நெஞ்சினில் நேச ராகமாய் – 12

அத்தியாயம் 12
“ஹாய் பாட்டி, எப்பிடி இருக்கிறீங்கள்?” ஒருபோதுமில்லாதவாறு வந்த அழைப்பை வியப்புடன் ஏற்றுக் கதைத்தவாறே, அலுவலக அறையிலிருந்து புறப்பட்டான், உதயகீதன்.
“ம்ம்…என்ர நலத்துக்கு என்னப்பா குறை? நல்லா இருக்கிறன்!” என்ற பாட்டியின் சலிப்பு, இவன் முகத்தில் முறுவலை நிறைத்தது.
“என்ன பாட்டி விசயம்? வேண்டா வெறுப்பாக் கதைக்கிறது போல இருக்கே! அங்க வீட்டுக்கு எடுக்கிறதா நினைச்சு தவறிப்போய் இங்க எடுத்திட்டிங்களோ? அதும் இந்த நேரத்தில், இன்னும் தூங்கேல்லையா நீங்க ?”
“எனக்கு ஒண்ணும் அந்தளவுக்கு மாறாட்டம் வரேல்ல உதய். உங்களோட கதைக்க வேணும் எண்டுதான் எடுத்தனான். ம்ம்…இன்னும் தூங்கேல்ல தான். மனசில நிம்மதியும் அமைதியும் இருந்தா எல்லா தூக்கமும் வரும்!” வெடுசிடுவென்று கதைத்தார், பெரியவர்.
“இதென்ன கதை பாட்டி! இப்ப உங்களுக்கு அமைதி இல்லாமல் போற மாதிரி என்ன நடந்தது?” இலகுக் குரலில் கேட்டான், உதய்.
“பச்…அமைதியா இருக்கவும் ஒண்டுமே நடக்கேல்ல உதய்?” இடக்குமிடக்காகக் கதைத்தார், பர்வதம்.
“என்ன பாட்டி, புதிர் போட்டுக் கதைக்கிறீங்க?!” நகைத்தவன், “முழங்கால் வலி இப்ப எப்பிடியிருக்கு பாட்டி? சித்தப்பா, சித்தி, தம்பி, தங்கச்சி எல்லாரும் சுகமா இருக்கினமோ?” என்று கதைத்துக்கொண்டே வந்து, தன் பையை காரின் முன்னிருக்கையில் வைத்துவிட்டு ஓட்டுனர் இருக்கையில் ஏறியமர்ந்தான்.
“இங்க எல்லாரும் சுகமா இருக்கிறம் அப்பன். நீங்க எப்பிடி இருக்கிறிங்க? வீட்டில எல்லாரும் சுகமாக இருக்கினமோ ?”
“எல்லாரும் நல்லா இருக்கிறம் பாட்டி. உங்களக் கண்டு ஆறுமாதங்கள் ஆகப் போகுதே, எப்ப வரப் போறீங்க?” உரிமையாகக் கேட்டான் பேரன்.
பர்வதத்துக்கு இரு மகன்கள். மூத்தவர் இவனின் அப்பா சரவணன், இளையவர் கேசவன். கேசவன் இலண்டனில் வசிப்பதால், ஆறுமாதம் இவர்களுடன் கனடாவிலும், ஆறுமாதம் இளையமகனுடன் இலண்டனிலுமாக தங்கிக்கொள்வார், பர்வதம்.
“வாறன் வாறன். சும்மா சும்மா கதை பேச்சுக்கு என்னில அன்பு இருக்கிறது போலக் கதையுங்கடா!” பாட்டியின் குரலில் இப்போ சலிப்பும் ஏக்கமும் வெளிப்பட்டது.
“என்ன நடந்தது பாட்டி? ஏன் ஒரு மாதிரிக் கதைக்கிறீங்க?”
“பச்…மனம் சரியில்ல உதய். வயசு போனா வீட்டுக்குப் பெரியவேயா இருந்தாலும் அப்பிடியே ஒதுக்கிருவினம் என்ன?” தளுதளுத்த குரலில் கேட்டார், பெரியவர்.
“பாட்டி.. என்ன பாட்டி! என்ன நடந்தது?” பேரன் மனதில் கலவரம். சிறுவயதிலிருந்து ஊட்டிப் பராமரித்த செல்லப் பாட்டியல்லவா!
