நெஞ்சினில் நேச ராகமாய் – 13

அத்தியாயம் 13
“என்ன அப்பா இது, பாட்டி ஒவ்வொருவருக்கும் எடுத்தெடுத்து இந்தக் கத்து கத்துறார்?” சலித்துக்கொண்டே, வீட்டின் பின்புறமாக இருந்த சிட் அவுட்டில் அமர்ந்திருந்த தந்தையின் அருகில் வந்தமர்ந்த, பெரிய மகன்கள் இருவரையும் அமைதியாக ஏறிட்டார், சரவணன்.
“மாமி உங்களுக்கும் எடுத்தவரோ? ரெண்டு பேருக்குமா? இண்டைக்கு அவா நித்திர கொள்ளமாட்டா!” சொல்லிக் கொண்டே எழுந்த ரத்னா, வேலை முடிந்ததும் நேராக இங்கே வருகிறார்கள் என்பதை மகன்களின் தோற்றம் சொல்ல, “கதைச்சுக் கொண்டிருங்க, டீ போட்டுக்கொண்டு வாறன்.” அருகிலிருந்த சமையலறைக்குள் நுழைந்துகொண்டார்.
இவர்களின் பேச்சுக் குரல் கேட்டதும், தடதடவென்று மாடிப்படிகளால் இறங்கி வந்தார்கள் மூத்தவனின் மகள்களான சரணியும் மதுஷியும். சரணியின் கையிலிருந்த ஆறுமாதக் குழந்தை ஹர்ஷன், தந்தை வசந்தனைக் கண்டதும் பொக்கை வாய் திறந்து மலர்ந்தவாறே பாய்ந்தான்.
மகன்கள் இருவரும் தன்னுடன் கதைத்துக்கொண்டிருந்ததை விட்டு விட்டு, தம் செல்வங்களுடன் ஒன்றியதைப் பார்த்திருந்த சரவணனுக்கு மனதில் மகிழ்வு பரவியது.
இருபது வருடங்களுக்கு முன், முதலில் கனடா வந்த சரவணன், பின் மனைவியையும் மூன்று மகன்களையும் இங்கு அழைத்திருந்தார். வந்ததிலிருந்து உழைப்பு, வேலை என இவர் அலைய அலைய, புதிய சூழலில் பிள்ளைகள் என்ன மாதிரி வளர்வார்களோ என்ற தவிப்பு மட்டும் மனதில் அரித்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால், அவர்கள் பயத்தையெல்லாம் எதுவுமே இல்லையென்றாக்கி விட்டார்கள் பிள்ளைகள் மூவரும்.
மூத்தமகன்கள் இருவரும், படித்து முடித்ததும் தத்தம் துறைகளில் மாதச் சம்பளம் வாங்கும் வகையில் வேலையில் சேர்ந்துகொள்ள, சின்னவன் உதய், “அப்பா, நானும் என்ர ஃப்ரெண்டும் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்யலாம் எண்டிருக்கிறம்! நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டதும், மகனில் இருந்த நம்பிக்கையில் ஒப்புதல் வழங்கிவிட்டார். அவனும் சிறுக சிறுக வளர்ந்து இன்று முன்னணிக்கு வந்துள்ளான்.
எப்போதோ பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் பொழுது , நீங்க மூன்று பேரும் ஒருவருக்கொருவர் உதவியாக, என்றைக்குமே பிரியாமல் இருக்க வேண்டும். கல்யாணம் கட்டினாலும், பக்கத்துப் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று, தாய் சொன்னதை, இரண்டு வருடங்களுக்கு முன் நனவாக்கிக் காட்டி விட்டான் சின்னமகன், உதய்.
ஒரே தெருவில் நான்கு வீடுகள்! ஒருபுறம் அண்ணன்மார் இருவரினதும் வீடுகள், மறுபுறம் பெற்றோருக்கும் தனக்குமாக இரு வீடுகள். தனக்கென்று வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டான். “நான் எப்பவும் அம்மாவோடதான் இருப்பன்!” என்று, எப்போதும் போல, தாயின் செல்லப் பிள்ளையாக மொழிந்து விட்டான்.
மூத்த மருமகள்கள் குடும்பத்துடன் அழகாகப் பொருந்திக் கொண்டது போல, சின்னவனுக்கும் அமைந்திட வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் சரவணனுக்கு, தன் தாய் கூறியதைப் போல், மகிழ் மீது பழி போட மனம் வரவில்லை. என்றோ அவள் தாய் செய்த தவறுக்கு, இன்று, மகள் மீது பழிபோடுவதா என்றே, அவர் எண்ணம் இருந்தது.
வருடங்கள் பல கடந்தாயிற்று. இவ்விடயம் இளைய தலைமுறையினருக்குத் தெரிய வருவதை, அவர்களின் விமர்சிப்புக்குள்ளாவதை அவர் விரும்பவில்லை. அதனால் தான் மகன்களிடம் கூட அதைப் பற்றிக் கதைக்கவில்லை. ஆனால் இப்போது?
