அத்தியாயம் 2
“வாழ்த்துகள்டா மச்சான்! இப்ப போல எப்பவும் மகிழ்ச்சியா இருங்க! என்ன உதவி எண்டாலும் தயங்காமல் கேளடா!” கோவிலில் திருமணத்தை ஒழுங்கு செய்து நடத்திய ஆனந்தின் நண்பன், மனமார வாழ்த்தினான்.
“டேய் மச்சான், உன்ர உதவியெல்லாம் இனித் தேவையில்ல! அவன் இனிப் பெரிய ஆள்!” வெடிச்சிரிப்புடன் கூறினான், மற்றொருவன். இதைக் கேட்டதும், வந்திருந்த நான்கைந்து நண்பர்களும் பெரிதாக நகைத்தனர்.
சட்டென்று நண்பர்களை முறைத்த ஆனந்தின் பார்வை, அந்தரத்தோடு மங்கை முகத்தில் பதிந்து மீண்டது. “கொஞ்ச நேரம் இதில நில்லும் மங்கை. இவேய அனுப்பிட்டு வாறன்.” என, நண்பர்களைத் தள்ளிக்கொண்டு நகர்ந்தவன், “ஏன்டா அப்பிடிச் சொன்னனீ? அவள் என்னப்பத்தி என்ன நினைப்பாள்?” கடுகடுத்தான்.
“டேய் மச்சான், உண்மையத் தானே சொன்னன்! உன்ர மனிசி பெரிய பணக்கார வீட்டுப்பிள்ள எண்டு நீயே சொல்லேல்லையா?” அவன் தொடங்க, மற்றவனோ, “மச்சான், இனி நீ லொரி டிரைவர் இல்ல, லொரிகளுக்குச் சொந்தக்ககாரன்.” என்றதும், சட்டென்று திரும்பி மங்கையை நோக்கிவிட்டு நண்பர்களை நோக்கியவன் மனதில், ஒருவித மகிழ்வும் கர்வமும் பரவாமலில்லை!
சிறுவயதிலிருந்து வறுமையை சுவாசித்து வளர்ந்தவன் அவன். எப்படியாவது முன்னேறிவிட வேண்டுமென்ற அளவு கடந்த அவாக் கொண்டவனும் கூட. உழைப்பாளியும். அப்படியிருக்க, இவளைக் காதலித்தது என்னவோ தற்செயல் தான். நிச்சயம், திட்டம் போட்டு நடந்ததில்லை. வலுவில் கனிந்து வந்த, அழகும் தனமும் மிக்கவளின் உறவை இழக்க மனம் வராது விரும்பினான். இதோ திருமணமும் செய்துகொண்டான். இப்போதோ, அவள் தமையன் நினைவில் உள்ளூர நடுக்கம் எழாமலில்லை.
“நீங்க வேற! சும்மா இருங்கடா. கலியாண விசயம் மங்கேன்ட அண்ணாக்குத் தெரியவந்தா என்ன நடக்குமோ எண்டு நானே நடுங்கிக் கொண்டிருக்கிறன்!” என்றவனை, முறைத்தனர் அவன் நண்பர்கள்.
“இதென்ன மச்சான் உன்ர கதை? நீங்க சின்னப்பிள்ளைகள் இல்லையே!” அதட்டினான் ஒருவன்.
“அதுவும் காதலிச்சீங்க. அவவுக்கு வேற கலியாணம் செய்ய முடிவெடுத்ததால இப்பிடிக் கலியாணம் செய்தீங்க. இதில அவர் கதைக்க என்ன இருக்கு?” என்றான் மற்றொருவன்.
“ஆர் வந்தாலும் பயப்படாத! உனக்கு நாங்க இருக்கிறம். பேசாமப் போய் மகிழ்ச்சியா குடும்பம் நடத்திற வழியப்பார் மச்சான்!” திருமணத்தை ஒழுங்கு செய்தவன் தைரியம் கொடுத்தான்.
இவ்வாறு கதைத்துப் பேசி நண்பர்கள் விடைபெற, இவனும் மனைவியோடு தன் வீடு நோக்கிப் பயணமானான்.
அச்சிறு வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த சாக்குக் கட்டிலில் அமர்ந்திருந்து, இரவல் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்த ஆனந்தின் தந்தை, படலை திறபடும் சத்தத்தில் கலைந்து நிமிர்ந்தார். அடுத்தநொடி, பற்றியிருந்த பத்திரிகை நழுவ, இயலாத கால்களையும் மறந்து எழுந்தவர், தள்ளாடி விழப்போய், கட்டிலை ஆதாரமாகப் பற்றியவாறே, தன்னை நோக்கிவரும் மகனையும் அவன் பின்னால் தயங்கி தயங்கி வரும் முதலாளியின் தங்கையையும் ஏறிட்டார். அவர் உள்ளம், உச்சகட்ட அதிர்வின் பிடியில் சிக்கித் திணறியது. மகன், வெள்ளை வேட்டி சட்டை! மங்கை, சரிகையோடிய செந்நிறப்புடவை! கரங்களில் புத்தம்புது மலர் மாலைகள்!
