அத்தியாயம் 18
“இன்னும் வெளிக்கிடேல்லையா? இவ்வளவு நேரமா என்னதான் செய்யினமோ? இதை அதைப் பூசாமலே அவள் வடிவா இருப்பாள். சொன்னாக் கேக்கிறதில்ல.” என்று அலுத்துக்கொண்டே, மணமகள் தயாராகிக்கொண்டிருந்த அறையினுள் எட்டிப்பார்த்தார், ராசன். அவர் குரலில் திரும்பிய கோகிலா முறைப்பாடு பார்த்தார்.
“கொஞ்சம் இவளோட நில்லுங்கம்மா, இந்தா வாறன்.” என்று, அருகில் நின்ற தன் மருமகளிடம் கூறிவிட்டு வந்தவர், “ஏனப்பா இவ்வளவு அவசரப்படுறீங்க? இன்னும் நேரமிருக்கு. மண்டப அறையில போயிருக்கிறதுக்குப் பதிலா, பொறுமையா வெளிக்கிடலாம் தானே? எல்லாம் சரி, கொஞ்சம் ஃபோட்டோஸ் எடுத்திட்டு வெளிக்கிடுவம்.” என்றவாறே, கணவனைப் பிடித்து மாடிப்படி வழியாகத் திருப்பிவிட்டவர், பக்கத்தறையிலிருந்து வந்த மங்கையைப் பார்த்ததும் அசைவற்று நின்றுவிட்டார். தங்கையைக் கண்ட ராசனும் அப்படியே வேரோடி நின்றுவிட்டார்.
பல வருடங்களுக்கு முன், அழகிய இளம் மலராக விசேசங்களுக்குச் செல்வதைக் கண்டபின், இன்றுதான் இக்கோலத்தில் காண்கின்றார்கள். இத்தனை வருடங்களில், எவ்வளவோ வற்புறுத்தியும், நெருங்கிய உறவினர் வீட்டு விசேசங்களைக் கூட நாசுக்காகத் தவிர்த்துவிடுவார், மங்கை. அப்படியிருந்தவர், இன்று பட்டுச்சேலையில் தயாராகி நிற்கிறார்.
முதலில், “எனக்கு என்னத்துக்கு இப்பிடி விலையான சீலை? முதல், இதில எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை, வற்புறுத்தாத பிள்ள!” என, மகளிடம் எவ்வளவோ மறுத்துப் பார்த்தார் தான். மகிழ் அதற்கெல்லாம் செவிமடுத்தாளா என்ன? “நீங்க சொல்லுற எல்லாத்துக்கும் அமைதியா ஓமெண்டு நடக்கிறன் எல்லா அம்மா? இந்த மாப்பிள்ளையும் கனடாவும் தான் எனக்குப் பிடிக்கேல்ல.! நான் சொன்னத ஆராவது கேட்டனீங்களா என்ன?” என்றவள், தாயின் முறைப்பைக் கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.
“நான் ஆசையாக் கேக்கிறது இது ஒன்றுதானே? என்ர அம்மாவை, என்ர கலியாணத்தில எனக்கு விருப்பமான முறையில பாக்க ஆசைப்படுறது பிழையா என்ன?” என்றவள், தாயின் பதிலை அறியக் காத்திருக்கவில்லை. வாடாமல்லி நிறத்தில் உடலெல்லாம் தங்கப் பொட்டுக்கள் தெளித்திருக்க, அகலத் தங்கக்கரையோடு கூடிய அழகிய பட்டுச்சேலையை தாய்க்காக வாங்கியிருந்தாள்.
அப்பட்டுடுத்தி, மிதமான தங்க நகைகளுடன், அடர்ந்த தலைமயிரை சாதாரண கொண்டையிட்டுத் தயாராகியிருந்தாலும், இவ்வளவு பெரிய மகளின் தாயென எண்ண முடியாத இளமையில், மகாலட்சுமி போல் நின்றிருந்தார், மங்கை.
கலங்கிய விழிகளை, மறுபுறம் திருப்பித் துடைத்துக் கொண்டார் ராசன். ‘அவேக்கு உன்ர சொத்துத்தான் வேணும் எண்டா தாராளமாத் தாறன். உன்ர புருசனோட சந்தோசமா வாழுற வழியப்பார் எண்டு எத்தினை தடவைகள் கேட்டிருப்பன்?’ மனத்தில் வலியோடு முணுமுணுத்துக்கொண்டார், ராசன்.