“எப்பவோ நடந்த பிரயோசனமில்லாத விசயத்தைப் பெரிசு பண்ணுறார் அம்மா. இதனால தான் இவ்வளவு நாள்களும் அவவிட்ட ஒண்டும் சொல்லாமல் இருந்தனான்.” திடீரென்று தந்தை ஆரம்பித்ததும், “சரி, சரணி மது, ஹோம் வேர்க் எல்லாம் செய்தாயிற்றா? பிறகு அம்மா வந்து கத்துவா, போய்ச் செய்யுங்க.” மகள்களை உள்ளே அனுப்பிய ஜெயன், “ம்ம்..அப்பிடித்தான் அப்பா நானும் நினைக்கிறன்.ஆனாலும் …” இழுத்தான்.
“இப்பிடி ஒராள் அடிச்சுச் சொல்லேக்க, அதும் எங்கட சொந்தப் பாட்டி சொல்லேக்க எனக்கென்னவோ மனசுக்க ஒரு மாதிரிக் கிடக்கப்பா.” என்றவன், “ஏனப்பா தம்பிக்கு வேற இடத்தில பொம்பளை பார்த்தா என்ன?” மகனைக் கொஞ்சிக்கொண்டே கேட்டுவிட்டான், வசந்தன்.
“ஓம் அப்பா, பாட்டி சொல்லுறது போல அந்தப் பிள்ளை இல்லை எண்டே வச்சுக்கொள்ளுவம். எண்டாலும் பாட்டி இந்தளவுக்குக் மனம் நொந்து எதிர்க்கேக்க…பாட்டிய வருத்த வேணாம் எண்டுதான் நானும் நினைக்கிறன்!” தான் தயங்கியதை, தம்பி சொன்னதும் தானும் தொடர்ந்தான் ஜெயன்.
“எனக்குமே நீங்க முதல் கேக்கேக்க எதிர்க்கருத்து எண்டு இருக்கேல்லப்பா. ஆனா இப்ப…” தேனீருடன் வந்த ரத்னாவும் மகன்களையே பிரதிபலித்தார்.
“எப்பவோ நடந்தத இப்பவரை நினைவில வச்சிருந்து விருப்பம் இல்லை எண்டு சொல்லுறது வடிவில்ல எண்டுதான் நானும் சம்மதிச்சனான். சாதகம் வேற நல்ல பொருத்தமாக இருந்ததால பிரச்சனை இருக்கேல்ல. அதிலும் உதய்க்கும் பிடிச்சிருக்கு எண்டதும் தான்…” என்று ரத்னா சொல்லிக்கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்தான், உதய்.
பின்புற சிட் அவுட்டில் எல்லோருமாக அமர்ந்திருப்பதை யன்னல் கண்ணாடியால் கண்டுவிட்டு அவர்களை நோக்கி வந்தவனுக்கு, அவர்கள் முகபாவனையில் இருந்தே, பாட்டி எவ்வளவு வேகமாக டோஸ் கொடுத்துள்ளார் என்பது புரிந்தது.
“வா ராசன், என்ன நல்லா களைச்சுப் போய் வாறீங்க? டீ கொண்டு வரவா?” கேட்டுக்கொண்டே நகர்ந்த தாயை வளைத்துப் பிடித்துக் கொஞ்சியவன், “நீங்களும் தான் எல்லோரும் களைச்சுப் போய் இருக்கிறீங்க! என்ன, இலண்டனில இருந்து தாக்குதல் பலமோ? ஹா..ஹா…” பெரிதாக நகைத்த மகனின் காதைப் பிடித்துத் திருகினார் ரத்னா.
“ஏன்டா, நாங்க எல்லாரும் பாட்டிட்ட வாங்கிக் கட்டிக்கொண்டா அதில உனக்கு இவ்வளவு சந்தோசமா?” முறைத்தான் வசந்தன்.
“உனக்கும் ஒண்டும் குறைவாக விழுந்திருக்காதே! டிரைவிங்கில இருக்கேக்கையா இல்லாட்டி ஒஃபிசில வச்சே தொடங்கிட்டாரா? ஓல்ட் லேடி நீலாம்பரி!” பகிடியாகக் கேட்டான், ஜெயன்.
“வாற வழியில ஒரு ப்ரொப்பட்டி பாக்க இருந்தது அண்ணா. அதுக்காக கொஞ்ச நேரத்துக்கே வெளிக்கிட்டு வெளியில் வர, எடுத்தவா. ஆனா, என்னட்டக் கதைக்கேக்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தான் நல்லா ஏச்சு விழுந்தது.” சொல்லிக் கொண்டே தமையனருகில் அமர்ந்து கொண்டவன், “ம்மா…சாப்பிடவும் ஏதாவது கொண்டு வாங்க.” என்றவன், “ஹர்சுக்குட்டி வாடா வா…சித்தாப்பாட்ட வாங்கோ..” சின்னண்ணன் மகனை வாங்கிக் கொஞ்சத்தொடங்கினான்.