“ம்ம்…இன்னும் என்ன நடக்கோணும்? நீங்க ஆரு ராசா எனக்கு?” பாட்டியின் அதட்டல், பேரன் முகத்தில் மீண்டும் முறுவலைக் கொண்டு வந்தது.
“எங்கட செல்லப் பாட்டிட பேரன்கள் எண்டு தெரியாதா உங்களுக்கு?” சீண்டலாகக் கேட்டான், உதய்.
“ஓம் ஓம்! ஆ ஊ எண்டா வாய் வார்த்தைக்கு இதைச் சொல்லிருங்க. ஆனால், முக்கியமான விசயங்களை என்னட்டச் சொல்லாமல் மறைச்சு, போனாப் போகட்டுமெண்டு எல்லா அலுவலும் முடியவிட்டு வந்து தகவலாச் சொல்லுங்க!” என்றவர் குரல் தழுதழுத்தது.
“முக்கியமான விசயமா? உங்களிட்ட மறைச்சவையா? ஆர்?” என்றவன், ஓரளவுக்கு ஊகித்துக்கொண்டான்.
“என்ர கலியாண விசயம் பற்றி அப்பாவோ, சித்தப்பாவோ உங்களிட்டச் சொல்லேல்லையா பாட்டி?” பேரன் இப்படிக் கேட்க, கண்கலங்கி விட்டார் பர்வதம்.
“ஓமடா ஓம்! சாதகம் பாத்து, உன்னட்டச் சம்மதம் கேட்டு, ரெண்டு கிழமைக்குள்ள இலங்கைக்குக் கதைச்சு அவ்வளவு அவசரமா நாள் குறிச்சிட்டு, கடைசியா, நெளிஞ்சு கொண்டே வந்து சொல்றான், உன்ர சித்தப்பன்! உன்ர அப்பனோ, இன்னும் அதைப் பத்தி ஒரு வார்த்தை சொல்லேல்ல!” என்றவர் குரலில், ஏக்கமும் கோபமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.
இவனுள்ளமோ, பாட்டி சொல்வதை அறவே நம்ப மறுத்தது. “விளையாடாதேங்க பாட்டி! இதுவரைக்கும் அப்பிடி ஒண்டையும் உங்களுக்கு மறைச்சது இல்லையே! கலியாண விசயத்தில உங்களிட்டச் சொல்லாமல் ஒண்ணும் செய்யமாட்டார், அப்பா. அண்ணாமார் கலியாணங்களுக்கு உங்கட விருப்பம் கேட்கேல்லையா என்ன? நீங்க மறந்து போய்ட்டீங்க போல பாட்டி!” என்று, அடித்துச் சொன்ன பேரன் மட்டும் முன்னால் இருந்திருந்தால், கையில் கிடைத்ததால் போட்டிருப்பார் பர்வதம்.
இப்போது அது முடியாதே! “டேய்! அப்ப என்னை அறலை, மாறாட்டம் பிடிச்ச கிழவி எண்டு சொல்லுறியோ?”
“ச்சே ச்சே..அப்பிடி எல்லாம் இல்ல. நீங்க என்ன கிழவியா பாட்டி? ய்ங் லேடி! உங்களுக்கு உள்ள பிஸியில அப்பா சொன்னத மறந்து போய்டீங்க எண்டன்.” என்று சொல்லிவிட்டு நகைத்தான் உதய்.
பாட்டியோ, இதைக் கொஞ்சமும் இரசிக்கவில்லை. “இங்க பார் உதய்…விளையாடாத! இந்தக் கலியாணத்தைப் பற்றி ஏன் என்னட்டச் சொல்லேல்ல எண்டு எனக்கு நல்லாத் தெரியும். என்ர சம்மதம் கடைசி வரை கிடைக்காது எண்டு உன்ர அப்பனுக்கும் நல்லாத் தெரியும். இப்ப மட்டும் நான் லேசில விட்டிருவனா?” என்று அவர் சொன்னவிதத்தில் இப்புறம் இவன் அதிர, அவரோ தொடர்ந்தார்.
