அத்தியாயம் 17
“வாறன் எண்டு ஒரு வார்த்தை சொல்லுங்க, கூட்டிக்கொண்டு வர ஏற்பாடு செய்யிறன்மா. என்ன வாறீங்களா?” விடிந்தால் கல்யாணம் என்றிருக்க, கெஞ்சலாகக் கேட்டார், ராசன்.
“கலியாணத்துக்குச்சரி அம்மா வருவா எண்டு அசையாத நம்பிக்கை இருந்தது அண்ணா. அவரோ, இதிலயும் தன்ர கோவத்தக் காட்டிட்டார்!” என வருந்தும் தங்கைக்காக, பிடிவாதம் பிடித்துக்கொண்டு, பளையில் தங்கி விட்ட தாயை மீண்டும் அழைத்துப் பார்த்தார்.
சரசுவின் சீறல் தான் காதில் மோதியது. அப்போதும் சளைக்கவில்லை, ராசன். “பச்! ஏனம்மா சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறீங்க? ஓம்தான்,ரெண்டு கிழமைகளுக்கு முதல் சரவணன் குடும்பம் கனடால இருந்து வந்த நேரம் ஏதோ முக்கிய வேலை இருக்கு எண்டுதான் உதய் வரேல்ல. அவ்வளவும் தான். நீங்க நினைக்கிறது போல எல்லாம் இல்லையம்மா. எப்பவோ நடந்ததுக்கு இப்ப வந்து பழிவாங்கப் போகினமா? உங்கட கற்பனைக்கு அளவு இல்ல.”
அன்று, கல்யாணம் முற்றாக்கியிருக்கியிருக்க மங்கை ஓடிப்போனதைச் சொல்லி, இப்போது உதய் வராமல் இருந்து பாடம் புகட்டப் போகிறார்கள் என்று அடித்துச் சொன்னார், சரசு. ராசனோ, அவருக்கு எடுத்துச்சொல்லிக் களைத்துப் போனார். மீண்டும் உதய் இன்னமும் வரவில்லை என்றதிலேயே நின்றார், சரசு. “அதைப் பாக்காமல் என்னை வா வா எண்டுறியே தம்பி!” கோபமாகவே சலித்துக்கொண்டார்.
“அம்மா அம்மா! உதய் எப்பிடியும் நாலு நாட்களுக்கு முதல்சரி வந்திரலாம் எண்டுதான் இருந்தவர். கடைசி நேரத்தில, உங்களப் போலவே முரண்டு பிடிச்சுக்கொண்டு லண்டனில இருக்கிற அவேட பாட்டியைக் கூட்டிக்கொண்டு வர அங்க போய்ட்டார். இண்டு இரவு வருகினம்.” அதைக் கேட்டு மனநிம்மதியடைந்த சரசு, அந்தக் கிழவியோடு என்னை ஒப்பிடுவியோ என்று தொடங்கிவிட்டார். அதிலும் முரண்டு பிடிப்பதாக வேறு சொல்லியாச்சே.
“நீங்க பிடிக்கிறது முரண்டு இல்லையா என்ன? அதும் இத்தின வருசங்களாக!” என்று ராசன் சொல்ல, சரசுவுக்குச் சுருக்கென்று குத்திவிட்டது. அவருக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்தக் குடும்பத்தில் முழிப்பார்? அதுவும் அந்த இலண்டன் கிழவி நிற்க வைத்துக் கேள்வி கேட்டால், அவர் நாண்டு கொண்டுதான் சாக வேண்டும். மகனிடம் புலம்பினார்.
“ஓ அம்மா! அதெல்லாம் எப்பவோ நடந்தது. ஆருமே இங்க கதைக்காயினம். அதை மறந்துதானே ரெண்டு குடும்பங்களும் கலியாணத்தில சேரப்போறம். நீங்க தான் உங்கட ஒரே பேத்தி கலியாணத்துக்கு வர ஏலாது எண்டுகொண்டு நிக்கிறீங்க.” அலுத்துக்கொண்டார்.
