அத்தியாயம் 1.
ஏறக்குறைய 24 வருடங்களுக்கு முன்:
“ஆனந்த்…” தயக்கமாக அழைத்தவளுக்கு “ம்ம்ம்..” கொட்டியவன், வெளிப்பார்வைக்கு லொரியைச் செலுத்துவதில் முனைப்புடன் இருந்தாலும், மனத்தில் மிகவுமே சுணங்கியிருந்தான்.
“எனகென்னவோ…பயமாக இருக்கப்பா! நீங்க சொல்லுறது போல வீட்ட விட்டு வாறத நினைச்சுப் பாக்கவே நடுங்குது!” தொடர்ந்தவளை, திரும்பி முறைத்துவிட்டு, மீண்டும் பாதையில் கவனம் பதித்தான், அவன்.
அவன் மௌனம், எப்போதும் போலவே மங்கை மனத்தைப் பிசையச் செய்தது. தன்னைக் கண்டதும் மலர்ந்தவனின் முகம் சட்டென்று இருண்டுவிட்டதை உணர்ந்துகொண்டாள். மெல்ல நெருங்கி அவன் தோளில் சாய்ந்துகொண்டே, “கோவமா ஆனந்த்?” எனக் கேட்டவளுக்கு, “ப்ச்..” சலிப்புடன் மனத்தை வெளிப்படுத்தினான், அவன்.
“சரி, அப்ப…உனக்குப் பாத்திருக்கிறவரக் கலியாணம் செய்து மகிழ்ச்சியா இரு!” திடீரென இறுகிய குரலில் சொன்னவனை, ஊறிய விழி நீருடன் ஏறிட்டாள், அவன் மங்கை.
“ஏன் ஆனந்த் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? பயமாக இருக்கு எண்டுதானே சொன்னன்! அம்மா, அண்ணா, அண்ணி ஆக்கள நினைச்சா, அவே என்னில வைச்சிருக்கிற அன்பை நினைச்சா…” தொண்டை அடைத்தது அவளுக்கு!
பாசத்துக்கும் காதலுக்குமிடையில் அகப்பட்டுத் திண்டாடுபவளைக் கூர்மையாக அளந்தான், அவள் காதலன். “அப்பிடியெண்டா…” எனத் தொடங்கி நிறுத்தியவனை, மாற்று யோசனை சொல்லப்போகிறான் என்ற ஆவல் மிளிர நோக்கினாள், அவள்.
“நாங்க விரும்பிறத உன்ர வீட்டில சொல்லிப் பாரன்!” சவாலேதான். “கலியாணம் செய்து தருகினமா பாப்பமே! உன்ர அண்ணன், தன்ர தென்னந்தோப்பில லொரி டிரைவரா இருக்கிறவன, தன்ர மச்சானா ஆக்கிறாரா எண்டு பாக்கலாம்!” கேலியிழையோடத் தொடர்ந்தவனை, ஆற்றாமையுடன் நோக்கினாள், அவள்.
‘உண்மைதான்! அண்ணா மட்டும் இல்ல, வீட்டில ஆருமே…இதக் கேட்டாலே…கடவுளே!’ தன்னுள் நடுங்கியவளுக்கு, காதலிக்கும் பொழுது இந்த நடுக்கம் சிறிதும் வராததுதான் வியப்பு! அந்நேரம், அவளுள்ளும் புறமும் எவ்வித தடைகளுமற்ற அற்புத உலகு மட்டுமே பரந்து விரிந்திருந்தது! காதலெனும் மெல்லுணர்வு அவள் மீது சிதறித் தெளித்த அற்புத வர்ணங்களால் மயங்கி நின்றவளிற்கு, தன் குடும்பமோ, உற்ற உறவுகளோ, சுற்றமோ, சாதக பாதகங்களோ துளியும் தெரியவில்லையே!
