அறையில் ஓடிக்கொண்டிருந்த ஏசியின் மெல்லிய ஒலியும், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த கடிகார முட்களின் நகர்வும் கூட, உணர்வுகள் சங்கமிக்க அமர்ந்திருந்த அப்புத்தம் புதுத்தம்பதியைச் சிறிதும் கலைக்க விரும்பாது, தம்மை அடக்கிக்கொள்ள முயன்றன. அங்கே, வாய்ப் பேச்சுகள் விடைபெற்றிருக்க, அவ்விள உள்ளங்களிரண்டும் ஒன்றையொன்று புரிந்துகொள்ள முயன்று பார்த்தன.
அவள் மீது வளர்த்த நேசத்தால், அவள் செய்கைகளில் ஆத்திரம் கொண்டவனோ அதை மறந்து ஆரவாரித்தான் என்றால், தட்டுத் தடுமாறிய உள்ளத்துடன் தாலி வாங்கிக் கொண்டவளோ, கணவன் என்ற உரிமை தந்த திடத்தில் அவனைப் புரிந்து கொள்ள முயன்றாள். இதுவரை மனத்தில் உழன்ற தயக்கமும் கலக்கமும் களைந்து, தன் கணவன் என்பவனை நேசிக்க முதல் அடியை எடுத்து வைக்க முயன்றாள், மகிழ்.
எவ்வளவு நேரம் இப்படி இருந்தார்களோ தெரியாது! முதலில் சுயத்தை அடைந்தவன், உள்ளம் நிறைந்த உவகையில் இருந்த உதய் தான். “மகிழ்!” மீண்டும் மென்குரலில் அழைத்தவன் கரங்கள் கூட பேச முயன்றன. அவள் மௌனம் அவன் முகத்தில் முறுவலைத் தர, “அப்பாடி! இந்த ஜான்சிராணிய எப்பிடி அடக்கிறது எண்டு முதல் நாளே வழி தெஞ்சிட்டே! வேற லெவல் உதய் நீ! அதுதானே…நீ ஆரு?” பரிகாசமாக ஆரம்பித்ததும், அவனிலிருந்து விலக முயன்றாள் அவள். அப்போதும், ஏனோ அவள் குரல் எழவில்லை.
“ஹா..ஹா..மகிழ்! என்னடா? கதைக்கிறதை எல்லாம் மறந்திட்டீர் போல!” நக்கல் அடித்தவனை, செம்மையேறிய வதனத்தால் முறைக்க முயன்றவள், “விடுங்க உதய்…” அவனிடமிருந்து விலக எத்தனித்தாள்.
மனைவியின் முகத்தையே ஆசையுடன் பார்த்தவன் நீண்டதாக பெருமூச்செறிந்தான். “ஹ்ம்ம்..இந்தக் கனடாக்காரன்கள் என்ர வாழ்க்கையில விளையாடிப் பாக்கிறான்கள் மகிழ்!” என்று அவன் சொன்ன தொனியில் அவளைச் சூழ்ந்திருந்த இதமும் மயக்கமும் சட்டென்று விலகிப்போய்ட்டு. “என்னது? கனடாக்காரன்கள் எண்டா, ஆர் என்ன செய்தவே?” கேட்டவளை, சோகமாகவே பார்த்தான் அவன்.
“பச்…நான் அவேக்கு என்ன கெட்டது செய்தன் மகிழ்? ஒவ்வொரு வருசமும் எவ்வளவு டக்ஸ் கட்டுறன். ம்ம்..” மீண்டும் சொல்ல, அவளோ கலக்கமடைந்துவிட்டாள். “என்ன நடந்தது உதய்?” குழப்பத்துடன் அவள் கேட்ட பாவனையில், அவன் விழிகளில் தெரிந்த ஏக்கத்தையும் மீறி, இதழ்கள் நகைப்பில் சுருங்கின. அவன் மனைவி சுதாகரித்துக்கொண்டாள். “இஞ்ச பாருங்க, என்னை நக்கல் அடிக்கிறீங்களா?” சிணுங்கினாள்.
“இல்ல மகிழ், உண்மையாவே இண்டையான் திகதிக்கு என்ர முதல் எனிமி எண்டா அது கனடா அரசுதான்!” தீவிரமாகச் சொல்ல, இவள் மீண்டும் கலவரம் அடைந்துவிட்டாள். ‘இதென்ன இவர் இப்பிடிச் சொல்லுறார்? ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் தானே செய்யிறார்! ஏதோ போதை மருந்து கடத்துறது போலக் கதைக்கிறார்?’ கலவரத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவள் கலவரத்தைக் கண்டவனோ, “டேய் …பொறும் பொறும், இல்லாதது பொல்லாதது எதையும் கற்பனை செய்திராதேயும்.” அவள் முகத்தை இரு கரங்களாலும் ஏந்திக் கொண்டவன், நேசத்துடன் அவள் விழிகளை ஊடுருவினான்.
