று தனக்குள் ஒரு திட்டம் போட்டிருந்தாள்.
இப்படி அவள் நிதி நிலையிருக்க திருமணச் சேலை அடுத்த செலவாக வந்து நிற்கிறதே என்று அதை இன்னும் அவள் வாங்கவில்லை.
முன்னராக இருந்திருக்க நல்ல விலையில் சேலை, அதற்குப் பொருத்தமாக அணிகலன்கள், பேஷியல், நகம் ஒட்டுவது என்று பார்த்துப் பாராமல் செலவு செய்திருப்பாள். கைப்பை தொடங்கி கண் மை வரை அத்தனையும் புதிதாக வாங்கியிருப்பாள். இன்றோ கையை விட்டு ஒரு ரூபாயைச் செலவழிக்கவும் பயந்தாள்.
திடீர்ச் செலவு என்று ஒன்று வந்துவிட்டால் என்ன செய்வேன் என்கிற கேள்வி அவளை மருட்டிக்கொண்டேயிருந்தது.
கிடைத்த அனுபவமும் அஜந்தாவின் போதனையும் சேர, இதையெல்லாம் நிரோஜனிடம் சொல்ல முடியாமல் அமைதி காத்தாள்.
என்னவென்று முழுமையாகத் தெரியாதபோதும் பணம்தான் பிரச்சனை என்று நிரோஜனுக்குப் புரிந்தது. கூடவே அதைத் தன்னிடம் சொல்ல அவள் விரும்பவில்லை என்பதும்.
அன்றைய மீட்டிங் தொடங்கப்போவதாக அவனுக்கு மெசேஜ் வந்தது. அதைப் பார்த்துவிட்டு, “டீம் மீட் இருக்கு யமி.” என்றுகொண்டு எழுந்தான்.
மாலை வருவானா? கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைவெளி இருவருக்கு மத்தியிலும் விழுந்திருந்ததில் அவளால் கேட்க முடியவில்லை.
இரண்டடி நடந்தவன் திரும்பி, “பின்னேரம் வருவன். சமைச்சு வை!” என்றுவிட்டுப் போனான். அவள் முகம் வெளிச்சம் போட்டது போன்று மலர்ந்துபோயிற்று.

