“என்னம்மா நீங்க, அவள் என்ன சின்னப்பிள்ளையா? அல்லது, நல்லது கெட்டது தெரியாதவளா?” அன்னையைச் சமாதானம் செய்ய முயன்றான் ராசன். பின்னரோ, தங்கை சாவகச்சேரி போக நினைக்கும் போதெல்லாம், “நம்மட லொரியில போகலாம் மங்கை. திரும்பி வாற நேரம் சொன்னா, முன்ன பின்ன எண்டாலும் ஆனந்த் நிண்டு கூட்டிக்கொண்டே வந்திருவான்.” எனக்கூறி, ஆனந்தின் அறிமுகத்துக்கு அழகாக பிள்ளையார் சுழியும் போட்டு வைத்தான்.
ஆரம்பத்தில் முதலாளி வீட்டுப்பெண்ணாக இருந்த மங்கை, நாட்கள் செல்ல செல்ல இயல்பாகக் கதைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்திருந்தாள். அதையும் கடந்து அவர்களிடையே காதலும் மலர்ந்தது. அதற்குரிய மொத்தப் பெருமையும் மங்கையின் தோழிகளையே சாரும்.
“டீ மங்கை, இவர் என்னடி உனக்கு பொடி கார்ட்டா! சும்மா சொல்லக் கூடாதடி, ஆள் பார்க்க ஜம்மெண்டு இருக்கிறார்! ஆனா என்ன, சிரிக்கிறதுக்குக் காசு கேட்பார் போல!” அவள் தோழிகள், அவனை வம்புக்கிழுத்தனர். அவனோ, இப்பேச்சுகள் காதில் விழும் போதெல்லாம் சிறு முறுவலுடன் நகர்ந்து விடுவான். மங்கைதான் அவனுக்காகச் சண்டை போடத் தொடங்கினாள்.
இவள் வந்து லொரியில் ஏறுகையில், “சரி சரி ..என்னவோ நடத்து நடத்து!” ஆனந்தின் காதுபடவே நக்கல் அடித்தார்கள். அவன் முகம் பார்க்கவே சங்கடப்பட்டாள், மங்கை. பின்னரோ, அவன் வாகனம் ஓட்டுவதில் கவனமாக இருக்கையில், கள்ளத்தனமாக அவனுருவை ஆராய முயன்றாள். தை அவ்வப்போது கண்டும் காணாததுமாக இருக்க முயன்றான், ஆனந்த். இருந்தாலும் அவனுள் பெருமிதம் கலந்த உவகை எழுவதை மட்டும் தடுக்க முடியவில்லை. மங்கையின் விழிகளில் தெரியும் ஆர்வம், அவனைத் தடுமாற வைத்து அழகு பார்க்க முயன்றது. என் முதலாளி வீட்டுப்பெண், என்னை இவ்வளவு ஆர்வமாகப் பார்க்கிறாளே! இவள் தோழிகள் கூறுவது போல் இவளும் மனத்தில் என்னை நினைத்திருப்பாளோ என்று குழம்பித்தான் போனான். அக்குழப்பமே, அவ்வப்போது அவளைக் கள்ளத்தனமாக ஆராய வைத்தது. முடிவில், இருவருமே காதல் என்ற முடிச்சை ஒருவருக்கொருவர் மிகவும் ஆசையுடன் இறுக்கமாகவே போட்டுக்கொண்டனர்.
மங்கையின் புத்தியும் கவனமும் காதலில் சென்று விடவே, இறுதிப்பரீட்சையில் அவ்வளவாக நல்ல பெறுபேறுகளைப் பெற முடியவில்லை. நன்றாகப் படிக்கக் கூடிய பிள்ளைக்கு என்ன நடந்து விட்டது என்று வீட்டினர் கவலைப்பட்டாலும், தம்பெண்ணின் மனதை அறிந்து கொள்ளவில்லை.
இப்படியிருக்கையில் ஒருநாள், “அண்ணா, நான் ரெண்டாம்தரம் டெஸ்ட் எடுத்துப் பார்க்கிறனே!” கெஞ்சலுடன் வந்து நின்றாள் மங்கை.
