நீ வந்த பின்பு – 1

அந்த அரங்கமே கருப்பு பூனை படை கட்டுப்பாட்டில் இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் விருது வழங்கும் விழா ஆரம்பிக்கப் போகிறது. விருது வாங்குபவர்கள் ஒரு வழியாகவும், விருந்தினர்கள் ஒரு வழியாகவும் தீவிர கண்காணிப்புக்கு பின் அரங்கினுள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்திய குடியரசு தலைவர் தன் கையால் தரும் “சிறந்த சமூக சேவைக்கான விருதினை” பெற வந்திருக்கிறாள் மகிழினி

உள்ளே வரும்போது மகிழினி மட்டுமல்ல அவர்களுடன் அனுமதிக்கப்பட்ட வர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப் போன்ற அனைத்தும் வாங்கப்பட்டு, வரவேற்பு அறையில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டது

மகிழினி மற்றும் விருது வாங்குபவர்கள் தனிப்பகுதியில் அமர வைக்கப்பட்டனர், நேற்றே இவர்களின் நடைமுறைகள் ஒத்திகை பார்க்கப்பட்டது.

இங்கே இருந்தாலும் இவளின் கவனம் முழுவதும் இன்னும் இவரை காணவில்லையே, இன்னும் பத்து நிமிடத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை கதவுகள் சாத்தப்பட்டு விடும் ,அதன் பின் யாருக்கும் உள்ளே அனுமதி இல்லை என்பது முன்பே அறிவிக்கப்பட்ட செய்தியாகும்.

“இவரை யார் அங்கே போக சொன்னது, இங்கே இருந்திருந்தால் என் கூடவே வந்திருக்கலாம் தானே ?”என்று மனதில் அலை அலையாய் கேள்விகள்.

இதோ குடியரசுத் தலைவர் உள்ளே வந்துவிட்டார், என்று அறிவிப்பு கேட்கிறது.

விழா துவங்கி விட்டது பெயர் பட்டியலின் படி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மருத்துவத்துறையில் சிறந்த சமூக சேவைக்கான “விருதை திருமதி மகிழினி ஆதித்ய இளஞ்செழியன் “பெற்றுக் கொள்கிறார் என்று அறிவிக்கும் பொழுது தன்னையும் அறியாமல் ஒரு மெல்லிய சிறிய சிலிர்ப்பு அவளுள்.

அவள் எளிய காட்டன் புடவையிலும் அழகாய் நிமிந்த நடையுடன் நடந்து வந்து குடியரசுத் தலைவரிடமிருந்து விருதினை பெற்றுக் கொண்டு, அனைவரையும் நோக்கி நன்றி சொல்ல திரும்பிய பொழுது அவளின் விழிகள் மட்டும் அல்ல, இதழ்களும் விரிந்தன வியப்பால், … எல்லாம் சில வினாடிகள் தான்.

சுற்றுப்புறம் உணர்ந்து, மெல்ல நடந்து தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்த பின்னும், அவள் இதயத்துடிப்பு குறையவில்லை அவன் முகபிம்பம் கண் முன் தோன்றியது.

அவன் விழியில் தொக்கி நின்ற எப்படி என்ற கேள்வி, இவளை என்னவென்று பிரித்து அறிய முடியாத உணர்வில் தள்ளியது .

விருதுகள் அனைத்தும் கொடுத்து முடித்தாயிற்று. அனைவரும் குடியரசுத் தலைவர் கொடுக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள வரும்படி அறிவிக்கப்பட்டது.

விருது பெற்ற அனைவரும் அவர் குடும்பத்துடன் வந்து இணைந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

மகிழினி தன் அண்ணன் விஜயவர்மன், அவன் மனைவி வதன பிரியா, ராஜா மற்றும் இவள் தோழியும் ராஜாவின் மனைவியுமான அட்சயா இவர்களிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தாளே தவிர, இவளை தன் பார்வையாலே விழுங்கி கொண்டு இருந்த செழியனை மட்டும் கண்டுகொள்ளவே இல்லை .

அட்சயாவிடம் இருந்த மகிழினி, செழியனின் மகள் விக்னையாவை மட்டும் கைகளில் வாங்கிக் கொண்டு, அவர்களிடம் மட்டுமே கதை பேசிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு தெரியும் இவளை சமாதானப்படுத்துவது மிக எளிதான விஷயம் இவனைப் பொறுத்தவரை மட்டும் .

