அத்தியாயம் 25
“இன்னும் ரெண்டு மணித்தியாலங்களில டொரொன்டோ போயிரலாம் மகிழ்!” முன்னாலிருந்த தொலைக்காட்சித் திரையைப் பார்வையிட்டவாறே சொன்னவன், “உம்ம வரவேற்க குட்டி ஊராச் சேர்ந்து வந்திருப்பினம். பயந்துகியந்து போயிராதேயும் சரியா.” தொடர்ந்தான், கேட்டிருந்த அவன் மனைவியோ, “ஓம் ஓம், கனடாதானே உங்கட சொந்த இடம், அப்ப ஊரேதான் திரண்டு வந்திருக்கும்!” நக்கலாகச் சொல்லிவிட்டு முறைத்தாள்.
“உண்மையாவே இலங்கையவிட இங்கதான் எங்கட நிறையச் சொந்தங்கள் இருக்கினம் மகிழ்! அதோட, வாற சனிக்கிழம எங்கட வரவேற்பும் இருக்கிறதால, சித்தப்பா குடும்பமும் ஒண்டுவிட்ட மாமா குடும்பமும் லண்டனில இருந்து வந்திருக்கினமாம்.” முறுவலோடு சொன்னவனை அமைதியாகப் பார்த்தாள் அவள்.
இலங்கையிலிருந்து துபாய் செல்கையில் இருந்த பதற்றமும் தவிப்பும் இப்போது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பதறித் தவித்துப் பலனில்லை என்று புரிந்திருந்தால், தன் சுபாவப்படி சுதாகரித்திருந்தவள், ‘கெதியா அம்மாவக் கூப்பிடுற அலுவல்களப் பாக்கோணும்.’ என்று மட்டும் நினைத்துக்கொண்டாள்.
விமானம் தரையிறங்கி, உரிய நடைமுறைகளுக்குப்பின், கணவனோடு கதைத்துக்கொண்டே வெளியே வந்தவள், அங்கே கூட்டமாக நின்றவர்களைப் பார்த்ததும்தான், கணவன் சொன்னதிலிருந்த உண்மையை விளங்கிக்கொண்டாள். கணவன் குடும்பத்தையும், கணவனின் சித்தப்பா குடும்பத்தையும் தெரியுமென்றாலும், அவளையுமறியாது ஒருவகைத் தயக்கமும் தவிப்பும் ஆட்கொள்ள, நடை தயங்கியது.
‘எவ்வளவு பேர்! எல்லாருமே இவரிட சொந்தங்கள். என்ர சொந்தமெண்டு ஒருவர் கூட இல்லையே!’ என்றவள் நினைவை பொய்யாக்கும் வகையில், பின்தங்கியவளைத் திரும்பிப் பார்த்து, “என்ன மகிழ்? ஏன் நிக்கிறீர்? வாரும்!” காத்திருந்து, அவளோடு இணைந்து நடந்தான், உதய்.
“நான்தான் சொன்னனே! அம்மாட சொந்தக்காரர் நிறையப்பேர் ஏர்போர்ட்க்கு பக்கத்தில இருக்கிறதால கட்டாயம் வருவினம் எண்டு தெரியும். கூட்டத்தைப் பாத்துத் தயங்காதேயும், இயல்பா இரும். உம்மோட நான் இல்லையா?” கனிவுடன் சொன்னவனோடு நெருங்கி நடந்தாள் அவள்.
“பயணமெல்லாம் எப்பிடி இருந்தம்மா?” மருமகளை அன்போடு அணைத்துக்கொண்டார், ரத்னா.
“உங்கள வரவேற்க வரோணும் எண்டே ஒருத்தரும் இண்டைக்கு வேலைக்குப் போகேல்ல.” சொல்லிக்கொண்டே அவளை அணைத்து வரவேற்றாள், மூத்த அண்ணி சுமி.
“வாங்க மேடம், வாங்க! சித்திக்கு ஆய் கொடுங்க ஹர்சு!” மகனைத் தூக்கிக்கொண்டு நின்ற கௌசி, இன்முகமாக தோளோடு அணைத்து வரவேற்றாள்.
அங்கிருந்த அவர்கள் சொந்தங்களை அறிமுகப்படுத்திய ரத்னா, “குணா வரேல்லையா அம்மா?” கேட்ட மகனுக்குப் பதில் சொல்லாது கணவரைப் பார்த்தார். “வந்தவே தம்பி, இவ்வளவு நேரமும் இங்க தான் நிண்டவே. பிள்ளைகள் சாப்பிடக் கேட்டவே போல!” என்ற சரவணன், “அந்தா வருகினம்!” என்றதும், தம்மை நோக்கி வந்து கொண்டிருந்தவர்களை விழிகள் பளிச்சிடப் பார்த்தான், உதய்.
‘இவ்வளவு ஆக்கள் போதாதெண்டு இன்னுமா!’ மனத்துள் சொல்லிக்கொண்ட மகிழ், ‘குணா எண்டா…உதய்ட ஃப்ரெண்ட் தானே? பரவாயில்லையே குடும்பத்தில எல்லாரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்!’ நினைத்துக்கொண்டவளுள் வியப்பே மிஞ்சியது.
பயணப் பைகள் அடங்கிய ட்ரொலி இப்போது வசந்தன் கைக்கு மாறியிருக்க, மனைவியின் கரம் பற்றிக்கொண்டு தம்மை நோக்கி வருபவர்களிடம் விரைந்தான், உதய். “வாடா வா! எங்கடா காணேல்லையே எண்டு நினைச்சன்?” என்றவாறே, முன்னால் வந்து கொண்டிருந்த வாலிபனை உதய் அணைத்துக்கொள்ள, ‘அப்பாடா! இன்னொரு கட்டிப்பிடி நாடகமா!?’ மனத்துள் சலித்தவாறே அமைதியாக நின்றாள் மகிழ்.
