அத்தியாயம் 21
“அம்மா நான் ரெடி, இந்தப் பின்னை மட்டும் குத்திவிடுங்க!” பரபரப்பாக தன் முன்னே வந்து நின்ற மகளை ஏற இறங்கப் பார்த்த மங்கை, ஒரு கணம் அயர்ந்து நின்றார். ‘இவ்வளவு வடிவா என்ர மகள்!’ எண்ணியவரின் விழிகள் கலங்கிப் போயின. ‘ஐஞ்சு மாசங்களுக்கு முதல் , கலியாணமா? இவரையா? வெளிநாடா? எண்டு என்ன பாடுபடுத்தினவள்! இப்ப, அவள் இவளா எண்ட கணக்கில் எல்லா மாறிட்டாள்!’ மங்கையால் வியாக்காது இருக்க இயலவில்லை.
‘மனசுக்குப் பிடிச்ச விதமா வாழ்க்கைத்துணை அமைஞ்சிட்டா மணபந்தத்தின் மொத்த வர்ணமும் அந்த ஆனாலும் பெண்ணிலும் வெளிப்பட்டு நிற்காமல் இருக்குமா என்ன?’ அவர் மனதிலெழுந்த இவ்வெண்ணத்தின் அடியில் நிச்சயம் சொல்லவொண்ணாக் கசப்புணர்வு. அதிலிருந்து, மிகவும் இலாவகமாக மகள் மீது கவனத்தைத் திருப்பியவர், ‘அதை என்ர மகளில முழுமையா பாக்கக் கூடியதா இருக்கு!’ தாயாக உள்ளம் மகிழ்ந்தார். மணவாழ்வில், கடந்து செல்லும் ஒவ்வொரு கணத்திலும் அவ்வழகு வர்ணங்களின் ஜொலிப்பு அதிகரித்துச் செல்லுமே! அப்படியே தன் மகள் வாழ்வும், என்றைக்கும் மங்கா ஒளியுடன் இருக்க வேண்டும் என்று மனதார உருப்போட்டுக்கொண்டார் மங்கை.
மணவாழ்வில் எதனால் தோற்றேன் என ஆராய்ந்து பார்ப்பதில் தன் நேரத்தைச் செலவிட ஒருபோதும் முயன்றதில்லை, இவர். அவர் மனத்தை ஆக்கிரமித்திருந்த, கோபமும் வெறுப்பும் அதற்குத் துளியும் அனுமதி தர மறுத்து விட்டதே! நியாய அநியாயங்களைச் சீர்தூக்கி, ஆற அமர யோசிக்கவும் நினைக்கவில்லை, அவர். அவரிதயமோ, மன்னிப்பையோ விட்டுக் கொடுத்தலையோ துளியளவும் ஸ்பரிசிக்கவும் முனையவில்லை. அதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். மேலுள்ளவற்றைச் செய்வதால், தன் வாழ்வில் தான் சகிக்க முடியாத கசப்பென்று உணர்ந்தவற்றை, மாற்றவே முடியாதென்று அவர் முடிவெடுத்திருந்ததே ஆகும்.
தன் வாழ்க்கை நகைப்புக்கும் நக்கலுக்கும் ஆளானதன் மொத்தப் பொறுப்பும் தன் முட்டாள்தனத்துக்கு உரியது என்று தன்னைத்தானே சாடிக் கொண்டார். உயிராக நினைத்த தாய்க்கும் தமையனுக்கும் துரோகம் செய்தாரே, அதற்கான தண்டனைதான் அவரின் இந்த தனிக்கட்டை வாழ்வு!’ என முடிவெடுத்து, குடும்ப வாழ்வெனும் ஏட்டை இறுக மூடிவிட்டவர், அதை எப்போதுமே புரட்டிப் பார்க்க நினைக்கவில்லை. ஆனால், தன் உயிரெனக் கருதும் மகள் ஆரம்பித்த வாழ்வுப் பாடம், காலா காலமாக உயிர்ப்புடன் தொடர வேண்டுமென்று நித்தமும் மன்றாடிக்கொண்டார்.
தன் வாழ்வில் தான் இழந்தவை அனைத்தையும் ஈடுகட்டுவது என்றால், அது தன் செல்லத்தின் மகிழ்வொன்றுதான் என எண்ணியவர் விழிகள், மகளை விட்டு நகர மறுத்தன.
திருமணப்பட்டும், புத்தம் புதுத் தாலிக்கொடியும், நெற்றியிலும் உச்சியிலும் திலகமுமாக மங்களகரமாக ஒளிர்ந்தவளை, ஆசையாகப் பார்த்து நின்றவரை உலுக்கினாள், மகிழ்.
