நெஞ்சினில் நேச ராகமாய் 16 – 1

அத்தியாயம் 16
“அம்மா உன்ன ஏசேக்க எல்லாம் சரியான கோவம் வாறது மகிழ். அவரிட்டக் கதைச்சுப் பிரயோசனம் இல்ல எண்டுதான் பேசாமல் போறனான். இருந்தாலும், உன்னில நிறைய நம்பிக்கையிருந்தது. இதுவரைக்கும் உனக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருந்திருக்கிறன் எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். ஆனா இப்பப் பாத்தா…” என்று சொன்ன ராசனின் முகம் கோபத்தில் இறுகிப்போயிருந்தது.

மங்கை வீட்டின் வரவேற்பறைப் பகுதியில் ராசனும் கோகிலாவும் அமர்ந்திருந்தார்கள். கலங்கிச் சிவந்த விழிகள் மகள் மீது நிலைக்க, கதவோரமாக நின்றிருந்தார், மங்கை.
கைப்பேசியோடு பின்புறம் சென்ற மகிழ் ஒன்றும் இரகசியமாகக் கதைக்கவில்லை. அவளுள்ளே கோபம் கூட கூட, வார்த்தைகள் கடினத்தோடு சத்தமாகவே தான் வெளி வந்திருந்தன. அவள் கதைத்தவை மங்கையின் காதுகளையும் தீண்டியிருந்தது. அதில், ‘ஓடுகாலிட மகள்’ என்ற சொல் தந்த வேதனையை விட, உதய்யிடம் மகள் கதைத்த விதம் இருக்கே! அதிர்ந்து போனார், அவர்.
சிறு வயதிலிருந்தே மகளிடம் காணப்பட்ட நிமிர்வு மங்கையை மிகவுமே கவர்ந்தது. முகத்துக்கு நேராகவே கதைத்துவிடும் அவளின் சுபாவம், அவரை அப்பப்போ தர்மசங்கடங்களில் ஆழ்த்தியுள்ளதுதான். சற்றே விபரம் புரியத் தொடங்கியதிலிருந்து அதுபற்றி மகளோடு கதைத்தார். அது வேலை செய்துமிருந்தது. அந்தக் குணம் வெகுவாகக் குறைந்திருந்தது. தந்தையின் நிழலறியாது வளரும் மகள், எதையும் சமாளிக்கும் விதமாகச் சுயமாக நிற்பதில் அவருக்கு மிகவும் நிம்மதிதான். ஆனாலும், ‘வாயைக் கொடுத்து வம்பு தும்பை வாங்கிக் கொண்டு வந்திட்டால்?’ என்ற பயமும் இருக்கவே செய்தது.
அவள் தன் தாயோடு ஏட்டிக்குப்போட்டியாக மல்லுக்கு நிற்கையில், மிகவும் வேதனைப்படுவார், மங்கை. ஆனால், அந்தளவுக்கு அவளை வாயாடத் தூண்டும் வகையில் கதைப்பதே சரசு தான். அதுவே, ஒரு அளவுக்கு மேல் மகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை.ஆனால் இன்று? அதிகம் பழகியேயிராத, அதுவும் கணவனாகப் போகின்றவருடன் அவள் கதைத்த கதையை எவ்வகையில் நியாயப்படுத்துவது?
“அம்மா, நடந்தது என்ன எண்டு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் கதைச்சதுதான் சரி எண்டுவீங்க.” தாயின் கோபமுணர்ந்து, அவசரமாக ஆரம்பித்தாள் மகிழ்.
“சரவணன் அங்கிளிட அம்மா, மாமாவுக்கு எடுத்து நல்லா ஏசிப்போட்டாவாம். அதும் நேற்று நடுச்சாமத்தில! இந்தக் கலியாணம் நடக்காது எண்டவராம். அதோடு என்னை… என்னை ஓடு…” என்றதோடு நிறுத்திவிட்டாள். தாயின் முகம் கன்றுவதைப் பார்த்தவளால் தொடரமுடியவில்லை.
