நெஞ்சினில் நேச ராகமாய் 19 – 2

அழுகையை அடக்க பெரும் பாடுபட்டுக்கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்து நின்ற உதய், மெல்ல அவள் கரத்தைப் பற்றிக்கொண்டான். இதைக் கண்டதும் உள்ளிருந்த நேசம் கொண்ட அவனிதயம், அவள் மீது வளர்ந்திருந்த கோபத்தை ஆரத்தழுவி, அநாயசமாக முத்தங்களை வழங்கி மகிழ்ந்தது. இவள் உன் மனைவியடா, அதை ஒருக்காலும் மறந்திராத! முறைப்போ சிடுசிடுப்போ எதுவாக இருந்தாலும் உன்னோடு வைத்துக் கொள். மற்றவர்கள் முன் அவளைக் கலங்கவிடாதே! அதைமட்டும் நான் பொறுத்துக்கொள்ளவே மாட்டேன் என்று, கடுமையாகக் கட்டளை இட்டது.
அவன் வந்தது தெரிந்தும் அவனைப் பாராது நின்றவள், அவன் கரம் பற்றியதும் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்க்க, கனிவுடன் ஆறுதல் சொல்லி நின்றன அவன் விழிகள். “இதென்னதுக்கு இப்ப அழுகை மகிழ்? இந்தா பக்கத்தில இருக்கப் போகினம். விடிஞ்சோன்ன போனாச் சரி!” சற்றுமுன் அவள் சொன்னதையே சொன்னதும், மீண்டும் அவள் பார்வை அவன் விழிகளில் நிலைத்தது.
மருமகன் சொன்னதைக் கேட்ட மங்கையும் கோகிலாவும் அப்படியே உள்ளத்தில் நிறைந்து போனார்கள். மாப்பிள்ளை, மகிழைக் கலங்காது பார்த்துக் கொள்வார் என, ஏற்கனவே இருந்த நம்பிக்கை, இப்போது அவர்களுள் வலுவானது.
******
“அப்பாடா! ஒருவழியா எல்லாம் கழட்டியாச்சு! காலம முழுகினீர் தானே மகிழ்? ஸ்ப்ரே அடிச்சதில தலைமயிர் ஒருமாதிரிக் கிடைக்குத்தான். எண்டாலும் மாமி முழுக வேணாம் எண்டவா. குளிக்கிறது எண்டா குளியும்.” என்று சொல்லிக்கொண்டே, மகிழின் திருமண அலங்காரங்களையும் ஆபரணங்களையும் அப்புறப்படுத்துவதற்கு உதவி செய்திருந்தாள் வசந்தனின் மனைவி, கௌசி.
கனடாவிலிருந்து வந்து நின்ற இவ்விரு கிழமைகளில், நெருக்கமாகப் பழகவில்லையென்றாலும், உதய்யின் மூத்த அண்ணனின் மனைவிமார் சுமி, கௌசியுடன் ஓரளவுக்கு அறிமுகமாகியிருந்தாள், இவள். அவள் சுபாவத்துக்கு மிகவும் இலகுவாக மற்றவர்களுடன் பழகக் கூடியவள்தான். ஏனோ, உதய் வீட்டினருடன் பழகுவதில் ஒரு தயக்கம்! அன்று, அவன் பாட்டி அப்படியொரு வார்த்தையைப் பிரயோகிக்காது இருந்திருந்தால், நிச்சயம் சுமூகமாகப் பழகியிருப்பாள்.
அவள் தாயுமே முழுகாதே என்றிருந்தார். அவரிடம் முணு முணுத்திருந்தவள், இப்போதோ அமைதி காத்தாள்.
அந்நேரம், கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்கள் ரத்னாவும் சுமியும். “இந்தாங்கம்மா, இதில சூடாப் பால் இருக்குக் குடியுங்கோ! நீங்க இரவுச் சாப்பாடு ஒழுங்காகச் சாப்பிடேல்ல எண்டு உதய் சொன்னவர். அவர் இரவில பால் குடிக்கிறேல்ல, உங்களுக்குத்தான்.” முறுவலுடன் கூறி, பால் கோப்பையை அங்கிருந்த மேசையில் வைத்தார், ரத்னா.