இறுதியில், “சரி விடுங்க! இனி நான் சொல்ல ஒண்டுமில்ல. நாங்க வருமட்டும் கவனமாக இருங்க. வைக்கிறன்.” அவர் அழைப்பைத் துண்டிக்க, மாடிக்கு வந்த அவரின் ஒரே மகன் சந்துருவின் மனைவி,
“மாமா, அப்பா அம்மா வந்திருக்கினம். இவர் உங்களக் கூப்பிடுறார்.” என, ராசனை அழைத்துச் சென்றாள்.
கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேசிலிருந்த இரட்டை மாடி வீட்டின் பால்கனியில் நின்று, தூரத்தில் அமைதியாக மின்னும் கடலையே வெறித்துக்கொண்டு நின்றாள், மகிழ். பக்கத்து அறையிலிருந்து, ராசன் தாயோடு கதைத்தவை ஒவ்வொன்றும் அவள் செவிகளுள் அனுமதியில்லாது நுழைந்திருந்தன.
பரந்து விரிந்திரிந்த கடலுள் மூழ்கி அன்றைய நாளின் களைப்பைப் போக்கும் எண்ணத்தில் ஆதவன் வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்க, ‘இண்டையான் பொழுது போய் நாளைக்கு விடிஞ்சா, மகிழினி உதயகீதன்!’ மனம் முணுமுணுக்க, அவள் வதனமோ கல்யாணப் பெண்ணுக்கான அம்சங்கள் எதையும் பிரதிபலிக்காது அசாத்திய அமைதியைப் பூசியிருந்தது. மனமோ, அதற்கு நேர்மாறாக மிகமிகக் கலைந்து கிடந்தது.
அவள் பெயருக்குப் பின்னால் இருக்கும் தந்தை என்ற அடையாளத்துக்குரியவரை யாரென்றே இதுவரை அறியவில்லை என்ற எண்ணமோட, கசந்த முறுவலொன்று அவளிதழை அலங்கரித்து மறைந்தது. அதேபோல், உருவத்தை அறிந்திருந்தாலும், இனிமேல் உன் வாழ்க்கைத்துணை இவர்தான் என்று பெரியவர்கள் கைகாட்டியவனைப் பற்றியும் அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. எல்லாம் சேர்ந்து உள்ளம் சோர்ந்து சுருள நின்றாள், மகிழ்.
கிட்டத்தட்ட ஆறு கிழமைகளுக்கு முன்னர் ஆவலாக அழைத்து, “மகிழ், நான் உதய்!” என்றவனுடன், இனிமேல் கல்யாணம் நடக்காதென நினைத்து, கிடைத்த சந்தர்ப்பத்தில் நன்றாக ஏசி விடுவோம் என்றவகையில் காட்டமாகவே கதைத்திருந்தாள்.
“அண்டைக்கு நான் இருந்த மனநிலையில சிரிச்சுக் கதைக்க, அவரோட கொஞ்சிக் குழைய நான் ஒரு அரை விசரா எல்லா இருந்திருக்கோணும்!” என்று, முணுமுணுத்துக் கொண்டவளால், அன்றைய தன் கோபப் பேச்சில் சிறிதும் குற்றம் காணமுடியவில்லை. ஆனால், அதன் பின்னர் நடந்தது தான் என்ன? ‘அப்பாடா! கனடா பயணம் கட்! உர்ரென்ற கனடாக் குரங்கிட்ட இருந்து தப்பிச்சிட்டம்!’ என, இவள் நிம்மதி மூச்சு விட்டால், அதெல்லாம் வெறும் கனா என்றாகிப் போனதே!
