‘இப்படியெல்லாம் நடந்தது நீயா மங்கை? எங்கள உதறிட்டுப் போறது உனக்கு அவ்வளவு சுலபமா இருந்ததா?’ என்று, முகம் கொள்ளா அதிர்வும் ஆத்திரமுமாக கேட்டவர்களை, அவளால், மனக்கண்ணால் கூடப் பார்க்க முடியவில்லை. நெஞ்சம் பிசைந்தது. அவசரம் அவசரமாக இமை திறக்க முயன்றவளை முந்திக்கொண்டு வழிந்தது, விழிநீர்.
கணநேரம் விழிகள் மூடி கடவுளை வணங்கிய ஆனந்த், புத்தம் புது மனைவியாக உரிமையுடன் அருகில் நிற்பவளை ஆசையும் பெருமிதமுமாகப் பார்த்தவன், அவள் கலங்கிய தோற்றத்தில் திகைத்துப் போனான்.
“மங்கை என்ன நடந்தது? அழுகிறியா என்ன?” என்ற மகனின் குரலில் எட்டிப்பார்த்தார், அவன் தாயார்.
“வீட்டு நினைவு வந்திட்டுப் போல! என்ன செய்யிறது, பொம்பளையாப் பிறந்தா கலியாணம் செய்யத்தானே வேணும். என்ன, உங்கட வீட்டில சம்மதம் சொல்லியிருக்க, அங்கயே இருந்திருப்பீங்க. ம்ம்…அதையெல்லாம் நினைச்சுக் கவலைப்பட்டுப் பிரயோசனம் இல்ல. இப்ப இதையும் உங்கட வீடா நினையுங்கம்மா!” தேற்றினார்.
“சாமியைக் கும்பிட்டுட்டு வாங்க!” என்றபடி நகர்ந்தவர், “இங்க பாருங்க, அங்க நிண்டு முறைச்சது போதும் இங்கால வாங்க. பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் செய்திட்டுப் போங்க!” முற்றத்தில் வேரோடிப் போய் நிற்கும் கணவனை மீண்டும் அதட்டினார்.
விலகாத அதிர்ச்சியுடன் நின்றவர், அச்சொல்லுக்குக் கட்டுப்பட்டு, விந்தி விந்தி மனைவியின் அருகில் வந்து நின்றுகொண்டவர், காலில் விழுந்த மகனையும் மருமகளையும், “எண்டைக்கும் நிறைவா மகிழ்ச்சியா இருங்க!” கலங்கும் கண்களுடன் முழுமனதாக வாழ்த்தினார்.
“ரெண்டு பேரும் இப்பிடி வந்து இருங்க.” அச்சிறு கூடத்தில் போடப்பட்டிருந்த மர வாங்கிலைக் காட்டிச் சொன்ன அவன் தாய், “முறையா நாள் நட்சத்திரம் பாத்துக் கலியாணம் செய்திங்களோ தெரியாது, பாலும் பழமும் தாறன் சாப்பிடுங்க!” உபசரித்தார்.
அவர்கள் சென்றமர்ந்து கொள்ள, அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அவன் தந்தை, மகனையும் மருமகளையும் உற்று நோக்கினார்.
“என்னதான் எண்டாலும் நீங்க செய்த வேலை சரியில்லை. இந்தப் பிள்ளை இப்பிடிச் சொல்லாமல் கொள்ளாமல் வந்து கலியாணமும் கட்டிக்கொண்டு இருக்கிறா, அங்க, காணேல்ல எண்டு பயப்பட்டுத் தேடிக்கொண்டு இருப்பீனம்.” குற்றம் சுமத்தும் குரலில் தொடங்கினார்.
“என்ர ஏலாத நிலையைப் பாத்து, சொல்லப் போனாப் பாவம் பாத்துத்தான் உங்கட அண்ணா இவனுக்கு வேல தந்தவர். இவன் இப்பிடிச் செய்திருக்கிறான். ஆபத்தில் உதவி செய்த குடும்பத்துக்கு இப்பிடியா கைம்மாறு செய்யிறது?” மகனில் எழுந்த கோபத்தைக் காட்டுவதில் பலனில்லை எனத் தெரிந்திருந்தாலும், அம்மனிதரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“இனி எப்பிடி ராசன் தம்பிட முகத்தில முழிக்கிறது!” குற்ற உணர்வில் அவர் பேசியதைக் கேட்டு, அக்கூடத்தை ஒட்டியதாக அமைந்திருந்த சிறு சமையலைறையிலிருந்து விறு விறுவென்று வெளிவந்தார், ஆனந்தின் தாயார்.
