நெஞ்சினில் நேச ராகமாய் 11 – 2

அன்று கனடாவிலிருந்து வந்திருந்த நண்பன் குடும்பத்திற்காக வீட்டில் தடல்புடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார், ராசன். அனைத்துச் சமையல் வேலைகளையும் தன் அண்ணி கோகிலாவுடன் சேர்ந்து பொறுப்பாகப் பார்த்துக்கொண்டார், மகிழின் அன்னை. பலக்லைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த மகிழ், இரண்டாம் வருடம் பொருளியல் இறுதிப் பரீட்சைக்காகத் தயாராகிக் கொண்டிருந்தாள். நண்பிகளே என்றாலும் வேறு வீடுகளிலிருந்து படிக்க அனுமதி கிடைக்காதென்பதால், காலையில் இயன்றளவு உதவிகளைச் செய்து கொடுத்துவிட்டு, தன்னுயிர்த் தோழிகள் ஷீலா, உஷாவுடன் தம் வீட்டிலிருந்து படிக்கப் போவதாகக் கூறி வீட்டுக்கு வந்துவிட்டாள். அதன் பிறகு, அவள் படித்த அழகுதான் மேலே நினைவில் சுற்றிச் சுழன்றடித்ததே!
“பிள்ள, கொட்டிலுக்குள்ள மாம்பழக்கூடை வச்சிருக்கிறன், படிச்சிட்டு, அதை ஒருக்காக் கொண்டு வந்து தந்துட்டுப் போறியோ?” என்று, தாய் சொல்லியிருந்தார்.
“ஆங்…சரி சரி. ஆனா, கனடாக்காரர் மாம்பழம் சாப்பிடுவினமோ அம்மா? இல்லம்மா…டின்னில வருமே, அதைத்தான் சாப்பிடுவினமோ எண்டு கேட்டன்.” நக்கலாகக் கேட்டு, தாயின் முறைப்பை ஒருவித அலட்சியத்துடன் ஏற்றுக்கொண்டே வந்திருந்தவள், வெட்டிய மாங்காயைச் சுவைத்து, வஞ்சகமின்றி பரீட்சைக்கும் படித்துவிட்டு நண்பிகள் விடைபெற்றதும், மாம்பழங்கள் அடங்கிய கூடையை இலாவகமாகத் தலையில் தூக்கிக்கொண்டு, மாமா ராசன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அவர்கள் வீட்டிலிருந்து பத்து நிமிட நடையில் உள்ளது அவள் மாமா வீடு. தம் மாந்தோப்பு ஒழுங்கையால் நடந்து பெரிய பாதையினுள் பிரவேசித்துச் சில நிமிடங்கள் நடந்திருப்பாள், எதிரே, கமராவும் கையுமாக எதிர்ப்பட்டனர், கனடாக்கார இளைஞர்களில் இருவர். அவர்களில், கமராவைக் கையில் வைத்துக்கொண்டு, எதிர்ப்படும் இலைகளையும் குழைகளையும் அப்படியும் இப்படியும் படமெடுத்துக் கொண்டிருந்தான், இவளுக்கு ‘பட்டிக்காடு’ பட்டத்தைக் கேட்காமலேயே பெருமனதாய் வழங்கியவன்.
அவள் நடை ஒரு கணம் பின்னியது! இதுவரை மாமா வீட்டுக்கு வரும் அறியாதவர்கள், “இந்தப் பெட்டை இஞ்ச வேலை செய்யிறவவா?” என்று கேட்கும் வகையில்தான் இவள் அங்கு அனைத்து வேலைகளையும் பார்ப்பாள். அதுவும், சரசு ஆட்களுக்கு முன்னால் வைத்து இவளை வேலை ஏவுவதையும், ஏசுவதையும், முறைப்பதையும் பார்த்தால், அறியாதவர் யாருமே இவளை அவரின் இரத்த உறவாக சிறிதும் எண்ண மாட்டார்கள். இத்தனைக்கும், தனியாக வசித்துத் தனக்கென்று தையல் தொழிலையும் செய்து வருபவர், மங்கை. ஆனாலும், தாயின் ஏச்சுப் பேச்சுக்களைப் பெரிது பண்ணாது, “எங்கட வீட்டு வேலைகள நாங்கள் செய்யாமல் ஆர் செய்யிறது?” என்று, தானும் செய்து மகளுக்கும் அதையே பழக்கியிருந்தார்.
