நெஞ்சினில் நேச ராகமாய் – 22

அத்தியாயம் 22.

“டொக் டொக்…” முன்வாயில் கதவின் முணுமுணுப்பு!
மெல்ல வாயிலருகில் வந்திருந்த மங்கை, ‘மகிழ எழுப்புவமா?’ நினைத்தவரின் பார்வை, மகளின் அறையைத் தொட்டு மீண்டது. மீண்டும், “டொக்..டொக்!”
“மங்கை, நான்தான்மா அண்ணா!” தொடர்ந்தொலித்த தமையனின் குரலில் சட்டென்று இவருள் பதற்றம். ‘அண்ணா! அதும் இந்த நேரத்தில்! என்னவா இருக்கும்? அம்மாவுக்கு ஏதாவது!’ பதைபதைத்தவாறே வாயிலைத் திறந்தவர், அங்கே தமையனருகில் நின்றவர்களைப் பார்த்ததும், அதிர்வும் ஆச்சரியமும் மின்சாரமாகத் தாக்க, அசைவற்றுப் போனார்.
“நான் நித்திர கொள்ளேல்லையே! அப்ப இது கனவு இல்ல.” முணுமுணுத்தவாறே, சிலையாக நின்ற தங்கையை முறுவலுடன் நோக்கினார், ராசன். “இப்பிடித்தான் மங்கை நானும் அதிர்ந்து போய் நிண்டனான். இவேண்ட விளையாட்டப் பாத்தியா? சந்துரு கூட ஒரு வார்த்தை சொல்லேல்லை!” என்றவர் குரலில் மகிழ்வு துள்ளியது.
“முதல் முதல் உன்ர மருமகன் வீட்டுக்கு வந்திருக்கிறார். அதும் நடுச்சாமத்தில எங்க மகிழ்? நித்திரையா? அவள எழுப்பம்மா!” சொல்லிக்கொண்டே, புன்னகையுடன் நிற்கும் உதய்யையும் தன் மகனையும், “உள்ள வாங்க.” வீட்டவராக வரவேற்றார்.
கணத்தில் சுதாகரித்துக்கொண்டார், மங்கை. “வாங்க தம்பி, உள்ள வாங்க. சந்துரு வாய்யா. இந்தா நான் அவள எழுப்புறன். அவள் உங்களக் கண்டா மயக்கம் போடப் போறாள் தம்பி. நீங்க ரெண்டு நாள்களாக கோல் பண்ணேல்ல எண்டு கொண்டு முணுமுணுத்தபடி இருந்தவள்.” உவகை பொங்க உரைத்தவாறே மகளின் அறையை நோக்கி நகர்ந்தவரை, “வேணாம் மாமி, எழுப்ப வேணாம். மணியப் பாருங்க, தூங்கட்டும். காலம கதைச்சுக்கொள்ளலாம். ” தடுத்தவாறே, உள்ளே நுழைந்தான் உதய்.
“அங்க எங்கட வீட்டில் தங்கலாம் எண்டா, காதிலயே வாங்காம இங்க வந்திட்டார்!” தங்கையிடம் குறைப்பட்ட ராசன், “இங்க உங்களுக்கு அவ்வளவா வசதி காணாது உதய். சொன்னாக் கேட்காமல், தங்களுக்கு இதுவே போதுமெண்டு மங்கை இருந்திட்டாள். நீங்க வரப்போறது தெரிஞ்சிருந்தா மகிழிட அறைக்கு ஏசி சரி போட்டிருப்பன்!” தவிப்பாகச் சொன்னார்.
இரு அறைகள், சமையலறை, சிறுகூடம் என, கச்சிதமாக இருந்த அச்சிறு வீட்டைச் சுற்றிக் கணத்தில் பார்வையை ஓட்டி எடுத்தவனுக்கு, ஏனோ அவ்வீடு மிகவும் பிடித்திருந்தது. “ஏசி எல்லாம் தேவேல்ல அங்கிள். மகிழும் மாமியும் இருக்கிற இந்த வீடே எனக்குப் பிடிச்சிருக்கு நீங்க ஒண்ணும் யோசிக்கவே தேவையில்ல!” என்றவனை, அவர்களோ, வியப்பாக நோக்கினர்.