கையிலிருந்த பாலையும் பழத்தையும் மகன் கையில் திணித்தவாறே, “இஞ்ச பாருங்க, தேவையில்லாததைக் கதைச்சுப் பிள்ளைகளக் குழப்ப வேணாம் சொல்லிட்டன். இப்ப என்ன நடந்திட்டுது? எங்கட மகன் மட்டும் என்ன குறைவா? அவே வேலைதானே தந்தவே. இவன் மாடா உழைச்சுத்தானே சம்பளம் வாங்கிறவன்.” மருமகள் முன்னால் மகனைக் குறைத்துப் பேசுவதா என்றிருந்தது அவருக்கு!
“அவே அளவுக்கு இங்க காசு இல்ல எண்டதைத் தவிர, என்ர மகன் வேற எந்த விதத்தில குறைஞ்சிட்டான்?” கணவனிடம் சீறினார்.
“காசு பணம் இல்ல எண்டுறது அவையளுக்குப் பெருங் குறையாப்பட்டா அவையளே அந்தக் குறையப் போக்கி வைக்கட்டும்!” என்றவர் பார்வை, கணத்திலும் குறைவான பொழுது மங்கையின் முகத்தைத் தொட்டு மீண்டது.
“ராசன் தம்பி தங்கச்சியைக் காணேல்லையே எண்டு பயப்படப் போறார் எண்டு நான் சொன்னா, நீங்க காசு பணம் பற்றிக் கதைக்கிறீங்க.” என்றவர், மனைவியை மிகவும் தன்மையாக நோக்கினார்.
“தயவுசெய்து இவையள கூட்டிக்கொண்டு வெளிக்க்கிடுங்க!” மனைவியிடம் கெஞ்சினார்.
“என்ன வெளிக்கிடுறதா? எங்க?” சந்தேகத்தோடு வினவினார் அவர் மனைவி.
“எங்க எண்டா, மங்கை வீட்டுக்குத்தான். சரி, காதலிச்சாச்சு. ஓமெண்டாயினம் எண்டு கலியாணமும் செய்தாச்சு. இனி, நேரில போய் அவேயோட கதைக்கிறதுதான் முறை!” என ஆரம்பித்தவரை, தன் பார்வையால் வாய் பொத்த வைத்தார், ஆனந்தின் தாயார்.
“இஞ்ச பாருங்க, எப்பவும் போல சத்தம் போடாமல் இருங்க சரியா? எதை, எப்ப, எப்பிடிச் செய்யோணும் எண்டு எனக்குத் தெரியும்!” அதட்டலாகச் சொன்னார், ஆனந்த் அன்னை.
“இல்ல, நான் என்ன சொல்ல வாறன் எண்டா …” இழுத்தார், அவர்.
“போதும், நீங்க ஒண்டுமே சொல்ல வேணாம். போயிருந்து மிச்சப் பேப்பரை வாசிச்சு முடியுங்க. மதியத்துக்குள்ள திருப்பிக் குடுக்கோணும்.” சீறினார்.
மங்கையின் முன்னால் மனைவியின் சீறலில் கறுத்துச் சிறுத்துவிட்டது, அவரது முகம். சட்டென்று எழுந்து அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டார்.
“அந்தாள் சொல்லுறத எல்லாம் நீ காதில வாங்காத ஆனந்த். இப்ப அங்க போனீங்கள் எண்டால் மங்கையப் பிடிச்சு வச்சுக் கொண்டா என்ன செய்வ? உருப்படாத யோசனை சொல்லுறதே இந்தாளிண்ட வேலையாப் போச்சு!” என்றவரை, இப்போது பயத்துடன் பார்த்தாள், மங்கை.
மாமாவை அவர் அடக்கிய விதம், அவளுள்ளே, அவர்பால் ஒருவித பயத்தை உருவாக்கியிருந்தது. மெல்லத் தன்னருகில் இருந்த கணவனை ஏறிட்டாள்.
“அண்ணா தேடி அலைய மாட்டார் எண்டுதான் நினைக்கிறன். ஏனெண்டா, நான்…வரேக்க எல்லாம் விவரமா கடிதம் எழுதி வச்சிட்டுத்தான் வந்தனான்!” எனச் சொன்னவளை, அதிர்வாகப் பார்த்தனர் தாயும் மகனும்.
“இதென்ன தம்பி இந்தப்பிள்ளேட மட வேலை!” கோபமாகக் குறிக்கிட்ட மாமியை, திடுக்கிடுதலோடு பார்த்த மங்கை, முறைத்த கணவனை இயலாமையுடன் நோக்கினாள்.