“சும்மாவும் சொல்லேல்ல மாமி, மனிசி சாப்பிடேல்ல எண்டு ஆள் கவலைப்பட்டவர்.” என்றாள் சுமி.
மகிழின் நினைவுகள் கணவனை நோக்கி நகர முயன்றன. மாறாக, ரத்னாவின் குரல் அவரை நோக்கச் செய்தது.
“சுமி, கௌசியும் உங்களைப் போலத்தான் எங்கள எல்லாம் அறிமுகமில்லாமல் கலியாணம் செய்து வந்தவே மகிழ்.” மூத்தமருமகள்களைக் காட்டிச் சொன்னவரின் முகம், கனிவிலும் பெருமையிலும் மிளிர்ந்தது. “ஆனா இப்பப் பாருங்க, மூண்டு மகன்களோட ரெண்டு மகள்களும் இருக்கினம் எண்டு சொல்லுற அளவுக்கு இருக்கினம். அதேபோலத் தான் நீங்களும். எங்களுக்கு மகள், இவேக்குத் தங்கச்சி. அதால ஒண்டையுமே நினைச்சுக் குழம்பவோ பயப்படவோ தேவையில்லை. உங்கட வீட்டில எப்படி இருப்பீங்களோ அப்பிடியே இயல்பா எங்களோடையும் இருக்கலாம் சரியா?” என்றவரை, சிறு தலையசைப்பும் முறுவலுமாகப் பார்த்தாள், மகிழ்.
தம் அத்தை கதைக்க கதைக்க முறுவலோடு பார்த்திருந்த சுமியும் கௌசியும், மகிழின் கரங்களை ஆளுக்கொன்றாகப் பற்றிக்கொண்டார்கள். “எப்ப விசா கிடைச்சு நீர் அங்க வருவீர் எண்டு, உம்மட ஆளைப் போலவே நாங்களும் ஆவலோட எதிர்பார்த்துக் கொண்டிருப்பம். சந்தோசமா இருக்கோணும்!” என்றவாறே, ஆதரவாக அணைத்துக்கொண்டனர்.
‘ஓம் ஓம்! ஒரு வார்த்தை கதைக்கிறதுக்குக் கணக்குப் பார்க்கும் ஆள், நான் எப்படா வருவன் எண்டு தவம் கிடக்கிறாராக்கும்!’ என்று, அவள் மனம் முறுக்கிக்கொண்டதை வெளியில் காட்டாது நிற்க பெரும் பிரயத்தனம் செய்தாள் மகிழ்.
அதேநேரம், சற்றுமுன் இப்பெரிய குடும்பத்தில் தன்னைத் தனியாக உணர்ந்தவளுக்கு, இவர்களது பாசம், இயல்பையும் இதத்தையும் உணரச் செய்தது. ‘உதய் வந்தோன்ன இப்பிடி இயல்பா நிண்டு கதைப்பனா?’ அவள் மனம் தடுமாறத் தொடங்கியது.
முதல் முதல் கண்டபோது வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்குப் புறப்பட்டவள், கைபேசியில், வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசியவள், இப்போது, மணமாகி இருவர் ஒருவரான பின்னரோ, அவனை எதிர்கொள்வதெப்படி எனத் தடுமாறி நிற்கிறாள்.
அமைதியாக அளந்தளந்து பேசிக்கொண்டு நிற்பவளைப் பார்த்து குறும்புச் சிரிப்புச் சிரித்தார்கள், சுமியும் கௌசியும். “மகிழ் வாய் ஓயாமல் கதைப்பா எண்டு சொல்லிச்சினமே! ஓமல்லா மாமி? நாம வந்த இந்த ரெண்டு கிழமைகளில, எப்பிடி எண்ணிப் பார்த்தாலும் நாளுக்குப் பத்துச் சொற்கள் எண்டு கதைச்சு இருப்பாவா? ம்ம்…” பகிடி பண்ணினாள், சுமி.
“அதெல்லாம் போகப் போகக் கதைக்கலாம் இல்லையா மகிழ்?” மாமியார்.
