அத்தியாயம்14
“என்னதான் எண்டாலும் இப்பிடியா? நட்ட நடுச்சாமத்தில ஃபோன் பண்ணிக் கத்துறது எல்லாம் என்ன வேலை எண்டுறன்? அவேட்ட மாப்பிள்ள கேட்டுப் போன கணக்கில எல்லா கதைக்கினம். அவேயா வந்து சாதகம் கேட்டவே, குடுத்தம். பிறகு…” என்ற கோகிலாவின் குரலில் சலிப்பும் கோபமும் ஆக்கிரமித்திருந்தது.
“அப்பிடி இல்லையம்மா! அந்த மனிசி இப்பிடிக் கத்தேல்லை எண்டாத்தான் ஆச்சரியப்படோணும். இவன் சரணவன் இப்பிடியா தாய்க்கு மறைச்சுக் கலியாணம் பேசுவான்? ம்ம்..இப்பப் பார், வீணா நமக்குப் பிரச்சனை. இதுக்குத்தான் ராசன், இந்த இடம் வேணாம் எண்டு திரும்ப திரும்பச் சொன்னனான்.” மருமகளிடம் தொடங்கிய சரசு, யோசனையோடு அமர்ந்திருக்கும் மகனிடம் சிடுசிடுத்தார். “இத்தினைக்கும் காரணமான உன்ர தங்கச்சி வாயை மூடிக்கொண்டு திரியிறாள். அவள்ட மகளோ, பொறுப்போ சிரம துன்பமோ தெரியாம வலு சந்தோசமாச் சுத்துறாள். ஏச்சுப்பேச்சும் அவேண்ட பொறுப்பும் உன்ர தலையில!” விடாது தொடர்ந்தார், சரசு.
“அப்பிடியெல்லாம் இல்லையம்மா!” என்ற ராசன், “எங்களுக்கு மகிழ் வேற சந்துரு வேற எண்டு இல்ல. என்ர தங்கச்சிட மகள் எண்டாலும் எங்கட மகளாகத்தான் நினைக்கிறம்!” என்ற ராசன், “இதையெல்லாம் மறைச்சுச் செய்யேலுமா? சரவணன் ஏன் அப்பிடிச் செய்தவன்? அப்ப, தாய் விரும்பமாட்டார் எண்டுறது அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.” பெருமூச்சுடன் கூறினார். “இப்ப கனடாவில விடிஞ்சிராது. மத்தியானதுக்குப் பிறகு எடுத்து அவனோட வடிவாக் கதைக்கிறன். அவன்ட அம்மாவோ கலியாணம் நடக்கவே நடக்காது எண்டுறார். நாம் என்னடா எண்டா, திகதி குறிச்சிட்டு ஆயத்தங்கள் செய்யிறம்.” மருமகளுக்குச் சரிவந்த அருமையான சம்பந்தம் கைவிட்டுப் போய்விடுமோ என்ற வருத்தம், அவர் குரலிலும் முகத்திலும் விரவி நின்றது.
“விடு விடு. தாய் செய்ததுக்குப் பழி மகள்ட தலையில!” ஓய்ந்த குரலில் சொன்ன சரசு, “அவளுக்குக் கலியாணம் செய்ய வேணுமெண்டு நினைச்சா, எங்கட கண்ணுக்கு முன்னால இருக்கிறது மாதிரி ஒரு மாப்பிள்ளை பார் தம்பி!” என்றார். தாயை வியப்புடன் பார்த்தார், ராசன். இதுவரை, தன் பேத்தி என்று கருதி அவள் விடயங்கள் எதிலும் தப்பித் தவறியும் இவர் தலையிட்டதில்லையே!
“ஓம் தம்பி. இந்தக் கலியாணம் சரிவராது. அந்த மனிசி பேசின பேச்சைப் பார்த்தனி தானே! ஓடுகாலிட மகள் எண்டு சொல்லிட்டா.” என்றுவிட்டு, வருத்தத்தில் அமைதியானார் சரசு. அன்று மகள் செய்தவற்றுக்கு இன்றும் பழி கேட்க நேரிடுதே. அதுவும் அவள் மகளுக்கும் அழியாப் பழியல்லவா!
“ஒருவேளை, கலியாணம் முடிச்சு இவள் அங்க போனபிறகு இப்பிடியான ஏச்சுப்பேச்சுகளைக் கேட்க நேரிட்டா, ஆதரவுக்கு ஆருமில்லா ஊரில அவள் தனிச்சுப் போவாள் தம்பி. அந்த மனிசி வார்த்தைகளால கொன்று போடும். மற்றவேயும் இதையே சொல்ல எவ்வளவு நேரமெடுக்கும்?” விடாது சரசு தொடர, இப்போது ராசன் விழிகளில் கூர்மை.