“காணேல்ல எண்டா அம்மா பயந்திருவார் ஆனந்த். அதனாலதான்..” இழுத்தவளிடம், “அப்ப, இவனோட போறன் எண்டே எழுதியாச்சா?” அவர் குரலில் இப்போது பதற்றமும் கோபமும் கலந்திருந்தது .
“ம்ம்ம்..ஓம்…” தடுமாறியவளின் விழிகள் குளமாகின!
“பச்..என்ன வேல செய்திருக்கிற மங்க! அப்பிடி எழுதி வச்சிட்டு வா எண்டு உன்னட்டச் சொன்னனா?” இதுவரை அவளறியாத குரல் ஆனந்திடமிருந்து வெளிப்பட்டது.
இப்போது அவள் நயனங்கள் உடைப்பெடுக்க, “சரி சரி அழுது துலைக்காதேங்க!” சிடுசிடுத்தார் ஆனந்தின் அன்னை.
“அம்மா, இவள் எழுதி வச்சதப் பாத்தோன்ன இங்க வரப் போகினம்!” கலக்கத்துடன் சொன்ன மகனை, சிறிதுநேரம் யோசனையாகப் பார்த்திருந்தவர், “படிச்ச பிள்ளைக்கு இதைக் கூடச் சரியாச் செய்யத் தெரியேல்ல. இந்த வடிவில இந்தக் குடும்பத்த எப்பிடிப் பாத்துக்கொள்ளப் போறீங்க!” முகம் சுளித்தபடி சொன்னார்.
“சரி சரி வெளிக்கிடுங்க. விசுவமடுவில இருக்கிற அத்தைக்கும் இந்தக் கலியாண விசயம் எல்லாம் தெரியும். ஒரு கிழமைக்குச் சரி அங்க இருக்கிறதுதான் நல்லம். அவரும் தனிய இருக்கிறதால தங்குறதுக்குப் பிரச்சனையில்ல!” என்றவர், “நீங்க இங்க இருந்தா, அவே வந்து மங்கைய இழுத்துக்கொண்டு போனா என்ன செய்யிறது?” பதற்றத்தோடு அவசரமாகச் சொன்னார்.
“குடும்பமா இருந்த பிறகு உங்களக் கண்டு பிடிச்சா , ஒரு கவலையும் இல்ல. நாமளே போகத்தானே இருக்கிறம்!” படபடவென்று மகனுக்குக் கட்டளையிட்டவர், “கையில் காசு வச்சிருக்கிறியா?” மகனிடம் கேட்டுக்கொண்டே, “கொஞ்சம் இருங்க எடுத்துக்கொண்டு வாறன்.” உள்ளறை நோக்கி நகர்ந்தவர், இடையில் நின்று, “மங்கை … மாற்றுடுப்புக்கள் சரி கொண்டு வந்தீங்களோ?” மிகவும் கட்டுப்படுத்தி அன்பாகவே கேட்க முனைந்தார்.
“ம்ம்ம்…போட்டுக்கொண்டு வந்ததோட…ரெண்டு செட்…இருக்கு.” என்றவள், “அவ்வளவும் தான் புத்தகப் பையில வைக்க ஏலும்!” தட்டுத் தடுமாறிச் சொன்னாள், மங்கை.
“சரி, இப்போதைக்குப் பிரச்சனை இல்ல. எழும்புங்க, முதல் இந்தச் சீலைய மாத்திட்டு வெளிக்கிடுங்க!” மின்னலென முடிவெடுத்து, அவர்கள் இருவரையும் விசுவமடுவுக்கு பார்சல் பண்ணியதும்தான், அவர் இதயம் சீராகத் துடிக்கத் தொடங்கியது. ‘அப்பாடா!! இனி ஆர் வந்தாலும் சமாளிச்சிர மாட்டனா!’ தன்னுள் சொல்லிக்கொண்டே, இடிந்து போய் அமர்ந்திருக்கும் கணவனை முறைத்தார்.
“இஞ்ச பாருங்க, உங்களால இந்தக் குடும்பத்துக்கு ஒரு சதத்துக்குப் பிரயோசனம் இல்லை எண்டாலும் பரவாயில்லை, ஆரும் வந்து ஏதாவது கேட்டா உங்கட விசுவாசத்த இந்தக் குடும்பத்துக்குக் காட்டுங்க. பிள்ளைகள் விசுவமடு போன விசயம் வாயால வந்திச்சோ, நான் என்ன செய்வன் எண்டே தெரியாது. சொல்லிட்டன்! ” தாடகையாக உறுமினார்.