“வெளிநாட்டில இருந்து வருகினம் எண்டோன்ன சொந்தக்காரர் அவேக்காகச் செய்யிற வசதிகளப் பாத்திருக்கிறன் உதய். எல்லா வசதிகளும் இல்லையெண்டா ஹோட்டல்களில தான் தங்குவினம். அதால தான் சொன்னன்.” என்ற ராசன், “தம்பி இங்க ரெண்டு கிழமைகள் நிப்பாராம் மங்கை. அவர் இப்பிடிச் சொன்னாலும், நாளைக்கு நீங்க மூண்டு பேருமா அங்க எங்கட வீட்டில வந்து நில்லுங்க!” என்றார்.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல அங்கிள், நாங்க இங்கயே இருக்கிறம்! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. உண்மையாவே!” என்றவனை, அப்போதும் தவிப்பாகவே பார்த்தார், ராசன்.
“சரி, அதக் காலம பாப்பம் அண்ணா.” என்ற மங்கை, “கலையும் வந்தவளா சந்துரு அல்லது?” அன்போடு விசாரித்தார்.
“இல்ல அத்த, இப்பப் பயணம் செய்யிறது அவ்வளவு நல்லம் இல்லை எண்டதால வரேல்ல. நாளாண்டைக்கு (நாளை மறுநாள்) நான் திரும்பிப் போகலாம் எண்டிருக்கிறான். கலையிட அம்மாவும் அப்பாவும் அவவோடதானே.” மூன்று மாதக் கருவைச் சுமந்து கொண்டிருக்கும் மனைவி பற்றிச் சொன்னவன்,“போவம் அப்பா, உதய் ரெண்டு நாள்களா நல்ல அலைச்சல், தூங்கட்டும்.” என்றபடி எழுந்தான்.
“கொஞ்சம் பொறு சந்துரு, ரெண்டு பேரும் ஏதாவது சூடாக் குடிக்கிறீங்களா?”
“வேணாம் மாமி, கோகிலா அன்ரி பால் தந்தவர். நாங்க வந்து ஒரு மணி நேரத்துக்கும் கூட.” என்றான், உதய்.
“சரி மங்கை, அப்பப் போயிட்டு வாறம் உதய். காலம சந்திப்பம்.” ராசன் மகனுடன் விடைபெற, கதவைச் சாத்திவிட்டுத் திரும்பிய மங்கை, “எனக்கு இன்னும் நம்பவே ஏலாமல் கிடக்குத் தம்பி! அப்ப, மகிழ் என்ன செய்வாள்?” வியந்தவர், “கைகால் கழுவுறது குளிக்கிறது எண்டா பாத்ரூம் பின்னால இருக்குத் தம்பி!” என்றவருக்கும், தமையன் கூறியது போல் வெளிநாட்டில் வாழ்ந்த மருமகனுக்கு, தம் வீட்டு வசதிகள் போதாதென்றே தோன்றியது.
“பின் பக்கமாவா? எப்பிடிப் போறது?” கேட்டுக்கொண்டே எழுந்தவன் சுவாதீனமாக சமையல் அறைப்பக்கமாக நடக்க, “வெளியில் இறங்கித்தான் போகோணும் தம்பி!” என்றவாறே அவனைத் தொடர்ந்தவர், “அண்ணா வீட்டில் அட்டாச் பாத்ரூமோட ரூம் இருக்கு. நாளைக்கு அங்க போகலாம். இங்க மகிழ்ட அறையில டபிள்பெட் கூட இல்ல. இண்டையான் பாட்டுக்குச் சாமாளிச்சுக்கொள்ளுங்க தம்பி.” என்றவாறே குளியலறையைக் காட்டினார்.