“என்ர பேரனுக்கு என்ன குறை? அவனுக்கு ஊருலகத்தில வேற பொம்பளையே கிடைக்கேல்லையா? போயும் போயும் அந்த ஓடுகாலிட மகள்தான் கிடைச்சாளா? ‘தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை’ எண்டு சும்மாவா சொல்லி வச்சிருக்கினம். இதெல்லாம் கண்ணாரப் பாத்து, அனுபவிச்சுச் சொன்னதடா!”
“பாட்டி! ஓடுகாலி? அப்பிடியெண்டா…” இழுத்தான் பேரன்.
“உனக்குத் தேடிப் பிடிச்சிருக்கிற பொம்பளையிட தாய்க்காரி மங்கைதான் ராசா ஓடுகாலி! அவளை உன்ர சித்தப்பாவுக்குக் கல்யாணம் பேசி, திகதி குறிச்சு, எல்லா ஆயத்தங்களும் செய்திருக்க, கடைசி நேரத்தில் காதல் எண்டு லொறி ஓட்டுறவனை இழுத்துக்கொண்டு ஓடிட்டாள்!” இதைக் கேட்டதும் மேலும் அதிர்ந்தான் உதய்.
இதுவெல்லாம் அவனுக்குத் தெரியவே தெரியாதே! மகிழின் தந்தை சிறுவயதில் பிரிந்துவிட்டார் என்று தெரியும். ஆனால், அதைப்பற்றி கேட்டு ஆராய வேண்டுமென்று இவன் நினைக்கவில்லை.
பேரனின் மௌனத்தைச் சாதகமாக்கித் தொடர்ந்தார் பர்வதம். “அட..போனவள் வீராப்பாக வாழ்ந்தாலும் பரவாயில்லையே! இரண்டு மாசம் தான் வயித்தில வாங்கிக்கொண்டு திரும்பவும் வீட்டுக்கே வந்து, அந்தக் குடும்ப மானத்தச் சந்தி சிரிக்க வைத்து விட்டாள்!”
“உன்ர தலையில கட்டப் பாக்கினமே, அந்தப் பெட்டைய, அம்மம்மாக்காரி திரும்பியும் பாக்கிறேல்லையாம். அவளைப் போய் உன்னட்ட தள்ளி விடப் பாக்கிறான் ராசன். உன்ர அப்பாவுக்கு ஊருலகத்தில காணக் கிடைக்காத உயிர் நண்பனாம் அவன்!” மனத்தில் கனன்ற ஆத்திரம் பர்வதத்தின் குரலில்!
“இங்க பார் ராசா, அவள்…அந்த மங்கை ஓடிப்போன பிறகு உன்ர சித்தப்பாவுக்கு அருமையான பொம்பளை பாத்துச் செய்து வச்சனான். அதுக்கிள்ள எத்தினை கதை பேச்சு கேட்டனாங்க. மனக்கஸ்டரமும் தான். இப்ப அதே வீட்டில திரும்பவும்…” என்றவர் நினைவில், தான் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர்களில் நடக்கும் எசகு பிசகான விடயங்கள் ஒவ்வொன்றும் மின்னி மின்னி மறைந்து வயிற்றில் புளியைக் கரைத்தது.
‘பிறகு என்ர பேரன்ட நிலை! விடமாட்டன். இந்தப் பொம்பளை அவனுக்கு வேணவே வேணாம்.’ தன் முடிவில் உறுதியானார்,பர்வதம்.
“இங்க பார் தம்பி, அந்தக் காலத்தில, அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கிற நேரமே அந்த மங்கை இந்த வேலை செய்யேல்லையா? இப்ப, உனக்குப் பார்த்திருக்கிறவள் எப்ப அவள்ட காதலனோட ஓடுவாளோ ஆருக்குத் தெரியும்?” என்று தொடர்ந்தவரை, “பாட்ட்ட்டி..” என்று, அதட்டலோடு குறுக்கிட்டான் பேரன்.
“டேய்! என்னடா குரல் உயருது? நான் இப்ப சொன்னது நடக்காது எண்டு நீயோ உன்ர அப்பாவோ உத்தரவாதம் தருவீங்களா? திரும்பவும் அப்பிடி ஒண்டு நடந்தா எங்கள ஆரும் மதிப்பினமே?” அத்தூரமிருக்கும் பேரனுக்கு கேட்கவேண்டுமே என, உரத்த குரலில் கத்தி அதட்டினார் பர்வதம்.
