நெஞ்சினில் நேச ராகமாய் – 24

அத்தியாயம் 24
“பச்..இது ஒண்டு…வருகுது இல்லையே!” உள்ளத்தின் நடுக்கம் விரல் வரை ஊடுருவியிருக்க, பொறுமை என்பது சிறிதுமின்றிப் புறுபுறுத்தவாறே சீட் பெல்ட்டை இழுத்த மகிழ், அவளுக்கே அந்நியமானவள். அந்தளவுக்குத் தடுமாறிப் போயிருந்தாள். இந்தா அந்தா என்று சொல்லி சொல்லி, இதோ, தாயைப் பிரிந்து விமானமேறி விட்டாளே.

பிரிவுத்துயரின் பிடியில் திணறிக்கொண்டே கூடி நின்றவர்களிடம் விடைபெறுகையில், அதுவரை, தன்னைத் தேற்றிய அன்னையின் விழிகளில் கண்ட துடிப்பையும் தவிப்பையும் நினைத்த மாத்திரத்தில், அவள் நயனங்கள் கசிந்தன. ஒத்த வார்த்தை உதிர்க்காது வந்தமர்ந்த மனைவி, தன்னுள்ள ஆதங்கத்தை சீட்பெல்ட்டில் காட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அமைதியாக இருந்த உதய், அவள் கண்ணீரைக் கண்டதும், “மகிழ், என்னதிது!” என்றான்,மெதுவாக.
“கொஞ்ச நாட்கள் தான், எப்பிடியும் மாமிய அங்க கூப்பிட்டிரலாம்.” என்றவன் தோளில் முகம் புதைத்து விசும்பியவளை அணைத்துக்கொண்டவனுள், தான் வராதிருந்திருந்தால் தன்னந்தனியாக இப்படிக் கலங்கிக்கொண்டே வந்திருப்பாளே என்ற எண்ணம் எழாமலில்லை.
“அங்க பாரும், எல்லோரும் பாக்கினம் பா! கட்டாயக் கலியாணம் செய்து கடத்திக்கொண்டு போறன் எண்டு நினைக்கப் போகினம். முதல், நிமிர்ந்து இரும் பாப்பம். சீட்பெல்ட் போட்டு விடுறன். அதப் போட்டு இந்த இழு இழுத்தா அது வருமா என்ன?” பெல்ட்டை எடுத்து, “இப்பிடிப் போடோணும்.” என்ற கணவனை முறைத்தாள், அவள்.
“இப்ப என்ன சீட்பெல்ட் போடத் தெரியாத பட்டிக்காடு எண்டு சொல்லுறீங்களா?” மனைவியின் சீறலில் உள்ளே பொங்கிய நகைப்பை, இலாவகமாக அடக்கிக்கொண்டான் உதய்.
“ச்சே…ச்சே அப்பிடியெல்லாம் நினைப்பனா மகிழ்! நீர் கடைக்குப் போறது எண்டாலும் ஃப்ளைட்டில பறக்கிற ஆளெண்டு எனக்குத் தெரியாதா என்ன?” மிகச் சாதாரணமாகச் சொன்னவன் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள், அவன் மனைவி.
“ஸ்ஸ்ஆஆ…” தன் தொடையைத் தேய்த்துக்கொண்டவனை முறைத்தவள், “இஞ்ச பாருங்க, என்னப் பார்த்தா நக்கலா இருக்கா? ஓம், நான் ஒருநாளும் ஃப்ளைட்டில ஏறேல்லதான். நீங்க ஃப்ளைட்டில தான் பிறந்து வளர்ந்தீங்க. இப்ப சந்தோசமா?” சொன்ன வேகத்தில் வெளிப்புறம் திரும்பிக் கொண்டாள்.
‘வாயோயாமல் கததான் கூட எண்டா கையால கதைக்கிறது அதவிடக் கூடவா இருக்கே! உதய், என்னடா செய்யப் போறாய்?!’ மனதுள் புலம்பினான், அவன்.
முதல் விமானப் பயணம்! அதுவும் அவள் அன்புக் கணவனுடன். அந்த உவகையின் சாயல்தான் அவளில் துளியுமில்லை. ‘அம்மா அம்மா’ என மனம் அரட்ட, இதுவரை பெரிதாகக் கலங்கி அறியாத அவள் நயனங்கள் சற்றும் யோசியாது நீரைச் சொரிந்தன.