“உதய்யோட மட்டும் தான் கதைப்பீங்களோ மகிழ்?” கௌசி கண்ணடிக்க, “இருக்கும் இருக்கும்! முதல் அவரோட, பிறகு ஆறுதலாக எங்களோட. சரிதானே மகிழ்?” சீண்டினாள் சுமி. அதோடு நிற்காது, “எங்கட வீட்டில எல்லாருக்கும் அப்பிடி இப்பிடி எண்டு ரூல்ஸ் போடுறதும் உதய்தான்! இப்பவே சொல்லுறம், அவருக்குக் கொஞ்சமும் இடம் குடுத்திராதேயும் மகிழ்.” என்றதும், “நல்ல ஆக்கள் தான், என்ர மகனைப் பற்றி எனக்கு முன்னுக்கே வச்சு சொல்லிக் குடுக்கிறீங்களா?” விளையாட்டாக முறைத்தார், ரத்னா.
“எங்கட மாமி எப்பவும் எங்கட கட்சிதான் மகிழ்!” என, அவரை அணைத்த சுமியையும் கௌசியையும் விழிவிரியப் பார்த்தாள் மகிழ். அவளுக்கு இதுவெல்லாம் முற்றிலும் புதிது.
மாமா, மாமி அன்பாக இருந்தாலும், இப்படியெல்லாம் பழகும் உறவுகள் அவளுக்கு அமையவே இல்லை. முட்டினாலும் கட்டிக் கொண்டாலும் அன்னை மட்டுமே. இவர்கள் இப்படிக்கு கதைத்துக்கொண்டிருக்கையில், “சுமி…” என்று, ஜெயன் அழைக்கும் குரல் கேட்க, “நான் போயிட்டு வாறன் மகிழ்.” அவளைக் கட்டியணைத்து, “குட்நைட்” கண்ணடித்துச் சொல்லிக்கொண்டே நகர்ந்த சுமி, “அய்யோ சொல்ல மறந்திட்டன் கௌசி, தூங்கவே மாட்டன் எண்டு அடம் பிடிக்கிறான், சின்னவன். அவனோட நிண்டு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் வசந்தன். உம்மையும் வரச் சொன்னவர்.” என்றதும், “நானும் போயிட்டு வாறன் மகிழ், காலம சந்திப்பம்!” இறுக்கிக்கட்டியணைத்த கௌசியும் விடைபெற, நண்பிகளாகச் சேர்ந்து செல்லும் மருமகள்களை முறுவலுடன் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு மகிழிடம் திரும்பினார், ரத்னா.
தாயும் மாமா குடும்பமும் கிளம்பிச் செல்ல, கூம்பிப் போயிருந்த மருமகள் முகம் இப்போது தெளிவாகியிருப்பதைப் பார்த்தவர், “உதய் ரெண்டு கிழமை நிற்பான் என்றான் மா! இப்ப, ஒரு கிழமையில திரும்பிப் போறன் எண்டுறான். ஏதோ முக்கிய வேலை இருக்காம்!” என ஆரம்பித்து, “ஜெயன், வசந்த் போல வேற எங்கயாவது வேலை செய்யிறது வேற. சொந்தத் தொழில் வேற தானே? நாங்க இன்னும் இரண்டு கிழமை நிற்பம்.உதய் ஒரு கிழமையில் கனடா போயிருவான்!” என்றவர், “இங்க நிற்கிறவரைக்கும் சரி ஹோட்டலில தங்கு எண்டதுக்கு, தேவையில்ல வீட்டிலயே நிற்கலாம் எண்டிட்டான். உங்களுக்கு அதில கோவம் இல்லையேம்மா?” என்றவரை, அவஸ்தையாகப் பார்த்தாள் அவள்.
“இதில என்ன இருக்கு மாமி? கோவமா? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை!” என்று அவசரமாகச் சொன்ன மருமகள் முகத்தை பாசமாக வருடிய ரத்னா, “என்ர மகன் எண்டதுக்காகச் சொல்லேல்ல மகிழ், அவன் சரியான நல்ல பிள்ளை. அவனக் கவனமாப் பாத்துக் கொள்ளுறது இனி உம்மட பொறுப்பு. அவனுக்கெண்டு பேசின முதல் பொம்பளை நீங்கதான் தெரியுமா? அவன்ர பாட்டி…” சொல்லிக் கொண்டிருக்கையில், “என்னம்மா, மாமியும் மருமகளும் தனிய இரகசியம் கதைக்கிறீங்க போல!” கேட்டுக்கொண்டே நுழைந்தான் உதய்.

error: Alert: Content selection is disabled!!