தன் பிள்ளைகளுக்கு இலங்கையில் பொம்பளை பார்க்க வேண்டுமென்பது இவன் அம்மா ரத்னாவின் ஆசை! அதன்படி, மூத்த மகன்கள் ஜெயதீபன், வசந்தரூபன் இருவருக்குமே மனத்துக்குப் பிடித்த வகையில் மருமகள்கள் வாய்த்திருந்தார்கள். இவனுக்குத் திருமணப்பேச்சு எழும் போதே, “எங்காவது நல்ல மாப்பிள்ள இருந்தாச் சொல்லடா!” என, நண்பன் ராசன் சொன்னதுதான் சரவணன் நினைவில் வந்து போனது. உடனே, மனைவியின் சம்மதத்துடன் சாதகத்தை வாங்கிப் பார்த்து, பொருத்தம் மிகவும் நன்றாக இருக்கவே மகனிடம் சம்மதம் கேட்டனர்.
மங்கையின் மகள் என்றதும், சட்டென்று அவன் நினைவில் சிறு சலசலப்பு! மரத்திலிருந்து குதித்த வேகத்தில் மாங்காய் கிண்ணத்தை நீட்டிக் கொண்டு நின்ற மகிழ், அனாயசமாக வந்து நின்றாள். இருவருடங்களுக்கு முன் அவளைச் சந்தித்ததை அதன் பிறகு நினைத்துக் கொண்டிருக்கவில்லை, இவன். ஆனால் இப்போதோ, அழியா ஓவியமாக மனத்திரையில் வந்து போகிறாளே!
“ஓமோம், நான் குட்டிப் பிசாசுதான். நீங்க பெரிய பேய்!” அன்று அவள் தோழிகள் பிடியில் திமிறிக்கொண்டே கத்தியதை இப்போது நினைத்தால், வாய்விட்டு நகைக்க வேண்டும் போலிருந்தது, இவனுக்கு. ‘கடைசியில் பெரிய பேய்க்கு மனைவி குட்டிப் பிசாசா?’ அவன் இதழ்களில் மலர்ந்த முறுவலை பெற்றோர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பிறகு ஏனோ பெரிதாக யோசிக்கவில்லை. “சம்மதம் அம்மா!” என்று சட்டென்று சொல்லி விட்டான். அதைக் கேட்ட சரவணன் மிகவும் மகிழ்ந்தார் என்றால், ரத்னாவோ, “அவசரமில்லை தம்பி..” சொல்லிக்கொண்டே தன் மெயிலைத் தட்டித் திறந்தவர், “இந்தாப் பாருங்க, மகிழிட ஃபோட்டோ! நல்லாப் பாத்திட்டுப் பொறுமையா யோசித்துச் சொல்லு. என்னப்பா நான் சொல்லுறது சரிதானே?” கணவரிடமும் கேட்டார்.
“சரிதான், பொறுமையாவே சொல்லு உதய்!” சரவணின் சுருதி குறைந்து விட்டது. ஆனால் அவர் மகனுக்கோ, தோழிகள் இருவருடனும், நயனங்களில் குறும்பு வழிய கடற்கரையொன்றில் நின்றிருந்தவளை கைபேசித்திரையில் பார்த்ததும், மறுக்க வேண்டுமென்றோ, நன்றாக யோசிக்க வேண்டுமென்றோ தோன்றவில்லையே.
“ரெண்டு வருசங்களுக்கு முதல் இலங்கை போயிருந்த நேரம் நேரிலயே கண்டிருக்கிறன்மா. எனக்குப் பிடிச்சிருக்கு!” என்றவாறே, ஃபோட்டோவை தன் மெயிலுக்கு அனுப்பியதைப் பார்த்த சரவணனும் ரத்னாவும், மகிழ்வுடன் கல்யாண வேலைகள் ஆரம்பித்து விட்டனர்.
இப்போது அதை நினைத்துக் கொண்டவன், ‘அவளைப் பார்த்தால் காதலை வீட்டில சொல்லப் பயப்படுறவள் போல இல்லையே!’ என எண்ணமிட்டவாறே, “அந்தக் காலம் வேற பாட்டி, இப்ப வேற. காதலிச்சா சொல்லப் பயப்படுவினமோ? அதோட, மகிழிட சம்மதம் கேட்டிட்டுத்தான் கல்யாணத் திகதி குறிச்சதா அப்பாவும் அம்மாவும் கதைச்சவே.” பொறுமையாக எடுத்துச் சொல்ல முயன்றான்.
