நெஞ்சினில் நேச ராகமாய் 15 – 2

தாங்களாகவே பெண்ணைக் காட்டி அவன் மனத்தில் பதியவைத்துவிட்டு, அதிலிருந்து பின்வாங்க முயலவில்லை ரத்னா. சரவணனுக்கோ மிகவும் ஆனந்தம். “அம்மாட்ட நான் கதைக்கிறன். விடியவிட்டு முதல் வேலை அதுதான்!” மகிழ்வோடு சொல்லிவிட்டார்.
அதன்பின், இரவு வெகுநேரம் நித்திரையின்றிப் புரண்டு கொண்டிருந்தான், உதய். ‘சரி… முதல் அவவிட அம்மாக்கு எடுத்துக் கதைப்பம். நாளைக்கே அவவுக்கு எண்டு ஒரு ஃபோன் வாங்கிக் குடுக்கச் சொல்லி ராசன் அங்கிளிட்டச் சொல்லோணும்.” என்ற எண்ணத்தில் மிகவும் எதிர்பார்ப்போடு அழைத்திருந்தான். சம்பிரதாயமாக மங்கையோடும் உரையாடியவன், அவர் மகளை அழைத்த குரலைக் கேட்டவாறே காத்திருந்து, அவள் பேச்சில் அப்படியே அடங்கிவிட்டான். ஏன், ஏமாற்றத்துடன் கூடிய கோபம் அவனை ஆக்கிரமிக்க முயன்று கொண்டிருந்தது.
‘ஃபோன் எடுத்தவர் என்ன சத்தமே இல்ல. தூக்கமோ?’ மனதில் கடுகடுத்த மகிழுக்கு அவனுடன் கதைப்பதில் சற்றும் ஆர்வம் இருக்கவில்லை.
‘இவரிட பாட்டி தானே உன்னை ஓடுகாலிட மகள் என்றது. கிடைச்ச வாய்ப்ப விடாமல் நாலு வார்த்தை நறுக்கெண்டு சொல்லிரு மகிழ்!’ ஆர்ப்பரித்த மனத்தின் குரலை அடக்க மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டே, “ஹலோ…” என்றாள். கொஞ்சம் காட்டமாகவே கனடாவைச் சென்றடைந்தது, அந்த ஹலோ.
“மகிழ், நான் உதய்!”
“அது தெரியும், என்ன விஷயம் எண்டு சொல்லுங்க!”
“என்ன மகிழ், மாமரத்தில இருந்து குதிச்சு ஓடி வந்தீரா? அல்லது மாங்கா சாப்பிடுறதக் குழப்பிட்டனா? கோவமாக இருக்கிறீர் போல இருக்கே!” என்றவன் குரலில் சிநேகத் தன்மையுடனான கேலி!
‘ஓஹோ! அப்ப, நான் உம்மில கோவமா இருக்கிறது வேற தெரியுதா உமக்கு?’ கோபத்தில் சிலிர்த்துக் கொண்ட மனமோ, அவன் பாட்டிக்குப் பதிலாக இவனைத் தாக்கத் தயாரானது.
“ச்சே ச்சே …பளைய விட்டு அங்க இங்க போகாத பட்டிக்காடு நான்! அப்பிடியிருக்க, என்ர புகழ் நாடு விட்டு நாடு பரவியிருக்கே எண்டு ஒரே ஆச்சரியத்தில யோசிச்சுக்கொண்டு இருந்தனான். அந்த நேரம் பாத்து நீங்களும் எடுத்தீங்களா…” என்று, நீளமாக ஆரம்பித்தவளின் குரலின் கடுமையில், இதுவரை படுக்கையில் சாய்ந்திருந்து கதைத்த உதய் விருட்டென்று எழுந்தமர்ந்தான்.
“மகிழ்!” என்றவன் குரலில் அதிர்வு. “அண்டைக்கு நான்…உண்மையா ஒரு பேச்சுக்குச் சும்மா பகிடியாத்தான் அப்பிடிச் சொன்னனான். அதைப்போய் இன்னும் நினைவு வச்சிருக்கிறீரா என்ன? சொ…றி மகிழ்… உண்மையாவே பகிடிக்குச் சொன்னது அது. சொறி!” என்றவனின் தடுமாற்றம், அவள் கருத்தில் சிறிதும் பதியவில்லை.
“ஓம் ஓம், ஓடுகாலிட மகளைப் பாத்தால் நக்கலும் பகிடியும் விடத்தான் ஆசையா இருக்கும். அதைப்பற்றி நான் ஒண்ணும் நினைக்கேல்ல. உண்மையைச் சொன்னா ஆருக்கும் கோவம் வருமா என்ன? ஆனா, ஓடுகாலிட மகளைக் கலியாணம் செய்ய நினைச்சீங்க பாருங்க, அதத்தான் என்னால நம்பவே ஏலாமல் இருக்கு!” என்று, தீக்கங்குகளாக அவனைச் சுட்ட வார்த்தைகளில் விதிர் விதிர்த்துப் போனான், உதய்.
‘ஓடுகாலி! ஓடுகாலிட மகள்! அய்யோ பாட்டி! பாட்டி இவவுக்கும் எடுத்திருக்கிறாவோ! ச்சே! எப்பிடி அவ்வளவு கெதியா…’ அவனையும் அறியாது ஒரு பதற்றம் அவன் மனதில்!
‘ஆனா, மங்கை ஆன்ரி நல்லாத்தானே கதைச்சவர்!’ என்றெண்ணி, அந்த நடுச்சாமத்தில் தலை சுற்றிப் போனான் உதய்.
