“கொண்டுபோகத் தேவையான பொருட்கள எடுத்துக்கொண்டு வர இப்பதான் கீழ போனா மாமி.” என்றவள், “தேத்தண்ணி… போடட்டா … பாட்டி?” தயங்கிக் கொண்டே கேட்க, அவளை ஏற இறங்கப் பார்த்தவர், “இதக்கூட கேட்டுத்தானா செய்வ? போட்டுத்தாவன்…குடிக்க மாட்டனா என்ன?” என்றபடி சென்று வரவேற்பறைச் சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை இயக்கினார்.
‘ஓம் ஓம்! கேக்காமல் ஊற்றிக் குடுத்தா, இப்ப உன்னட்டக் கேட்டனா எண்டு என்னையல்லோ குடிக்கச் சொல்லுவீங்க! பிறகு இப்படியும் சொல்லுவீங்க! காலம்டி மகிழ். சரசுக்குக் காட்டின வாய்க்கு இப்பிடி மனசுக்க புலம்ப வச்சிட்டானே கடவுள்!’ முணுமுணுத்துக்கொண்டே தேநீரைத் தயாரித்தாள்.
‘வெள்ளனக் காலம எழும்பி பொறுப்பா எல்லாம் செய்யிறாவே! நல்ல சுறுசுறுப்பான பிள்ளைதான்!’ தன் மனத்துள் மெச்சிக்கொண்ட பர்வதமோ, அதை மறந்தும் சொற்களாக்கவில்லை.
தேநீரைத் தயாரித்து பர்வதத்தின் கப்பில் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, சமையலறையைச் சுத்தம் செய்து முடிக்க, மேலே வந்த ரத்னா, “இனிப் போங்கம்மா, வெளிக்கிடுங்க. பிறகு உம்மட மனுசன் வந்து அரக்கப் பறக்க நிற்பான்!” என்றவாறே, கொண்டு போக வேண்டிய பொருட்களை பைகளில் அடுக்கத் தொடங்கினார்.
மேலே வந்த மகிழ், தங்கள் அறைக்குள் பூனை போல் நுழைந்து, அயர்ந்துறங்கும் கணவனைப் பார்த்தவாறே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். “ஏழுமணியாகுது, கொஞ்சமும் அருளாமல் குறட்டை விடுறாரே! இவர என்ன செய்யலாம்? பிறகு எழும்பி நிண்டு பறக்கட்டும் இண்டைக்கு இருக்கு!” என்று, கணவனைச் செல்லமாகக் கடிந்துகொண்டே குளித்து முடித்து வெளியில் வந்து, அப்போதும் குப்புறப்படுத்து ஆழ்ந்துறங்குபவனை இடுப்பில் கைவைத்துப் பார்த்துக்கொண்டு நின்றவளின் இதழ்களில், விசமச் சிரிப்பு உதயமாகியது.
‘கொஞ்சம் பொறுங்க, எழுப்ப வாறன் மிஸ்டர் கும்பகர்ணன்! சனி ஞாயிறு எண்டா எப்பிடித்தான் இப்பிடி நித்திரை கொள்ளுவாரோ! அதும் ஞாயிறு… சொல்லி வேலையில்ல. தான் கிடந்து உருளுறது போதாதெண்டு என்னையும் பிடிச்சு வச்சு அழிச்சாட்டியம் பண்ணுவாரே! கேட்டா இங்க எல்லோரும் அப்பிடித்தானாம்!’ என்று, மனம் முணுமுணுக்க, குளியலறையிலிருந்த சிறு துவாயில் குளிர்நீரை நனைத்தெடுத்துக்கொண்டு கணவனை நெருங்கி, அயர்ந்து உறங்குபவனையே சிறிது நேரம் பார்த்திருந்தவள் வதனம் அளவில்லா நேசத்தில் மலர்ந்திருந்தது.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கருத்தில் கொண்டு, ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்கையில் வயதில் மிகவும் முதிர்ந்தவனாகத் தெரிவான், உதய். ஒவ்வொருவரிலும் அவன் காட்டும் பாசத்திலும் அக்கறையிலும் வியந்திருக்கிறாள், இவள். அதையெல்லாம் பார்க்கையில், இவர் என் கணவர் என்ற பெருமிதம் அவள் உள்ளத்தைத் தித்திக்க வைக்கும். இப்போதோ, சிறுவனைப்போல் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்ப மனமின்றி நேரத்தைப் பார்த்தவள், “ம்ம் சரிவராது ராசா, இண்டைக்கு நித்திரை போதும்!” முணுமுணுத்தபடி, ஈரத் துணியால் அவன் முகத்தில் ஒற்றி எடுக்க, திடுக்கிட்டு அருண்டு நிமிர்ந்தவன், “ராட்சசி…ராட்சசிடி நீ!” அவளை இடையோடு சேர்த்து இழுத்தணைத்துக்கொண்டான்.