தாய் பேசியவற்றுக்கு நண்பனைச் சமாதானம் செய்வது சரவணனுக்கு எப்படிப் பெரியவிடயமாக இருக்கவில்லையோ, அப்படியே, மங்கை, கோகிலா அனைவரும் அச்சம்பவத்தை மறந்து, “திகதி குறிச்ச கலியாணம் மட்டும் நின்றிருந்தால், நாலுபேர் நாலுவிதமாக் கதைக்கிற மாதிரியா இருந்திருக்கும். அப்பிடி ஆகவிடாமல் தாயைச் சாமாளித்த சரவணன் அண்ணாவுக்கு எப்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறம்!” என, ராசனுடன் சேர்ந்து சரவணனைக் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். அவரும் தான், இதோ விடிந்தால் கல்யாணம் என்றவகையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டாரே!
நண்பனின் செயலில் அப்படியே நெக்குருகிப் போனார், ராசன். தம் வீட்டுப் பிள்ளையின் வாழ்வு, நண்பன் வீட்டில் எவ்வித பாதிப்புமின்றியிருக்கும் என்பதை அவர்கள் முழுமையாக நம்பினர். போதாக்குறைக்கு, உதய் ராசனோடும் எடுத்துக் கதைத்திருந்தான்.
“மகிழ் கதைச்சதை எல்லாம் நான் பெரிசா எடுக்கேல்ல அங்கிள். நீங்கள் அதை நினைச்சுக் கவலைப்பட்டதா அப்பா சொன்னவர், அதுக்கு அவசியமே இல்லை. அத மறந்திருங்க!” என்று, அவன் சொன்னதில் பூரித்தாலும், “இனிமேல் சரி நாக்கை அடக்கிக் கதை என்ன மகிழ்! அவே பெரிய குடும்பம்! ஒருவருக்கு ஒருவர் விட்டுக்குடுத்து ஒற்றுமையா இருக்கினம். உன்னால அங்க ஒரு பிரச்சனையும் வந்திரக் கூடாது. அதுக்குச் சந்தர்ப்பம் குடுத்திராத!” ராசன் கண்டிக்கவும் மறக்கவில்லை.
“அதுவும் உதய், ஆம்பளைப்பிள்ளைகளோடு வளர்ந்தவர். சிலநேரங்களில உன்னை, உன்ர விருப்பு வெறுப்பு, கோவ தாபங்களைச் சொல்லித்தான் விளங்க வைக்க வேண்டியிருக்கும். பாத்துச் சமயோசிதமா நடந்து கொள்ளு!” என்றுமிருந்தார். இதுவரை, தந்தையாக மட்டுமில்லை, தாயாகவும் உன்னைப் பார்த்துக்கொண்டேன் என்பதை மருமகளுக்கு உணர்த்தி நின்றார், ராசன்.
இனி மறுப்பதில் பயனில்லையென்று தெரிந்ததும் அமைதியாகி விட்டாள், மகிழ். ஆனால், அவளையுமறியாது, இதுவரை காலமும் இல்லாதவகையில், ஒருவகைத் தாழ்வுமனப்பான்மை அவளைக் கவ்விச் செல்ல முயன்று கொண்டிருந்தது.
இத்தனைநாள் போல், அங்கே அவர்கள் மத்தியில் என்னால் நானாக வாழ முடியுமா என்ற, கனமான கேள்வியோடு நிச்சயமில்லாத தன்மையில் உழன்று தத்தளித்தாள். அந்தளவுக்கு, ‘ஓடுகாலியின் மகள்’ என்ற சொல், மாற்றவே முடியாதது என்றறிந்திருந்தும், அவள் குணத்திற்கு அசட்டையாக ஊதிச் செல்ல முடியாமல் மனதில் பதிந்து அரித்துக் கொண்டிருந்தது.
மறுபுறமாக, இனி அவன்தான் என் கணவன் என்று உறுதியான கணத்திலிருந்து அவன் மீண்டும் அழைப்பானென்று தன்னையும் மீறி எதிர்பார்த்திருந்தாள். ஆனால், இதோ கடந்து சென்ற நிமிடம் வரை, அவளுக்குக் கிட்டியதென்னவோ ஏமாற்றமே.