இளம்தங்கை, கணவனைப் பிரிந்துவந்து அதுவும் கைக்குழந்தையோடு கண்முன்னாலிருக்க, செய்வதறியாது கை கட்டிக்கொண்டு பார்த்திருக்க வைத்தாளே என்று, இத்தனை வருடங்களுக்குப் பின்னும் அவர் மனம் குமுறியது. அவன் ஆனந்தும், ‘சொல்லாமல் கொள்ளாமல் போயிட்டியோ போய்த் துலை’ என்று விட்டுவிடவில்லையே! என்னதான் அடங்காத ஆத்திரம் அவன் மீதிருந்தாலும், அந்தக் கொந்தளிப்பை எல்லாம் அவன் செய்கைகள் அடக்கிவிட்டதே!
“நான், பெரிய பிழை செய்திட்டன், மன்னிச்சுக்கொள்ளு மங்கை. தயவு செய்து வீட்டுக்கு வா!” என, எவ்வளவு கெஞ்சினான்.
“உன்ர சொத்தில இருந்து ஒத்தசதம் எனக்கு வேணாம். நீ மட்டும் வந்திரு மங்கை!” என்று கெஞ்சியவன் மீது, இம்மியும் இளக்கம் காட்ட மறுத்து விட்டாள், மங்கை.
“என்ர குழந்தைய வாறவன் போறவன் எண்டு கண்ட சனத்துக்கும் காட்ட மாட்டன் அண்ணா. உரிமை கொண்டாடிக் கொண்டு இங்க வாற வேலையை வச்சுக் கொள்ள வேணாம் எண்டு சொல்லுங்க!” என்றவளின் மறுப்பைக் காதில் வாங்காது, “பிள்ளைய ஒரே ஒருக்காப் பாத்திட்டுப் போயிறுரன் மங்கை. தயவு செய்து காட்டன்.” என்று கெஞ்சியவன், அவமானப்பட்டுக் கூனிக் குறுகி நின்றானே!
“உண்மையான அன்பு எண்டு நினைச்சு ஏமாந்தது நானா மட்டும் இருக்கட்டும். என்ர வயித்தில பிறந்தவளுக்கு அந்த நிலை ஒருக்காலும் வரவே வேணாம்.” என்று குமுறினாள், மங்கை. “நான் இங்க இருக்கிறது உங்களுக்குச் சுமை எண்டா சொல்லுங்க அண்ணா, எங்கயாவது கண்காணாமப் போயிறுரன். இப்பிடி அடிக்கடி வாசலில வந்து நிண்டான் எண்டா, ஒருநாள் இல்லை ஒருநாள் அதுதான் நடக்கும் எண்டதையும் சொல்லி விடுங்க!” என்று, கொஞ்சமும் இளக்கமின்றிச் சொல்லி, அவன் வருவதை முற்றாக நிறுத்த வைத்தாளே!
எவ்வளவு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்க வேண்டியவள்! தன் விருப்பத்துக்கு எல்லாத்தையும் செய்து தனிமரமா நிக்கிறாள். அதில் கருகிச் சாம்பலானது இவள் இளமையும் வாழ்க்கையும் மட்டுமா? ஏங்கி மறுகியது இவள் மட்டுமா? இல்லையே! தந்தையுறவு என்றால் என்னவென்று அறியாது வளர்ந்து, இன்று, திருமணம் முடிக்கத் தயாராகி நிற்கிறாளே இவள் மகள், அவள் இழந்தவையும் உண்டல்லவா?
‘என்னதான் கண்ணுக்குள்ள வச்சு கரிசனையாப் பாத்துக்கொண்டாலும் நான் அவள்ட அப்பா இல்லையே! மாமா தானே!’ என்று குமுறிய உள்ளத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டார், ராசன்.
கோகிலாவும் தன் கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டே, கணவன் மனமறிந்து ஆதரவாக அவர் கரத்தைப் பற்றிக் கொண்டவர், “என்னப்பா இது! சந்தோசமான நேரத்தில் கலங்கிக் கொண்டு. அங்க பாருங்க, அவளும் கண்கலங்கி நிக்கிறாள்!” தாழ்ந்த குரலில் சொன்னவர், “மங்கை, இவருக்கு ஒரு கப் கோப்பி போட்டுக் குடுக்கிறியா? மகிழ் வெளிக்கிட்டோன்னா சொல்லுறன்.” என்றவாறே, மகிழின் அறைக்குள் நுழைய முற்படுகையில், “ஹாய் அன்ரி , மகிழ் இன்னும் வெளிக்கிடேல்லையா?” என்று கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தார்கள், அவளின் தோழிகள் உஷாவும் ஷீலாவும்.
“வாங்கம்மா! ஆரோட வந்தனீங்க? இந்தா வெளிக்கிட்டு முடியுது.” வரவேற்றார், மங்கை.