“ராட்சசிட புருசன் தேவனாகவா இருப்பார்? ஹா..ஹா..சோம்பேறி ராட்சசனே! கொஞ்சம் உங்கட கண்கள அந்தப்பக்கமாகத் திருப்பி நேரத்தப் பாருங்க!” கையிலிருந்த ஈரத் துணியை, கணவன் கன்னத்தில் மீண்டும் அழுத்தினாள். சட்டென்று, அவள் கையிலிருந்த ஈரத் துணியைப் பிடுங்கி எறிந்தவன், “உமக்கு என்ர பாட்டிதான் சரி! அயர்ந்து தூங்கிற சின்னப் பெடியன இப்பிடிக் கொடுமப்படுத்துறத இண்டைக்குச் சொல்லித் தாறன் பொறும். அப்பத் தெரியும்!” என்றவன், புத்தம் புதிதாக, பனியில் குளித்து மலர்ந்து நிற்கும் செந்நிற ரோஜாவாய் ஜொலித்த மனைவியின் வதனத்தில், தன்னையே தொலைத்து நின்றான்.
சற்றுமுன் குளித்துவிட்டு வந்திருந்தவளில் கசிந்த மெல்லிய நறுமணத்தால், எச்சமாக நின்ற உறக்கம் மாயமாக, இதுவரை உறக்கம் தழுவிய உடலில் புத்துணர்ச்சி பரவ, கணவனாக அணுகியவன் முன், அவளின் செல்ல மறுப்புகள் பயனற்றுப் போயின.
ஒருவழியாக காலைச் சீண்டல்களிலிருந்து விடுபட்டு, கணவனைக் குளியலறை நோக்கித் தள்ளி, அவனுக்கு வேண்டிய உடைகளை எடுத்து வைத்துவிட்டு, “நான் எதப் போடுறது? இவரோ ஹாப்ஃ பான்ட் போடு எண்டுறார்!” முணுமுணுத்தவாறே, கருநீலநிற டெனிம் திரிகுவாட் பான்ட் மற்றும் அதற்குப் பொருத்தமான டி-ஷர்ட் இரண்டையும் அணிந்து கொண்டவளைப் பார்த்து, குளியலறையால் வந்த உதய் விசிலடித்தான்.
“வாவ்! வடிவா இருக்கு மகிழ்! அண்டைக்கு வாங்கேக்க இப்பிடி அப்பிடி எவ்வளவு கதைச்சீர்! ஜீன்ஸ், ஹாஃப் ஸ்கேர்ட், ஃபிராக் போடலாம். ஆனா இது ஏலாது. பழக்கமில்ல எண்டீரே! இப்ப பாரும் எவ்வளவு வடிவா இருக்கு! அதுவும் அய்யாட செலக்ஷ்ன் எண்டாச் சும்மாவா!” தன்னைத் தான் புகழ்ந்து தள்ளினான்.
அவளோ, “நல்லாவா இருக்கு உதய்?” சந்தேகமாகக் கேட்டுக் கொண்டே மீண்டும் மீண்டும் ஆளுயரக் கண்ணாடியில் சுழன்று சுழன்று பார்த்தவள், ஒன்றுக்குப் பத்தாக நன்றாக உள்ளதா என்பதைக் கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ள முனைந்தாள். மனைவியின் செய்கையை முறுவலுடன் பார்த்தவாறே, கீழே செல்லத் தயாராகினான், அவன்.
கண்ணாடியில் தெரிந்த அவனுருவில் நகைப்பைக் கண்டவள் முறைத்துக்கொண்டே திரும்பி, “வேணாம் உதய், இது எனக்கு நல்லாவே இல்ல. நான் ஜீன்ஸ் போட்டுக்கொண்டு வாறனே! அல்லது ஸ்கர்ட்?” மீண்டும் ஆரம்பத்தில் வந்து நிற்க, ஹைய்யோ என்றிருந்தது அவனுக்கு.
சட்டென்று நேரத்தைப் பார்த்தவன், இவள் பக்கத்தில் நின்று சொல்லி ஏதாவது வேலையை செய்விக்க முடியுமா? எப்போதாவது அப்படிச் செய்திருக்கிறாளா? அதையும் இதையும் சொல்லித் தட்டிக் கழித்துவிட்டு, பிறகு தான் நினைத்ததைச் செய்யப்போகிறாள் என்று நினைத்தவன், “சின்னப் பிள்ளைய வச்சிருக்கிற கௌசி அண்ணி கூட வெளிக்கிட்டு வந்திருப்பா.” நக்கலாகச் சொன்னவாறே வெளியேற, “ஹலோ ஹலோ, நாங்க ஒண்டும் ஏழு மணிவரை தூங்கேல்ல சரியோ.” என்று சிலுப்பிக்கொண்டே, அதே உடையுடன் தயாராகி இறங்கினாள், அவன் மனைவி.