நெருங்கி வர வர, மங்கையின் நெற்றியில் பளிச்சிட்ட குங்குமத்திலும், கழுத்தில் மின்னிய மஞ்சள் கயிற்றிலும் பார்வை பட, சொல்ல முடியாத அதிர்வுடன் இதயம் துடிக்க, வார்த்தைகள் வராது தடுமாறினார், அவன் தந்தை. “டேய் ஆனந்தா! என்ன வேலையடா செய்திருக்கிற?” குரல் உயர்த்திக் கத்தினார். விபத்துக்குப் பின்னர் மிகவும் நலிந்து வீட்டில் முடங்கியிருந்தவர், தன் அத்தனை எதிர்பார்ப்புகளையும் ஒரே நொடியில் மகன் தகர்த்துவிட்டதில் கலங்கித் தடுமாறிப் போனார்.
“மங்கை, இதெல்லாம் என்னம்மா?” சிறு குழந்தையிலிருந்து கண்முன்னால் வளர்ந்தவள், இன்று இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறாளே என்ற அதிர்வுடன் கேட்டார். “நீங்க சின்னப்பிள்ள, இது உங்கட அண்ணாக்குத் தெரியவரேக்க என்ன நடக்குமெண்டு கொஞ்சம் சரி நினைச்சுப் பாத்தீங்களா?” வருத்தத்தோடு கேட்டார்.
தயங்கித் தடுமாறி ஆனந்த் பின்னால் ஒதுங்கிய மங்கைக்கு அவரை எதிர்கொள்ள முடியவில்லை. தலைகுனிந்து நின்றாள்.
“ஆனந்தா, உன்னை நம்பி இந்தப் பெரிய குடும்பமே இருக்கிறதை எப்பிடி மறந்த? உன்ர வீட்டிலும் ஒண்டுக்கு மூண்டு பொம்பளைப்பிள்ளைகள் இருக்கினம் எண்டதையும் மறந்திட்டியா?” தழுதழுத்த தந்தையை, நேராகப் பார்க்க இலேசாகச் சங்கடப்பட்டான் மகன்.
“அப்பா அது வந்தப்பா…” அவனுள் சிறிதாக ஒரு தயக்கம்! எல்லாம் சில கணங்கள்தான். “நாங்கள் விரும்புறம் அப்பா. அத இவளிட அண்ணாட்டச் சொன்னா நிச்சயம் சம்மதிக்கமாட்டார். இவளுக்கு வேற கலியாணமும் முடிவு செய்திட்டினம். எங்களுக்கு வேறவழி தெரியேல்ல.” வேகமாகச் சொல்லி முடித்தான். வீட்டைக் கவனித்துக் கொள்கிறேன் என்ற நிமிர்வு முழுமையாக இருப்பதால், தந்தையிடம் இப்படிச் சொல்வதில் அவனுக்கு எத்தயக்கமும் இருக்கவில்லை. இதே, தாய் எதிர்த்தால், அவனால் தாங்கிக்கொள்ளவே முடியாது. தாயின் மனம் நோவதையோ, முகம் சுருங்குவதையோ பார்த்துக்கொண்டிருக்க ஒருபோதுமே பிரியப்படமாட்டான்.
முற்றத்தில், இவர்கள் இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கையில், முகம் நிறைந்த முறுவலும் ஆரத்தித்தட்டுமாக வெளிப்பட்டார், ஆனந்தின் அன்னை.
இதைக் கண்டதும், முகம் கறுக்க மனைவியை ஏறிட்டார் அவன் தந்தை. ‘மகன், இவவுக்குத் தெரியாமல் தும்மினால் கூடத் தாங்கிக்கொள்ள மாட்டா. இப்ப, கலியாணம் செய்து கொண்டல்லோ வந்திருக்கிறான். காளியாட்டம் போடாமல் இப்பிடி மலர்வா வாறாவே! அதும் ஆரத்தியும் கையுமா!’ மனத்தினுள் முணுமுணுத்துக்கொண்டார்.
சாதாரண நாட்களிலேயே மனைவியின் முன் பெட்டிப்பாம்பு இவர். இப்போதோ, மூச்சுவிடுவதற்கும் துணைவியின் அனுமதி வேண்டி நிற்பவர், உள்ளத்தில்தான் வெகுண்டார். ‘இவவுக்கு கொஞ்சம் கூட புத்தியே இல்லையா? அவே எங்க, நாங்க எங்க. இதெல்லாம் எங்க கொண்டு போய் விடுமோ!’ கலங்கியவருக்கு, எப்போதும் போல் தன் இயலாத நிலைமீது வெறுப்பும் விரக்தியும் எழுந்தது.