அவள் மௌனம் பார்த்த ஆனந்த், “அதாலதான் என்னோட வந்திரு எண்டுறன் மங்கை!” என்றவன், கணம் நிதானித்தான். “என்ர அம்மா, சின்ன முகச்சுளிப்பும் இல்லாம நம்மள வரவேற்பார். உன்ர வீட்டாக்களப் போல என்ர ஆசைக்குக் குறுக்க நிற்கிற ஆள் இல்லை, அவர். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு மங்கை! ” மிக உறுதியாக நம்பிக்கையூட்டினான். “கலியாணம் செய்திட்டு உன்ர வீட்டுக்குப் போவம். அதுக்குப் பிறகு, அவேக்கு விருப்பம் இருக்கோ இல்லையோ எங்கள ஏற்கத்தானே வேணும்!” என்றவாறே, மௌனமாக இருப்பவளை நோக்கியவன் விழிகளில் நேசம் நிறைந்திருந்தது. “இப்போதைக்கு இதைவிட வேற வழியில்ல மங்கை. நல்லா யோசிச்சுப் பாரன்!” அவனுள்ளிருந்த அன்பின் உருக்கம், அவளையும் உருக்க முனைந்தது.
பதிலேதும் சொல்லாது, அவன் தோளில் அழுந்தச் சாய்ந்திருந்தாள். மனக்கண்ணில், சிறுவயதில் தந்தை அகாலமாக மறைந்தநாள் புகைபடிந்த ஓவியமாக மின்னிச் சென்றது. அன்றிலிருந்து குறையறியாது அரவணைத்த தாயினதும், பத்து வயது பெரியவனான தமையனினதும் நினைவில் மனம் பிசைந்தது. ‘கலியாணம் செய்து வந்த இந்த மூண்டு வருசங்களில, அன்பை மட்டுமே காட்டுற அண்ணி, சந்துருக் குட்டி!’ தொடர்ந்து எண்ணியவளுள், அவர்களை இலேசில் உதறிச் செல்வதெப்படி என்ற போராட்டம் முளைவிட்டது. அதேவேளை, ‘ஆனந்த் சொல்றதும் சரிதான். கடைசிவரை அண்ணா எங்கட விருப்பத்த ஏற்றுக்கொள்ள மாட்டார். என்னாலும் இவரைப் பிரிஞ்சு…ம்ம்..ஏலவே ஏலாது!’ என எண்ணியவள், இரண்டு வருடங்களாகத் தன்னுள் நிறைந்த நேசத்தையோ, நேசத்துக்குரியவனையோ உதறிச் செல்வதை கணமும் நினைக்க விரும்பவில்லை.
அப்படியென்றால் இதற்கு என்னதான் முடிவு? பலத்த மனப்போராட்டத்தின் பின், மெதுவாக அவனை ஏறிட்டாள். எப்போதும் முகத்திலிருக்கும் மெல்லிய தாடி, அடர் மீசை, கூர் நாசி என பார்த்தவுடன் கவரக்கூடிய தோற்றத்தில் திடகாத்திரமாக இருந்தான், அவள் காதலன். அவன் தோற்றமும் பேச்சும்தான் அவள் மனத்தை அவனிடம் சரணடைய வைக்கக் காரணமே. அதோடு, ‘நல்லவர். லொரி ஓடுறவரா இருந்தாலும் குடி, சிகரெட் எண்டு எந்தக் கெட்ட பழக்கவழக்கங்களும் இல்ல. எல்லாத்தையும்விட நான் எண்டா அவருக்கு உயிர்!’ நல்லவைகளைச் சீர்தூக்கி ஆராய்ந்தது அவளுள்ளம்!
என்னதான் என்றாலும், ‘அண்ணாக்கு முன்னால மாப்பிள்ளையா நிப்பாட்டத் தடையா நிறையக் காரணங்களும் இருக்குத்தான்.’ சோர்வோடு எண்ணிக்கொண்டாள். அவன் பெரிதாகப் படித்திருக்கவில்லை. நல்ல வேலையில்லை. அப்படியொன்றும் வசதியுமில்லை. அதுமட்டுமா? அவனுக்குக் கீழே படித்துக் கொண்டிருக்கும் மூன்று தங்கைகள், அம்மா, இயலாத அப்பா என்று பெரிய குடும்பம் உள்ளதே! எல்லாவற்றையும் கடகடவென்று எண்ணியவள் மனத்தில் சோர்வு மிகையானது. அவனைத் திருமணம் செய்ய வீட்டில் சம்மதம் கிடைக்காது என்பதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்தவள், “நான் உங்களோட வாறன் ஆனந்த்!” என்றிருந்தாள். இதழ்களால் வழுக்கி விழுந்த வார்த்தைகள் அவள் செவியில் மோதிய கணம், நெஞ்சை அடைத்துக்கொண்டு அழுகை பீறிட துடித்துப்போனாள், மங்கை!
