நெஞ்சினில் நேச ராகமாய் 20 – 1

அத்தியாயம் 20
மகனைக் கண்டதும் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, “சரி மகிழ், தூங்குங்க. பத்து மணிக்கும் மேலாகிட்டுது.” மகனிடமும் சொல்லிக்கொண்டு வெளியேறினார், ரத்னா.

‘அவன்ர பாட்டி எண்டு ஏதோ சொல்ல வந்தாரே! ஓடுகாலிட மகள் எண்டது மட்டுமா? ஆசீர்வாதம் வேண்ட காலில விழ முறைச்சுக்கொண்டு வேண்டா வெறுப்பாத்தான் ஆசீர்வாதம் செய்தவர். அவரிட்ட எப்படிச் சம்மதம் வாங்கினவர் எண்டு சொல்ல வந்தாரோ! ம்ம்…எனக்கெண்டு எப்பிடித்தான் இப்பிடிப்பட்ட கிழவிகள் வந்து வாய்க்கினமோ! கிழவிகள் மட்டுமா, இவரும் தான் பட்டிக்காடு எண்டவர்!’ மனம் தன் வேலையைத் தொடங்க, அவள் நயனங்கள் கணவனில் நிலைத்தன.
மனத்தின் மறுபுறமோ, ‘எல்லாத்தையும் தள்ளி வச்சிட்டு அண்டைக்கு அப்பிடிக் கதைச்சதுக்கு மன்னிப்புக் கேட்டிரு மகிழ்!’ எனத் தூண்டியதைச் செய்ய முயன்றாலும், இலேசில் முடியவில்லை. சட்டென்று பார்வையை விலக்கி, அருகிலிருந்த பெட்டியைத் திறந்து மாற்றுடையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
மனைவி, தன்னைப் பார்த்துக் குழம்பியதை உன்னிப்பாகக் கவனித்த உதய், மனத்துள் நகைத்துக்கொண்டான். அன்று அவள் பேசியதில் எவ்வளவோ கோபமிருந்தாலும், இக்கணம் அது கட்டுக்குள் அடங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும், கனடாவிலிருந்து வரும் வரை இருந்த கோபத்தின் அளவு, மணமேடையில் அவளைப் பார்த்தபின் அப்படியும் இப்படியும் தளம்பி, சற்றுமுன், அவள் தாய் விடைபெறுகையில் உகுத்த கண்ணீரில் தெப்பலாக நனைந்து, மிதமாக மறைந்து போனதோ என்றளவில் நிற்கின்றது. என்றாலும், “விசா கிடைக்க எவ்வளவு காலமாகுமோ!” என விட்டேற்றியாக அவள் சொன்னது, இவன் மனதில் சுருக்கென்று தைக்காமலும் இல்லை. அப்போ, கொஞ்சமும் இவளுக்கு இக்கல்யாணத்தில் விருப்பமில்லை. கல்யாணமானால், எப்போதடா விசா கிடைக்கும் கணவரிடம் போவோம் என்றல்லவா எண்ணுவார்கள் என்ற, மனச்சுணக்கத்துடன் தான் உள்ளேயே வந்தான்.
ஏற்கனவே கிடைத்த சிறு பொழுதில் உடை மாற்றிக் குளித்திருந்ததால், அவள் குளித்துவிட்டு வரட்டும் என எண்ணி, தன் கைப்பேசியை இயக்கியவாறு அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டவன், மின்னஞ்சல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாலும் மனத்தில் தன் இல்லாளைப் பற்றிய சிந்தனையில் இருந்தான். ‘ஆரெண்டு தெரியாத நேரமே எப்பிடி எல்லாம் வாயாடினாவள். கலியாணம் பேசி முற்றாக்கின பிறகும் என்ன கதை கதைச்சாள். இப்ப, ஒண்டுமே தெரியாதவள் மாதிரிப் பாத்துக்கொண்டு போறா!’ என நினைத்துக் கொண்டவன் முகத்தில், சிறிதாக முறுவல் கூட வந்திருந்தது.
