நெஞ்சினில் நேச ராகமாய் 27 – 2

உதய் அப்படிச் சொன்னதை இவா பெரிதாக எடுக்கவில்லையோ? நாம் தான் வீணாகக் கலங்குறோமோ என, மருமகளிடம் வாய்திறந்து கேட்க விரும்பினாலும் முடியாது தவித்தார், ரத்னா.
வழமையை விட நேரம் கழித்தே வீடு வந்த உதய், வரவேற்பறையில் அமர்ந்திருந்த சகோதரர்கள், தந்தையுடன் சிறிது நேரம் அளவளாவியவன் மாலை நடந்ததை மறந்திருந்தான். என்பதைவிட, அந்தளவுக்குப் பெரிது பண்ணவில்லை. சமையலறையில் நின்ற தாயோடு கதைத்தவன், “என்ன மேடம், பிசியா?” என்று மனைவியைச் சீண்டினான்.
அவள் பதில் சொல்லாததைக் கவனியாதே,“ஷொப்பிங் எல்லாம் எப்பிடிப் போச்சு? எல்லாம் வாங்கியாச்சா?” என்றவன், அப்போதும் அவள் அமைதியைக் கவனியாது, “டீ போட வேணாம் மகிழ், நான் ஒரேயடியாக் குளிச்சிட்டு வாறன். இண்டைக்கு ஒரு பார்டியோட ஒரே இழுபறியும் அலைச்சலும், பேக் களையா இருக்கு!” என்று சொல்லிக்கொண்டே மாடிக்குச் செல்ல, மகிழோ, கையிலிருந்த வேலையை விரைந்து முடித்தவள், “இந்தா வாறன் மாமி?” என்றுவிட்டு விடுவிடுவென்று மாடியேறினாள்.
மேலே செல்லும் மருமகளையே பார்த்திருந்த ரத்னாவின் உள்ளம், சிறு சிறு குழப்பக் குமிழிகளுடன் தடுமாறி நின்றது.
உடைமாற்றிக் கொண்டிருந்த உதய் அறைக்குள் நுழைந்த மனைவியை முறுவலோடுதான் எதிர்கொண்டான். அவள் முகம் இருந்த விதம் அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.“மகிழ், என்னடா! முகமெல்லாம் ஒரு மாதிரி இருக்கு? ஷொப்பிங் செய்து களைச்சுப் போனீரா என்ன? எத்தினை மணிக்கு வந்தீங்க?” கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான்.
“அதென்ன, காசப் பாத்து விரும்பினதையும் வாங்காமல் நின்டிரா என்ன?” அவள் முகம் பற்ற, முறைப்புடன் அவன் கையைத் தட்டி விட்டாள், அவன் மனைவி.
திடுக்கிட்டுப் பார்த்தவனை உறுத்து விழித்தவள், “இஞ்ச பாருங்க, நீங்க உங்கட மனசில என்னைப் பற்றி என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறீங்க? ஒண்டுக்கும் வழியில்லாதவள் எண்டா?” கடித்த பற்களிடையே வார்த்தைகளை உதிர்த்தாள்.
“என்ன மகிழ்! நான் ஏன் அப்பிடி நினைக்கப் போறன்? முதல் இதென்ன கதை!” சற்றுமுன் ஆட்கொண்டிருந்த களைப்பை மறந்தான், உதய்.
“என்ன கதையா? நீங்க தானே சொன்னீங்க, இவ்வளவு நாட்களும் எப்பிடியோ தெரியாது, இப்ப நீ என்ர வைஃப். கண்ணில படுற எல்லாத்தையும் வாங்கு. என்னட்டக் காசு கொட்டிக் கிடக்கு எண்டு!” கோபமும் நக்கலுமாக வார்த்தைகளை விட்டாள்.
கேட்டவனோ, திகைத்து, அதே வேகத்தில் அதிலிருந்து மீண்டான். “ஓஓ! அதச் சொல்லுறீரா? பாரும், நான் அத மறந்தே போனன் மகிழ்! அப்ப முக்கியமான ஃபைல எடுக்க வீட்டுக்கு வர…பாட்டி …” மனைவியின் கடுகடு முகத்தைப் பார்த்து நிறுத்தினான்.
