நெஞ்சினில் நேச ராகமாய் 20 – 2

‘முதல் முதல் ஃபோன் பண்ணின நேரம் இதே குரலில தான் கதைச்சவர்.’ என்று நினைத்துக்கொண்டவளின் விழிகளில் மெலிதாக நீரின் பளபளப்பு.
“காலமதான் கலியாணம் முடிச்ச புருசன் பெஞ்சாதி…” என்றவன் விழிகள், மனைவியின் விழிகளை ஊடுருவின. அவளோ, இமைதட்ட மறந்திருந்தாள். அவள் முகத்திலோடிய உணர்வுகளைப் படித்தவன் பேச்சு, அவனையுமறியாது தடைப்பட்டது.
எந்தக் குழந்தையுமே முதல் முதல் ஸ்பரிசிக்கும் ஆணும் பெண்ணும் அவர்களின் பெற்றோர் தானே! அந்த வகையில் இவளோ, தந்தை என்ற உறவை அறிந்துணரவில்லையே! அவள் வாழ்வில் இடம்பெற்ற நெருங்கிய உறவுகளான மாமா, மச்சான் இருவருமே பாசத்தைக் காட்டினாலும், அங்கு நெருக்கத்தை அவள் ஒருபோதும் கண்டு கொள்ளவில்லை. எப்போதாவது மென்மையாகத் தலையைத் தடவுவதன் மூலம் தன் அன்பைக் காட்டியிருக்கிறார் ராசன். அவ்வளவே!
இந்நிமிடமோ, கணவன் என்கின்ற உரிமையுடன் ஆடவனொருவன் கரம்பற்றியிழுக்க, எதிர்பாராது அவனில் சாய்ந்தவள், சற்றுமுன் நடந்த வாக்குவாதங்களை மறந்து, விலகும் எண்ணமற்று அவனோடு ஒன்றியிருந்தாள். அதுமட்டுமா? உடையவனின் முதல் நெருக்கமும் ஸ்பரிசமும், உறைந்திருந்த அவளுள் தோற்றுவித்த புதுவித மெல்லுணர்வுகளை, தன்னை மறந்து அற்புதமாக உணரவும் செய்தாள்.
கணவனின் ஊடுருவும் பார்வை வீச்சில், இமைக்க மறந்த அவள் நேத்திரங்கள் ஸ்தம்பித்திருந்தன. ஏக்கமும் ஆசையும், கோபமும் தாபமும் கலந்து வந்த கணவனின் மூச்சுக்காற்றில், இயக்கம் மறந்திருந்த அவள் சௌந்தர்ய வதனமோ மெல்லிய சலனத்தைக் காட்ட, அவன் உயிர்க்காற்றை தன்னுள் நிரப்பிக் கொண்டவள் இதயமோ, இலயம் தப்பி எகிறிக் குதித்தது.
“புத்தம் புது புருசனும் பெஞ்சாதியும் முதல் முதல் தனியாச் சந்திக்கேக்க, இப்பிடித்தான் ஏட்டிக்குப் போட்டியாக் கதைத்துச் சண்டை பிடிப்பினமோ? ஒரு இடத்திலும் இப்பிடி நடக்க வாய்ப்பே இல்ல.” திடீரென்று பேச்சைத் தொடர்ந்தவனின் குரல், ஏனோ மிக மிக இறங்கியிருந்தது. தன்னுள் உள்ள நேசத்தின் எதிரொலி அவளுள் உள்ளதா என்பதை அறியாததன் ஏக்கம், அவனையும் அறியாது அவன் தொனியில் தொக்கி நின்றது.
கணவன் பேச்சில் முழுமையாகத் தன்னுணர்வு பெற்றவள், சட்டென்று அவனிலிருந்து விடுபட முயன்றாள். அதற்குச் சிறிதும் அனுமதியாதவனோ, தன் கரங்கள் கொண்டு அவளை வளைத்துப் பிடித்து, உணர்வுகளில் பளபளத்த அவள் வதனத்தை உற்று நோக்கினான்.