“ஏன் இப்ப இப்பிடிப் பார்க்கிற எண்டு தெரியும் தம்பி. எனக்கும் அவளைப் பிடிக்காதுதான். அவள்ட தாய் செய்ததையும், அந்த நாசமாப் போனவன் செய்ததையும் லேசில மறக்க ஏலாமல் கிடக்கே, என்ன செய்யச் சொல்லு?” நலிந்தொலித்தது சரசுவின் குரல்.
“நான் கோவப்படுறது வேற கதை. ஆனா, அந்த மனிசி எப்பிடி இவளில கோவப்படலாம்,ஏசலாம் சொல்லு? அதுக்கு அவா ஆர் எண்டு கேக்கிறன்?” கோபப்பட்டார்.
“இவளும் இலேசுப்பட்டவளா? என்னைக் கோவப்படுத்துறதே அவள்ட முழுநேர வேலை. என்னமாதிரி வாய் காட்டுவாள்!” என்றவர், “அதுக்கெண்டு, அவள் அழிஞ்சு போகோணும் எண்டு நினைப்பனா தம்பி?” முகம் கசங்கக் கேட்டார்.
இத்தனை வருடங்களாக, தவறிழைத்த தங்கையையும், எதுவுமறியாத பேத்தியையும் மன்னிக்க மறுத்த அன்னையுடன், அது சம்பந்தமாகப் பேசுவதையே நிறுத்தியிருந்த ராசன், அமைதியாக மனைவியை நோக்கினார். அவரோ, அமைதியாக இருங்க என்று கண்சாடை செய்தார்.
“இவளும் வாய்த் துடுக்குப் பிடிச்சவள். அந்த மனிசியும் அங்கதானே இருக்கும். அவே வேற வேற வீடுகளில இருந்தாலும் எல்லாம் ஒரே குடும்பமாப் பிழங்கிறவே எண்டு நீ தானே சொன்னனீ? இவளுக்குக் கடைசிவரை அது சரிபடாது தம்பி. நிச்சயம் வாய் காட்டுவாள். பிறகு கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்பாள்!” என்றதும், “இப்ப என்னம்மா செய்யச் சொல்றீங்க?” என்று, அமைதியாகவே கேட்டார் ராசன்.
“பேசாமல் அவளுக்குத் தோதா இங்கயே பாத்துச் செய்து வச்சா, என்னதான் எண்டாலும் நீங்களும் சுற்றியிருக்க அவளுக்கும் ஒரு துணைதானே!” என்று, தாய் சொன்னதைக் கேட்ட ராசனின் விழிகள் கலங்கி விட்டன. இத்தனை வருடங்களில் பேத்தியைப் பற்றிய முதல் முதல் அக்கறையான பேச்சு!
‘நீர் அடித்து நீர் விலகுமா? அப்படித்தானே உற்ற உறவும்?’ தாயின் ஒதுக்கம், தங்கையையும் அவள் மகளையும் தினம் தினம் வருத்துவதை அறிந்திருந்தும், செய்வதறியாது அமைதி காத்து வந்தார், ராசன். இன்றோ, தாயின் இச்சிறு அக்கறைப் பேச்சு அவர் மனதில் அலாதியான நிறைவையும் நிம்மதியையும் உருவாக்கியது!
மறுநாள் காலை… காலைச் சாப்பாட்டுக்காக அப்பம் தயாரித்துக் கொண்டிருந்த மங்கை, சுட்டவைகளை அழகாகத் தட்டொன்றில் அடுக்கி வைத்துவிட்டு மகளை அழைத்தார்.
“ஓடிப்போய் இத மாமா வீட்டில குடுத்திட்டு வாம்மா. அவேயும் சுட சுடச் சாப்பிடுவினம். மாமா வெளிய போயிரப்போறார், கெதியாக் கொண்டு போ!” மகளை ஏவினார். அப்பத்தோடு வந்தவள், வீட்டினுள் நுழைகையில் கேட்ட பேச்சுக்குரலில் வாயிலில் சற்றேதான் தயங்கினாள். அவளை அசையவே விடாது செய்திருந்தது, சரசுவின் பேச்சு.
