அத்தியாயம் 26
“சும்மா சும்மா பிடிவாதம் பிடிக்காதேயும் மகிழ், நானும் தான் இலங்கேல இருக்கேக்க எண்ணை வைக்கிறானான். இல்லை எண்டா அம்மா லேசில விடமாட்டா.” சொல்லிக்கொண்டே, விரையும் போக்குவரத்தில் தன் காரையும் இணைத்துக்கொண்டாள், சுமி.
“இப்பப் பாரும், எப்பவாவது நேரமிருந்தா முழுக்கேக்க மட்டும் வைக்கிறதோட சரி. தலைமயிரையுமே என்ர வசதிக்குக் கட்டையா வெட்டிட்டன். இல்லையோ விடிஞ்சா பொழுதுபட்டா ஓடுற ஓட்டத்துக்குச் சமாளிக்கவே ஏலாது.”
“அய்யோக்கா! எனக்கு எண்ண வைக்காட்டித் தலை இடிக்கும். ஆனாலும் இஞ்ச வந்தப் பிறகு முழுகேக்க மட்டும்தான் வைக்கிறனான். இண்டைக்கு முழுகிற நாள், அதான் இப்பிடி தப்பி வச்சிருக்கிறன். திடீரெண்டு நீங்க கூப்பிடவும் அப்பிடியே வந்திட்டன்.” பட்டென்று சொன்ன மகிழின் குரலில் அலுப்புத் தெரிந்தது.
“தலைமயிரில கொஞ்சத்த வெட்டச் சொல்லி இவரும் சொன்னவர்தான். எனக்கு விருப்பம் இல்ல அக்கா.” என்றுவிட்டு பாதையில் பிராக்குப் பார்க்கும் மகிழை ஒருபார்வை பார்த்துவிட்டு, “உம்மத் திருத்தி எடுக்கிறதுக்குள்ள என்ர முழி வெளியில வந்திடும் மகிழ். உம்மட ஆள் மெல்ல என்ர பக்கம் தள்ளிப்போட்டு, அப்பிடிச் செய் இப்பிடிச் செய் எண்டு ஈசியாச் சொல்லுறார்!” அலுத்துக்கொண்டாள், சுமி.
மகிழோ, நினைவால் பளைக்கே சென்றுவிட்டிருந்தாள். அங்கிருக்கையில் ஒருநாள், “தலையில எதத்தான் வைப்பீரோ! இந்த மணம் மணக்குது!” என்றவனை முறைத்தவள், “என்ன மணக்குதா? எவ்வளவு நல்ல வாசம் அதப் போய் இப்பிடிச் சொல்லுறீங்களே! முதல், அது எவ்வளவு சிரமப்பட்டுக் காய்ச்சிற எண்ணை தெரியுமா? என்ர தலைமயிரிட இரகசியமே இந்த எண்ணெய்தான்!” பெருமையாகச் சொல்ல, கேலியாகப்பார்த்தான் அவன்.
“சரி, அது நல்ல வாசமாவே இருக்கட்டும் மகிழ். எனக்கு இந்த மணம் பிடிக்கேல்ல, தயவு செய்து இனிமேல் வைக்காதேயும்!” மூக்கைச் சுளித்தான்.
“ஹலோ, உங்களுக்குப் பிடிக்கேல்லை எண்டுறதுக்காக , நான் பரட்டைத் தலையாத் திரியோணுமா?” தன் கூந்தல் நுனியை அவன் மூக்கில் வைக்க, அவனோ அவள் கரத்தை விலக்கிப் பிடித்துக்கொண்டவன், “ப்ளீஸ்பா, எனக்கு உண்மையாவே இந்த மணம் பிடிக்கேல்லை!” கெஞ்சலாகச் சொன்னவாறே, மனைவியை இழுத்தணைத்துக்கொண்டான்.
“அதோட, இப்பிடி எண்ண வச்சுச் தலையிழுகிறத விட எண்ணெய் இல்லாம லூசா இழுத்தால் நீர் நல்ல வடிவா இருப்பீர் தெரியுமா?” என்றதும், அணைப்பிலிருந்து திமிறி விடுவித்துக்கொண்டவள், அவனை உண்டு இல்லை என்றாக்கி விட்டாள். கடைசியில், “தாயே ஆளவிடும்! எப்பிடியிருந்தாலும் என்ர பெஞ்சாதிட வடிவு போல வருமா?”கண்சிமிட்டிச் சொன்னாலும், “இந்த எண்ண வாசம் எனக்கு பிடிக்கேல்லை, ஏதோ உம்மட விருப்பம்.” என்று சொல்லிவிட்டான்.