“நீர், இந்தக் கலியாணம் பிடிக்கேல்ல, என்னையும் பிடிக்கேல்ல எண்டு சொல்லுறதக் கேக்கேக்க எப்பிடி இருக்குது தெரியுமா? உண்மையாவே சரியான கஷ்டமா இருக்கு மகிழ்.” ஆழ்ந்து சொன்னவாறே விழிகளை இறுக மூடிக்கொண்டான்.
அதைச் சொல்லும் போதும், பின்னரும், கணவன் முகத்திலோடிய வேதனையின் சாயலில், அவன் கரம் தன் உடலில் தந்த அழுத்தத்தில் இவள் இதயத் துடிப்போ பலமடங்கு எகிறியது. கணவனின் கம்பீரமான முகத்திலோடிய வருத்த இரேகைகளும், வார்த்தைகள் தாங்கி நின்ற வேதனையும், இதுவரை அவளுள் வியாபித்திருந்த மயக்கத்தை மேவி, பரிதவிப்பை உருவாக்கியது.
“உமக்கு உண்மையாவே என்னைப் பிடிக்கேல்ல எண்டாலும் அதையே திருப்பி திருப்பிச் சொல்லாதேயும் மகிழ். ப்ளீஸ்!” என்றவன், அவளை இறுக அணைத்துக்கொள்ள, அவளோ அப்படியே சப்தமும் ஒடுங்கி விட்டாள். அவன் குரலும், சொன்னவிதமும் அவளை சம்பூர்ணமாக அலைக்கழித்து, தன்னுள் இழுத்துக்கொள்ள முயன்றது.
‘என்ன இவர்! கொஞ்சம் முதல் என்ன மாதிரி கோவப்பட்டுக் கதைச்சவர். இப்ப இப்பிடி?’ உள்ளம் தடுமாறியவளுக்கு, அவனுக்குப் பார்த்த முதல் பொம்பளை நீ தான். பார்த்ததும் சம்மதம் சொன்னானாம் என்றது மீண்டும் நினைவில் பளிச்சிட, தன் மீதே கோபம் கொண்டாள்.
‘ச்சே…நானும் தான் அவருக்கு மேலால கதைச்சனான். என்னைத் திருத்தவே ஏலாது போல இருக்கே! என்ர வாயை அடக்கவே ஏலாதா?’ தன்னுள் கோபத்துடன் சலித்துக் கொண்டவளுக்கு, தாயின் தொடர் கண்டிப்புகளும், போகும் பொழுது தன் மாமா சொன்னதும் நினைவில் எழுந்தது.
“உன்ர அம்மாவுக்கு எவ்வளவோ செய்ய நினைச்சன் மகிழ். அதுக்கு அவள் இண்டுவரை கொஞ்சமும் இடம் தரேல்ல. அது எல்லாத்தையும் சேர்த்து உனக்குச் செய்ய விரும்பிறன். உதய் அருமையான பிள்ளை! சரவணன் குடும்பம் போல நிச்சயம் வராது. அங்க நீ எப்பவும் சந்தோசமா இருக்கோணும். உன்னால அவேயும் சந்தோசப்பட வேணும். அது மட்டும்தான் என்ர பெரிய ஆசை!” என்ற மாமாவின் குரல் காதுகளில் ஒலிக்க, ‘தொட்டதுக்கும் நீலிக் கண்ணீர் விடுற ஆட்களைக் கண்ணிலயே காட்டக் கூடாது!’ என்கின்ற மகிழ், தன்னையும் அறியாது கண்ணீர் விட்டாள்.
மனைவியை இறுக அணைத்திருந்தவன், அவளையும் அவளின் அமைதி தந்த இதத்தையும் சொட்டுச் சொட்டாக இரசித்தான். அவனுள் சற்று முன்னிருந்த இறுக்கம் மெல்ல மெல்ல விலக, அவளுடன் கதைக்க முயன்றவன், அவளுடல் இலேசாகக் குலுங்குவதைக் கண்டதும், திடுக்கிடலுடன் தன்னை மீட்டுக்கொண்டே, “மகிழ்!” அவள் முகத்தை நிமிர்த்த முயன்றான்.