‘ஓமெண்டு சொல்லிராத தம்பி!’ என்ற கோரிக்கையை விழிகளில் தாங்கி நின்றார், தாய் சரசு. ருவரையும் மாறி மாறிப் பார்த்த ராசன், “அம்மா, அவள் வீட்டில சும்மா இருக்கிறதை விட…” என ஆரம்பிக்க, “இல்ல தம்பி, இவள் படிச்சது எல்லாம் போதும், பேசாம ஒரு கலியாணத்தக் கட்டி வைப்பம்.” இடையிட்ட சரசு, “அம்மா!” என்ற அதட்டலில் மகளை நோக்கித் திரும்ப, தயங்காது தாயையும் தமையனையும் ஏறிட்டாள், மங்கை.
“இங்க பாருங்க, இப்பயே கலியாணமெல்லாம் செய்ய எனக்கு விருப்பம் இல்ல. ஏதோ இந்த முறை நல்ல ரிசல்ட் வரேல்ல. அடுத்தமுறை பாருங்க, கம்பசுக்கு கட்டாயம் போவன். நான் நிறையப் படிக்கோணும்!” அழுத்தமாகவே சொன்னவளின் விழிகளில் நீர்க் கோர்வை! அங்கே, கல்வி மேலுள்ள காதல் தோற்று, உள்ளக் கள்வன் மீது கொண்ட நேசம் சரசரவென்று வழிந்து, அவள் அழகிய கன்னக் கதுப்புகளில் கோலமிட்டது.
“இங்க பார் பிள்ளை, இனி நீ படிச்சுக் கம்பசுக்குப் போய், அது முடிஞ்சு கலியாணம் செய்யிறது எல்லாம் இங்க சரிப்பட்டு வராது, பேசாமல் இரு! தம்பி நீ எங்கட குடும்பத்துக்குப் பொருத்தமான இடமாப் பாரப்பு!” அழுத்தமாகவே சொன்னார், சரசு.
“அம்மா..” மீண்டும் ஆரம்பித்த தங்கையைக் கையமர்த்தினான், ராசன்.
“சரி, நீ தொடர்ந்து படி. அதோட அம்மாட விருப்பப்படி கலியாணத்துக்கும் பாக்கிறன். நல்ல இடம் வந்தாச் செய்யலாம். அதெல்லாம் உடனே நடக்கிற விசயமா என்ன? அதோட, கலியாணம் செய்திட்டும் நீ வடிவாப் படிக்கலாம்.” இருவரையும் சமாதானம் செய்து வைத்தவன், செல்லத் தங்கையின் விருப்பப்படியே மீண்டும் டியூசனுக்குச் செல்ல அனுமதித்தான்.
இதுவே மங்கைக்கும் ஆனந்துக்கும் மிகவும் சுலபமாகி, தம் காதலைத் தங்குதடையின்றி தொடர உதவியது. இரண்டாம் தரம் பரீட்சையை மிகவும் திருப்தியாகவே எழுதி முடித்தவள், பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட காலத்தில், இப்போது, சாவகச்சேரியில் வசிக்கும் நண்பிகளுடன் சேர்ந்து தையல் வகுப்பிற்குப் போய் வருகிறாள்.
இப்படி, அவர்களுக்கு விருப்பமான வகையில் வாழ்க்கை போய்க்கொண்டிருந்த வேளையில், கொழும்பில் வசித்து வரும் ராசனின் நண்பனின் தம்பிக்கு இவளைப் பேசி வர, அதை இவள் அண்ணாவும் அம்மாவும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டனர்.