“எண்டாலும் பாட்டி பாட்டி தான். எண்பது வயதாகப் போகுது, இரவோடு இரவா எல்லார் ஃபோனுக்கும் எடுத்து என்ன மிரட்டல்!” நகைத்தான் வசந்தன்.
சரவணனோ, யோசனையாகச் சின்ன மகனைப் பார்த்திருந்தார். மனைவியும் மகன்களும் தன் தாய் சொன்னதைப் பிடித்துக் கொண்டு, ‘இந்தப்பொம்பளை வேணாம்.’ என்ற மாதிரிக் கதைத்ததில் அவர் மனம் குழம்பி விட்டது. எத்தனையோ வருடங்களுக்கு முன், “மன்னிச்சுக் கொள்ளடா சரவணா, இந்தக் கலியாணம் நடக்காது!” என்று, கலங்கிய விழிகளும் கன்றிய முகமுமாக கையைப் பிசைந்தவாறு நண்பன் ராசன் தன் முன்னால் நின்ற தோற்றம் அவர் நினைவில் வந்து சென்றது. ‘இப்ப, நான் அப்பிடி நிற்க வேணுமா?’ என்று நினைத்தவர் மனத்தில் கவலை ரேகைகள் வேகமாகப் படர்ந்தன.
“பாட்டி என்னவாம் உதய்?”
“என்னென்னவோ புதுக் கதையெல்லாம் சொன்னாரப்பா!” பதில் சொன்னவன், தந்தையை தீர்க்கமாகப் பார்த்தான்.
“மங்கை அன்ரிய சித்தப்பாவுக்கு…” என்றவனை, இடையிட்டார் சரவணன்.
“பச்..இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லை. அது எத்தினை வருசங்களுக்கு முதல் நடந்து முடிஞ்ச கதை! உங்களுக்கு தேவையில்லை எண்டு தான் நாங்க சொல்லேல்ல.” என்று மகன்களைப் பார்த்துச் சொன்னவர், “என்ர உயிர் நண்பன் ராசன். அவன்ட தங்கச்சிய என்ர தம்பிக்குச் செய்ய நினைச்சனான்தான். ஆனா அது நடக்ககேல்ல. அதோடு அது முடிஞ்சிட்டு.” என்றவர்,
“அத இப்பக் கிளறிக் கதைக்கிறார் அம்மா. என்ர தம்பி கேசவன் குடும்பமாச் சந்தோசமாத் தானே இருக்கிறான். பிறகென்ன? எப்பவோ நடந்தது வேண்டாத கதையல்லோ? அம்மாவுக்கு வயசு வந்தாலும் சிலவிசயங்களில கதைக்கப் பேசத் தெரியாது!” என்றவர் குரலில் அவர் மனதின் கோபம் தெரிந்தது.
“நீங்க வேறயப்பா! மாமி இப்ப அதைச் சொல்லிக் கவலைப்படவோ கோபப்படவோ இல்லையே. இவ்வளவு நாளா இந்தக் கதையைக் கதைச்சமா என்ன?” என்றபடி, கணவரை முறைத்தார், ரத்னா.
“இப்ப யோசிக்கேக்க மாமிட கோவமும் கவலையும் நியாயமெண்டு தான் எனக்கும் படுதப்பா. ஏற்கனவே ஒருக்காப் பிரச்சனைப்பட்ட குடும்பத்தோட தொடர்பு வேணாம் எண்டுறார். அதில பிழை இல்ல எல்லா?” சொல்லிக்கொண்டே இளைய மகனிடம் கேக் துண்டுகள் அடங்கிய தட்டைக் கொடுத்தவர், “ஜெயன், வசந்த் நீங்களும் எடுத்துச் சாப்பிடுங்க. இதில் டீ வைக்கிறன் தம்பி.” இளையமகனிடம் சொல்லிக்கொண்டே கணவரருகில் சென்றமர்ந்து கொண்டார்.
“அப்ப, பாட்டி சொல்லுறது போல உங்களுக்கும் விருப்பமில்லப் போல இருக்கேம்மா, அப்பிடியா?” தாயிடம் விசாரித்தான், உதய்.
“அப்பிடி இல்ல ராசா. பாட்டி வீட்டுக்குப் பெரியவர். எங்களோட தான் இருக்கிறவர். அவருக்குப் பிடிக்காததச் செய்திட்டு பிறகு ஏதாவது பிரச்சனைகள் வந்தா எண்டுதான் யோசிக்கிறன்.” என்றவர், மகனின் முகமாற்றத்தை பார்த்தவாறே தொடந்தார்.
“அப்பிடி, மாமியக் கவலைப்படுத்தி இந்தக் கலியாணம் நடக்க வேணுமெண்டும் இல்லை எல்லா. உங்கட அண்ணாக்கள் சொல்லுறது போல வேற இடத்தில பாப்பமே! நீங்க தான் இந்தப் பிள்ளையோட தனிப்பட்டுக் கதைக்கவும் இல்லையே!!” சுலபமாக முடிவுக்கு வந்தார் ரத்னா. மனைவியையும், இளைய மகனையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், சரவணன்.

error: Alert: Content selection is disabled!!