“ப்ச்…விடுங்கம்மா. ஆரோ எதுவோ சொன்னா அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலை இல்ல. ஆனா, கலியாணம் நடக்காது எண்ட பிறகு அந்தாளுக்கு என்னோட என்ன கதை வேண்டிக் கிடக்கு? அதான்…கொஞ்சமாக் குடுத்தனான்!” படபடவென்று சொல்லிவிட்டு நகர்ந்தவளை, வெறித்தபடி நின்றிருந்தார், மங்கை. சில நிமிடங்களில் தன்னை மீட்டுக் கொண்டவருள் உச்சமாய்க் குழப்பமே மிஞ்சியது. “உதய் என்னோட நல்ல வடிவா அன்பாத்தான் கதைச்சவர். நீ என்ன இப்பிடிச் சொல்லுற?” என்றுகொண்டு தமையனை அழைத்துவிட்டார்.
“ஓம்! சரவணிட அம்மா எடுத்தவர் தான். காலம அப்பம் கொண்டு வந்த நேரம் அதைபற்றிக் கதைச்சுக்கொண்டு இருந்தனாங்க, மகிழ் கேட்டிருக்கிறாள்.” என்றுவிட்டு, மருமகளைக் கண்டிப்போடு பார்த்தார்,கோகிலா.
“என்னதான் இருக்கட்டும், கலியாணம் பேசினது இந்தவீட்டுப் பெரியவே என்ன மகிழ்? அதில என்ன பிரச்சனைகள் வந்தாலும் எங்களுக்குப் பாக்கத் தெரியாதா? நீ ஏன் வீணா, அதுவும் அந்தத் தம்பியோட இப்பிடிக் கதைச்சனி?” மருமகளை, அவர் பங்கிற்குச் சாடினார்.
“உதய் நல்ல மரியாதையான பெடியன். சரவணனிட மூண்டு பிள்ளைகளுமே, பெரிய மனிசரை மதிச்சு நடக்கிறவே! நீ என்ன எண்டா கொஞ்சமும் மரியாதை இல்லாமல் உன்ர மூப்புக்குக் கதைச்சிருக்கிற. எவ்வளவு கோபம் வந்திருந்தா ஃபோன கட் பண்ணியிருப்பார், அந்தத் தம்பி!” மீண்டும் சீறினார் ராசன்.
‘பெர்ர்ர்ரிய பெரியவர், நான் மதிக்கேல்ல எண்டு கோபம் வந்திட்டாம். ஃபோனில சார்ஜ் போயிருக்கும். அதைப் போய்…’ மனத்தில் முணுமுணுத்துக் கொண்ட மகிழ், “ஐயோ மாமா, நீங்க காலம எவ்வளவு கவலைப்பட்டீங்க! அப்பிடி ஒரு கலியாணம் எனக்குத் தேவையா சொல்லுங்க? இப்பவே இப்பிடிச் சொல்லுறவே, நான் அங்க போன பிறகும் இதைச் சொல்லிக்காட்ட மாட்டினமா?” என்றவளுக்கோ, இப்போது துளியளவும் இக்கல்யாணத்தில் விருப்பமில்லை. அதை அவர்களுக்கு உணர்த்த முயன்றாள்.
“இந்த விசயத்தில அம்மம்மா சொல்லுறது தான் சரி. எனக்குக் கலியாணம் வேணாமெண்டு நான் சொல்லேல்ல மாமா. வெளிநாடு வேணாம். அதும் இந்த உதய் வேணவே வேணாம்.” என்றவளுக்கு, தொடர்ந்து கதைக்க முடியவில்லை. ஏனோ நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
தன்னை, தந்தையற்ற தன் நிலையை, இதுவரை ஒருபோதும் அவள் குறைவாக எண்ணிப்பார்க்க முயன்றதில்லை. அப்படியல்லாது, வருங்காலம் என்னைத் தாழ்த்திப் பதம் பார்க்கும் போலிருக்கே! அப்படியான இடத்தில் வாழும் வாழ்வொன்று தேவையா? அது சொர்க்கமேயாக இருந்தாலும்! நான் நானாக, என்னைப் பற்றி எந்த ஓளிவு மறைவுமின்றி வாழக்கூடிய வாழ்வில்தான் என்னால் நிலைத்திருக்க முடியும் என்றவகையில் நினைத்துக்கொண்டவள் விழிகளோ, துருத்திக்கொண்டு வந்தன. அக்கலக்கத்தை தன் உற்றவர்களிடம் சிறிதும் காட்டப் பிரியப்படாது, சட்டென்று அங்கிருந்து வெளியேறிவிட்டாள், மகிழ்.