“டேய் டேய்.. நான் சொல்ல வாறது உனக்கு விளங்கவே இல்ல. நான் நல்லா விசாரிச்சனான் தம்பி. அவேட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற சனத்திட மகள் இங்க தான் இருக்கிறாள்.” பேரன் தன் பேச்சை அசட்டையாக எடுத்துக்கொண்டதில் ஏற்பட்ட கோபத்தில் சிடு சிடுத்தவர்,“சின்ன வயசில இருந்தே வீட்டில ஒரே கெடுபிடியாம். பாட்டி, தாய் ரெண்டு பெரும் சரியான கண்டிப்பாம்! ஏதோ மாமன்காரனும் மாமிக்காரியும் தான் இவளில கொஞ்சம்சரி கரிசனையாம். அவளிட தாய்க்காரிக்கு தான் செய்த வேலையை மகள் செய்திட்டால் எண்ட பயம்!” இகழ்ந்தார் பர்வதம்.
“அப்படியிருக்கேக்க காதலிக்கிறேன் எண்டு வீட்டில் எப்பிடிச் சொல்வாள்? பேசாமல் தாய்க்காரி போல இழுத்துக் கொண்டுதான் ஓடுவாள்!” முடிவாகச் சொன்னார்.
“ராசகுமாரன் மாதிரி இருக்கிற உனக்கு, ஊருலகத்தில வேற பொம்பளை கிடைக்க மாட்டாளா? இவள் வேணாம் அப்பு!” கெஞ்சியவர், “ஏன் ராசா, நமக்குப் பேசின பொம்பளை எண்டு நினைச்சு அவளோட கதைச்சனியே?” என்றதும், இதுவரை அமைதியாக இருந்த பேரன், ”இல்ல..” சட்டென்று சொன்னான்.
மகிழோடு கதைக்க மிகவும் விரும்பினான் தானே. ஆனால், ‘அவளிட்ட ஃபோன் இல்லையாம் தம்பி, ராசன் வீட்டுக்கு அல்லது மங்கையிட ஃபோனுக்கு எடுத்துக் கதைக்கலாம். இந்தா நம்பர்.” என்று, தந்தை தந்த எண்களைப் பார்க்கக்கூட இல்லை இவன்.
“இந்தக் காலத்தில, அதுவும் கம்பஸில படிச்சவா போன் இல்லாமலா!” தந்தையிடம் முணுமுணுத்தவன், இந்தச் சிலநாட்களில் தன் வேலைகளின் இடையில் அவளுடன் கதைக்கும் ஆவல் எழுந்தாலும், மற்றவர்கள் மூலம் கதைப்பதா என்ற எண்ணம் பாதி, நேர வித்தியாசம் மீதியாக நாட்கள் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது.
வீட்டில் அவ்வளவுக்கு கண்டிப்பும் கட்டுப்பாடும் போலிருக்கே. அவளைப் பார்த்தால் கண்டிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையில் வளர்ந்தவள் போலவா இருக்கு என்று குழம்பித்தான் போனான், உதய். அப்படியிருந்தும், பாட்டி இவ்வளவு சொன்ன பின்னரும் அவளைத் திருமணம் செய்வதை அப்படியே தள்ளிவிட, அல்லது மறுபரிசீலனை செய்ய அவன் மனம் சிறிதும் முற்படவில்லை. பாட்டியைச் சமாதானம் செய்யவே முயன்றான்.
“சரி பாட்டி நான் வீட்டுக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறன், அங்க போனோன்ன உங்களுக்கு எடுக்கிறனே!” என்றவன், “இல்ல இல்ல, நீங்க நிம்மதியாத் தூங்குங்க பாட்டி, நான் நாளைக்கு எடுக்கிறன். நீங்களும் டிரெக்ட் லைனில் கதைக்கிறீங்க! அதும் ஹாண்ட் போனுக்கு. வையுங்க பாட்டி!” மிகவும் பொறுமையாகச் சொல்லி கைபேசியை வைத்துவிட்டு, சிறிதுநேரம் அப்படியே காரினுள் அமர்ந்திருந்தான்.

error: Alert: Content selection is disabled!!