“வாசம் பிடிக்கேல்ல எண்டா நீங்களும் வைய்யுங்க உதய், பழகிரும். அதோட மொட்டையும் வராது!” கணவனின் அடர்ந்த கேசத்தை கலைத்துவிட்டவாறே அப்போதைக்குச் சொல்லி இருந்தாலும், பின் தலைக்குக் குளிக்கும் நாட்களில் மட்டுமே எண்ணெய் வைத்துப் பழகிக்கொண்டாள்.
அன்றைய நினைவில் மலர்ந்த முறுவலுடன், “இந்த பார்லருக்கு வாறத்தில எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்ல சுமிக்கா. வரவேற்பு இருக்கிறதால இந்த முறை மட்டும் வாறன் !” என்றவளை முறைத்தாள் சுமி. “இதென்ன ஒவ்வொருநாளுமா போகப்போறம் மகிழ்! இப்பிடி விசேசங்களுக்கு மட்டும் முகம் பளிச்சென்று இருக்கோணும் எண்டுதானே .” என்ற சுமி, வாகனமோட்டுவதில் கவனம் செலுத்த, மகிழோ குட்டிச் சண்டைக்குத் தயாரானாள்.
“சுத்தி வளைச்சு என்ர முகம் பளிச்சென்று இல்ல எண்டு சொல்லுறீங்க என்ன?” என்றவளை, முறைப்புடன் திரும்பிப் பார்த்த சுமி, “அய்யோ! அப்பிடியெல்லாம் சொல்ல நான் என்ன முட்டாளா? பொதுவாச் சொன்னன் தாயே! என்னோட சண்டைக்கு வராதேயும். உம்ம ஒருமாதிரிப் பார்த்தாலே பாட்டியோட சண்டைக்குப் போறார் உதய். பிறகு என்னோடயும் சண்டைக்கு வந்திருவார்!” பொய்யாகப் பணிவு காட்டினாள்.
“ஆங்..அந்தப் பயம் இருக்கட்டும்!” என்றவள், “பாட்டியப் பற்றிக் கதைக்காதீங்கக்கா. அநேகமா மாமி எண்டாத்தான் ஒரு நெருடல், பயம், எப்பிடி இருப்பினமோ எண்டு இருக்கும் . ஆனால் இங்க மாறி. எனக்கு பர்வதம் பாட்டி இருக்கிற இடத்தில தலை காட்டவே பயமா இருக்கு!” என்றவளை, சட்டென்று திரும்பிப் பார்த்தாள் சுமி.
“அவருக்குப் பயந்து எல்லாம் இல்ல அக்கா!” அவசரமாகச் சொல்லியிருந்தாள், மகிழ்.
“ஹா..ஹா…” வாய்விட்டு நகைத்த சுமி, “நீர், ஊரில உம்மட பாட்டியப் படாதபாடு படுத்துவீராம். அதேபோல இங்க பாட்டியோட வாய் குடுத்திராதேயும் மகிழ்!” எச்சரிக்கும் குரலில் சொன்னாள்.
“ப்ச்…அதேதான் கா எனக்கும் யோசின! அவர் ஏதாவது சொல்ல, என்ர வாய் சும்மா இருக்காம எதையாவது சொல்லிட்டா எண்டு ஒதுங்கிப் போறனான்.” என்றவள் சிறிது நிதானித்தாள். “அப்பவும் பாருங்க, உனக்கென்ன சொந்தபந்தமா இங்க இருக்கு. தூரத்துச் சொந்தத்தில, மூண்டு குடும்பங்கள் மட்டும் வரவேற்புக்கு வருவினம் . மிச்ச எல்லாரும் எங்கட இனசனம் எண்டு எவ்வளவு ஏளனமாச் சொன்னவர்!” என்று தொடர்ந்தவளுக்கு, அவரைக் காணும் போதும் அவர், இவளைப் பார்த்து முறைக்கும் போதும் ‘ஓடுகாலிட மகள்’ என்று அவர் சொன்னதுதான் நினைவில் வந்து நின்றது.