“எனக்கு இங்க தங்கிறதில ஒரு சிரமமும் இல்ல மாமி. நீங்க கொஞ்சமும் சங்கடப்படத் தேவேல்ல. மகிழ் பிறந்து வளர்ந்த இடத்தில், அவவோட சேர்ந்து ரெண்டு கிழமைகள் நிற்க வேணும் எண்ட ஆசையிலதான் வந்தனான். அதால, ஒண்ணுமே பிரச்சனை இல்ல!” என்றவன், கண்கள் கலங்கி நின்றவரைக் கனிவாகப் பார்த்தான்.
“திடீரெண்டு என்னைக் கண்டதும் மகிழ் என்ன செய்வா எண்டு பாக்க வேணும் எண்டுதான் சத்தமே போடாமல் வெளிக்கிட்டுட்டன். அதோடு, என்ர வீட்டுக்குச் சொல்லிவிட்டா வர வேணும்?” முறுவலோடு உரைத்து, “நீங்க போய்த் தூங்குங்க மாமி! பயணம் செய்த களைப்பு, சின்னக் குளிப்பு போட்டுட்டுப் படுக்கிறன்!” என, நகர்ந்த மருமகனை, மனமும் விழிகளும் நிறையப் பார்த்து நின்றார் மங்கை.
மருமகனை எவ்வித குறைகளுமின்றிக் கவனிக்க வேண்டுமே என்ற பதற்றத்தையும் மீறி, “விசா கிடைச்சிட்டா சரி, கவனமா வந்து சேர்!” என்றில்லாது, மருமகன் இப்படி நேரிலேயே வந்ததில் மிகமிக நிறைவாய் உணர்ந்தார், அவர். இவ்வளவு நாட்களும் பொத்தி பொத்தி, கண்டிப்பு, கரிசனை, பாதுகாப்பு என பார்த்து பார்த்து வளர்த்த மகளை, அவளுக்குப் பொருத்தமான ஒருவரிடம் தான் சேர்த்துள்ளோம் என்ற நிம்மதியுணர்வை, மருமகனின் இச்செய்கை இன்னும் இன்னும் வலியுறுத்தி விட்டதே! மகிழ்வோடு படுக்கையில் சாய்ந்தார், மங்கை.
கனடாவிலிருந்து கொழும்பு வந்த சில மணி நேரத்தில், சந்துரு தடுக்க தடுக்க, “எனக்கு அலுப்பெல்லாம் இல்லவே இல்ல, இப்பவே வெளிக்கிடுவம் சந்துரு!” என மனமறிய பொய்யுரைத்துவிட்டுப் புறப்பட்டிருந்தான் உதய். மனைவிக்கு விசா கிடைத்துவிட்டது என்பதைக் கேட்ட கணமே, தன் இலங்கைப் பயணத்தைத் தீர்மானித்தவனுக்கு, திடீரெனத் திட்டமிட்ட பயணத்தை மேற்கொள்வது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை.
பார்க்க வேண்டிய வேலைகள் கழுத்தை நெரிக்க, ஒருவழியாகச் சமாளித்து, தன்னோடு தொழிலைப் பார்க்கும் நண்பன் குணாவின் வசம் மிகுதிப் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டுப் புறப்படுவதற்குள், மிகவும் களைத்துப் போய்விட்டான். ஆனாலும், மனையாளைக் காணப் போகின்றோமென்ற ஆவலும் துடிப்பும், அவளைக் கையோடு அழைத்துவரப் போகும் மகிழ்வும், அவனுள் பரவ முயன்ற களைப்பை விரட்டிவிட்டது என்பதுதான் உண்மை.