“என்ன எல்லாம் கதைக்கிறீர் மகிழ்! முதன் முதலா கதைக்கிறன் எண்டு எவ்வளவு ஆசையா கோல் பண்ணினனான் தெரியுமா உமக்கு? இப்பிடியா சண்டை போடுவீர்? பாவம் எல்லா இந்த உதய!” அவனையுமறியாது சமாதானம் செய்ய முயன்றான்.
ஆனால், அதைக் கேட்டவள் பொறுமையோ முற்றாகப் பறந்திருந்ததே. “ஹலோ…ஹலோ! என்னோட ஆசையாக் கதைக்க நீங்கள் ஆர்? இங்க பாருங்க, நான் ஓடுகாலிட மகளாக இருந்தாலும், கண்டவே நிண்டவேட ஆசைக்கு எல்லாம் கதைச்சுப் பழகிறேல்ல சரியோ!” என்று வெடுக்கென்று சொல்ல, கேட்டவனின் முகம் கன்றிச் சிறுத்துவிட்டது. அவன் மனத்தில் ஏதோ ஒருவகையில் அவள் பால் நெருக்கம் உருவாகியிருந்தது. பாட்டி தன்னிடம் அவளைப் பற்றி அந்தளவுக்குக் கேவலமாகக் கதைத்ததில், வீட்டினரோ, பேசி முற்றாக்கி கல்யாணத்திகதி குறித்த பின்னரும் திருமணத்தை இலகுவாக மறுக்கத் துணிந்ததில், வாழ்வு முழுமைக்கும் நான் கைகோர்த்துச் செல்லப் போகும் பெண் என்பதுடன் சேர்ந்து, ஒருவகைப் பாசமும் பரிவும் உருவாகியிருந்தது.
ஆனால், ‘அவள் கதைக்கிறது இதையெல்லாம் நேர்மறையாக மாற்ற முயல்கின்றதே! பொல்லாத வாய்க்காரியோ! பழகாத என்னோட இப்பிடியா சண்டை போடுவா? என்னை என்ன கேனயன் எண்டு நினைச்சிட்டாவோ?’ அவனுள் சுறுசுறுவென்று கோபம் துளிர்க்க, அதை இன்னமும் விசிற முயன்றது, மகிழின் பேச்சு.
“இங்க பாருங்க, முதன் முதல் உங்கட அப்பாதான் என்ர சாதகம் வாங்கிப் பார்த்திருக்கிறார். நாங்களா மாப்பிள்ளை கேட்டு ஒண்டும் உங்களிட்ட வரேல்ல சரியோ! சாதகம் பொருந்தி, உங்களுக்கும் சம்மதம் எண்ட பிறகுதான் என்னட்டக் கேட்டவே. மாப்பிள்ளை நீங்க எண்டோன்ன கொஞ்சமும் யோசியாமல் கட்ட ஏலாது எண்டனான் தெரியுமா?” மூச்சுவிட முயலாது தொடர்ந்தாள், மகிழ்.
“அத என்ர அம்மாதான் காதிலயே வாங்கேல்ல. மாமாட்ட விருப்பமில்லை எண்டு அடிச்சுச் சொல்ல என்னால முடியேல்ல. ஒண்டு ஒண்டையும் பாத்துச் செய்யிற மாமாவ எந்தவகையிலும் சிரமம்படுத்தவோ கவலைப்படுத்தவோ கூடாது எண்டுதான் இங்க அமைதியாக இருந்தனான். உங்களைப் பிடிச்சுப் போய் இல்ல.” என்றவள் அப்போதும் முடிக்கவில்லை.
“உங்களைப் போல இருக்கிற திமிர் பிடிச்ச மனிசரோட எப்பிடி என்ர காலத்தைத் தள்ளுறது எண்டு நானே குழம்பித் தவிச்சுக் கொண்டிருந்தன் தெரியுமா? அந்தநேரம் பார்த்து உங்கட பாட்டி எடுத்து இந்தக் கலியாணம் நடக்காது எண்டாவா! இப்ப எவ்வளவு மகிழ்ச்சியா இருக்குத் தெரியுமா? அப்பாடா எண்டு நிம்மதியாயிருக்கு! ஆனால், இந்த ஓடுகாலி மகளோட உங்களுக்கு ஆசையாகப் பேச என்ன இருக்கு எண்டுதான் விளங்கேல்ல.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில், “கூக்..கூக்..கூக்…” மறுபுறம் கைபேசி உயிரிழந்திருந்தது.
“ஓ! வச்சீட்டிரா? பரவாயில்ல, நான் சொன்னதக் கேட்டுட்டுத்தானே வச்சீர்!” வாய்விட்டே சொல்லிக் கொண்டவளுக்கு, காலையிலிருந்து மனதில் கனன்று கொண்டிருந்த சினம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
“என்ன நினைச்சுக் கொண்டினம்? எதைச் சொன்னா வருந்துவம் எண்டுறதத் தேடிப் பிடிச்சு, இடம் பார்த்து அடிச்சாச் சுருண்டு போற ஆள் நான் இல்லை. இந்தாளிடம் சொன்னத, இவரிட பாட்டிட்டச் சொல்லக் கிடைச்சிருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பன்.” என்று வெளிப்படையாகவே சொல்லிக்கொண்டு திரும்பியவள், கண்ணீரோடு அதிர்ந்து நின்ற தாயைக் கண்டு சிலையானாள்.

error: Alert: Content selection is disabled!!