இப்படி, தலையில் பொருட்களை ஏந்திச் செல்வதெல்லாம் அவளுக்கு புதிதல்ல. ஆனாலும், ‘பட்டிக்காடு’ என்றவன் முன்னால் இப்படிப் போக முடியாது என்று மனம் சிறிதாக முணகிப் பார்த்தது. ‘அவருக்கு என்னை அடையாளம் தெரியாது. முதல் அப்பிடித் தெரிஞ்சாலும் இவர் ஆர் எனக்கு?’ சங்கடத்தில் நெளிந்த மனத்தை அடக்கிவிட்டு முன்னேறினாள், மகிழ்.
அவனோ, அவளைக்காட்டி அருகில் வந்தவனிடம் எதுவோ சொன்னவன், அப்படியே தன் கமராவை அவளை நோக்கித் திருப்பினான்.
“இஞ்ச பாருங்க, ஃபோட்டோ எடுக்கிற வேலையெல்லாம் என்னட்ட வேணாம்.” சீறினாள், இவள். அப்போதுதான் அவனுக்கு இவளை அடையாளமே தெரிந்தது! “அட…எங்கட மாங்கா!” சட்டென்று தோன்றிய சுவாரசியத்துடன் ஆரம்பித்தான். “ஹேய், நீர் மங்கை ஆன்ரிட மகளா? காலம அது எனக்குத் தெரியாது. எவ்வளவு அமைதியான அன்ரிக்கு இப்பிடி ஒரு மகளா? அப்பப்பா! எப்பிடிச் சமாளிக்கிறாரோ?!” அளவுக்கு அதிகமாக வியந்தவன், “இது என்ன தலையில? ராசன் அங்கிள் வீட்டுக்குத் தானே? இறக்கும், நாங்க தூக்கிக்கொண்டு வாறம்.” என்று சொல்லிக்கொண்டே, அவள் தலைமீதிருந்த கடகத்தை இறக்க முயன்றான்.
கடகத்தை விடாது இறுக்கிப் பிடித்துக்கொண்டாள், மங்கை. “ப்ச்..விடுங்க. எனக்குக்…கொண்டு வரத்…தெரியும்..” சொல்லிக் கொண்டிருக்கையில் அவள் கைகளை விலக்கிவிட்டு, “பிடிங்கண்ணா…” என்றவாறே, கடகத்தை இறக்கி வைத்துவிட்டான், அவன்.
அவன் செயலில் மங்கை முறைத்துக்கொண்டு நின்றாள். அதைப்பார்த்தவனுக்குச் சிரிப்பாக இருந்தது. இன்னமும் சீண்டிப்பார்க்க ஆசை வந்திட்டு. “அண்ணா, சரசு பாட்டி ஏசிக்கொண்டு நிண்டாவே…” என்று தமையனிடம் ஆரம்பிக்க, அவனோ, கேள்வியாகப் பார்த்தான்.

“இண்டைக்கு மாம்பழம் சாப்பிட்ட மாதிரித்தான், உன்ர மகளிட்ட ஒரு காரியம் சொன்னா ஒன்பது வருசத்துக்குப் பிறகுதான் செய்வாள். பேசாமல் சேகர அனுப்பி எடுத்திட்டு வரச் சொல்லு எண்டு கத்த, அவள் படிச்சுக் கொண்டிருந்ததில சுணங்கியிருக்கும். இப்ப வந்திருவாள் எண்டாரே மங்கை அன்ரி. அந்தப் படிப்ஸ் இவா தான் அண்ணா. காலம நடந்தத நீங்க காணேல்லையே! ஆள் மரமெல்லாம் ஏறுவா அண்ணா” என்று தன் சகோதரனிடம் அவளை அழகாக அறிமுகம் செய்து வைத்தவன், “ஏழாம் வகுப்பு அப்படிப் படிக்கிறீர் எண்டுதான் நினைச்சனான். ஆனா நீர் கம்பசாமே!!” வார்த்தைகளை நக்கலில் குழைத்தடித்தான்.
அவளோ, பதிலுக்கு அவனுடன் மல்லுக்கு நிற்க நினைத்த நாக்கையும், அதைத் தூண்டிய மனத்தையும் வெகு பிரயாசைப்பட்டு அடக்கிக்கொண்டாள்.அதற்கென்று சும்மா செல்வதா? “இது இவ்வளவும் உங்களுக்குத் தான், கொண்டுபோய்ச் சாப்பிடுங்க!” என்று சொன்ன அடுத்த நிமிடம் திரும்பிவிட்டாள். விறுவிறுவென்று தன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.