உள்ளே சென்றவளோ, ‘கடவுளே! நான் இவரோட எப்பிடிக் கதைக்கப் போறன்! ஓரளவுக்குச் சரி பழகின ஆளா இருந்திருக்கக் கூடாதா?’ என்ற தவிப்போடு தான் குளித்து முடித்திருந்தாள். ஈரமாகியிருந்த குளியலறைக்குள் வைத்து சேலையை மடிக்க விரும்பாது எடுத்துக்கொண்டு வெளிப்பட, அவள் கணவனோ கைபேசியில் மூழ்கியிருந்தான். மெல்ல அங்கிருந்த அலுமாரி அருகில் சென்று, சேலையை மடித்து ஹங்கரில் மாட்ட முயல்கையில் அருகில் வந்து நின்றான் உதய்.
அவன் வரவில் திடுக்கிட்டுச் சட்டென்று விலகினாள், மகிழ். அவள் விலகிய வேகத்தைப் பார்த்து, “என்ர இரவு உடுப்பை எடுக்க வந்தன். அதுக்கு ஏன் இப்பிடி முழியை உருட்டுறீர்!?” என்றவன் குரலில் கணக்கின்றிக் கிண்டல்.
இவளோ, இன்னமும் சற்றுத் தள்ளிப் போய் நின்றுகொண்டாள். அதைப் பார்த்தவன் மனத்தில் சற்றுமுன்னிருந்த இதம் சட்டென்று விடைபெற்றுவிட்டது.
“இஞ்ச பாரும், விருப்பமே இல்லாம, உம்மட நிம்மதி போயிரும் எண்டு தெரிஞ்சே என்னைக் கலியாணம் செய்திருந்தாலும், இனி நான் தான் உம்மட புருசன் இல்லையா? அதுசரி உம்மட மனத்தில் இருக்குத்தானே!” என்று,குரல் இறுகக் கேட்டவனை அதிர்வோடு பார்த்து நின்றாள் அவள்.
அவனோ, முறைப்பும் இரவுடையுமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
‘அப்ப, நான் அண்டைக்குக் கதைச்சதுக்கு இன்னும் கோவமாத்தான் இருக்கிறார்.’ மனத்துள் முணுமுணுத்தவளுக்கு, அப்படி என்ன பிழையாகக் கதைத்துவிட்டேன் என்றுதான் இப்போதும் இருந்தது. ‘பர்வதம் பாட்டி கதைச்ச கதைக்கு என்ர இடத்தில இவர் இருந்திருந்தா சந்தோசத்தில குத்து டான்சா ஆடி இருப்பார்?’ சுறுசுறுவென்று எரிச்சலானது. ‘பெரிசா முறைக்கிறாரே! புருசனாம் புருசன். சரி இரும். இப்ப என்ன வந்தது? இந்த வெருட்டுற வேலையை என்னட்டக் காட்ட வேணாம் எண்டு சொல்லி வைக்கோணும். இண்டைக்கு வெளில வரட்டும் இருக்கு!’ அனைத்தும் மறந்த மகிழ், அவனுடன் சண்டைக்குத் தயாராகி, சற்றுமுன் அவன் அமர்ந்திருந்த சோஃபாவின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள்.
ரத்னா சொன்னது போல், அவள் அவ்வளவாக உண்ணவுமில்லை. நேற்றிரவு போதியளவு நித்திரையுமில்லை. இன்று அதிகாலையிலிருந்து ஒரே பரபரப்பு, களைப்பு. எல்லாம் சேர்ந்து இலேசாகத் தலைவலிப்பது போலிருக்க, அங்கிருந்த பாலைப் பார்த்தவள், “பச்…பிரெஷ் பண்ணிட்டனே. பால் குடிச்சாத் திருப்ப பல்லுத் தீட்டோணுமே மகிழ். வேணாம் விடு!” என்றவாறே அமர்ந்திருக்க, உள்ளே சென்ற சிறிது நேரத்தில் வெளிப்பட்டான் உதய்.