“சரி..சரி அத விடும் மகிழ், அப்ப ஏதோ தடுமாற்றத்தில…விடும்… விடடா என்ர செல்லம்… செல்லத்தோட ஒண்டோட ரெண்டு வார்த்த கோவமாக் கதைக்கக் கூடாதா!” சிரித்துக்கொண்டு சமாளிக்கப் பார்த்தான். ‘என்னடா உதய், இந்த முறை முறைக்கிறா!’ மனத்தில் புலம்பிக்கொண்டே, “எங்க பாப்போம், என்னென்ன வாங்கினீர் காட்டும்!” மீண்டும் அவள் கரம் பற்ற, உதறி விட்டாள்.
“நான் என்ன வாங்கினன் எண்டு நீங்க ஒண்ணும் பாக்கத் தேவேல்ல. அதோட…” என்று சொல்லி, அங்கிருந்த கண்ணாடி மேசையில் வைத்திருந்த தன் கைப்பையிலிருந்து இவன் தந்திருந்த டெபிட் கார்ட்டை எடுத்து அவன் கரத்தில் வைத்தாள். “உங்கட காசில எதும் வாங்க வேண்டிய தேவை எனக்கு எப்பவுமே வராது. அத நினைவில வச்சிருங்க!” முறைப்பாகச் சொன்னவள், அதிர்ந்து பார்த்தவனை அலட்சியமாகப் பார்த்தாள்.
“உங்களுக்கு ஒண்டு தெரியுமா? இங்க வரேக்க ரெண்டாயிரம் டொலரத் தந்து, உனக்கு எப்ப எவ்வளவு காசு தேவை எண்டாலும் யோசியாமல் கேக்கோணும், அனுப்பி வைப்பன் எண்டவர் என்ர மாமா. அந்தக் காசில தான் எனக்குத் தேவையானத வாங்கினனான்.” என்றவள், “இவர் பெரிய பில்ட்கேட்ஸ், நாங்க பிச்சைக்காரர்! ஆரப் பாத்தாலும் ஒண்டுக்கு நாலு கிரடிட் கார்ட்! போற போற இடம் எல்லாம் அதத் தேச்சுக்கொண்டு பெரிய விலாசமா காட்டுறீங்க?” என்ற வேகத்தில் விருட்டென்று வெளியேற, அதே இடத்தில் அசையாது நின்றிருந்தான், உதய்.
அதுவரை மனதில் கனன்ற ஆத்திரத்தைக் கணவனிடம் கொட்டிய மகிழுக்கு அதன் பின்தான் நிம்மதியாக இருந்தது. ரதனாவிற்கு உதவி செய்யச் சென்றுவிட்டாள்.
இரவுணவுக்கு எல்லோரும் ஆயத்தமாக, “எங்கம்மா உதய், இன்னுமா குளிக்கிறான்? வேலையால வந்து டீ கூடக் குடிக்கேல்ல. சாப்பிட வரச்சொல்லி விடும் மா!” என்று ரத்னா சொல்லும் போதுதான், அட இவர் இன்னும் கீழ வரேல்லையா!?’ என்று எண்ணியவள், “இந்தா கூட்டிக்கொண்டு வாறன் மாமி, நீங்க எல்லாரும் சாப்பிடத் தொடங்குங்க!” என்றுவிட்டு, படிகளில் தாவி ஏறி, “உதய் உதய்…” என்று அழைத்துக்கொண்டே அறையைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
அங்கேயோ, நெற்றியில் கரத்தை வைத்துக்கொண்டு நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தான், அவள் கணவன். “உதய்…என்னப்பா படுத்திட்டீங்க! உடம்புக்கு ஏலாமக் கிடக்கா?” கேட்டபடி, நெற்றியில் இருந்த கரத்தை விலக்க முனைந்தாள், இவள்.