“இல்லடா, நேரத்துக்கே வந்திட்டம். இவே தாகமாக இருக்கு எண்டவே, அதுதான் டிம்கொட்டனுக்குப் போயிட்டு வந்தனாங்க.” என்ற அவ்வாலிபன், “வாழ்துக்கள் மச்சான்! வாழ்துக்கள்!” கண்ணடித்துக்கொண்டே மீண்டும் இறுக அணைத்து விடுவித்தவன், “ஹாய் சிஸ்டர்…வெல்கம் டு கனடா..” அருகில் நின்ற மகிழையும் அணைத்து வரவேற்க முனைய, “ஹா..ய்..” தடுமாறிக்கொண்டே, மின்னலெனப் பின்னால் நகர்ந்து கொண்டாள், அவள்.
‘நானும் வந்ததில இருந்து பாக்கிறன், பொசுக்குப் பொசுக்கெண்டு கட்டிபிடிச்சுத்தான் வரவேற்பினமோ! சரி, குடும்பத்து ஆக்கள் எண்டா வேற கதை. இவே!’ மனத்தில் கடுகடுத்ததை, அவள் முகத்தில் படித்துக்கொண்ட உதய், முறுவலித்தான்.
“மகிழ், இவன் குணா, என்ர நல்ல சிநேகிதன். அதுமட்டும் இல்ல, ரெண்டு பேரும் சேர்ந்துதான் ரியல் எஸ்டேட் பிசினெஸ் செய்யிறம். சொல்லி இருக்கிறனே!” என்றதும், மீண்டும் “ஹாய்..” என்றவள், சிறு புன்னகையோடு கணவன் அருகில் நகர்ந்து நின்றுகொள்ள, அவளையே ஆர்வமாகப் பார்த்தான், குணா. அவன் பின்னால் நின்றவர்களும் அவளையேதான் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
“எங்கட கலியாணத்தண்டு தாலிகட்டி முடிச்ச கையோட எடுத்து விஷ் பண்ணிது இவேயள் தான் மகிழ். இவர் குணாட அத்த சாரதா, மாமா செல்வம். இவே ரெண்டு பேரும் அவேண்ட பிள்ளைகள் நவீன், பிரணா..” என, அவர்களை அறிமுகம் செய்து வைக்க, அவர்களும் இருவரையும் வாழ்த்தினர். அப்பெண்மணி சாரதாவோ, “ராசாத்தி எப்பிடிம்மா இருக்கிறீங்க? முதல் முதல் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கிறியல், சிரமம் ஒண்டும் இல்லையே?” என்று கேட்டுக்கொண்டே அவளை இறுக அணைத்துக்கொண்டவர், பின்னர் விடுவித்து ஆசையோடு அவள் முகம் வருடினார். என்றுமே அறியாத அப்பெண்மணியின் இந்த அன்னியோன்ய செய்கையிலும் பேச்சிலும் நிறையவே சங்கடப்பட்டுவிட்டாள் மகிழ்!
‘என்ர அம்மா கூட இப்பிடிக் கண்டபடி என்னக் கட்டிப் பிடிக்கிறேல்ல. இதென்ன இங்க எல்லாருமே கட்டிப் பிடிச்சுத்தான் வரவேற்கினம், வாழ்த்துச் சொல்லினம்!’ என்று, மனத்தில் சிடுசிடுத்தவாறே அந்தரத்தோடு உதய் முகத்தைப் பார்த்தாள். அவனோ முறுவலோடு நின்றான்.“மகிழ், இவர் குணாட பெரியப்பா குமார்!” அவர்களின் பின்னால் அமைதியாக நின்ற மனிதரை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு, அவருடன் கதைத்துக்கொண்டே, “போவமா? போய்க் கொண்டே கதைக்கலாம், என்னப்பா?” பின்னால் நின்ற தந்தையிடம் கேட்டவாறே நகர்ந்தான்.
“அதான், களைச்சுப் போய் வந்தவே வீட்ட போய் கொஞ்சம் ஆறுதலா இருக்கட்டும்.” என்ற சரவணன் புறப்பட, அனைவரும் வெளிவாயிலை நோக்கி நகர்ந்தனர். வெளியே வந்ததும் “சரி, பிறகு சந்திப்பம்!” என உறவினர் ஒவ்வொருவராக விடைபெற, கடைசியாக குணா குடும்பமும் விடைபெற்றுக்கொண்டது.
“கலியாண வரவேற்பில சந்திப்பம்மா! எங்கட வீடும் பக்கத்தில தான், வீட்டுக்கு அடிக்கடி வரவேணும்.” என்று சொல்லிக்கொண்டே, மீண்டும் இறுகக் கட்டியணைத்து விடைபெற்றார், சாரதா. சரவணனுடன் கதைத்துக்கொண்டிருந்த குணாவின் பெரியப்பாவும் இவர்களிடம் வந்து, “போயிட்டு வாறன்மா. உதய், ரெண்டு பேருமாக வீட்டுக்கு வாங்க!” அவன் தோளில் தட்டி, அவள் தலையை ஆதரவாக வருடிவிட்டுச் சென்றார்.
“சரி உதய், வீட்டில சந்திப்பம். நாங்க லக்கேஜ கொண்டு போறம். இந்தா உன்ர கார்க் கீ!” என, தம்பியிடம் திறப்பைக் கொடுத்த ஜெயன், கார் நிற்குமிடத்தைச் சொல்லிவிட்டுச் சென்றான்.