அந்தி மஞ்சளில் மயக்கிய சுற்றுப்புறம். சுறுசுறுப்பாக, கடமைகளில் கண்ணாக இயங்கிக்கொண்டிருந்த விமானத்தளம். தூரத்தில் பரந்து விரிந்திருந்த தோப்புகள். சிறு சிறு வெண்பஞ்சு மேகங்களோடு உறவாடும் பரந்த வானம் என, கண்ணீரில் தத்தளித்த நேத்திரங்கள் இரண்டும் ஒருவித ஆசையும் பாசமுமாக வருடி வருடி, இயலாமையில் தொய்ந்தன.
என் அம்மாவை மட்டுமா பிரிகிறேன்? இல்லையே! நான் பிறந்து வளர்ந்த நாட்டையும் அல்லவா? அவள் நெஞ்சம் புலம்பியது. ‘இனி எப்ப இஞ்ச வருவன்?’ எண்ணமோட, இதழில் ஒரு நைந்த முறுவல் பளிச்சிட்டு மறைந்தது. ‘வெளிநாட்டுக்காரர் எண்டு சொல்லி சொல்லி எவ்வளவு நக்கல் அடிச்சிருப்பம். அதுக்குத் தண்டனையா, இப்ப நானே வெளிநாடு போறன்!’ என, நினைத்துக்கொண்டவள், சட்டென்று கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனோ, மனைவியில் பதித்த விழிகளை அகற்றாது அமர்ந்திருந்தான். அவன் விழிகள் காட்டி நிற்கும் நேசத்தை, அப்படியே, தன் செயல்கள் ஒவ்வொன்றிலும் காட்டுபவன் என்பதில் சிறிதுமே ஐயமில்லை. அப்போ, ‘இவரக் கலியாணம் செய்தது தண்டனையா உனக்கு ?’ என்று கேட்ட மனமோ, சற்றும் யோசியாது மறுத்தும் கொண்டது. கலக்கமாக வெளிப்புறம் திரும்பியவள், அக்கலக்கம் மறையாது தன்னை நோக்கவும், அவள் தவிப்புணர்ந்து, “மகிழ்…” என்றழைத்துக்கொண்டே, அவள் தோளில் ஆதரவாகக் கரம் பதித்தான், உதய்.
“இப்பிடி நீர் இருந்தா எப்பிடிச் சொல்லும்? அதுதான் மாமி, ராசன் அங்கிளோட இருக்க ஓமெண்டு கொண்டுபோய் விட்டுட்டுத் தானே வந்தம். சரசுப்பாட்டி கூட மாமியோட கதைக்கிறாரே! யோசியாதையும் மகிழ், எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான். நீர் பார்த்துக்கொண்டே இரும், மாமி இனிமேல் தான் இன்னும் சந்தோசமா இருக்கப்போறார்.” என்று, அவன் அவளுக்குச் சமாதானம் சொல்ல, அவளோ, “அப்ப, நான் இல்ல எண்டா அம்மா சந்தோசமா இருப்பார் எண்டு சொல்ல வாறீங்களா?” என, இடையிட்டுக் கேட்டு, கணவனைத் திகைக்க வைத்தாள்.
“நான் என்ன சொன்னன், நீர் என்ன சொல்கிறீர்!”
“ப்ச்…” சலித்துக்கொண்டவளின் பார்வை மீண்டும் வெளிப்புறம் பாய்ந்து திரும்பியது.
“அம்மா, தன்ர கவலைய ஆரிட்டையும் சொல்லமாட்டா உதய். இதுவரைக்கும் புலம்பியோ கவலைப்பட்டோ நான் காணேல்ல. பாட்டி கதைக்கிறாதான்! இத்தினை நாள்களா பக்கத்தில இருந்த மகளையும் பேத்தியையும் விட, நேற்றுக் கண்ட நீங்க அவருக்கு பெரிசாப் போய்ட்டீங்க இல்லையா?”
“நீங்க சொல்லித்தான் என்னோடயும் கதைச்சவர். இப்ப அம்மாவோடயும். கிழவில வாற கோவத்துக்கு!” என்று சொல்லி, முகம் கடுகடுக்க நிறுத்தினாள்.
“அப்பப்ப கிழவி சொல்லுற கதைகளுக்கு அம்மா அமைதியா இருந்தாலும், அவவுக்கு மனசில எவ்வளவு வலிச்சிருக்கும்!” தொடர்ந்தவள் குரலில் அத்தனை கசப்பு.
“அப்படியெல்லாம் இல்ல மகிழ். முதல் நீர் ஏன் அப்பிடி நினைக்கிறீர்? இத்தின நாள்களும், தனர மகள் குழந்தையோட தனியாக இருந்து சிரமப்படுறா எண்ட வருத்தத்தில் கோவத்தக் காட்டியிருப்பார். இப்பப் பேத்திக்கு இப்பிடியொரு அருமையான பெடியன் கிடைச்சிருக்கிறானே எண்ட சந்தோசத்தில..” தீவிரமாகச் சொல்லத் தொடங்கி, அவளைப் பார்த்து விழிகளால் நகைத்தான், உதய்.