“எட்டரைக்கு வெளிக்கிடுவம் எண்டிங்களே உதய்! இப்பிடி அவசரப்படுறீங்க? கொஞ்ச நாள் போகட்டுமன், குழந்தையோட வெளிக்கிடுறது எந்தப்பெரிய பாடு எண்டு விளங்கும்.” முணுமுணுத்துக்கொண்டே, குழந்தையை பின் இருக்கையில் இருத்திவிட்டு முன்னால் சென்று ஏறிக் கொண்டாள், கௌசி.
“அந்தக் கவலையே எனக்கில்ல அண்ணி. அதை எல்லாம் என்ர செல்லம் பாத்துக் கொள்ளுவா. இல்லையா மகிழ்?” என்றவன், செல்லமாக முறைத்த மனைவியைச் சீண்டல் பார்வையால் அளந்துகொண்டே தானும் காரை எடுத்தான் உதய்.
“உங்களோட வந்து ரெண்டு நாள்கள் ஊர் சுத்தித் திரிய எனக்கும் ஆசைதான். ஆனா, நான் என்ன குமரியா சொல்லுங்க?” என்று சலித்துக்கொண்ட பர்வதம் பாட்டி, “மணித்தியாலக்கணக்கில காரில இருந்து கொண்டு வந்தால் கால்வலி தாங்கேலாது. நான் வரேல்ல. எல்லாரும் சந்தோசமாப் போயிட்டு வாங்க!” என, வீட்டில் தங்கிக்கொள்ள, அவருக்குக் கைகாட்டிக்கொண்டே வரிசையாக நகர்ந்த கார்கள், குணா வீடிருக்கும் பகுதியால் சென்று அவர்களையும் அழைத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தன.
முதலாவதாகச் சென்று கொண்டிருந்த காரில் உதய், சரவணன் முன்னாலிருக்க, “நீங்க தம்பியோட இருங்கம்மா, நானும் இவரும் பின்னால இருக்கிறம்!” என ரத்னா சொன்னதைக் கேட்காது, அவரோடு பின்னாலிருந்து கொண்டாள், மகிழ்.
அடுத்து, ஜெயன், வசந்தன், சாரதா குடும்பங்கள் தத்தம் கார்களிலும், கடைசியாகக் குணாவும் குமாரும் ஒரு காரிலும் வரிசையாக ஒன்றை ஒன்று தவறவிடாமல் போக்குவரத்தில் கலந்து விரைவதை, பின்னும் முன்னும் திரும்பி திரும்பிப் பார்த்தவாறே வந்தாள், மகிழ். இடைக்கிடை மனைவியை உள் கண்ணாடியில் பார்த்துச் சீண்டிக்கொண்டே காரை இலாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தான், உதய்.
“முதல் ஆஃப்ரிகன் லையன் சஃபாரி தானே!”
“ஓம் அப்பா, சின்னவே நல்லா என்ஜோய் பண்ணுவினம். அதோட…” சொன்னவன், கண்ணாடியில் மனைவியைப் பார்த்து அழகாகச் சிரித்தான்.
‘இப்ப ஏன் இப்பிடி இளிக்கிறார்?!’ இவள் மனதில் யோசனை!
“மகிழ் இதுவரைக்கும் சஃபாரி பார்க் போனதில்லையாம். பெரிய மரங்களும் அங்க இருக்கல்லோ! ஆசை தீர ஏறி விளையாடலாம்!” நமுட்டுச் சிரிப்புடன் சொல்லிக் கண்ணடித்தான்.
“என்ர மருமகள நக்கல் அடிக்காட்டி உங்களுக்குப் பொழுது போகாதே!” என்று சொல்லி, மகனை முறைத்தார் ரத்னா.
“ப்ச்..விடுங்க மாமி. அவர் இவ்வளவு அவசரமா அங்க போறதே அவரிட நண்பர்களப் பாக்கத்தானாமே! நேற்று முழுதும் சொல்லிக்கொண்டிருந்தவர். போன முறை போன நேரம் தன்ர காரில ஏறிட்டு இறங்கவே மாட்டன் எண்டு அடம் பிடிச்சவையாமே!” என்றபடி, நமுட்டுச் சிரிப்புடன் கணவனைப் பார்த்தவளை, திரும்பிப் பார்த்து நகைத்த சரவணன், “நல்ல வேள, அவன்ர சொந்தங்கள் எண்டு சொல்லி எங்களையும் அதில கூட்டுச் சேர்க்கேல்ல!” என்றதும், கணவருடன் சேர்ந்து நகைத்தார், ரத்னா.
இப்படியே கலகலத்தபடி, ஒன்றன் பின் ஒன்றாக சஃபாரியை வந்தடைந்து கார்களை நிறுத்திவிட்டு, “முதல், சாப்பிட்டிட்டு உள்ள போவம். காலமையும் வடிவாச் சாப்பிடாதது எல்லாருக்குமே பசிக்கும்!” என முடிவெடுத்து, உணவுப் பதார்த்தங்களையும் எடுத்துக்கொண்டு வசதியான இடமாகப் பார்த்து அமர்ந்து கொண்டார்கள்.