“ஹேய்..ஹேய்..நில்லும் நில்லும்! இப்பிடி நடு ரோட்டில வச்சிட்டுப் போனால் நாங்களும் விட்டுட்டுப் போயிருவம் சரியோ!” பின்னால் துரத்தி வந்த அவன் குரலை அலட்சியம் செய்தவாறே, தம் வீட்டு ஒழுங்கையினுள் திரும்பி மறைந்து விட்டாள், மகிழ்.
“வாங்கண்ணா, இப்படியே விட்டுட்டுப் போவம், எங்களுக்கு என்ன வந்தது!” முறுக்கிக்கொண்ட தம்பியைக் கடிந்து கொண்டான், அவன் அண்ணன்.
“வந்த இடத்தில உனக்கு ஏன் இந்த பகிடி சேட்டை? வா, தூக்கிக்கொண்டு போவம்!” என்று சொல்லி, இருவரும் இருபக்கமாகக் கடகத்தைப் பற்றிக்கொண்டு ராசன் வீடு நோக்கித் திரும்பினர்.
விறுவிறுவென்று நடந்து வந்தாலும், ‘சொன்னமாதிரி ரோட்டில் விட்டு விட்டுச் சென்றுவிட்டால்?’ என்ற கலக்கம்,அவளுள். “பிறகு, லூசுக்கிழவி உண்டு இல்ல எண்டாக்கிரும்!” முணுமுணுத்துக்கொண்டே திரும்பி ஓடி வந்தவள், அவர்கள் கடகத்தைத் தூக்கிக்கொண்டு நடப்பதைப் பார்த்து நிற்க, தற்செயலாகத் திரும்பியவனோ, அங்கிருந்தே பத்திரம் காட்டி எச்சரித்துவிட்டுச் சென்று மறைந்தான்.
தம் இரண்டாவது மகனின் திருமணத்தைக் கொழும்பில் நடத்துவதற்காக கனடாவிலிருந்து வந்திருந்த சரவணன் குடும்பம், நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட தன் உயிர் நண்பனுக்கும் மங்கைக்குமே திருமண அழைப்பை வழங்கி, “நடந்து போன ஒண்டையும் மனசில வச்சிருக்க வேணாம். நாங்களும் மறந்திட்டம். கட்டாயம் கலியாணத்துக்கு வரோணும்!” என்ற கோரிக்கையின் பேரில் அன்று மாலை புறப்பட்டுச் சென்றிருந்தனர். அதன்பின், திருமணத்துக்காகவென்று ராசன் கொழும்புக்குச் சென்று வந்ததும் இவளின் நினைவிலாடியது.
அதோடு அந்த நினைவுகள் முக்கியமற்றதாகி விட்டன.
ஆனால் இன்று, ‘இத்தின நாள்களுக்குப்பிறகு, என்ன அவேட கடைசி மகனுக்கு, அதுவும் அண்டைக்குக் கண்ட முதல் கணத்தில கொஞ்சமும் தயங்காமல் ‘பட்டிக்காடு’ எண்ட லெவல் பிடிச்சவனுக்குக் கேட்டவையோ!’ அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. “ம்மா..இந்தக் கலியாணம் வேணாம் அம்மா! எனக்கு உங்கள விட்டுட்டு அவ்வளவு தூரமாக வெளிநாடு போக விருப்பமில்ல. ப்ளீஸ்மா வேணாம்!” எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவள் தாயார் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
“நீ…நீ ஆரையாவது காதலிச்சாச் சொல்லிரு மகிழ்!” என்று, அவள் முகத்தைக் கன்ற வைத்தாரேயொழிய!
மாமாவிடம் நேரே சென்று, “எனக்கு இந்தக் கலியாணத்தில விருப்பம் இல்லை மாமா.” என்று சொல்லும் அளவுக்கு மகிழுக்குத் துணிச்சல் அவளுக்கில்லை. ஏனோ பட்டிக்காடு, குட்டிப்பிசாசு என்றவனை மணம் புரிய அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘அவருக்கு நான் எந்தவிதத்திலும் பொருத்தமில்லை!’ என்ற எண்ணம் அவளுள். ‘என்னக் கலியாணம் செய்ய எப்பிடிச் சம்மதம் சொல்லியிருப்பார்?’ என்ற கேள்வி அவளுள் பதில் தேடிய வண்ணம் அலைந்தது.

error: Alert: Content selection is disabled!!