“அப்ப, இதெல்லாம் உங்களுக்கு முதலே தெரியுமா?” கடுமையாகவேதான் வினவ முற்பட்டார். அவரோ, கணவனை அலட்சியப் பார்வையால் வெட்டினார். “ரெண்டு நாள்களுக்கு முதல்தான் பெரியவர் சொன்னவர். உழைக்கிறம் எண்டதும் எல்லாத்திலும் தாங்க நினைச்ச மாதிரி நடக்க நினைக்கினம். ம்ம்.” என்றவர் பெருமூச்சில் முடித்தார்.
“சரி சரி விடுங்க. ஒருத்தர ஒருத்தர விரும்பினம் எண்டான். பிள்ளைக்கும் வீட்டில கலியாணம் பேசிட்டினமாம்” மங்கையை நோக்கிக் கனிவாகப் புன்னகைத்தார். அப்புன்னகையும், அவரது பேச்சும் மங்கையின் அல்லாடிக் கொண்டிருந்த மனத்தை மிகவும் குளிர்வித்தது.
‘ஆனந்த் சொன்ன மாதிரி மாமி சரியான நல்லவாதான்!’ இவ்வளவு நேரமும், ஆனந்தின் தந்தையைப் பார்த்துக் கலங்கி நின்றவள் ஆறுதலாக உணர்ந்தாள்.
“சரி, நடந்தது நடந்திட்டு. இப்ப என்ன செய்யிறது? பிள்ளைகள் எங்கள நம்பி வந்திட்டினம். வெளியே போ எண்டுறதே?” கணவரிடம் கேட்டுக்கொண்டே, மருமகளை மகன் அருகில் பிடித்து நிறுத்தியவர், இருவருக்கும் ஆரத்தி சுத்தி, பொட்டு வைத்தார்.
“ரெண்டு பேரும் உள்ளுக்க போங்கோ! வலது காலை எடுத்து வச்சு உள்ள போங்க மங்கை. நீங்க வந்த நேரம் இந்த வீட்டப் பிடிச்ச சிரமதுன்பங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் கரைஞ்சு போகட்டும்!” அன்பாகக் கூறி, அவர்கள் உள்ளே செல்வதை மனநிறைவோடு பார்த்து நின்றார். பின், கையிலிருந்த ஆரத்தி நீரை வெளிவாயிலில் கொட்டிவிட்டு வந்தவர், இன்னமும் நடந்ததை ஏற்க முடியாது அதிர்ந்து நிற்கும் கணவரை அலட்சியப் பார்வையால் தொட்டார்.
“இஞ்ச பாருங்க, இப்ப என்ன நடந்திட்டு எண்டு இப்பிடி நிக்கிறீங்க? பிள்ளைகள ஆசீர்வாதம் செய்ய உள்ளுக்க வாங்க!” கட்டளையாகச் சொல்லி நகர, இயலாமையுடன் பார்த்து நின்றார் அவர்.
உள்ளே நுழைந்த ஆனந்தின் தாயார், மகனருகில் தயக்கமும் சஞ்சலமுமாக நிற்கும் மங்கையிடம் வந்தார். “ஒண்டுக்கும் யோசியாதீங்க பிள்ள. இனி இதுதான் உங்கண்ட வீடு. அப்பிடி நினைச்சுப் பாருங்க புது இடம் எண்ட தயக்கம் எல்லாம் பறந்திரும்.” ஆறுதலாக மொழிந்தவர், “சரி சரி, ரெண்டு பேருமா வாங்க. சாமி கும்பிட்டுட்டு, படத்து விளக்கையும் ஏற்றி விடுங்கோ பிள்ளை. இனி இந்தக் குடும்பமே உங்கள நம்பித்தான் இருக்கு! அதை எப்பவுமே மறந்திராதீங்க!” என்றவர் கண்கள் கலங்க, பாசத்தில் உருகிப் போனாள் மங்கை.
“நிச்சயமா மாமி, உங்களுக்கு எப்பவும் உதவியா இருப்பன்!” என்றவள், பக்குவமாக விளக்கை ஏற்றினாள். கரம் கூப்பி விழிகளை மூடிக்கொண்டவள், இன்று தொடங்கும் புது வாழ்வு நல்லபடியாக அமைய வேண்டுமென்று வேண்ட நினைத்தாள். நடந்ததோ, மூடிய இமைக்குள் அன்னையும், தமையனும்தான் தெரிந்தார்கள். குற்றவுணர்வின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாள், மங்கை.