‘அம்மம்மா’ என்ற உறவு பிறந்ததிலிருந்து கண்ணெதிரில் நடமாடினாலும் அவள் கைக்கெட்டவில்லையே! இன்று, அவரின் இச்சிறு அக்கறை, இலேசில் கலங்காத அவள் விழிகளையே கலங்கச் செய்தது. வார்த்தைகளால் விசிறி அடித்துப் பதம் பார்க்கும் கிழவிக்குள்ளும் கொஞ்சமே கொஞ்சமாக பாசம் இருக்குதோ என்ற எண்ணத் தோன்றலுடன், அதை அனுபவிக்கும் கொடுப்பினையைப் படைத்தவன் தரவில்லையே என்ற ஏக்கமும் மனத்திதை ஊடுருவியது. விரைவில் அதிலிருந்து மீண்டுவிட்டாள், மகிழ். ‘கனடாவிலும் ஒரு வில்லிக்கிழவியா!’ என எண்ணுகையில், ‘ஓடுகாலியின் மகள்’ என்ற அடைமொழியும் சேர்ந்து வந்து நின்றிட்டு.
அவள் மனத்தில் விரவி நின்ற ஏக்கம், கழிவிரக்கம் அனைத்தையும் மேவி, கோபம் கொந்தளித்தது. ‘நான் ஆரோவாக இருந்திட்டுப் போறன், கண்வேக்கு எல்லாம் அதைப்பற்றி என்ன கவலை?’ என்று, எப்போதும் போல் அசட்டையோடு நினைத்தவளால், முகமறியாத ஒருவர், தன்னை அப்படி விளித்ததைக் கொஞ்சமும் ஏற்க முடியாதிருந்தது.
“மகிழ் உன்ர அப்பா…” என்று, தெரியாது வினவுபவரிடம் தயங்கி மறைத்ததில்லை அவள். “அப்பாவ நான் கண்டதே இல்ல. நான் பிறக்க முதலே அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சிட்டினம்.” என்று, அவள் சொல்கிற தொனியே தொடர்ந்து துருவிக் கேட்பதை நிறுத்தி விடும்.
மங்கையின் செயலை சரசு இன்னமும் மன்னியாததில், தாய் அனுபவிக்கும் மனத்துயரைத் தினமும் பார்ப்பவளுக்கு, தாய் மீது அளவுகடந்த இரக்கமும் பாசமுமுண்டு. தாயின் இளம்பிராயத்துச் செய்கைகளை ஆராய்ந்து, அவரைக் குற்றவாளியாக்கிப் பார்க்க அவள் என்றுமே துணிந்ததில்லை. அன்னை மீதான பற்றும் பாசமும் அதற்குச் சிறிதும் இடம் தரவில்லை. அதேவேளை, அறியாத வயதில் ‘அப்பா’ என்ற உறவை எண்ணி ஏக்கமே எழவில்லை என்று, நிச்சயம் பொய்யெல்லாம் சொல்லமுடியாதுதான். என்றாலும், தந்தை என்பவரைப் பற்றி அறிந்தபின், அவ்வுறவைப் பற்றி எண்ணுவதில் நேரத்தைச் செலவிடவில்லை, இவள். இல்லை என்ற ஒன்றை நினைத்து ஏங்கவுமில்லை. அதுதான் மகிழ்!
மங்கையும் எவ்வித பிரச்சனைகளுக்கும் போகாது தன்பாட்டில் இருந்ததால், வளர்ந்தபின், உறவுகளால் ஒதுக்கப்பட்ட நிலையென்று அதிகமாக அறியவில்லை இவள். இவர்களுக்கு அரணாக நின்ற ராசனால், தன் தாயின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றுக் கொடுக்க முடியவில்லையே தவிர, மற்றும்படி எவ்விதக் குறைகளும் வைக்கவில்லை அவர். அப்படியிருக்க, இக்கல்யாணம் பேசி வந்ததுமே வேண்டாம் என்றவளை, அடக்கிச் சம்மதிக்க வைத்து, மேற்கொண்டு அனைத்தையும் செய்கிறார்கள் இவர்கள். ‘அவர்களாக சாதகம் வாங்கிப் பொருத்தம் எண்டு இந்தளவுக்குக் கதைச்ச பிறகு …’ மகிழ் மனத்துள் பிரளயமே உருவானது.
கதைத்துக்கொண்டே வெளியில் வந்த கோகிலா, வாசலில் நின்றவளைக் கண்டதும் அதிர்ந்தார். “மகிழ்! என்னம்மா இங்க நிற்கிற? கையில என்ன?” என்றவருள் தாம் கதைத்தவற்றைக் கேட்டிருப்பாளோ என்ற சந்தேகம். அவளை ஆராய்ந்து கொண்டேதான் கேட்டிருந்தார்.
“அம்மா அப்பம் தந்துவிட்டவர், அதான் கொண்டு வந்தனான் மாமி.” என்றபடி உள்ளே நுழைந்த மகிழ், மிகச் சிரமப்பட்டுத் தன்னைச் சமாளிக்க முயன்றாள்.