“ஆர் நீங்க அருமையான பெடியனோ? ஹலோ ஹலோ, அத எல்லாம் நாங்க சொல்லோணும். இந்தக் காலத்தில ஆரையும் அவ்வளவு கெதியா நம்பேலாது. தங்கமுலாம் பூசின ஆக்கள் தான் கூட!” இடையிட்டு முறுக்கினாள், அவன் மனைவி.
“ஓ! அப்பிடியெண்டா நான் எப்ப வெளுத்துப் போவன் எண்டு பாத்துக் கொண்டிருக்கிறீரா?”
“விடுங்க உதய். இப்பிடித்தான் உங்களோட எதையாவது கதைக்கத் தொடங்கினா, கதை மாறி கடைசியில ரெண்டு பேரும் கடிபட்டு நிப்பம்.” மனைவியைத் திசைதிருப்ப வேண்டுமென்றே கதையை வளர்த்தவன், முறுவல் பூத்தான்.
“கடி! ஹா..ஹா…அந்தக் கடி எனக்குச் சரியான இனிப்பா இருக்கே மகிழ்!” கண்ணடித்தவன் நகைப்பில், கலந்து கொள்ள முடியாது நின்றாள், அவள். அப்போது, விமானம் மெல்ல நகரத் தொடங்கவே, அருகில் தெரிந்த சிறு கண்ணாடியால் வெளியே பார்த்தவள், இதயம் இறுக, மொத்தமாக பிரிவுத்துயரின் ஆக்கிரமிப்பில் அகப்பட்டுக்கொண்டாள். அதோடு சேர்த்து, முதல் விமானப்பயணம் மெல்லிய பயத்தையும் அவளுள் விதைத்தது. சர்ரென்று விமானம் மேலே ஏற, சட்டென்று நேராக நிமிர்ந்து அமர்ந்து கொண்டாள்.
“இத வாய்க்க போட்டுக் கொள்ளும்!” சுவிங்கம் ஒன்றை அவள் வாயில் வைத்து விட்ட உதய், பய அதிர்வோடு தன்னை நோக்கியவளை, ‘இவ்வளவும்தான் உன்ர வீரமா?’ என, கண்களால் சீண்ட, அந்நிமிடம், வழமைபோல அவனுடன் மல்லுக்கு நிற்க முடியாமல் உள்ளத்தில் தடுமாறியவள், சட்டென்று அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டாள். அதைப் பார்த்தவன், “பயமாக இருக்கா மகிழ்?” காதருகில் கிசுகிசுக்கச் சட்டென்று மிதப்பாகப் பார்த்து, “எனக்கென்ன பயம்? அப்பிடியெல்லாம் இல்ல. ஏன், பயந்தாத் தானா உங்கட கையப் பிடிக்கோணும்?” அவள் கேட்ட பாவனை, அவன் முகத்தை மலரச் செய்தது.
“அப்பிடியெல்லாம் இல்லப்பா. நீர் எப்ப வேணும் எண்டாலும் என்ர கையையோ கழுத்தையோ பிடிக்கலாம்?” மீண்டும் கிசுகிசுத்தான் அவன்.
“எனக்குக் காது ரெண்டும் அடைச்சு சத்தி வரும் போல இருக்கு. உங்களுக்குப் பகிடியா இருக்கென்ன?” சிடுசிடுத்துக் கொண்டே, “வயித்தப் பிரட்டிக் கொண்டு வருகுது உதய்!” என்றவள், கணவன் தோள்களில் அப்படியே முகத்தைப் புதைத்துக் கொண்டாள் .
“முதல் முறை எண்டதால அப்பிடி இருக்கு மகிழ்! சத்தி வந்தா…” சொல்லிக்கொண்டே முன்னால் குனிந்து அங்கிருந்த பொலித்தீன் பையொன்றை எடுத்து விரித்து தன் மடியில் வைத்துக் கொண்டவன், “என்னில எடுத்திராதேயும் சரியோ, இதுக்கு எடுக்கலாம்.” சீண்டினாலும் மனைவியை ஆதரவாக அணைத்துக்கொண்டான்.
“வேற எதையும் நினைச்சுப் பயப்படேல்லையே மகிழ்!” பேச்சுக் கொடுக்க, அவளோ பதிலின்றி அமைதியாக இருந்தாள். ‘தனிய வந்திருந்தா என்ன பாடுபட்டிருப்பனோ!’ அவள் மனத்ல் இந்த எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது. கணவனின் அரவணைப்பு, பிரிவுத் துயரில் துவண்டிருந்த அவள் இதயத்துக்கு ஒத்தடமாக இருந்தது.
