நெஞ்சினில் நேச ராகமாய் 25 – 2

“முதல் முதல் தானே உங்கள வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வரவேணும் எண்டவர் மகிழ். அவரிட ஆசைய ஏன் கெடுப்பான் எண்டுதான் அவரிட காரையே கொண்டு வந்தனாங்க!” என்ற ரத்னா, “சரிபின்ன, வீட்டில சந்திப்பம்!” என்றவாறே, நகர்ந்த கணவரோடு சேர்ந்து கொண்டார்.
“அப்பா! இந்த ரோட்டெல்லாம் எவ்வளவு அகலம் உதய்!” மனைவியின் குரலில் கலைந்தவன், இதுவரை முகத்திலிருந்த சிந்தனை இரேகைகள் இலேசாக மறைய முறுவலித்தான். “ம்ம்ம், பின்ன உங்கட பளை ரோட்டளவு இருக்குமெண்டு நினைச்தீர் போல!”
“வேணாம் உதய்.”
“என்ன வேணாம் ? பின்ன என்ன, இது கனடா மகிழ்…கனடா!” பெருமிதம் பொங்கச் சொன்னவனை, நன்றாகவே முறைத்தாள் அவள். “பெரிரிரிய கனடா!” இதழைச் சுருக்கிப் பழிப்புக் காட்டியவள், “ஆரோ… எப்பவோ… எங்கட ஊர, காய்ஞ்ச பளை எண்டவே. பிறகு அதே பளையில…” கிண்டலாகச் சொன்னவளை, பேசவிடாது இடைமறித்தான், உதய். “அவன் ஒரு மடையன் மகிழ்! பளையிட அருமை பெருமையெல்லாம் எனக்கல்லோ தெரியும்!” கண்ணடித்துச் சிரித்தவன், மனைவியின் வதனத்தை செம்மையுறச் செய்தான்.
“என்ன மகிழ், நான் சொல்லுறது சரிதானே?” விடாது வம்பிழுத்தவனை பார்க்காது, வெளியில் பார்வையைத் திருப்பியவள், “உதய்…அதானே நாங்க ஃப்ளைட்டில வரேக்க தெரிஞ்ச டவர் … சி என் டவரா அது?”
“ம்ம்…அதுதான். ஒரு நாளைக்கு அதில ஏறிப் பாப்பம்.” என்றவன், “ஒரு கஃபே குடிச்சிட்டுப் போவமா?” அருகிலிருந்த ‘டிம் ஹொட்டனை’ நோக்கித் திருப்பி, இருவருக்கும் காஃபியை வாங்கிக்கொண்டு, மீண்டும் ‘ஹைவே’யில் செலுத்தத்தொடங்கினான்.
பங்குனி மாதம், வஞ்சகமின்றி நல்ல வெயிலைக் காட்டினாலும், பழக்கமற்ற குளிரில் ஆடிப் போனாள் மகிழ். “ஸ்ஸ்… குளிருக்கு நல்ல இதமாக இருக்கு!” கணவன் வாங்கித் தந்த கஃபே தொண்டைக்குள் சூடாக இறங்க, ருசித்துக் குடித்தவளைப் பார்த்து விட்டு, அவள் தலையை ஆதரவாகத் தடவினான் உதய்.
“சந்தோசமா மகிழ்?” மனதில் உவகை பொங்கி வழிவது முகத்தில் பளிச்சிடக் கேட்டவனைப் பார்த்து, “ம்ம்ம்.. நல்ல சந்தோசம். கஃபே நல்ல ருசியா இருக்கு உதய்!” விழிகளில் மின்னும் கேலியுடன் சொன்னாள், அவள்.
“உம்ம…கனடா வந்ததில சந்தோசமா எண்டு கேட்டன். நீர் போயும் போயும்….” ஏகத்துக்கும் சோகம் காட்டியவன் தோளில் சாய்ந்து கொண்டாள், அவன் மனைவி. “இதக் கேட்கோணுமா உதய்? அம்மாவ விட்டுட்டு வந்தது கவலையா இருந்தாலும், உங்களோட வந்ததில சரியான சந்தோசம்!” என்றாள், மென்குரலில்.
“மாமியக் கெதியாக் கூப்பிட்டிரலாம் ஒண்டுக்கும் யோசிக்காதேயும்!”என்றான், அவன். “அதேதான் நானும் நினைச்சன். என்னதான் எண்டாலும் , அம்மா என்னோட இருந்தாத்தான் எனக்கு நிம்மதி. அவவுக்கும் என்ன விட்டா வேற ஆர் இருக்கினம்.” குரல் தடுமாறச் சொன்னவள், அடுத்து வந்த நிமிடங்களில் தாயின் நினைவில் அமிழ்ந்து விட்டாள்.
“ஏன் உதய், உங்கட ஃப்ரெண்ட்…அந்தக் குணா அண்ணா…” அமைதியாக இருந்தவள் திடீரென்று ஆரம்பிக்க, அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு பாதையில் கவனம் செலுத்தினான், அவன்.