“கலியாணம் செய்ய முதல், உம்ம கனடாவுக்குக் கூப்பிட விடமாட்டன் எண்டிட்டாங்களே மகிழ்! இதுவே ஐரோப்பா எண்டா, கேர்ள் ஃப்ரெண்ட் எண்டு முதலிலயே ஸ்பொன்சர் செய்யலாம். பச்! இங்கயும் அப்பிடி இருந்திருந்தா அங்க கூப்பிட்டிட்டுக் கலியாணம் செய்திருக்கலாம்!” என்றதும், “அட இதுதானா…” தன்னையுமறியாது வாய்விட்டாள், அவன் மனைவி.
பதிவுத் திருமணத்தை முதல் செய்துவிட்டு, கனடா வந்ததும் கல்யாணத்தைச் செய்வோமா என்று சரவணன் கேட்டான். நாங்கள் திருமணத்தைப் பார்க்க வேண்டாமா என்றதும் தான், திருமணத்தையே செய்வோம் என்று சம்மதித்தான் என, மாமா, தாயிடம் சொன்னது அவள் நினைவில் வந்து சென்றது. “இதுக்குப் போயா இப்பிடி கலங்க வச்சிங்க? எப்பிடியும் ஒரு வருசதுக்குள்ள விசா கிடைச்சிரும் எண்டு மாமா சொன்னார்.” அவனுக்கே தகவல் வேறு சொன்னாள்.
கேட்டவன் முகம் மாற, சட்டென்று அவன் கரங்களை விலகிக் கொண்டான். கணவனின் திடீர் மாறுதலைக் கண்டவள், “நான் இப்ப என்ன சொல்லிட்டன் எண்டு முறைக்கிறீங்க?” விடாது கேட்கவும் செய்தாள். “அப்ப, இன்னும் ஐஞ்சு நாள்களில நான் கனடா போயிருவன் எண்டத்தில உமக்குக் கொஞ்சம் கூட கவலையில்லை என்ன? அதுதானே, விசா எப்பக் கிடைக்குமோ எண்டு எவ்வளவு விட்டேற்றியா மாமிட்டச் சொன்னீர். அதையும் நான் கேட்டனான்.” அவன் குரலில் ஏக்கமும் கோபமும் கலந்திருந்தது.
கணவனின் கோபத்தை, இப்போது அவளால் கொஞ்சமும் இரசிக்க முடியவில்லை. உண்மையில் அவள் இதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லையே! கணவன் பற்றி எண்ணியிருந்த கலக்கமே இப்போதான் விடுபடத் தொடங்கியிருக்கையில், அவன் பிரிவைப் பற்றி அவள் சிந்தித்துப் பார்க்கவில்லைதான். ஆனால் அவனோ!
“என்ன உதய் இது? இஞ்ச பாருங்க, உங்களுக்கே நீங்க கதைக்கிறது சரியா இருக்கா? இப்பதான் ரெண்டுபேரும் சுமுகமாகக் கதைக்கத் தொடங்கி இருக்கிறம்!” என்றவளை, தொடர்ந்து முறைத்தான் அவன். அவனின் செய்கையைப் பார்த்தால், இவளுக்கு சிறுபிள்ளைகள் அடம்பிடிப்பது போலவே இருந்தது.
மென்மையாக அவன் கரங்களைப் பற்றிக்கொண்டாள், மகிழ். நீங்க திரும்பிப் போறதைப் பற்றி எல்லாம் உண்மையாவே நான் நினைச்சுப் பாக்கேல்ல உதய். ஆனா, அம்மாட்டச் சொன்னது, அம்மாவுக்கு என்னை விட்டா வேற ஆர் இருக்கினம் உதய்?” என்றவள் குரல், தாயின் நினைவில் தழுதழுத்தது. “என்ர யோசினை எல்லாம், நான் கனடாக்கு வந்தப்பிறகு அங்க எப்பிடிச் சமாளிக்கப் போறன் எண்டதும்…” சொன்னவள், அவன் முறைப்பில் பூவாக மலர்ந்தாள். “உண்மையாவே, இப்ப இந்தக் கணம் அந்தக் கவலை என்ர மனசில இல்ல உதய். உங்களோட இருக்கேக்க எதையும் சமாளிக்க ஏலும் எண்ட நம்பிக்கை குட்டியூண்டு வந்திருக்கு. இனி, நீங்க நடந்து கொள்ளுற விதத்தில அது வளர்றதும் அல்லது அப்பிடியே இல்லாமல் போறதும் இருக்கு!” நிமிர்வாகச் சொன்னவள், அவன் முகம் போன போக்கில் நகைத்தாள்.