“பயப்படாதேயும். உங்க தோட்டத்தில வேலை செய்யிற சேகர் சொன்ன மாதிரி ஃபிளைட் கீழ விழுந்தாலும் ரெண்டு பேரும் ஒண்டாத் தானே இருக்கிறம்!” மீண்டும் கேலியாகத் தொடங்கினான் உதய்.
அவளோ, விமானம் சீராகச் செல்லும் வரை, அவன் தோளை விட்டு முகத்தை நிமிர்த்திக்கொள்ளவோ ஒத்த வார்த்தை கதைக்கவோ முயலவில்லை. விமானம் சீராகச் செல்லத் தொடங்க மெல்ல நிமிர்ந்து அமர்ந்தவளின் பெல்ட்டை கழற்றி விட்டவன், “இனிப் பயமில்ல மேடம், மூண்டரை நாலு மணித்தியாலங்களில துபாய்க்குப் போயிருவம். நாளைகுக் காலம பத்துக்குத் தானே அடுத்த ஃபிளைட்!” என்று கதைத்துக் கொண்டிருக்கையில், அவர்கள் முன்னால் ஒரு தட்டை நீட்டினாள், விமானப் பணிப்பெண்.
அதில் சிறு சிறு பக்கற்றுக்கள் இருப்பதைப் பார்த்த மகிழ், ‘ஏதோ சாப்பாட்டுச் சாமான் போல! இனிப்பா இருக்குமோ! மனிசருக்கு இன்னும் வயிற்றுப் பிரட்டல் போகேல்லை, அதுக்க கண்டதையும் உள்ள அனுப்பி…’ என்று நினைத்தவாறே, விமானப்பணிப்பெண்னைப் பார்த்து அழகாக புன்னைகைத்து விட்டு, “நோ…தாங்க்ஸ்.” என்றதும், முறுவல் மாறா முகத்துடன் தலையசைத்தவாறே உதய் முன்னால் நீட்டினாள், அப்பணிப்பெண்.
பீரிட்டெழுந்த நகைப்பில் துடித்த உதடுகளைக் கடித்துக்கொண்டே நன்றி கூறி இரு பக்கற்றுக்களை எடுத்துக்கொண்டான், உதய். பணிப்பெண் அப்பால் நகர, மனைவியை அவன் பார்த்த பார்வையில் சட்டென்று சுதாகரித்துக்கொண்டாள், அவள். அவனையும் அவன் கையிலிருந்த பக்கற்றுக்களையும் மாறி மாறிப் பார்த்தவள், “இது..இதென்ன உதய்? நான் ஏதோ இனிப்பு எண்டு நினைச்சன். தாங்க பாப்பம்!” வாங்கி, அதில் குட்டி குட்டி எழுத்துக்களில் இருந்ததை வாசித்துவிட்டு, “அட! டி..சு…வா?” இவள் சொல்ல, அவனோ தன்னிடமிருந்ததைப் பிரித்துத் தன் கரங்களைத் துடைக்க, தானும் அவ்வாறே செய்தவள், நகைப்பை அடக்கிக் கொண்டமர்ந்திருக்கும் கணவனை முறைத்தாள்.
“இப்ப என்ன? பட்டிக்காடு எண்டு நினைக்கிறீங்களா? நீங்க முதல் முதல் ஃபிளைட்டில போனா இப்பிடித் தடுமாற மாட்டீங்களா? அப்பிடித்தான் இதுவும்!”
“நான் ஒரு வார்த்தை சொல்லேல்லையே மகிழ்! அண்டைக்கு ஏதோ தெரியாத்தனமா அந்த வார்த்தைய சொன்னதுக்காக , நீர் எத்தனைதரம் அதையே திருப்ப திருப்பச் சொல்லுறீர்!” நகைப்பை விழுங்கிக்கொண்டு சொன்னவன், “இப்ப இந்த டிசுவில் தொடங்கி, போகப் போக நிறைய விசயங்கள் இப்பிடி நடக்கலாம் மகிழ். நீர் அதையெல்லாம் பாத்து பயப்படுற ஆள் இல்ல எண்டு எனக்கு நல்லாவே தெரியும்!” எனத் தொடங்கியவன், மனைவியின் கவனைத்தை மீண்டும் இலங்கைப் பக்கம் பாய விடாமல் அதையும் இதையும் சொல்லி, அவளைச் சீண்டிக்கொண்டே வந்தான்.

error: Alert: Content selection is disabled!!