அத்தியாயம் 28
“சம்மர் லீவும் முடியப் போகுது சித்தப்பா. எங்கயாவது போவமே. நீங்க மட்டும் ஜொலியா இலங்கைக்குப் போய்ட்டு வந்தீங்க. ஆரைக் கேட்டாலும் அதுக்கு லீவு எடுத்தம் இதுக்கு எடுத்தம், வேல வேல எண்டு ஓடுறீங்க! எப்பப் பார் எல்லாருக்கும் வேல!” சிணுங்கினாள் சரணி.
“பாருங்கம்மா உங்கட பேத்தி புலம்பிறத! மகிழ் சித்திக்கு அதக் காட்டுறம் இதக் காட்டுறம் எண்டு சொல்லி சொல்லி, மகிழ் வந்த நாளில இருந்து அங்க இங்க எண்டு திரியிறதே வேல! பிறகு இப்பிடியும புலம்பிறது. உங்களை அடக்கவே ஏலாது.!” தமையன் மகளைச் செல்லமாகக் கடிந்து கொண்டான், உதய்.
“அது என்ன, இலங்கைக்கு ஜொலியாப் போய் வந்தனானா? அப்பிடி ஆர் சொன்னது? நானே போய் ஒரு கட்டெறும்பப் பிடிச்சுக்கொண்டு வந்திருக்கிறன் எண்டு கலங்கிப் போயிருக்கிறன், நீ வேற!” மதிய உணவுக்கென வீடு வந்த உதய், உணவுண்ட பின் சிறிதுநேரம் இருந்துவிட்டுச் செல்வோமென வரவேற்பறையில் வந்தமர்ந்தவாறே சலித்துக்கொள்ள, அங்கமர்ந்திருந்த சரவணனும் ரத்னாவும் தம்முள் பார்த்து நகைத்துக்கொண்டார்கள்.
“மகிழ் சித்தி, மகிழ் சித்தி இஞ்ச ஓடியாங்கோ! சித்தப்பா உங்களக் கட்டெறும்பு எண்டு சொல்லுறார்.”கத்தினாள் சரணி. “இப்ப ஏன் இந்தக் கத்து கத்திற பிள்ள? மெதுவாக் கதைச்சுப் பழகு எண்டு எத்தின தரம் சொன்னாலும் காதில ஏறாதா?” மூத்த பேரனின் மகளைக் கடிந்து கொண்ட பர்வதம் பாட்டி, “இவன் இப்பிடித்தான் அலுப்பாக் கதைக்கிறது போல பம்மாத்துக் காட்டுவான். இல்லாட்டி அவள ஒரு பார்வை பாத்தாலே என்னோட மல்லுக்கு நிப்பானா? சரியான கள்ளன்!” பேரனை முறைத்தார்.
சட்டென்று, தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்று, பர்வதத்தை இடித்துக்கொண்டமர்ந்தான் உதய். “ஆர், நான் கள்ளனா?” பாட்டியைச் சுற்றிக் கரங்களைப் போட்டு வளைத்துக்கொண்டான். “டேய் விடடா, போ, போய் உன்ர பெஞ்சாதியக் கட்டிப்புடி. என்ன இப்ப விடு எண்டுறன்.” பாட்டி கத்த கத்த, நகைத்தவாறே பிடியை இறுக்கினான்.
“பார் சரவணா, உன்ர செல்ல மகன் செய்யிற வேலய! அவன்ட பெஞ்சாதிய ஒரு வார்த்தை சொன்னாப் போதும், ஒண்டில இவண்ட வாய் கதைக்கும் அல்லது கை!” முறைத்த பாட்டியின் கன்னத்தில், ‘பச்’ என்று கொஞ்சினான். “விடடா, இப்ப விடப் போறியா இல்லையா?”
“என்ன பாட்டி இது? ஆசையா கொஞ்சினா நீங்களும் திருப்பிக் கொஞ்சோனும். பிறகு, உன்ர மனிசியைக் கொஞ்சத் தெரியும் என்னக் கொஞ்சமாட்ட எண்டு நீங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாலும் எண்டுதானே கொஞ்சுறன்!” நக்கலாகச் சொல்லி அவருடன் மல்லுக்கு நிற்கையில் அங்கு வந்தாள் அவன் மனைவி.
“சாப்பிட்டிட்டான் மாமி, கொஞ்ச நேரம் வச்சிருங்க!” என்று ஹர்ஷனைக் கொடுத்தவள், கணவன் பாட்டியுடன் மல்லுக்கட்டுவதைப் பார்த்து எழுந்த நகைப்பை இலாவகமாக மறைத்துக்கொண்டாள்.
“என்ன அலட்டல் எண்டாலும் போ, போய் உன்ர பெஞ்சாதியோட வச்சிக்கொள்ளு. இப்ப என்ன விடு. தோள் மூட்டு கழண்டு வரப் போகுது!” திமிறினார் பாட்டி.