அவனோ, இத்தனை நேரமாக இருந்த இறுக்கம் மாயமாக, மகிழ்வால் நிறைந்து போனான். கணத்தில், ஒரு கரத்தால் அவளை இறுக அணைத்துத் தன் மகிழ்வை அவளுக்குணர்த்தினான். “சந்தோசம் மங்கை சந்தோசம்! எனக்கு உன்னில இருக்கிற அன்பு போல உனக்கும் என்னில இருக்கு எண்டு எனக்கு நல்லாவே தெரியும்!” சொன்னவனின் மகிழ்வில் சீறிப் பாய்ந்தது லொரி.
யாழ்ப்பாணத்திற்கு வடக்கே அமைந்துள்ள பளை என்னும் ஊரே மங்கையின் சொந்த இடம். அங்குள்ள வசதியான குடும்பங்களில் ஒன்று இவர்களுடையது. பரம்பரையாக வந்த சொத்துக்களுடன் வெளிநாடு செல்வோர் விற்றவைகளையும் சேர்த்து ஏராளமான தென்னந்தோப்புக்களும், மாந்தோப்புக்களும் இவர்களுக்குண்டு. இவளின் தந்தை பள்ளி ஆசிரியராக இருந்தாலும், தம்தோப்புக்களை ஆட்களை வைத்தே மிகவும் திறமையாக நிர்வகித்து வந்திருந்தார். அதனால்தான், அவர் மறைந்த பின்னரும் இவளின் தமையனால் அவற்றை திறம்பட நிர்வகிக்க முடிந்தது. சில வருடங்களுக்கு முன்புவரை இவர்களின் தோட்டத்தில் லொரி ஓட்டுனராக இருந்து வந்தார் ஆனந்தின் தந்தை. எதிர்பாராமல் நிகழ்ந்த விபத்தின்பின், அவரால் லொரியை ஓட்ட முடியாது போகவே, அவரின் இடத்திற்கு வந்தவன்தான், ஆனந்த்.
பள்ளியில் உயர்தரத்தில்(பிளஸ் டூ) படிக்கத் தொடங்கியதிலிருந்தே பல தடவைகள் தனியார் வகுப்புகள், செமினார் என்று சாவகச்சேரிக்குப் போய்வரத் தொடங்கினாள், மங்கை. மகள் கண்டபடி அலைவது பிடிக்காத தாய் சரசு, “இந்த வெய்யிலில இப்பிடி அலைஞ்சு திரியிறாளே!” என்று, விருப்பமின்மையை வெளிப்படுத்த எரிக்கும் வெய்யிலைத் துணைக்கழைத்தார்.
“ஒவ்வொருநாளும் என்னென்னவோ நடக்குது! இதில, உன்ன இப்பிடி அனுப்பிட்டு நீ வந்து சேருர வரைக்கும் வயிற்றில நெருப்பக் கட்டிக்கொண்டு பாத்துக்கொண்டிருக்கோணும்!” அன்றைய நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் பொதுவாகக் கேட்கும் இயலாமைக் குரலைத்தான் மங்கையின் தாயும் வெளியிட்டார்.
“சரி, போனால் போன வேலைய முடிச்சுக்கொண்டு நேர வீட்டுக்கு வந்தாலும் பரவாயில்ல.” எவ்வளவோ கண்டிப்பாக இருந்தாலும், மகளை அடக்க முடியவில்லையே என்ற கவலை அவர் குரலில். “நாலு பேர் சேர்ந்து கூட்டணி போட்டு ஊரெல்லாம் சுத்திப்போட்டு, ஆறுதலா பொழுது சாய வந்து ஆயிரம் சாட்டுக்கள் சொல்லி எங்கட வாய அடைச்சிரு!” மகளிடம் கோபப்பட்டவர், “நீ தான் தம்பி, இவளுக்கு இடம் கொடுக்கிற. கொஞ்சம் கண்டிச்சு வை!” மகன் ராசனிடமும் குறைப்பட்டார்.