“அம்மா, என்னம்மா இப்பிடிப் பாக்கிறீங்க? சொல்லச் சொல்ல கேட்காமல் அவர் வேற இவ்வளவு நேரமா ஃபோனில கதைச்சுக்கொண்டிருந்தவர். நேரம் போய்ட்டு. உஷாவும் ஷீலாவும் மாமா வீட்டதான் வருவினம். கெதியாக் குத்திவிடுங்க!” என்றவள் குரலில் கலைந்து, சேலை முகதலையைப் பிடித்து இரவிக்கையுடன் சேர்த்துப் பின்புறமாகக் குத்தி விட்டவர், மகளை அணைத்து உச்சி முகர்ந்தார். பின், “நானும் மாமா வீடு வரை வாறன் வா!” வீட்டைப் பூட்டிக் கொண்டு மகளுடன் சேர்ந்து தமையன் வீடு நோக்கி நடந்தார்.
“பதினொருமணிக்கு அம்மம்மாவ கண் டொக்டரிட்ட காட்டோணும் எண்டவர் மாமா. அதற்குப் பிறகு, எவ்வளவு நேரமெண்டு எங்களுக்காகப் பாத்துக்கொண்டு நிக்கிறது? எங்களோட படிச்ச பிள்ளைகள் எல்லாரும் வருகினம்மா. கலியாணம் முடிஞ்சு நாங்க வர எப்பிடியும் பின்னேரம் ஆகும். அதுவரைக்கும் எங்களைக் கூட்டிக்கொண்டு வாறதுக்காக மாமா நிக்கத் தேவேல்ல. அதுவும் அம்மம்மாவோட. மூண்டு பேருமாக வரமாட்டமா என்ன ?” தொடர்ந்து முணுமுணுத்த மகளை முறுவலுடன் பார்த்தார், மங்கை.
“உங்களத் தனிய விட்டுட்டு வர அண்ணா ஓமெண்டாலும் அம்மா சம்மதிக்கமாட்டார் மகிழ். நல்லூரடிக் கனகம் அத்த வீட்டுக்கு நிறைய நாளாப் போகேல்ல எண்டு கொண்டிருந்தவா அம்மா. இண்டைக்கு அங்க போக இருக்கினம். நீங்க கலியாணம் முடிஞ்சோன்ன சொன்னா அப்பிடியே வந்து கூட்டிக்கொண்டு வரச் சரியா இருக்கும்.” என்ற தாயை பார்த்துப் பழிப்புக் காட்டினாள், மகிழ்.
“சுடுதண்ணிக் கிழவி! இத்தினை வருசங்களா ஏசிப்பேசினத்துக்கு எல்லாம் சேர்த்து வச்சு பாசமழை பொழிஞ்சு ஒருவழி பண்ணுறாவே!” ஏற்ற இறக்கத்துடன் சொன்ன மகளை முறைத்தார், மங்கை.
“நீ அரைவாசி நேரம் ஏச்சு வாங்கிறதே இந்த வாய்த் துடுக்காலதான்!” மகளைச் செல்லமாக முறைத்தவர், “அம்மா இப்பிடி உன்னில அக்கறை காட்டுறதைப் பாக்கேக்க, மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமாம்மா?” தழுதழுத்தார். “தாலி கட்டி முடிக்கிற வரை இந்தக் கலியாணம் நடக்குமெண்டு அம்மாவுக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்ல!” தொடர்ந்து சொன்னார்.
“கிழவி சொல்லுற கதைகள எல்லாம் நம்பாதீங்கம்மா! ஒரே பேத்திட கலியாணத்துக்கு வராம இருந்து என்னத்தக் கண்டீங்க பாட்டி எண்டு, உதய் கடிச்சவர் எல்லா? அதனால தான் என்ர விசயத்தில கொஞ்சம் மாறி இருக்கிறா. மற்றும்படி கிழவி இன்னும் அடத்திலதான் இருக்கிறா. இல்லையெண்டா , உங்களோட முகம் குடுத்துக் கதைக்கோணுமே. என்னில மட்டும் திடீரெண்டு பாசம்! நடிப்பு அம்மா நடிப்பு!” என்றவளாலும், கல்யாணம் முடிந்து, கணவனும் கணவன் குடும்பமும் கனடா சென்ற பின், பளைக்கு திரும்பி வந்த தன்னை, சரசு அணைத்து உச்சிமுகர்ந்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாதுதான்.