மனைவியின் நகைப்பில் மூச்சடைக்க மூழ்கியவன் இதயம் பெருமையால் விம்மியது.எவ்வளவு தடுமாற்றமும் கோபமுமாக சற்றுமுன் அவ்வறையினுள் நுழைந்தவன், கடந்த இச்சிறு பொழுதில் உன்னில் நம்பிக்கை இருக்கு என்று, மனைவி வாயால் கேட்டு விட்டானே! ‘இதைவிட வேறென்ன வேணும்? மணவாழ்வின் அடிக்கல்லே இந்த நம்பிக்கைதானே! அது, உறுதியா இருக்கேக்க வாழ்க்க நிலைச்சு இருக்கும் எண்டதில சந்தேகமே இல்லையே!’ எண்ணிக்கொண்டவன் நெஞ்சம் நிம்மதியால் நிறைந்து போனது.
“அடுத்து, அம்மா உதய். அவா தனிய அந்த வீட்டில எப்பிடி இருக்கப் போகிறார் எண்ட கவலை. இதை உங்களிட்டச் சொல்லுறதில எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை!” கண்கள் கலங்கத் தொடர்ந்தவளை, யோசனையோடு கூர்மையாக அளவிட்டான், அவள் கணவன்.
“தனிய ஏன் மகிழ்? உம்மட மாமா வீட்டில இருக்கலாமே! ராசன் அங்கிளுக்கு மாமில நல்ல அக்கறையும் அன்பும் இருக்கே! அவர் பாத்துக் கொள்ளமாட்டாரா என்ன?”
“மாமா வேணாம் எண்டு சொல்லுவாரா உதய்? இல்லையே! ஆனா, நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டன். அம்மாவுக்கு விருப்பம் இல்ல.”
“ஒஹ்…” என்றதுடன் அமைதியானான், உதய். ‘உம்மட அப்பா..’ நாவின் நுனிவரை வந்ததை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன், “சரி விடும், நீர் சொன்ன மாதிரி விசா கிடைக்க கடைசி ஆறுமாதங்களுக்கு மேலேயே செல்லும் மகிழ். பாப்பம், என்ன செய்யலாமெண்டு.” என்றவன், “நானும் முக்கியமான விசயம் ஒண்டு சொல்லோணும்…” இழுத்தான்.
நடு நிசி கடந்திருக்க, இருவருமே உடலிலிருந்த அயர்வையும், களைப்பையும், சுற்றுப்புறத்தையும் உணராதிருந்து உரையாடிக் கொண்டிருந்தனர். சண்டையிலும் சீறலிலும் ஆரம்பித்த அவர்கள் உரையாடல், இப்போது செல்ல முறைப்பும், கொஞ்சல் குழைவுமாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஏதோ சொல்ல வந்த கணவனை அவள் பார்த்திருக்க, அவனோ, “அது என்ன எண்டா மகிழ், அண்ணாக்கள் ரெண்டு பேரும் கலியாணம் முடிச்சு ரெண்டு மாதங்கள் வரைக்கும் இங்க நிண்டுபோட்டுத்தான் கனடா வந்தவே. பிறகு, சுமி அண்ணி அங்க வந்து சேர ஒரு வருசமும், கௌசி அண்ணி ஒரு ஏழெட்டு மாதங்களும் செண்டுதா… அந்த நாட்களில அண்ணாக்களும் அவேண்ட ஃபோனும் பட்டபாட்ட நான் பக்கத்தில இருந்து பாத்தனான் எல்லா? அப்பவே ஒரு முடிவுக்கு வந்திருந்தனான்!” சொல்லி நிறுத்தி, மனைவியை உற்று நோக்கியவன் விழிகள் அன்பில் பளபளத்தன.
“சொன்னா நம்பமாட்டீர் மகிழ், அவே ரெண்டு பேரும் ஒருமாதிரி விசர் பிடிச்ச ஆக்கள் போலத் திரிஞ்சவே!” நக்கலாகச் சொல்லிவிட்டு நகைத்தவன், “அதால, அப்பவே நான் முடிவு செய்திட்டன், எனக்கும் இங்க கலியாணம் நடந்தா என்ர மனிசி அங்க கனடாக்கு வந்த பிறகுதான் எங்களுக்க எல்லாம். அதாலதான் ராசன் அங்கிள் கண்டியில புக் பண்ணியிருந்த ஹோட்டலையும் கான்சல் பண்ணச் சொன்னன்!” என்றவன், குனிந்திருந்த மனைவியின் முகவாயைப் பிடித்து நிமிர்த்தி, “உமக்கு இதில ஆட்சேபனை ஏதும் இருக்கா மகிழ்?” என்று கேட்டதும், அவளோ ‘இல்லை’ என்று தலையாட்டிக்கொண்டே கணவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
மனைவியைச் சுற்றித் தன் கரங்களால் வளைத்துக் கொண்டவன், “உமக்கு எப்படியோ தெரியாது மகிழ், என்னால இப்பவே உம்ம விட்டுட்டு இருக்க ஏலாது. விசா கிடைக்கும் வரைக்கும் எப்பிடி நாட்களைக் கடத்தப் போறனோ தெரியாது! இந்த அழகில உம்மோட…” சொல்லிக் கொண்டே மனைவியை இறுக அணைத்துக்கொண்டவன், பேச்சைத் தொலைத்து விட்டிருந்தான்.