அவனுக்கு இப்படி முறுக்கிக் கொண்டு , இவனை, இவன் பார்க்காத பொழுது பார்த்து தனக்குள்ளே புலம்பிக்கொண்டும், சிறுபிள்ளை போல் முகத்தை திருப்பிக் கொண்டும், திரியும் மனைவியை ரசிப்பதில் அலாதி பிரியம், சிறு பிள்ளை போல் நடக்கும் இந்த நிகழ்வு அத்திப்பூத்தார் போன்றது இது அவள் பழைய மகிழினியை அவனுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

நிகழ்வுகள் முடிந்தும் அனைவரும் திரும்பத் தொடங்கிய பின்னரும் இந்த கோபம் நீண்டு கொண்டே தான் போனது.

ராஜா மெல்ல தங்கையிடம் வந்து “பாப்பு மச்சான் பாவம் உனக்காக தானே இத்தனையும் செய்தார் நீயே அவளை புரிந்து கொள்ளவில்லை என்றால் என்னடா செய்வது?” என்று சொல்லி முடிக்கவில்லை அவள் முறைத்த முகப்பில் வாய் பெவிகால் போட்டது போல் ஒட்டிக்கொண்டது .

அனைவரும் வீட்டுக்கு கிளம்ப தயாரான போது அண்ணன்கள் இருவரும் தங்கையை கட்டாயப்படுத்தி செழியன் இருந்த காரில் ஏற்றி விட்டனர், உள்ளே பார்த்தால், பாப்பா விக்னயா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தாள். மெல்ல காரை எடுத்தான் செழியன் .

பின் வரும் காரில் அனைவரும் ஏறிக்கொள்ள அவனை பின் தொடர்ந்து வந்தது விஜயவர்மன் ஓட்டி வந்த கார் .

செழியனை திட்ட வாய் எடுக்கும் முன்பே பின் சீட்டில் உள்ள மகளை கண்ணால் காட்டிட மௌனமானாள் மகிழினி.

அவனுக்கு தெரியும் மகள் முன்பு கோப முகத்தையோ, டென்ஷனையோ என்றும் காட்ட மாட்டாள் என்று ,

தன் குழந்தையின் முன் மட்டும் வேறு ஒரு அவதாரம் எத்தனை சோர்வு இருந்தாலும், மகளை கண்டு விட்டால் சகலமும் மறைந்துவிடும்.

அவளும் அப்படித்தான் எத்தனை பேர் இருந்தாலும் யாருடன் இருந்தாலும் அம்மாவை கண்டுவிட்டால் சிட்டு போல் பறந்து வந்து விடுவாள் அம்மாவிடம்.

இவ்வளவு நேர மனைவியின் மௌனம்… இதனை நீட்டிக்க விடுவதில் அவனுக்கு விருப்பமில்லை ,மெல்ல தொண்டையை செருமிக் கொண்டு சாரிடா என்றான் மெல்ல, அமைதியாக இருந்த தன் மனைவியிடம், அதான் சாரி சொல்றேன் இல்ல? உனக்கு நல்லாவே தெரியும் காரணம் இல்லாமல் இப்படி ஒரு சிச்சுவேஷன்ல நான் போயிருக்க மாட்டேன் தெரியும் தானே என்றான். மெல்ல தலை குனிந்து இருந்த மனைவியின் முகத்தை மெல்ல தன் விரலால் உயர்த்தினான்.

கலங்கிய விழிகளுடன் என்னாலதானே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்? இவ்வளவு பிரச்சனைகள்? அதைதான் என்னால ஜீரணிக்கவே முடிய மாட்டேங்குது என்றாள்.

செழியன் விஜயனுக்கு போன் செய்து, மச்சான் நீங்க ரூமுக்கு போங்க , நான் ஒரு ஹாஃப் அவர்ல வந்து ஜாயின் பண்ணிக்கிறோம் என்று சொல்லி அழைப்பை கட் செய்தான்.

ரோட்டோரத்தில் இருந்த மரத்தடியில் உள்ள இளநீர் கடையின் அருகே வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி சென்று இரண்டு இளநீர் வாங்கிக் கொண்டு வந்தான் .

“உனக்கு ஒன்னு தெரியுமா ?என் இத்தனை வருஷம் வாழ்க்கையில நான் எனக்காக வாழவேண்டும் என்று நினைச்சதே என் வாழ்க்கையில் நீ வந்த பின்பு தாண்டி அது தெரியுமா உனக்கு?

“நீ என் வாழ்க்கையில் வரதுக்கு முன்னால இருந்த செழியன் வேற, என்ன கண்டா எல்லாரும் பயப்படுவாங்க என்னை ஹிட்லர்னு சொல்லுவாங்க அப்படிப்பட்ட நான் , இப்போது இருக்கும் செழியன பார்த்தா எனக்கே வியப்பா இருக்கு என்றான் சிரித்துக் கொண்டே…

error: Alert: Content selection is disabled!!