“முதல் வெளில எங்க போவம் எண்டு சொல்லுங்க சித்தப்பா, பிறகு பாட்டியக் கொஞ்சுங்க!” மீண்டும் ஆரம்பித்தாள், சரணி. தன் சித்தியோடு சேர்ந்து தம்பிக்கு உணவூட்ட பராக்குக் காட்டிவிட்டு வந்திருந்த மதுசியும் தமக்கையோடு சேர்ந்து கொண்டாள்.“ஓம் சித்தப்பா, எப்பப் போவம்? நீங்க சொன்னா அப்பா கேப்பார் சித்தப்பா, ப்ளீஸ்! மகிழ் சித்தி கூட எங்கயும் போகேல்லையா எண்டு இப்பத்தான் கேட்டவா.” தன் செல்லச் சித்தியைப் பார்த்துக் கண் சிமிட்டியவாறே சொல்ல, “அதுசரி, எந்தநேரமும் ஊர் சுத்திக்கொண்டிருந்தா உழைப்பப் பாக்கிறது ஆராம். அதையும் உன்ர சித்திட்டையே கேளன்!” என்றார் பர்வதம்.
“இதென்ன பாட்டி நீங்க! மகிழ் அப்பிடிச் சொல்லேல்ல. மது சும்மா சொல்ல…” முறைப்புடன் ஆரம்பித்து, “உங்களுக்கு என்ர செல்லத்த வம்பிழுக்காட்டிச் சாப்பிட்டது செமிக்காதே!” நக்கலாகச் சொல்லிக்கொண்டே எழுந்தான், உதய்.
“போவம் போவம், அடுத்த கிழமை லேக் அல்லது நயாகரா ரெண்டில ஒண்டுக்கு போவம்!” என்றவன், “சாப்பிட வந்தா மனிசனப் போட்டு வாட்டி எடுத்திருவீங்களே!” என்றவாறே முன்வாயிலை நோக்கி நகர, முறுவல் மாறாமல் அவர்களின் கலாட்டா உரையாடல்களைக் கேட்டிருந்த மகிழ், கணவன் பின்னால் சென்றாள்.
புதுநாட்டுடனும் கணவன் வீட்டுடனும் தன்னை இயல்பாகப் பொருத்திக் கொண்டாள், மகிழ். தாயைப் பிரிந்த துயரும், எப்போதுமே ஒட்டிக்கொண்டு திரிந்த நண்பிகளின் நினைவும், சொந்த நாட்டின் ஏக்கமும் இருந்தாலும், அதை அழகாக அடக்கி, தன்னையும் தன் பொழுதையும் தான் வாழும் சூழலில் அமைத்துக் கொண்டவள், அப்பப்போ பர்வதத்தின் சிடு சிடுப்பையும் குத்தல்களையும் கண்டும் காணாமல் ஒதுங்கிப்போனாள். குடும்ப உறவுகளினதும் கணவனினதும் அன்பும் அரவணைப்பும், சிறு சிறு விடயங்களைப் பெரிதுபடுத்த அவளை அனுமதிக்கவில்லை என்றே சொல்லலாம்.
கணவனுக்கு, அலுவலக வேலைகளில் உதவிகளைச் செய்யப் பழகிக்கொண்டவள், வீட்டில் நிற்கும் சமயங்களில் வசந்தனின் மகனோடு பொழுதைக் கழித்தாள். இப்போது, பாடசாலை விடுமுறை என்பதால், சரணி மதுவிற்கும் சித்தியுடன் நன்றாக பொழுது போனது.
“நான் நினைச்சுப் பயந்தளவுக்குக் கனடா வாழ்க்க அவ்வளவு மோசமா இல்ல உதய்!” என, கணவனை வம்பு செய்யும் அளவுக்கு வந்திருந்தாள், மகிழ்.
“நானும் தான் நிறையப் பயந்தன் மகிழ்! இங்க அக்கம்பக்கத்தில ஏறி விளையாட மாமரங்களும் இல்லையே! நீர் என்ன செய்யப் போகிறீரோ, எப்பிடிப் பொழுது போகுமோ எண்டு எந்தளவுக்குப் பயந்தன் எண்டு எனக்கு மட்டும் தான் தெரியும்! பரவாயில்லை, நீர் சமாளிச்சிட்டீர்.” அவளைப் பகிடி பண்ணி, அவளிடமிருந்து கடி வாங்குவதே அவள் கணவனின் பொழுது போக்கானது!
*****
சரியாக ஆறு மணிக்கு அலாரமடிக்க விழித்த ரத்னா, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு கீழே இறங்கும் போதே, நாசியை வருடிச் சென்ற ஆட்டிறைச்சிக்கறி வாசத்தில், சின்ன மருமகள் எழுந்துவிட்டாள் என்பதையுணர்ந்து கொண்டார். இரண்டு பேருமாகச் சேர்ந்து சமைப்போமென்று அவ்வளவு சொல்லியும் கேட்காமல் மல்லுக்கு நின்றால், நானும் தான் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டே சமையலறையினுள் நுழைகையில், உச்சியில் தூக்கி முடித்த கொண்டையோடு சமையலில் மும்முரமாக நின்றாள், மகிழ்.