‘அண்டைக்கு, அவரக் கட்ட விருப்பம் இல்லை எண்டு வெளிப்படையாகவே சொல்லிட்டனே!’ என்று, இப்போது நினைத்துத் தவித்தாலும், ‘அதைப் பற்றி ஒருவார்த்தை எடுத்துக் கேட்க நினைக்கேல்லையே! உனக்குப் பிடிக்குதோ இல்லையோ இந்தக் கலியாணம் நடந்தே தீரும் எண்ட மாதிரியல்லா சத்தமே போடாமல் இருக்கிறார்.’ என்ற பொருமலும் அவளுள் நிறைந்திருந்தது.
“அம்மாவச் சமாதானம் செய்தது நான் இல்ல ராசன், உதய் தான் பார்த்துக்கொண்டான்.” என்று, சரவணன் சொன்னதையும் இவள் கேட்டிருந்தாள்.
‘அப்பிடிச் சமாதானம் செய்து பாடுபட்டு, என்னைக் கலியாணம் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?’ என்ற கேள்வி மனதுள் எழுந்து, முன்னரை விட இப்போ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல தவித்துப் போனாள், அவள்.
‘ஒருவேளை பாட்டி சொல்லுறது போல, ஒருகாலத்தில அம்மா செய்த செயலில உள்ள கோவத்தை மனசில வச்சுத்தான் என்னைக் கலியாணம் செய்ய நினைக்கிறாரோ! அல்லது அண்டைக்கு நான் கதைச்சதுக்குப் பழிவாங்கவோ!’ இப்படியும் கூட நடக்குமா என்ற வியப்புடன், அப்பப்போ வாசிக்கும் கதைப்புத்தகங்களில் வரும் பழிவாங்கும் படலங்கள் சிலபல அவள் மனக்கண்ணில் வலம் வந்தன.
தன்னையும், தன் நினைவுகள் செல்லும் விதத்தையும் நினைத்து தன்னுள்ளே நகைப்பெழுந்தாலும், இவற்றிலிருந்து மீண்டு கல்யாணப்பெண்ணாக மகிழ்வுடன் வலம் வர அவளால் முடியவில்லை. தோழிகளின் கேலிகளும் கிண்டல்களும் கூட மாற்ற முடியாது பின்வாங்குமளவுக்குத் தடுமாறி நின்றாள், மகிழ்.
சதா யோசனையுடன் இருக்கும் மகளின் மனதறிந்து தைரியம் சொல்லத் தயங்கவில்லை மங்கை. “இதென்ன பெரிய விசயம் மகிழ்! பார், ஊருலகத்தில எவ்வளவு பேர் முன்பின் தெரியாதவேயக் கட்டிச் சந்தோசமா வாழுகினம். எல்லாரும் பிரச்சனைப்பட்டு முறுக்கிக்கொண்டா வருகினம். இது அப்பிடியும் இல்லையம்மா, சரவணன் அண்ணா, உன்ர மாமாட நெருங்கிய நண்பர்.” என்ற தாயை, ‘இதைச் சொல்லி சொல்லியே இதுவரை வந்தாயிற்று! திரும்பவுமா?’ என்ற பாவனையில் ஏறிட்டாள், மகள்.
“உன்ர மாமாவே அங்க உன்னோட இருக்கிறார் எண்டு நீ நினைச்சுக் கொள்ளுற அளவுக்கு, அவர் உன்னைப் பத்திரமாப் பாத்துக் கொள்ளுவார்!” மகளின் பாவனைகளைப் பாராது தைரியம் சொன்ன மங்கைக்கும், ‘திரும்ப ஒருக்காச் சரி உதய் எடுக்கேல்லையே! மன வருத்தம் ஏதும் இருக்குமோ?’ என்ற கவலை மனதிலிருந்து அரித்துக் கொண்டிருந்தாலும், “இன்னும் கொஞ்ச நாட்கள்தானே மங்கை. அவன் இலங்கை வர இருக்கிறதால வேலையில பிஸி!” என்று, அலைபேசியில் உரையாடுகையில் ரத்னா சொன்னதில் சமாதானம் அடைந்து கொண்டார்.