இதைச் செவிமடுத்ததும், இப்போ எனக்குக் கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடித்தாள், மங்கை. வீட்டினரோ, அவள் மறுப்பைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை! மாப்பிள்ளை இலண்டனா? நான் வெளிநாடெல்லாம் போகமாட்டேன் என்று முரண்டு பிடித்தவளின் பிடிவாதம் தாயின் கோபத்தின் முன்னால் பரிதாபகரமாகச் செயலிழந்து போனது. அதிலிருந்து இவர்களின் காதலுக்கும் சிரம திசை ஆரம்பமானது. இப்போதோ, அக்காதல் தந்த பலமும், அதை இழக்க நேரிடுமோ என்ற தவிப்பும் பயமும், உற்ற உறவுகளையே தூசெனப் பின்தள்ளி, காதலன் சொல்வதற்குத் தலையாட்ட வைத்துவிட்டதே!
“மங்கை, நீ இறங்க வேண்டிய இடம் வந்திட்டு!” உரிமையுடன் தன் தோள் சாய்ந்து மௌனமாக வருபவளிடம் மென்மையாகச் சொன்னான், ஆனந்த். அவளின் அமைதியைக் கண்டு, வருகிறேன் என்றவள் மனம் மாறிவிடுவாளோ என்ற அச்சம் எழாமலும் இல்லை. அதுவே, காலம் தாழ்த்தாது திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற முடிவெடுக்க வைத்திட்டு.
“நீ இப்ப என்னோட வந்தது உன்ர வீட்டில தெரியும் எல்லா, அதால இண்டைக்கு வேணாம். நாளைக்குக் காலம வழமையாச் சந்திக்கிற இடத்துக்கு வா, அப்பிடியே கிளிநொச்சிக்குப் போயிருவம்.” என்றவனை, கலக்கம் நீங்காது நோக்கினாள், அவள்.
“ஒண்டும் எடுத்துக்கொண்டு வந்திராத! போட்டிருக்கிற நகைகளையும் கழட்டி வச்சிரு! பிறகு, அதுகளுக்கு நான் ஆசைப்பட்டதா வந்திரும்.” என்றவன், அவள் பார்வையில் வியப்பேறியதைக் கண்டதும், “வசதி குறைவெண்டாலும் உன்ன நிறைவாக வச்சிருக்க எனக்குத் தெரியும்!” அன்பாகவே சொன்னான்.
அதைக் கேட்டிருந்தவளின் காதல் கொண்ட மனமோ பெருமையில் தளும்பி நின்றது. இதைவிட வேறேன்ன வேணும்? சொத்துக்காகவும், சீதனத்துக்காகவும் ஒவ்வொருவரும் பறக்கும் காலத்தில், இவரோ போட்டிருக்கும் சில நகைகளையும் கழட்டி வைத்துவிட்டு வா என்கிறாரே என்று வியந்துருகினாள். இப்படிப்பட்டவனை வீட்டினரின் சம்மதத்துடன் மணம் செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லையே! தாயும் சகோதரனும் என்றைக்காவது இவனைப் புரிந்துகொள்வார்களா? மங்கையினுள் ஏக்கம். அதுவே, அவள் விழிகளைப் பனிக்கச் செய்தன!
“ஸ்ஸ்..என்ன மங்கை, சின்னப்பிள்ள போல அழுது கொண்டு! எல்லாம் சரி ஆகிரும்!” நம்பிக்கையூட்டினான், அவன். உண்மையில், வீட்டை விட்டுப் போய்த் திருமணம் செய்து கொள்வோம் என்றதும், இவ்வளவு இலகுவாகச் சம்மதம் சொல்வாள் என அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லைதான். அவளின் சம்மதம் அவனுள் அளவிலா மகிழ்வையும், ஒருவகை இறுமாப்பையும் உருவாக்கியிருந்தது.
அவள் சற்றுமுன் வந்து லொரியில் ஏறியதும், “ஆனந்த், எனக்கு வீட்டில கலியாணம் முற்றாக்கிட்டீனம்!” என்று, கலக்கத்துடன் சொல்ல, உள்ளே சுறுசுறுவென்று எழுந்த கோபத்தைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டவன், இப்போதோ, அது இருந்த இடம் தெரியாது அகன்றுவிடவே, மகிழ்வுடன் அவளை இறக்கி விட்டுவிட்டு, விசிலடித்துக்கொண்டே லொரியைக் கிளம்பினான்.