அவள் செல்வதையே பார்த்திருந்த மங்கையால் தாள முடியாதிருந்தது. நான் என்றோ செய்தவை அல்லவா இத்தனைக்கும் காரணம் என்ற இயலாமையுடன் தமையனை ஏறிட்டார்.
“பச்…விடு மங்கை! பின்னேரமா நான் சரவணனோட கதைக்கிறன். உதயிடமும் தான்.” என்றவர், “மகிழ் இப்பச் சொன்னதத்தான் அம்மாவும் சொன்னவர். அவளுக்கு இங்க கிட்டயே இருக்கிறது போல சம்பந்தம் பாக்கட்டாம்.” தங்கையின் முகத்தில் பார்வை நிலைக்கச் சொன்னவர், மங்கையின் அதிர்வைக் கண்டுவிட்டுத்தொடர்ந்தார்.
“ஓம், மங்கை, எல்லாரும் நினைக்கிறது போல அம்மாக்கு அவளில வெறுப்பு எண்டு எல்லாம் இல்ல. அக்கறையில்லாமல் இப்பிடி எல்லாம் கதைக்கேலுமா சொல்லு?” என்றவர், சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தார்.
“இப்ப யோசிச்சுப் பாத்தா, அம்மா சொல்லுறதுதான் சரி போல இருக்கு இல்லையா? மகிழும் வெளிநாடு வேணாம் எண்டுறாள். உதய் பற்றியும்…ம்ம்ம்…விருப்பம் இல்ல எண்டிட்டாள்.” என்றார், யோசனையோடு.
“அது எல்லாம் ஒண்டும் இல்லையப்பா! முதல் சம்மதம் எண்டு சொல்லி அமைதியாத் தானே இருந்தவள். இப்பக் கோபத்தில இப்பிடி எல்லாம் கதைக்கிறாள். ஆருக்குமே சரவணன் அண்ணாட அம்மா கதைச்ச விதத்தில கோவம் வரத்தானே செய்யும்!” என்றார், கோகிலா.
“ம்ம்…என்னவோ புதுசு புதுசாப் பிரச்சனைகள் வருது! அலைஞ்சு திரியாம அருமையான சம்பந்தம் வந்திட்டு எண்டு எவ்வளவு நிம்மதியா இருந்தன். அது கடவுளுக்கே பொறுக்கேல்லப் போல! எதுக்கும் முதல் சரவணனோட கதைச்சீட்டு முடிவு செய்வம்.” என்று சொல்லி அவர்கள் கிளம்பிச் செல்ல, ‘திகதி குறிச்ச கலியாணம் நடக்காட்டி…’ என்ற எண்ணமே ஆட்டிப்பார்க்க, மங்கையோ இடிந்து போய் நின்றிருந்தார்.
இதே நேரம் கனடாவில்…
நடு இரவில் விழித்துக்கொண்ட ரத்னா, குளியலறைக்குச் செல்வதற்காக எழுந்து அறையை விட்டு வெளியில் வந்தவர், “என்ன, கீழ லைட் எரியுதா?” முணுமுணுத்துக்கொண்டே, அரை உறக்கத்தில் ஒட்டிக்கொண்டிருந்த இமைகளை முழுதாகத் திறந்தார்.
‘போட்டுட்டுப் படுத்திட்டனா? இல்லையே, உதய் கடைசியா டிவி பாத்துக்கொண்டிருந்தானே! ஓஃப் பண்ண மறந்து போனான் போல!’ என்று எண்ணிக்கொண்டே, மின்விளக்கை அணைக்கும் நோக்கில் கீழே இறங்கினார்.
அங்கோ, தொலைக்காட்சி ஊமையாக இயங்கிக் கொண்டிருக்க, வரவேற்பறைச் சோஃபாவில் கண்கள் மூடிச் சாய்ந்திருந்தான், உதய். கால்களை நீட்டி அமரும் வசதியுள்ள சோஃபாவில் மகனிருந்த கோலம் ரத்னாவில் எஞ்சியிருந்த உறக்கத்தை கலைத்து விட, அதிகாலை மூன்றெனக் காட்டிய கடிகாரத்தை பார்த்தவர், ‘ஒருநாளும் இவ்வளவு நேரம் முழிச்சிருக்க மாட்டானே!’ என்ற யோசனையோடு மகனை நெருங்கினார்.

error: Alert: Content selection is disabled!!