அவனை மெல்லத் திரும்பிப் பார்த்தவளுக்கு, மனதில் அவன் மீதிருந்த கடுப்பையும் மீறி நகைப்பெழுந்தது. காரணம், அவனின் இரவுடை. தொள தொள பிஜாமாவில் வந்தவனைப் பார்த்ததும் எழுந்த நகைப்பை அடக்கிக்கொண்டே, ‘ஹ்ம்ம்..கனடாக்காரர் இல்லையா? சாரம் எல்லாம் கட்ட மாட்டினம் போல இருக்கே! நல்ல காலம் வீட்டில ஏசியிருக்கு!’ பொங்கும் நகைப்போடு நினைத்துக்கொண்டிருக்க, சுவாதீனமாக அவளருகில் வந்தமர்ந்தான், அவள் கணவன்.
அவளோ, சட்டென்று எழுந்து கொண்டாள்.
“என்ன மேடம், பக்கத்தில இருக்கக் கூடப் பிடிக்கேல்ல போல இருக்கே!” நக்கல் போலிருந்தாலும் அதில் காட்டமே முன்னின்றது.
அவளும் சற்றும் யோசிக்கவில்லை. “ஓம்தான்! எப்பிடி உங்களுக்குப் பக்கத்தில இருக்கிறது? நான்தான் பட்டிக்காடாச்சே! பழக்கவழக்கம் தெரியாதவளாச்சே!” வெடுக்கென்று சொன்னாள்.
“எனக்கு ஒரு விசயம் உண்மையாவே விளங்ககேல்ல. அண்டைக்கு நான் இருக்கிறது தெரிஞ்சிருந்தா பளைக்கு இல்ல இலங்கைக்கே வந்திருக்க மாட்டன் எண்ட நீங்க, இந்தக் கலியாணத்திற்கு எப்பிடிச் சம்மதம் சொன்னீங்க? பிசாசு எண்டும் சொன்னீங்க எல்லா? நீங்க கதைச்சா மட்டும் பகிடியோ? அதை எல்லாம் மறந்திட்டு நான் கதைச்சத மட்டும் பெரிசா தூக்கிப் பிடிச்சுக் கதைக்கிறீங்க?” மனத்தில் இதுவரை வைத்துக் குமைந்ததைக் கேட்டுவிட நினைத்தவளுக்கு, அக்கணம் அவன் அந்நியமாகத் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
“உங்கட பாட்டி அப்பிடிச் சொன்னதால தானே நான் அப்பிடிக் கதைச்சன்!” தொடர்ந்து சொன்னவளின் குரல் கமறிவிட்டது. அன்று பர்வதம் சொன்ன வார்த்தையின் வலி நெஞ்சத்தை இறுக்க, ஆத்திரம் தான் எழுந்தது. அக்கணம், அன்று இவள் இவனுடன் வாயாடிய பின்னர் தாய் மொழிந்த அறிவுரைகளும், மாமாவின் கண்டிப்புகளும் அவள் நினைவில் எட்டியும் பார்க்கவில்லை.
“அப்பிடி உங்களை ஆராவது சொல்லியிருந்தா, பல்லைக் காட்டிக்கொண்டே கேட்டுக் கொண்டிருப்பீங்களா? இல்ல கேக்கிறன்!” சிலிர்த்துக்கொண்டவளை பார்த்தவனோ, அயர்ந்து போனான்.
“இப்பவும் சொல்லுறன், எனக்கு இந்தக் கலியாணத்தில கொஞ்சமும் விருப்பம் இல்ல. உங்களிலும் தான்.” என்றவளின் குரல் நடுங்கியது.
உதய் முகமோ கன்றிச் சிறுத்துவிட்டது.