அவளோ, அவன் நெஞ்சில் தன் முகத்தை நன்றாக அழுத்தியவாறே விக்கி விக்கி அழ, திகைத்துப் போனான், உதய்.
“மகிழ், இப்ப என்ன நடந்திட்டு எண்டு இப்பிடி அழுகிறீர்? இந்தா நான் கையை எடுத்திட்டன், நீர் தள்ளிப் போய் இரும். சொறி மகிழ்!” என்று, கன்றிய குரலில் சொல்லிக்கொண்டே கரங்களை விலக்கிக்கொண்டவனை, அப்பட்டமான திடுக்கிடலோடு நிமிர்ந்து பார்த்தாள், அவன் மனைவி.
“இஞ்ச பாருங்க, நான் ஒண்டும் அதுக்காக அழேல்ல சரியோ!” அழுகையிலும் சீறியவளை, ஒரே பாய்ச்சலில் குடியேறிய சுவாரசியத்துடன் நோக்கின, அவன் விழிகள்.
“ஓ! அப்பிடியா? அப்பச் சரி!” என்றவன், மீண்டும் அணைக்க முயல, அவளோ துள்ளி விலகினாள். அதே வேகத்தில் அவனை முறைத்துக்கொண்டே சோஃபாவில் மறு கரையில் சென்றமர்ந்து கொண்டாள்.
இப்போது ஏனோ அவள் செய்கையில் கோபமெழவில்லை அவனுக்கு. அமைதியாக அவளைப் பார்த்திருந்தான், உதய்.
சில நிமிடங்கள் தலைகுனிந்திருந்துவிட்டு மெல்ல நிமிர்ந்தவள், தன்னையே நோக்கியிருந்தவன் விழிகளைச் சந்திக்கத் தயங்கி மீண்டும் தாழ்த்திக்கொண்டாலும், “சொறி!” என்று,மெல்ல முணுமுணுக்கத் தவறவில்லை. அதைக் கேட்ட அவள் கணவன் மனமோ, கண்ணிமைக்கும் பொழுதில் மலர்ந்தே விட்டது. சட்டென்று நகர்ந்து அவளருகில் சென்றமர்ந்தான்.
“சொறியா? என்னத்துக்கு மகிழ்?” மென்மையாகக் கேட்டபடி, தன்னுடன் நெருங்கியமர்ந்தவனை மீண்டும் ஒருமுறை பார்த்தவளின் இதழில் சிறு மலர்வொன்று எட்டிப் பார்த்தது.
“நான்…நான் தான் சொன்னனே, எனக்கு எதையும் மறைச்சு வச்சுக் கதைக்கத் தெரியாது. எனக்கு உங்களில நிறையக் கோவம் இருக்கு!” சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்தவளின் உதடுகள் துடிக்க, மீண்டும் விழிகள் பளபளத்தன. “பச்..” என்றவாறே, விழிகளை அழுந்த துடைத்தவள் செய்கையை சிறுவியப்புடன் பார்த்திருந்தான், உதய். அவளின் இந்த ஒளிவு மறைவற்ற, தயக்கமற்ற குணம், ஏனோ அவனுக்குச் சட்டென்று பிடித்துப் போனது. அவள் செய்கைகள் எதிலும் செயற்கைத் தன்மை இருக்காததை உணர்ந்தவனுக்கு, அவள் மீது இன்னும் இன்னும் சுவாரசியமும் நேசமும் தான் அதிகரித்தது.