“நீ முட்டாளால் இல்லை மகிழ். சமய சந்தர்ப்பம் பாத்து நடந்துகொள்ளு. அதும் சரவணன் அண்ணாட அம்மாவோட மட்டும் தேவையில்லாமல் கதைக்காமல் அமைதியாவே போயிறு!” மங்கை திரும்ப திரும்பச் சொல்லி, மகிழைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
‘எல்லாரும் ஈஸியா சொல்லீருவினம் . புத்தி சொல்லுறது, அறிவுரை சொல்லுறது போல இலகுவான விசயம் வேற ஒண்டும் இல்ல. செய்து பாக்கேக்க எல்லா அதிண்ட சிரமம் தெரியும். கனக்க நேரங்களில புத்தி சொல்லுற ஆக்களாலேயே தாங்க சொல்லூறதப் பின்பற்ற ஏலுறதில்ல!’ பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, மருமகளின் தோள் தட்டி அழைத்தார்,கோகிலா.
“என்னம்மா, இன்னும் அதையும் இதையும் நினைச்சுக் குழம்பிக் கொண்டிருக்கிறியா என்ன? இங்க பார், விடிஞ்சா கலியாணம். ஏதோ கட்டாயக் கலியாணம் செய்யப் போற மாதிரி முகத்தை உர்ரெண்டு வச்சிராமல் சந்தோசமாக இரு! எல்லாமே நல்லபடியாக நடக்கும். உன்னைச் சுற்றி நாங்க இவ்வளவு பேர் இருக்கிறம் இல்லையா!” என்றவாறே, இலேசான நீர்த்திரையிட்ட விழிகளை, வரவழைத்த புன்னகையுடன் மறைக்க முயன்ற மருமகளை அணைத்துக் கொண்டார்.
“சந்துருட மாமா மாமியோட அவேட சொந்தக்காரர்கள் சிலர் வந்திருக்கினம்.” என்றதும், நிமிர்ந்த மருமகளை கனிவாக நோக்கி, “இங்க பார் மகிழ், ரெண்டு வருசத்துக்கு முதல் பளைக்கு வந்த நேரம் உன்னைப் பாத்திருக்கிறார் எண்டு சொல்லி, கேட்டோன்ன வலு சந்தோசமாச் சம்மதம் சொன்னாராம் உதய். அவேட அம்மாதான் சொன்னவர். அதோட, என்ர மகனைக் கலியாணம் செய்ய மகிழ் குடுத்து வச்சிருக்கோணும் எண்டவர்.” என்று சொல்ல, கேட்ட மகிழோ, தன் பார்வையை மீண்டும் கடலை நோக்கித் திருப்பிவிட்டாள்.
“அதுக்கு நான் என்ன சொன்னன் தெரியுமா?” கேட்டுக்கொண்டே அவள் மோவாயைத் தன்பக்கமாகத் திருப்பினார், கோகிலா. “என்ர மருமகளக் கட்ட உங்கட மகனும் குடுத்து வச்சிருக்கோணும் எண்டனான். என்ன, சரி தானே?” என்றவர், மென்முறுவலில் நெளிந்த அவள் முகத்தைப் பாசமாக வருடி, “போ… போய் முகத்தை அலம்பிட்டுக் கீழ வா…” என்று கொண்டே நகர்ந்தார்.
‘அப்படியெண்டா என்னை விரும்பியா கலியாணம் செய்ய நினைச்சவர்? அப்ப, நான் அண்டைக்கு அப்பிடிக் கதைச்சோன்ன , அவர்ட மனசுக்க எப்பிடி இருந்திருக்கும்?’ அக்கணம், அவள் மனத்தில், இக்கேள்வியும் சஞ்சலமும் சட்டென்று புகுந்து கொண்டது.