பின்னால் அரவம் கேட்டுத் திரும்பியவள், “குட் மோர்னிங் மாமி! தேத்தண்ணி போடட்டா? நானும் இன்னும் குடிக்கேல்ல. உங்களத்தான் பாத்துக்கொண்டிருந்தனான்!” என்றவாறே, தேனீர் தயாரிக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்திருந்தாள்.
“எத்தனைக்கம்மா எழும்பினீங்க? எட்டரைக்குத்தானே இங்க இருந்து போகப் போறம். பொறுமையாச் செய்யலாம் எண்டா கேட்காம தனியாச் செய்து முடிச்சிட்டிங்க போல இருக்கே!” அடுப்பில் பெரிய பாத்திரத்தில் கொதித்துக்கொண்டிருந்த ஆட்டிறைச்சிக் கறியையும், அருகில் இரு பெரிய ரைஸ்குக்கர்களில் வெந்து கொண்டிருந்த அரிசியையும், மேடையில் ஓரமாக மூடி வைக்கப்பட்டிருந்த பொரித்த கத்தரிக்காய்ப் பிரட்டலையும் பார்த்தவர், “கெட்டிக்காரிதான், எல்லாத்தையும் தனியவே செய்திட்டிங்களே!” மனதாரப் பாராட்டினார்.
“ரெண்டு கறிகளும், சோறும்தானே மாமி. அதிலயும் இறைச்சிய இவர் இரவே வெட்டித் தந்ததால அந்த வேலையும் இல்ல. கத்தரிக்காயும் இரவே பொரிச்சு வச்சிட்டன். பிறகென்ன!” முறுவலுடன் கூறியவாறே, தேனீரைத் தயாரித்து ரத்னாவிடம் கொடுத்தவள், தன்னதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, சமையல் மேடையைச் சுத்தம் செய்ய முனைய, அவள் கரம் பற்றித் தடுத்தார், ரத்னா.
“முதல், சுட சுட தேத்தண்ணியைக் குடிச்சிட்டுப் பிறகு மிச்சத்தச் செய்யலாம். கறிய இன்னும் கொஞ்சம் தணிச்சு விடும், கொஞ்சநேரத்தில் இறக்கலாம்.” என்றவாறே, அருகிலிருந்த உணவு மேசையில் சென்றமர, மகிழும் தேனீரோடு சென்றமர்ந்தாள்.
“குணா வீட்டுக்காரர் கேக் அது இது எண்டு கொண்டு வருவினம். கௌசியும், சின்னப் பிள்ளையோட சிரமப்பட வேணாம் எண்டு சொன்னாலும் கேட்க மாட்டா. எதையாவது செய்து கொண்டு வருவா. மிஞ்சினாப் பரவாயில்ல பத்தாமப் போகக் கூடாது எண்டுதான் சுமியிட்டயும் ஒரு ரைஸ் குக்கரில சோறு போட்டுக்கொண்டு வரச் சொன்னனான்!” என்று ரத்னா சொல்ல, கதைத்துக்கொண்டே தேநீரைப் பருகினார்கள்.
“எனக்கு இது எல்லாம் புதுசு மாமி! கம்பசால ட்ரிப் எண்டு போயிருக்கிறம் தான். இப்பிடிக் குடும்பங்கள் சேர்ந்து போறது புதுசு!” என்றவளை, அன்பாகப் பார்த்தார் ரத்னா. “இங்க இப்பிடி அடிக்கடி போவம்மா! அதும் லீவு எண்டா, பெட்டப்பிள்ளைகள் வீட்டில நிக்காயினம். ஆனா, சாரதா வீட்டாக்களோட போறது இதான் முதல் முறை. இப்பிடியே அமெரிக்காவும் போய்வரத்தான் பிளான் பண்ணினவே போல. பிறகு இப்ப இரண்டு நாளைக்கு சஃபாரி பார்க்குக்கும் நாயகராவுக்கும் போயிட்டு வருவம், பிறகு அமெரிக்கா போகலாம் எண்டு கதைச்சிக்கொண்டினம்.” என்றவர், தேநீரைப் பருகி முடித்தெழுந்தார்.
“நான் போய் பேப்பர் பிளேட், கப்புக்கள எடுத்துக் கொண்டு வாறன், இங்கு முடிஞ்சதும் குளிச்சு ரெடியாகும் நீர்.” என்றுவிட்டு, ரத்னா பேஸ்மன்ட்க்குள் இறங்கினார். மாமியார் அப்பால் செல்ல, கறியை இன்னொருதரம் கிளறி அடுப்பை அணைத்த மகிழ், சமையல் மேடையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் இறங்கி வந்தார், பர்வதம். “என்ன நீ தனியாக நிண்டு சமைக்கிற, ரத்னா எங்க?” கேட்டுக்கொண்டே அனைத்தையும் ஆராய்ந்தார்.