சட்டென்று, மகிழின் கரத்தை ஆதரவாகப் பற்றிக்கொண்டாள் சுமி. “இதென்ன கத மகிழ்! பாட்டி சும்மா சொல்லுறத எல்லாம் பெரிசா எடுக்கிறதா சொல்லும்? உமக்கு இங்க சொந்தங்களா இல்லை? ஆர் சொன்னது?” கூர்மையாகக் கேட்க, இவளோ புரியாது பார்த்தாள்.
“அதுதான் சொன்னனே, மூண்டு குடும்பங்கள் இருக்கினம் அக்கா, இன்னும் இருக்கினமாக்கும் , தொடர்பு விட்டுப் போச்சு எண்டவர் மாமா!” குரல் இறங்கச் சொன்னவளின் தோளில், பட்டென்று ஒன்று வைத்தாள், சுமி.
“மகளே! உமக்கு ஒழுங்காத் தாறதுக்கு ஆள் இல்லை. எல்லாம் இந்த உதய் கொடுக்கிற இடம்! ம்ம்..அப்ப, மூண்டு குடும்பங்கள் மட்டும்தான் உம்மட சொந்தங்கள் இல்லையா? ம்ம்..ம்ம்..” முறைக்க, இவள் விழித்தாள்.
“ஹலோ மேடம்! அப்ப நாங்க எல்லாம் ஆர்? உதய் ஆர்? பொறும், இண்டைக்கு வீட்டில எல்லாரிட்டயும் சொல்லுறன்! உமக்கு, எங்களப் பாத்தா சொந்தங்களாத் தெரியேல்ல என்ன?” படபடத்தவள், “அங்க ஜெயன் என்ன எண்டா வேலைக்கு ஆறுதலாப் போகலாம், முதல் மகிழிட தேவைகளைப் பார் எண்டு விரட்டுறார். வசந்தும், கௌசிய அதே விரட்டு விரட்டுறார். நீர் இப்பிடிச் சொல்லிட்டீரே!” கோபமாகத் தொடர, பதறிவிட்டாள் மகிழ்.
“ஹைய்யோக்கா! இது என்ன இப்பிடிச் சொல்லுறீங்க!? நான் சொன்ன சொந்தம் வேற, நீங்க எல்லாரும் வேற!” என்றவள் நயனங்களோ கலங்கி விட்டன. இவர்கள் தன்னை எப்படி வரவேற்பார்களோ என்று, எத்தனையோ நாள் மனதில் போட்டுக் குமைந்திருக்கிறாள். அதுவும், ‘ஓடுகாலி’ என்ற சொல், மறக்கமுடியாது மனதுள் கிடந்து அவளை நிறையவே கலக்கியும் இருக்கு. இங்கோ, உதய் குடும்பத்தில் ஒவ்வொருவரும், ஒன்றுக்குள் ஒன்றாக பலகாலம் பழகியது போல் தன்னை அரவணைத்துக் கொண்டதில், அவளுள்ளே நிரம்பிய மகிழ்வு விழிகளால் தளும்ப முயன்றது.
மீண்டும் அவள் கரத்தை ஆதரவாகப் பற்றிய சுமி, “பாட்டி சரியான நல்லவர் மகிழ்! நிறையக் காலமா வெளிநாட்டில இருந்தாலும், இன்னும் அந்தக் கால நடைமுறைகளைப் பின்பற்றுற ஆள், அவ்வளவும் தான். உம்மோட இன்னமும் பழகாததால அதையும் இதையும் சொல்லுறார். நீர் பெரிசா எடுக்காதேயும். போகப் போகச் சரியாகிரும்.” ஆறுதல் கூறினாள்.
“அதுவும் இந்த எண்ண வைக்கிறது , பார்லருக்கு வரமாட்டன் எண்டுறது, குங்குமம் வைக்கப் பிடிச்சிருக்கு நான் வைப்பன் எண்டு நீர் அடம்பிடிக்கிறது எல்லாமே, பாட்டிக்கு விருப்பமான விசயங்கள் தெரியுமா? வந்த புதுசில நாங்க பொட்டில்லா வெளில போனா ஏசுறவா. மாமிதான், இங்க ஆரும் வைக்கிறேல்ல விசேசங்களுக்குப் போகேக்க எங்கட உடுப்புகளோட வைக்கலாம் எண்டு சொல்லி அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வச்சிட்டா . அதால பாட்டி சொல்லுறதுகளை பெரிசா எடுக்காதேயும்!” விழிகளால் கசிந்த ஈரத்தை மறைக்க மறந்து பார்த்திருந்தவளிடம் அன்பாகச் சொன்ன சுமி,