என்னதான் என்றாலும் அவனும் சாதாரண மனிதன் தானே! சற்றுமுன் வீட்டினுள் நுழைகையில், அவனுள் நிறைந்திருந்த மகிழ்வையும் ஆவலையும் கட்டிப்பிடித்துக் கொண்டே, அசதியும் சோர்வும் ஆட்கொண்டிருந்தது. அதனால்தான் மனைவியை எழுப்பவே வேண்டாமென்றான். இப்போதோ, மனைவியின் அறையினுள் நுழைந்து, அயர்ந்த துயிலிலிருந்த அவள் வதனத்தில் பதிந்த விழிகளை அகற்ற மறந்து நின்றான்.
அக்கணமே அவன் உடலும் மனமும், அசதியைக் களைந்து ஆனந்த ஆர்ப்பரிப்பில் குதித்திருந்தது. கரமிரண்டையும் கன்னத்திற்கு அணையாக்கி, ஒருக்களித்துப் படுத்திருந்த இல்லாளைப் பார்த்திருந்தவன், “தூங்கட்டும், எழுப்ப வேணாம்.” என, சற்றுமுன் மங்கையிடம் சொன்னதை சுத்தமாக மறந்து போனான்.
மெல்ல அவளருகில் நெருங்கி, குனிந்து, அவள் கன்னத்தில் கரம் பதிக்கப் போனவன், என்ன நினைத்தானோ, முகத்தில் பளிச்சிட்ட கள்ளச் சிரிப்புடன் சட்டென்று நிமிர்ந்து, அவளையே பார்வையால் வருடிக்கொண்டு நின்றான். பின், தன் பயணப் பையிலிருந்து மாற்றுடையும், துவாயும், சோப் பிரஷ் அடங்கிய சிறு பையையும் எடுத்துக் கொண்டவன், சத்தம் செய்யாது அறையை விட்டு வெளியேறி குளியலறை நோக்கிச் சென்றான்.
சுருக்கமாகக் குளித்து முடித்து வந்து, அறையைத் தாளிட்டுவிட்டு மெல்ல மனைவியின் அருகில் சென்றமர்ந்தவன், முறுவல் மாறாமல் தன் குளிர்ந்த கரத்தை அவள் கன்னத்தில் மிருதுவாகப் பதித்தான்.
“ரெண்டு நாள்களுக்குக் கதைக்கக் கிடைக்காது மகிழ்; முக்கிய அலுவல் இருக்கு!” என்றதும், “அப்பிடி என்ன வேலை? இரவில கூட ரெண்டு வார்த்த கதைக்க ஏலாதோ?” என்றிருந்தாள், மகிழ். “எந்த நேரத்தில எடுத்தாலும் பரவாயில்ல உதய். ஒரு நிமிசம் ஹலோ சொல்லக் கூடவா நேரம் கிடைக்காது?” என்ற பின்னரும், “நேரம் கிடைக்கும் எண்டு நினைக்கேல்ல மகிழ், ரெண்டு நாள்களுக்குப் பிறகு கதைக்கிறன்.” என இவன் வைத்ததில் மிகவும் மனம் சுணங்கிப் போயிருந்தவள், இரவு நெடுநேரம் உறக்கமின்றிப் புரண்டுவிட்டு, இவன் வருவதற்கு சற்றுமுன் தான் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்.
இப்போது, அவன் தொடுகையின் சில்லிடலில் மெல்ல அசைந்தாலும், அருகிலிருக்கும் கணவனை உணராது மீண்டும் நித்திரையினுள் ஆழ, மெல்ல அவள் காதருகில் குனிந்தான் உதய். “டோய் மகிழ்! ஃபோனில கதைக்கக் கிடைக்காது எண்டோன்ன சிலுப்பிக்கொள்ளத் தெரியும். அதே..அத்தூரம் இருந்து ஒருத்தன் வந்து பக்கத்தில இருக்க, உங்களுக்கு நித்திரை கேக்குதோ?” நகைக்கும் குரலில் நீட்டி முழங்கியதோடு, தன் மூக்கினால் அவள் கன்னத்தில் உரசினான்.