“அப்பாவோட வந்தனாங்க அன்ரி. அப்பா கீழே இருக்கிறார்!” என்று உஷா சொன்னதும், “நான் போய்ப் பாக்கிறன் மங்கை, ரெண்டு பேருக்குமா கோப்பி போட்டுக்கொண்டு வாம்மா!” என்று ராசன் நகர, “உள்ள போய் உங்கட ஃப்ரண்டைப் பாருங்க. இன்னும் வரவில்லையா எண்டு கொண்டு இருந்தவள்.” என்றவாறே, மங்கையும் தமையனைத் தொடர்ந்து கீழே சென்றார்.
மணமகள் தயாரானதும், பூசையறையில் விளக்கேற்றி வணங்கினாள். அடுத்து, தாய், மாமா, மாமியை வணங்கியெழ மூவருமே கண்ணீரோடு ஆசீர்வாதம் செய்தனர்.
திருமணம் முடித்து ஒரு வருடமே முடிந்திருந்த சந்துருவும் அவன் மனைவியும் கட்டியணைத்து மனதார வாழ்த்தினர்.
‘அம்மாவும் இருந்திருந்தா!’ என்று, மங்கையால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால், அதையெல்லாம் நினைத்துக்கொண்டிருக்க நேரமின்றி மண்டபத்தை நோக்கிப் புறப்பட்டனர்.
மணமகன் அழைத்துவரப்பட்டு ஆரம்பச் சடங்குகள் முடிய, “மணமகளை கூட்டிக்கொண்டு வாங்கோ!” என்றதும், இவளை அழைத்துச் சென்றனர். மணமேடையை நோக்கிச் செல்கையில், இவள் விழிகள் அவனைப் பார்க்க விரும்பினாலும் ஏதோ ஒருவகை உணர்வு நிமிர விடாது இழுத்துப் பிடித்தது. இதுவரை காலமும் அவளறியாத தயக்கம், வெட்கம், ஒருவித பயமென, புதுவகை உணர்வுகள் அவளை உரசிச் செல்ல உவகை கொண்டது.
‘சந்தர்ப்பம் கிடைச்சோன்ன, முதல் வேலையா அண்டைக்கு அப்பிடிக் கதைச்சதுக்கு மன்னிப்புக் கேக்கோணும். அவரிட பாட்டி கதைச்சதுக்கு இவர் என்ன செய்வார்? நான் அவரோட கோவப்பட்டிருக்கவே கூடாது. எவ்வளவு கோபம் வந்திருக்கும்!’ தன்னைப் பிடித்துப் போய்த்தான் கல்யாணத்திற்குச் சம்மதித்தான் என்ற எண்ணம் தோன்றியதிலிருந்து, இவள் மனதில் இவ்வெண்ணம் தான்!
மணமேடையில் அமர்ந்திருந்தவனோ, இருவேறுபட்ட மனநிலைகளில் உழன்று கொண்டிருந்தான். அவள் மீதிருந்த நேசம் ஒருபுறம் ஒதுங்கிக் கிடக்க, அதை மிஞ்சும் வகையில், அன்று அவள் பேசிய பேச்சை மறக்கமுடியாத ஆத்திரம் அடங்காதிருந்தது.
‘மாப்பிள்ளை நான் எண்டோன்ன மாட்டன் எண்டிட்டு, பிறகு எல்லாரும் சொல்லினம் எண்டதுக்காக கடனே எண்டு தலையாட்டி, கலியாணம் நடவாது எண்டு பாட்டி சொன்னோன்ன நிம்மதியா இருக்கிறியோ? அதையும் தான் பார்த்திருவமே! இந்தக் கலியாணத்தை நடத்திக் காட்டுறன் பார்!’ என்ற ஆவேசமே அவனுள் வந்திருந்தது. எவ்விதத்திலும் இக்கல்யாணம் தடைப்படாத வகையில் பார்த்துப் பார்த்து செயல்பட்டிருந்தான் உதய்.
அவள் மீது நேசம் கொண்ட மனமோ, “சரி விடு உதய், இன்னொருக்கா எடுத்துக் கதைச்சுப் பாரன்.” எனச் சுற்றிச் சுழன்று அரித்தபோதும், கோபம் கொண்ட நெஞ்சமோ, அதற்குச் சற்றும் செவி சாய்க்கவில்லை. “பச்…அவள் ஒண்டும் நான் எடுப்பன் எண்டு பாத்துக்கொண்டு இருக்க மாட்டாள், திமிர் பிடிச்சவள்! திரும்ப நான் எடுக்க மனத்தில இருக்கிற இளக்காரம் கூடும்.” ஆத்திரமிகுதியால் முறுக்கிக்கொண்டான்.