“நான், என்ர வளர்ப்பு, வளர்ந்த சூழல், குறிப்பா என்ர வீடு எண்டு எல்லாமே உங்கடய விட வேற. அது உங்களுக்கே தெரியும். அப்பிடியிருக்க, உங்கள மாப்பிள்ளை எண்டோன்ன உண்மையாவே பயந்து போனன்.” சொல்லி நிதானித்தாள். “முதல் முதல் பளைக்கு வந்திருந்த நேரம் என்ன மாதிரி எல்லாம் படம் காட்டினீங்க!” என்றுவிட்டு ஒரு வெட்டும் பார்வை பார்த்தாள்.
“வேணாம் எண்டு அம்மாட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்தன். காதிலயும் வாங்கேல்ல. அப்பத்தான், அம்மாவ உங்கட சித்தப்பாவுக்கு பேசினது எல்லாம் தெரிய வந்திச்சு.” என்று சொல்லி நிறுத்தியவள், சிறிது நேரம் முன்னிருந்த சுவரை வெறித்தபடி இருந்தாள். “தன்ர நண்பனுக்கு ஓமெண்டு சொல்லி அவ்வளவு ஆயத்தங்கள் செய்த பிறகு அந்தக் கலியாணத்த நடத்தேலாமல் போயிற்று எண்ட கவலை மாமாக்கு இப்பவும் இருக்கு. அதனால தான் கலியாணத்துக்குச் சம்மதம் எண்டு சொன்னனான்.” என்றவள், மீண்டும் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஹா..ஹா…மகிழ் ஹா..ஹா..” வாய்விட்டு நகைத்தான், உதய். அவன் நகைத்து முடித்தும், அவள் முறைப்பை விடவில்லை. மனைவியைக் கூர்மையாக அளவிட்டான், உதய் . “இப்பவும் என்னில கோவம் இருக்கா மகிழ்? அல்லது…” பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் குவித்து, “ஒரு கொஞ்சூண்டு சரி புருசனாப் போய்ட்டானே, போனால் போகட்டும் எண்டு அன்பு வந்திருக்கா?” கண் சிமிட்டலுடன் அவன் கேட்ட பாவனையில், இளம் முறுவலால் நிறைந்தது அவள் அழகு வதனம்.
அதைப் பார்த்திருந்தவனோ, அவளை இழுத்தணைத்துக் கொண்டான். அவன் செய்கையில் எதுவித எதிர்ப்பையும் காட்டாது அவனோடு ஒன்றியதன் மூலம், அவன் கேள்விக்கு பதில் சொன்னாள், அவன் மனைவி. அவனோடு வார்த்தைக்கு வார்த்தை வாயாடிய கடந்து சென்ற நிமிடம் வரை, அவன் இவ்வளவு இலகுவானவன் என அவள் அறிந்திருக்கவில்லை. இப்போது அறிந்து கொண்டவள் இதயமோ, இதமாய் மலர்ந்தது என்பதுதான் உண்மை.
“ஆனா…” அவன் மீது சாய்ந்தவாறே ஆரம்பித்தவள், நிமிர்ந்து அவனை ஏறிட்டாள். “உங்கட பாட்டி அப்பிடிச் சொன்ன பிறகு, என்ர இடத்தில நீங்க இருந்திருந்தா என்ன செய்வீங்க உதய்? நான் அண்டைக்கு எவ்வளவு வருத்தப்பட்டன் எண்டு உங்களுக்குத் தெரியுமா? அப்பப் பார்த்து நீங்களும் எடுக்க…” சொல்லிக்கொண்டே விசும்பியவளை அணைத்துக் கொண்டவன், “வேணாம் விடும் மகிழ், இனிமேல் அதைப் பற்றிக் கதைக்க வேணாம்!” கனிவாகத் தேற்றினான்.
“உம்மப் பாத்து அப்பிடி ஆரும் சொல்ல நான் விட்டிருவனா மகிழ்? நீர் எப்பிடி அப்பிடியெல்லாம் நினைப்பீர்?” முறைத்தவன், அதன் பின்னர் சிறிது நேரம் அவளைப் பேச அனுமதிக்கவில்லை.

error: Alert: Content selection is disabled!!