அவனோ, “பச்..எனக்குப் பசியில்ல!” வெடுக்கென்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுக்க, திடுக்கிட்டுவிட்டாள் மகிழ். “என்ன விளையாடுறீங்களா உதய்? அங்க எல்லாரும் பாத்துக்கொண்டு இருக்கினம். எழும்பி வாங்கோ.” மீண்டும் அவனை உலுக்கி எழுப்ப முனைய, சட்டென்று எழுந்தவன், அவளைப் பார்த்த பார்வையில் விழித்துக்கொண்டு நின்றாள் மகிழ்.
“உதய் என்…னப்பா…என்னோட கோவமா?” தடுமாறியபடி கேட்டதெல்லாம் கணம்தான். “அப்போத தவறிச் சொல்லிட்டன் உதய்! அது ஒரு கதைக்கு அப்பிடிச் சொன்னன்! நீங்க என்ன நாலு கிரடிட் கார்ட் வச்சிருக்கிறீங்களா? இல்லை எண்டு எனக்குத் தெரியாதா சொல்லுங்க? உங்களிட்டக் காசிருக்கு எண்டுதான் எல்லாருக்கும் தெரியுமே!” நமுட்டுச் சிரிப்போடு தொடர்ந்தவள், அப்போதும் முறைத்தவனைப் பார்த்து, “அய்யோ உதய், வேற என்ன பிரச்சனை எண்டாலும் பிறகு கதைப்பம், இப்ப எழும்பி வாங்க. கீழ எல்லாரும்…” என்றுகொண்டு அவன் கரம் பற்றி இழுக்க, சட்டென்று உதறிவிட்டான், உதய்.
“அப்ப, இவ்வளவு நாள்களும் நீர் என்ன பிறத்தியாளாத் தான் நினைச்சிருக்கிறீர்!” இறுகிய முகமும் கூர் பார்வையுமாகக் கேட்டவனைத் திகைப்போடு பார்த்தாள், மகிழ்.
“என்ன உதய், நான் போய் அப்பிடியெல்லாம் நினைப்பனா?” என, நெருங்கியவளை கைநீட்டித் தடுத்தான். “உம்மட மாமா காசு தந்தத என்னட்டச் சொல்லவே இல்லையே! இப்ப, அதிலதான் எல்லாம் வாங்கினன், இனியும் கேட்டால் தருவார் எண்ட மாதிரிச் சொல்லுறீர். அப்ப நான் ஆர் உமக்கு? உம்மட மாமாவுக்கும் என்னில நம்பிக்கை இல்ல போல இருக்கே!” விழிகளைச் சுருக்கி அவன் சொன்ன விதத்தில் “ஐயோ!” என்று தலையில் கை வைத்தாள், மகிழ்.
“என்ன உதய் நீங்க? அது ஒரு கோவத்தில சொன்னது. நீங்க ஏதோ நான் இவ்வளவு நாளும் ஒண்டுக்கும் வழியில்லாமல் இருந்த மாதிரி கதைச்சிங்க தானே! அதில எனக்கு மட்டும் கோவம் வரக் கூடாதா?” சிலுப்பிக்கொண்டாள். “அதேதான் நானும் கேக்கிறன், எனக்குக் கோபம் வரவே கூடாதா? அப்ப ஏதோ டென்சனில் வர, பாட்டி வேற புலம்பினா. அந்தக் கோவத்தில போய் இவ்வளவு நேரம் வரேல்லையே, எதையாவது வாங்கினாலும் பரவாயில்லை ஒன்றுமே வாங்கேல்லையே எண்டதில ரெண்டு வார்த்தை கதைச்சிட்டன். அதுக்குப் போய் மாமா காசு தந்தவர், இனியும் தருவார் எண்டுறிர்.” படபடவென்று சீறியவனை, மலையிறக்குவதற்குள் போதும் போதுமென்றாகிப் போனாள்.
அடுத்த நாளே இவளை அழைத்துச்சென்று, வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க மறுக்க ஒரு தொகை உடுப்புகளை எடுத்துக் குவித்திருந்தான், அவள் கணவன்.

error: Alert: Content selection is disabled!!