அவன் குரலோடு சேர்ந்து அவனுடலும் அவளை அழுத்த திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள், மகிழ். கனவோ என எண்ணி அலங்க மலங்க விழித்தது என்னவோ கணம்தான். தினமும் அவனோடு கனவில் உறவாடுபவள்,நிஜத்தில் உறவாடும் தருணத்திற்காக நெஞ்சம் நிறைந்த அவாவுடன் காத்திருப்பவள், தன் மனத்திலுள்ள ஆசையையும், ஆர்வத்தையும், நேசத்தையும், அச்சாகப் பிரதிபலிக்கும் கணவன் முகத்தை இத்தனை அருகில் கண்டதும் உள்ளத்திலோடிய வியப்புடன் கூடிய அதிர்வில் பேச்சைத் தொலைத்தாள்.
உறக்கத்தில் மூழ்கியிருந்த நயனங்களில் எரிச்சல் மீதமிருந்தாலும், நம்பாமல் வியப்பில் விரிந்திருக்க, சட்டென்று நிமிர்ந்து எழ முயன்றவளை, அதற்கு விடாது வளைத்துப் பிடித்துக் கொண்டன, அவள் கணவனின் கரங்கள்.
“உ..த..ய்..” திக்கியவள், கலங்கிய நேத்திரங்களுடன் மெல்லத் தன் கரமுயர்த்தி அவன் முகத்தில் ஒற்றை விரலால் மெதுவாய்த் தொட்டுப் பார்த்தவளால், அவன் தன்னருகில் இருக்கிறான் என்பதை கொஞ்சமும் நம்ப முடியாதிருந்தது.
அவனோ, கள்ளச் சிரிப்பில் விழிகள் சுருங்க, மனைவியை உற்று நோக்கினான். “என்னடா! நான் இப்பிடி வருவன் எண்டு கொஞ்சம் கூட எதிர்பார்க்கேல்ல என்ன? எப்பிடி சேர்பரைஸ்?” கண்ணடித்துச் சிரித்தான்.
கணவன் பேச்சுக்கு பதில்சொல்லும் நிலையில் இருக்கவில்லையே, அவள். திருமணம் நடந்த நாளிலிருந்து தவறாது உரையாடுபவன், இருநாட்களாக கதைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவளுக்கு, இப்போதோ அழுகைதான் வரப் பார்த்தது.
“என்னம்மா ஜான்சிராணி! சத்தமே இல்லை?” அவன் மீண்டும் வம்பிழுக்கப் பார்க்க, கரங்களை அவன் கழுத்தைச் சுற்றி மாலையாகப் போட்டுக்கொண்டவள், “வந்து நிறைய நேரமாகுதா உதய்? அம்மா ஏன் என்னை எழுப்பேல்ல? ஆரோட வந்தனீங்க? எப்ப கொழும்புக்கு வந்தீங்க?” அடுத்தடுத்து கேள்விகளை வீச, அவனோ முறைதான்.
“இதெல்லாம் தெரிஞ்சு கொள்ளுறதா இப்ப முக்கியம்?” என்றவன் குரல் அப்படியே மாறிப் போயிருந்தது. மின்னிய நிலவொளியின் உபயத்தில், கணவன் விழிகளில் கலந்து அவன் மனத்தைப் படித்தவளின் நயனங்கள் நாணத்தைப் பூசிக்கொண்டன. அதையே சம்மதமாகக்கொண்டான், உதய். பிரிவையெல்லாம் பொறுக்கும் மனோதிடம் என்னிடம் இல்லையம்மா என்று, தாம்பத்தியத்தை ஆறப் போட்டவன், சிலவருடங்களுக்கு முன் ‘காய்ந்த பளை’ என்று கேலி செய்த இடத்தில், என் மனைவி வாழும் இடமே என் மனத்துக்குச் சொர்க்கம் என்று, அவளிசைவுடன் அவளுடன் இணைந்து, தாம்பத்திய வாழ்வின் தாள் திறந்து உல்லாசமாக நுழைந்தான்.

error: Alert: Content selection is disabled!!