அம்மம்மா என்ற உறவின் முதல் ஸ்பரிசம் அது! அதை நினைக்கையில் இப்போதும் அவளுள்ளம் சிலிர்த்தது. அவரின் அரவணைப்புக்காக நான் ஒன்றும் ஏங்கவில்லை என, மனம் வீம்பாக நினைத்தாலும், அவரின் ஒதுக்கம் அவளைப் பாதிக்காமலும் இல்லை என்பதையும் ஏற்றுக் கொண்டாள், மகிழ்.
“அப்பாடா! ஒருவழியா கலியாணம் முடிஞ்சிட்டு. கனடா அனுப்பும் மட்டும் பத்திரமாப் பாத்து அனுப்பிரோணும். இல்லையோ, அதை இதைச் செய்திருவாள் எண்டு இப்பவும் கிழவிட மனசில சந்தேகம் தான்!” மனவோட்டத்தை மீறி சொற்களை உதிர்த்திருந்தன, அவள் இதழ்கள். கேட்ட மங்கையோ திடுக்கிட்டுவிட்டார்.
“என்ன கதை மகிழ் இது? அம்மா என்னில் உள்ள கோவத்தில உன்னை ஏசினாலும் அடிப்படைக் காரணம் அக்கறைதான்மா. நான் செய்த வேலை அப்பிபடி! அதான் கோவத்துக்குக் காரணம்.” கசங்கிய முகத்துடன் தொடங்கிய தாயை, தோளோடு அணைத்துக்கொண்டே நடந்தாள் மகள்.
“அம்மா, எப்பவோ நடந்து முடிஞ்ச வேண்டாத கதையெல்லாம் என்னத்துக்கு இப்ப? சரி சரி, நீங்க சொல்லுற போலயே வச்சுக் கொள்ளுவம், கிழவிக்கு என்னில பே விருப்பம் ஓகே. சந்துரு மச்சானைவிடவும். இப்பச் சரியா?” என்றவளின், விழிகளால் தெறித்த நக்கலையும் மீறி ஒருவித வலி தெரிய, உள்ளே துடித்துப் போனார் மங்கை.
நடக்குமா இல்லையா என்ற கல்யாணம் நடந்து முடிந்ததில், பேத்தி மகிழ்வுடன் வளைய வருவதில் சரசுவிற்கு உள்ளே மகிழ்வுதான். அதுவும் அடிக்கடி ராசன் வீட்டுக்கும் தொலைபேசியில் அழைக்கும் உதய், “என்ர பெஞ்சாதிய முறைக்கிற வேலை வச்சுக் கொள்ளாதீங்க பாட்டி. பிறகு நான் பொல்லாத ஆளாகிருவன்!” என்று வெருட்டுவதில், “என்ர பேரன் வெள்ள மனசுக்காரன். தங்கம்!” என்று, உதய் பற்றி அன்போடு பெருமையாச் சொல்லிக்கொள்வார், சரசு.
ஆனாலும், சிறுவயதிலிருந்து இவளை ஒதுக்கியதை, அவர் பேச்சுக்களை மறப்பதுவும் இலகுவல்லவே! இந்த விடயத்தில் இனி என்னதான் செய்ய முடியும்? அம்மாவுக்கும் வயது போய்விட்டது, அவரும் பாவம் தானே என்பதே மங்கையின் எண்ணமாக இருந்தது.
கதைத்துக்கொண்டே ராசன் வீட்டை வந்தடைந்திருந்தார்கள். “ஏன்டி இவ்வளவு லேட்? அண்ணா கோல் எடுத்தவரோ?” என, காரருகில் நின்ற உஷாவும் ஷீலாவும் பிடித்துக்கொண்டார்கள். இதுவரை மகளிடம் கடிபடும் நண்பிகள், மகிழைப் போட்டுப் படுத்தும் பாட்டை இரசித்துப் பார்த்து நின்றார், மங்கை.
“உன்னத்தான் பாத்துக்கொண்டு நிண்டனாங்கள். சரி போவமா?” என்றபடி ராசனும் சரசுவும் வரவும் இதுவரை கலகலத்தவர்கள் இவர்களா என்ற வகையில் சட்டென்று காரின் பின்னிருக்கையில் ஏறியமர்ந்து கொண்டார்கள், மூவரும்.
“கவனமாப் போயிட்டு வாங்க!” விடைகொடுத்துவிட்டு உள்ளே வந்தார்கள், கோகிலாவும் மங்கையும். “ஏதாவது முக்கிய வேலையிருக்கா மங்கை? இல்லையெண்டா இங்கயே சமைப்பம்.” என்ற கோகிலா, வரவேற்பறையிலிருந்த சோஃபாவில் சென்றமர்ந்தார்.