“இல்ல, எங்களை வரவேற்க எண்டு முழுக் குடும்பமும் வந்திருந்தவே எல்லா? உங்களுக்குச் சொந்தமா?” உண்மையில் அறியும் ஆவலில் தான் கேட்டாள். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், “சொந்தம்..ம்ம்.. ரத்த சொந்தமில்ல மகிழ், ஆனா சொந்தம் தான்!” சிறு முறுவலுடன் சொன்னவன், “யுனில படிக்கேக்க இருந்து குணா நல்ல ஃப்ரெண்ட். அவன்ட குடும்பம் ‘ஒட்டோவா’வில. செல்வம் மாமாட அக்காதான் அவன்ட அம்மா. இங்க மாமா வீட்டில இருந்து படிச்சவன், பிசினெஸ் தொடங்கின பிறகும் அவேயோட தான். பிசினெஸ் தொடங்கின பிறகுதான் எனக்கு அவன்ட வீட்டாக்களோட நல்ல பழக்கம் வந்தது.” என்றவன் அமைதியானான்.
“வரவேற்பில குணாட சொந்தகாரர்கள் எல்லாரையும் சந்திக்கலாம் மகிழ்!” மீண்டும் ஆரம்பித்தவன், “குணாட பெரியப்பாவும் மாமாவும் மூவிங் ட்ரான்ஸ்போட் நடத்தினம். இருவது வருசங்களுக்கு மேலாகுது இங்க வந்து.” இப்படி, அவர்களைப் பற்றிப் பெருமையாகச் சொன்னதிலிருந்து, நண்பன் குடும்பம் கணவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து கொண்டாள், மகிழ்.
இப்படியே கதைத்துக்கொண்டே வந்து, ‘ஸ்டோஃபிலில்’ தங்கள் வீடிருக்கும் பாதையினுள் காரைத் திருப்பி, முதல் வீட்டருகில் காரை நிறுத்திவிட்டு மனைவியை நோக்கினான் உதய். “இந்த வீடு பெரியண்ணாட மகிழ். அந்தா… அந்தப் பக்கத்து வீடுதான் வசந்த் அண்ணாட.” காட்டியவாறே காரை செலுத்தத்தொடங்கியவன், “முன்னால பாரும் கூட்டமாக நிக்கினம், அதான் எங்கட வீடு. பக்கத்தில் இருக்கிறதும் எங்கடதான். வாடகைக்கு விட்டிருக்கிறம்.” சொல்லிக்கொண்டே, காரைக் கொண்டுபோய் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு இறங்க, இவளும் இறனாள்.
மீண்டும் ஒரு அரவணைப்புடன் கூடிய அன்புப் பரிமாறல்!
வீட்டினுள் நுழைகையிலேயே, ‘படங்களில வாற மாளிகை போலவே இருக்கே!” ஆச்சரியத்துடன் விழிகளைச் சுழற்றி ஆராய்ந்தாள்.
“முதல் போய் பிரெஷாகி வாங்க உதய். நல்லாக் களைச்சுப் போனீங்க.!” என்ற ரத்னா சமையலறைக்குள் நுழைய, சுமியும் கௌசியும் அவரைப் பின்தொடர்ந்தனர்.
“எங்கப்பா பாட்டியக் காணோம்?”
“படுத்திருக்கிறார். நீங்க பிரெஷ்சாகி வர அவரும் வந்திருவார்.” என்ற சரவணன்,மூத்த மகன்களோடு அமர்ந்துவிட, மனைவியை அழைத்துக்கொண்டு மாடியேறினான்,உதய்.
“வாங்க மேடம், உள்ளுக்கு வாங்க! இதான் எங்கட குட்டி ராச்சியம்.” முகம் கொள்ளா முறுவலுடன் மனைவியை உள்ளே அழைத்துச் சென்றவன், அவள் தோள்களைப்பற்றிக் கொண்டு அவளையே பார்க்க, அவன் பார்வையில் சிணுங்கியவள், “என்ன உதய், இப்பதான் முதல் முதல் பாக்கிறது போல பாக்கிறீங்க! நான் முதல் குளிக்கவோ?” கேட்டுக்கொண்டே நகரப் பார்த்தவளை சட்டென்று தூக்கி ஒரு சுற்றுச் சுற்ற, “அய்யோ என்ர அம்மாளே! என்னது உதய், விடுங்க விடுங்க..” பதறியவளை விடாது சுற்றியவன், இறக்கி, இறுக அணைத்துக் கொண்டான்.
என்னதான் திருமணம் முடித்திருந்தாலும், ஐந்து நாட்களில் பிரிந்து, அலைபேசியின் மூலம் மட்டுமே நெருங்கி இருந்தவர்கள், இவன் பளையில் வந்து நின்ற இரு கிழமைகளில் உடலாலும் உள்ளத்தாலும் இரண்டறக் கலந்திருந்தார்கள். ஆனாலும், தாயையும் உற்ற உறவான மாமா குடும்பத்தையும் பிரிந்து வந்தவளின் இதயத்தில் சுரந்த ஏக்கத்தையும், கனடாவில் காலடி வைத்ததும் அவளையுமறியாது உள்ளே நுழைய முயன்ற யாருமற்ற தனிமைத் தவிப்பையும், தன் சிறு சிறு செயல்கள், வார்த்தைகள் மூலம் அவளை அண்ட விடாது பார்த்துக் கொண்டான் அவள் கணவன்.
இப்போது, இக்கணம், இப்புதிய சூழல், அதுகாட்டவிருக்கும் அன்பும் அக்கறையும், அள்ளித் தெளிக்கவிருக்கும் குட்டுக்கள் மெல்ல மெல்லக் கசியவிடும் ஆச்சரியங்கள், அதிர்வுகள், அனைத்தையுமே நிமிர்வுடன் எதிர்நோக்கும் திடம் அவளுள் நிறைவாகவே காணப்பட்டது.

error: Alert: Content selection is disabled!!