“இஞ்ச பாருங்க, எனக்கு, மனசில ஒண்ட மறைச்சு வச்சுப் பழகிப் பழக்கம் இல்ல. எது எண்டாலும் நேர கதைச்சிரோணும்.” வெடுசுடு என்று சொல்லியிருந்தாள். அவன் அமைதி, இவள் பேச்சை நீட்டிக்கொண்டே சென்றது.
“நான் அண்டைக்குக் கதைச்சதுக்கு, எனக்குக் காட்டுறதுக்காகவே இந்தக் கலியாணத்தை நடத்திக் காட்டினீங்க போல! கொஞ்சம் என்ர நிலையில நிண்டு யோசிச்சுப் பாருங்க. உங்கட பாட்டி சொன்ன அதே வார்த்தையை உங்கட சொந்தக்காரர் சொல்ல எவ்வளவு நேரமாகும்? அதுதான் ஓடுகாலிட மகள்….” கோபமும் வலியுமாக முறைப்போடு தொடர்ந்த மகிழ், “போதும்…இதோட வாய மூடும் சரியோ!” என்ற அவன் உறுமலில் பேச்சு அப்படியே நிற்க, அதிர்ந்து போனாள். பார்வை, திகைப்போடு அவன் முகத்தில் நிலைத்து நின்றது.
“என்ன நீ, விட்டாக் கதைச்சுக்கொண்டே போற? இஞ்ச பார் , எனக்கும் மனத்தில ஒண்டை வச்சுக்கொண்டு வெளியில ஒரு மாதிரிப் பழகிப் பழக்கமில்ல. அதை நினைவில வச்சிரு ஓகே!” அடிக்குரலில் உறுமினான்.
“இங்க பாருங்க, மரியாத குடுத்துக் கதையுங்க. நீ வா போ எண்டு என்னோட கதைக்க வேணாம்.எனக்கு அது பிடிக்காது!”
“ஓ மரியாதை! எனக்கும் தான் நீ இப்பிடி வாய்காட்டுறது பிடிக்கேல்ல. உடனே நிப்பாட்டிருவியா? அமைதியா பொறுமையா யோசிச்சுக் கதைக்கப் போறியா? முதல், அது உன்னால ஏலுமா என்ன?” நக்கலாகக் கேட்டவனை, சுட்டுவிடுவது போல முறைத்தாள், மகிழ்.
“நீங்க மரியாதையாக் கதைக்கேல்லையோ உங்களுக்கும் அது கிடைக்காது! நீ வா போ தான். அவ்வளவும் தான் சொல்லுவன்.” என்றவள், சட்டென்று அப்பால் நகர முயல, எட்டி அவள் கரம் பற்றியிழுத்தான், உதய்.
எதிர்பாராத அவன் செயலில் அவன் மீதே வந்து விழுந்தவளுக்கு, அதிர்ச்சியில் நாவசையவில்லை. ஏற்கனவே அவள் மீதிருந்த சுணக்கங்களை மிகவும் சிரமப்பட்டு அடக்கியிருந்தவனோ, அதை விடுவிக்கும் வகையில் இப்போது அவள் பேசப்பேச மிகவும் ஆத்திரம் அடைந்திருந்தவன், தன் மீது வந்து சாய்ந்த அதிர்வில் விழிவிரியப் பார்த்த மனைவியில் அப்படியே இலயித்துவிட்டான்.
என்னதான் வாய் அதிரப் பேசினாலும், அவள் நயனங்கள் பூசியிருந்த கலக்கமும் தவிப்பும் அவனை அல்லாடச் செய்தது. தன் மனதில் அவள் மீதிருந்த கோபதாபங்கள் மெழுகாக உருகுவதை உணர்ந்து கொண்டவன், ஆழ்மூச்சை இழுத்து விட்டுத் தன்னை சமன்படுத்த முயன்றான். “மகிழ்!” மிருதுவாக ஒலித்த அவன் குரல், அவளை அதிரவே செய்தது.

error: Alert: Content selection is disabled!!